தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 4

சிறு வயதில் படித்ததுதான் – தமிழை இழித்துப் பேசிய கனக விஜயர் தலையிலே கல்லேற்றிக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்று வந்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்றான் கரிகால சோழன், கங்கை வரை சென்று வென்று வந்த ராஜேந்திர சோழன் என்றெல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது, மூலைக்கு மூலை அரசியல் கூட்டங்களில் – குறிப்பாக தி.மு.க. கூட்டங்களில் பேசப்பட்டது.

எல்லாம் சரிதான், அது எப்படி இந்த படையெடுப்புகளைப் பற்றி தமிழ் நாட்டுக்கு வெளியே எதுவும் பேசப்படுவதில்லை? கனக விஜயர் எந்த பகுதிக்கு ராஜா? சமுத்திர குப்தன் தொண்டை நாடு வரை திக்விஜயம் செய்தது பல்லவ அரசின் ஆவணங்களில் இருக்கிறது, மாலிக் காஃபூர் மதுரையை அழித்ததற்கு ஆவணம் இருக்கிறது, செங்குட்டுவனுக்கும், நெடுஞ்சேரலாதனுக்கும், கரிகால சோழனுக்கும் எதையும் காணோமே? சிலப்பதிகாரத்தில் கரிகாலன் மகத (இன்றைய பீகார்), அவந்தி நாடுகளை வென்றதாக இருக்கிறதாம். வட நாட்டு சரித்திர புத்தகங்களில் தெற்கே இருந்து யாரும் படையெடுத்து வந்ததாக சொல்லப்படவே இல்லையே? நான் படித்த வரையில் இவை வட நாட்டு சரித்திரத்தில், மக்கள் நினைவில் இல்லவே இல்லை.

கங்கை கொண்ட ராஜேந்திரனுக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்கு வெளியே ஆவணம் இருக்கிறது. ராஜேந்திரனும் நேர் வடக்குப் பக்கம் போகவில்லை. இன்றைய ஒரிஸ்ஸா (கலிங்கம்) வரையில் அன்றைய நட்பு நாடான வேங்கி நாடு பரந்திருந்தது. ராஜேந்திரனின் தளபதிகள் கலிங்கம் வழியாக இன்றைய வங்காள மாநிலம் வரை போய் அங்கிருந்து கங்கை தண்ணீரை சோழ நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். (கங்கை இன்றைய கல்கத்தாவுக்கு அருகேதான் கடலில் கலக்கிறது.) இது ஒன்றுதான் ஆவணங்கள் இருக்கும், கொஞ்சமாவது வடக்குப் பக்கம் போன படையெடுப்பு என்று நினைக்கிறேன்.

நான் சரித்திர நிபுணன் இல்லை. சிலப்பதிகாரத்தையும் படித்தவன் இல்லை. படித்தவர்கள், நிபுணர்கள் யாராவது இருக்கிறீர்களா? (டாக்டர் நாகசாமி மாதிரி யாரிடமாவது கேட்க வேண்டும்.) இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? இது உண்மையிலேயே வரலாறா இல்லை தொன்மமா? (legend)

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

Advertisements

ராமகிருஷ்ணனின் லிஸ்ட் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன். அப்புறம் கொஞ்சம் புத்தக அலமாரியை புரட்டி பார்த்தேன். பாஸ்டன் பாலா ஒரு லிங்க் கொடுத்திருந்தார். இன்னும் ஞாபகம் வந்தவை.

மௌனியின் பிரபஞ்ச கானம் – இந்த கதை ஏதோ கொஞ்சம் புரிகிறது. ஆனால் பிரமாதமாக ரசிக்கவில்லை.

கு.ப.ராவின் விடியுமா? – எனக்கு நேராக கதை சொல்லாவிட்டால் பல நேரங்களில் புரிவதில்லை. இந்த கதையில் அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா?

தி. ஜானகிராமனின் பாயசம் – பொறாமையை, அசூயையை இந்த கதையை விட பிரமாதமாக வெளிப்படுத்தி விடமுடியாது. அண்ணன் பையன் தலையெடுத்து சித்தப்பாவுக்கு எல்லாம் செய்தாலும் சித்தப்பாவுக்கு ஈகோவும் பொறாமையும் படுத்துகிறது. கல்யாணத்தில் பாயசத்தில் எலி என்று சொல்லி அண்டாவை கவிழ்த்து விடுகிறார்.

கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு – அன்பளிப்பு அற்புதம். தன்னை மட்டும் விட்டுவிட்டார் என்ற மனநிலையை அருமையாக எழுதி இருக்கிறார். இருவர் கண்ட ஒரே கனவு ஓகே, ஆனால் பிரமாதம் இல்லை.

கி. ராஜநாராயணனின் கோமதி, கதவு – கோமதி gay சமையல்காரன் பற்றியதுதான். நன்றாக எழுதி இருக்கிறார். கதவு வீட்டில் ஜப்தி செய்யப்பட வீட்டு குழந்தைகள் விளையாடும் கதவு பற்றி. நன்றாக வந்திருக்கிறது. கி.ரா.வுக்கு கேட்க வேண்டுமா?

சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் – பிரசாதம் அருமை. நான் இதை விவரிக்க விரும்பவில்லை. படித்து அனுபவியுங்கள். ரத்னாபாயும் நன்றாக இருக்கிறது. விகாசம் பற்றி எஸ்.ரா. சொல்லி இருக்கிறார், நான்தான் கவனிக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த சு.ரா. கதை இதுதான். கோவில் காளையும் உழவு மாடும் என்ற ஒரு நல்ல கதையும் இப்போதும் நினைவுக்கு வருகிறது.

அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் – மனிதர் ஜீனியஸ். டெக்னிக் மிக அற்புதம். இதையும் விவரிக்க முடியாது.

ஜெயகாந்தனின் குரு பீடம், முன் நிலவும் பின் பனியும் – இரண்டும் மிக நன்றாக இருக்கிறது. இங்கே படிக்கலாம்.

ஆதவன் சிவப்பா உயரமா மீசை வெச்சுக்காமல் – பாஸ்டன் பாலா லிங்க் கொடுத்து உதவினார். நன்றாக இருக்கிறது. இங்கே படிக்கலாம். பகுதி 1, பகுதி 2, பகுதி 3

வண்ணநிலவனின் எஸ்தர், மிருகம், பலாப்பழம் – எஸ்தர் மிக அருமை. மிருகம் புரியவே இல்லை. பலாப்பழம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. கொஞ்சம் subtle ஆன எழுத்தாளர்.

ராஜேந்திர சோழனின் புற்றில் உறையும் பாம்புகள் – ஓகே. ஆனால் பிரமாதம் இல்லை.

வண்ணதாசனின் நிலை – ஓகே.

ி. நாகராஜனின் டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள் – ஓடிய கால்கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. டெரிலின் ஷர்ட் ஓகே.

பூமணியின் ரீதி – தண்ணீருக்கு தவிக்கும் இரு சிறுவர்கள். நன்றாக இருந்தது.

சுப்ரபாரதிமணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – மட்டன் சமையலை பற்றி விலாவாரியாக எழுதிக்கொண்டே பொய் திடீரென்று ஓ. ஹென்றி ஸ்டைலில் முடிக்கிறார். நல்ல எழுத்து.

அழகிய பெரியவனின் வனம்மாள் – பரவாயில்லை. மரங்களை நேசிக்கும் ஒரு வயதான பாட்டி.

சுயம்புலிங்கத்தின் ஒரு திருணையின் பூர்வீகம் – என்னிடம் இருக்கும் கலெக்ஷனில் ஒரு திருணையின் கதை என்று ஒன்று இருக்கிறது. பரவாயில்லை.

சம்பந்தம் உள்ள பிற பதிவுகள்
100 சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணனின் லிஸ்ட்
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்


ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி.

இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான்.

எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு மறந்துவிடும். ஞாபகம் இருப்பவற்றை பற்றி மட்டும் கீழே.

