தமிழ் ஹிந்து தளத்துடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர்கள் கொஞ்சம் paranoid ஆக இருக்கிறார்கள், இஸ்லாமிய கிருஸ்துவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள் என்பது என் கருத்து. ஆனால் ஒரு நல்ல நண்பர் சொல்லும் சில விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றன. அவர் பெயரை சொல்வதை அவர் விரும்புவதில்லை. (திராவிட கழக ஆட்கள் ரௌடிகள் அவரை அடிக்க ஒரு முறை தேடி இருக்கிறார்களாம், அதனால் அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறார்.) அதனால் அவரை நல்ல நண்பர் என்றுதான் குறிப்பிட முடிகிறது.

ஆனால் ஏமாற்றி மத மாற்றம் செய்வதைப் பற்றி எனக்கும் அவர்களுக்கும் ஒரே கருத்துதான். திராவிட இயக்கத்தைப் பற்றி அங்கே சொல்லப்படும் தகவல்கள் (கவனிக்கவும், தகவல்கள்; அவர்களது கருத்துகள் இல்லை) திராவிட இயக்கம் மற்றும் பெரியாரின் தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க தமிழகத்தில் எடுக்கப்படும் முயற்சிகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. என்னுடைய கருத்தில் பெரியாரே – a straightforward and transparent man – அப்படிப்பட்ட முயற்சிகளை விரும்பமாட்டார்.

போகப் போகத் தெரியும் நல்ல முயற்சி. அது பல தெரியாத தகவல்களைத் தருகிறது. சுப்பு என்பவர் எழுதி இருக்கிறார். இணையக் கட்டுரைகளை இப்போது தொகுத்து புத்தகமாகப் போடுகிறார்களாம். என்னை மாதிரி கஞ்சப் பிசினாரிகள் இணையத்தில் இங்கே படிக்கலாம்.

எனக்கு நினைவிருக்கும் சில:

  1. வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு தமிழ் நாட்டில் பொதுவாக நினைப்பது போல பெரியது இல்லை என்பதை பல பகுதிகளில் எழுதி இருக்கிறார். இதைப் பற்றி சமீபத்தில் ஜெயமோகனும் எழுதி (பகுதி 1, பகுதி 2) இருந்தார். குறிப்பாக கேரளத்தில் அப்படி நினைக்கப்படுவதில்லை என்று சொல்லி இருந்தார். வைக்கத்தைப் பற்றி திராவிட இயக்கத்தினரை விட மலையாளிகளுக்குத்தான் அதிகம் தெரியும் என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 🙂
  2. சுயமரியாதைத் திருமணம் என்று பலமாக பிரச்சாரம் செய்த பெரியார் மணியம்மையை சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம்தான் செய்துகொண்டார்.
  3. சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர் ஒரு குருகுலம் அமைத்தார். அதற்கு காங்கிரஸ் ஐயாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தது. ஆனால் அங்கே இரண்டு பிராமணச் சிறுவர்கள் மற்ற ஜாதி சிறுவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டாம் என்றாம் ஐயர் அனுமதி கொடுத்திருந்தார். அது பெரிய விஷயமாக வெடித்து பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். இதைப் பற்றி இரு தரப்பு வாதங்களும் பல பதிவுகளில் பேசப்பட்டன.

எனக்கு பிடித்த சில பதிவுகள் பற்றி மேலும்:

பகுதி இரண்டில் சுவருக்குள் சித்திரங்கள் என்ற ஜூவி தொடரைப் பற்றி எழுதுகிறார். அதில் மாணிக்கம் கவுண்டரின் கடைசி வார்த்தைகள் ஒரு அருமையான சிறுகதை படித்த உணர்வைத் தருகின்றன. அமெரிக்காவில் நாலு மாடி வீடும், எட்டு மெர்சிடஸ் காரும், பாங்கில் பத்து