புதுமைப்பித்தன்: தமிழில் எனக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் என்றால் இவர்தான். ராமகிருஷ்ணன் காஞ்சனை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், செல்லம்மாள் ஆகிய மூன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
க.க. பிள்ளையும் ஏன் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடிவதில்லை. கடவுள் க. பிள்ளை வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கிறார்.
செல்லம்மாள் கதையில் கீழ் மத்தியதர குடும்பம் – கணவன் கண்ணெதிரில் மனைவி கொஞ்ச கொஞ்சமாக இறந்து போவாள்.
காஞ்சனை சுமார்தான். ஏதோ பேய்க்கதை.
ஒரு நாள் கழிந்தது, சுப்பையா பிள்ளையின் காதல்கள், மனித இயந்திரம், பொன்னகரம், சாப விமோசனம், கல்யாணி, துன்பக் கேணி, பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை, புதிய கூண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டாரே?

மௌனி: அழியாச்சுடர், பிரபஞ்ச கானம் என்ற இரு கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். மௌனி எனக்கு புரிவதில்லை.

கு.ப.ரா: கனகாம்பரம், விடியுமா இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கனகாம்பரம் மிக அற்புதமான கதை. கணவன் புது மனைவியிடம் தன நண்பர்கள் வந்தால் சகஜமாக கலந்து பேச சொல்வான். நிஜமாகவா?
விடியுமா நினைவுக்கு வரவில்லை.
ஆனால் திரை, வீரம்மாளின் காளை இரண்டும் நினைவுக்கு வருகிறது. மிக நல்ல கதைகள். அதை எல்லாம் விட்டுவிட்டாரே?

பி.எஸ். ராமையாவுக்கு ஒரு கதை – நட்சத்திர குழந்தைகள். பிச்சமூர்த்திக்கு ஒன்று – ஞானப் பால். தி.ஜானகிராமனுக்கு இரண்டு – பாயசம், பஞ்சத்து ஆண்டி. எதுவும் நினைவில்லை. பாயசம் கதையில்தான் பாயசத்தில் பல்லி என்று ஹீரோ அண்டாவை கவிழ்த்துவிடுவாரா?

கு. அழகிரிசாமிக்கு மூன்று – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு. ராஜா மட்டும்தான் என்ன கதை என்று நினைவுக்கு வருகிறது. நல்ல கதை.

கி. ராஜநாராயணனுக்கு மூன்று – கோமதி, கன்னிமை, கதவு.
கோமதிதான் gay சமையல்காரனை பற்றியதோ? மற்றவை நினைவுக்கு வரவில்லை.
நினைவு வருபவை – கொத்தைப் பருத்தி, மாய மான், ஜெயில்.

சுந்தர ராமசாமிக்கு இரண்டு – பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம். அவரது பல கதைகள் பிடிக்கும், ஆனால் இவை இரண்டும் நினைவில்லை. விகாசம் என்ற கதை எனக்கு மிக பிடித்தமானது.

லா.ச.ரா.வுக்கு இரண்டு – பச்சை கனவு, பாற்கடல். பாற்கடல் என்று ஒரு புத்தகம் உண்டு, அவரது குடும்ப வரலாறு போல இருக்கும், ஆனால் அதில் சிறுகதை என்ன? தெரியவில்லை. பச்சை கனவு படித்ததில்லை. அவர் எழுதியவற்றில் எனக்கு பூரணி பிடிக்கும் (பஞ்ச பூதக் கதைகளில் பூமியை உருவகித்து எழுதப்பட்டது)

நகுலனின் ஒரு ராத்தல் இறைச்சி படித்ததில்லை.

அசோகமித்ரனுக்கு மூன்று – புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம்.
புலிக் கலைஞன் மிக அற்புதமான கதை. புலி வேஷக் காரன் சினிமா சான்சுக்காக ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான்.
பிரயாணம் – ப்ரில்லியன்ட்! அம்ப்ரோஸ் பியர்சின் ஒரு கதையை இது ஞாபகப்படுத்துகிறது. ஆனால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதப்பட்டது.
காலமும் ஐந்து குழந்தைகளும் படித்ததில்லை.

ஜெயகாந்தனுக்கு மூன்று – குரு பீடம், அக்னி பிரவேசம், முன் நிலவும் பின் பனியும்.
அக்னி பிரவேசம் மட்டும்தான் படித்திருக்கிறேன். சில நேரங்களில் சில மனிதர்கள் இங்குதான் ஆரம்பம் ஆகிறது.

பா. ஜெயப்ரகாசம் (தாலியில் பூச்சூடியவர்கள்), பிரமிள் (காடன் கண்டது), ஆதவன் (உயரமா சிவப்பா மீசை வெச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்) படித்ததில்லை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – மிக பிரமாதமான கதை. இதை விவரிக்க விரும்பவில்லை. பெட்கி கதையையும் சேர்த்திருக்கலாம்.

அ. முத்துலிங்கம் – மகாராஜாவின் ரயில் வண்டி. நிச்சயமாக படித்திருக்கிறேன், கதை ஞாபகம் வரவில்லை.

ந. முத்துசாமியின் நீர்மை – படித்ததில்லை.

அம்பைக்கு இரண்டு – காட்டில் ஒரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள்
கா.ஒ.மான் வயதுக்கு வராமலே வயதாகிவிடும் ஒரு பெண்ணை பற்றியது. நல்ல கதைதான், ஆனால் அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
அ.ஒ.கொ. செய்தாள் எல்லாரும் தேவைக்கு மேல் கொண்டாடும் ஒரு கதை. சின்னப் பெண் வயதுக்கு வந்த போது அலுத்துக் கொள்ளும் அம்மா பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை கொலை செய்தாள் என்று கதை. அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
எனக்கு பிடித்த அம்பையின் கதைகள் – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு.

வண்ணநிலவன் (எஸ்தர், மிருகம், பலாப்பழம்), சம்பத்(சாமியார் ஜூவுக்கு போகிறார்), ராஜேந்திர சோழன்(புற்றில் உறையும் பாம்புகள்), வண்ணதாசன் (தனுமை, நிலை), ஆ.மாதவன் (நாயனம்) – இவற்றை நான் படித்ததில்லை.

சுஜாதாவுக்கு இரண்டு (நகரம், ஃபில்மோத்சவ்) – படித்திருந்தால் நினைவில்லை.
சுஜாதா கதைகளில் எனக்கு பிடித்த சில – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி.

சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள் – இதை விவரிப்பது கஷ்டம். அருமையான கதை.

ஜி. நாகராஜன் (டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள்) – நாகராஜனின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன், ஆனால் இது என்ன என்று நினைவுக்கு வரவில்லை.

கிருஷ்ணன் நம்பி (தங்க ஒரு, மருமகள் வாக்கு) – மருமகள் வாக்கு சூப்பர்! நானும் அதற்கு கிளி சின்னத்தில் வாக்களிக்கிறேன். தங்க ஒரு நான் படித்ததில்லை.

பூமணி(ரீதி), நாஞ்சில் நாடன்(இந்நாட்டு மன்னர்), பிரபஞ்சன்(அப்பாவின் வேஷ்டி, மரி என்னும் ஆட்டுக்குட்டி), சோ. தர்மன்(சோக வனம்), மாலன்(இறகுகளும் பாறைகளும்) ஆகியவற்றை நான் படித்ததில்லை.

இந்திரா பார்த்தசாரதி, ஒரு கப் காப்பி. பரவாயில்லை, ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

திலிப் குமார் – மூங்கில் குருத்து, கடிதம். எனக்கு கடிதம் பிடித்த கதை. மூ. குருத்து சுமார்தான். ஆனால் அவர் எழுதிய கடவுதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.

எஸ்.ராவின் தேர்வு #63-#100 வரை நான் படித்திருப்பது ஜெயமோகனின் பத்ம வ்யூஹம் கதை மட்டும்தான். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு பெரிய பித்து உண்டு, அதனால்தான் பத்ம வ்யூஹம் நினைவிருக்கிறது. ஜெயமோகனின் கதைகளில் எனக்கு நினைவில் வருபவை பித்தம், காலம், அவதாரம், ஊமை செந்நாய்.

நான் படிக்காத அந்த #63-#100 வரை உள்ள தேர்வுகள்:
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ.
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

மேலே உள்ளவற்றைத் தவிர நான் பரிந்துரைக்கும் சில கதைகள் – பாலகுமாரன்(சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்த கரை பச்சை?), தங்கர் பச்சான்(குடி முந்திரி, வெள்ளை மாடு), தமயந்தி(அனல் மின் நிலையங்கள்)மனங்கள், யுவன் சந்திரசேகர்(23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்)

தொடர்புடைய பதிவுகள்:
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்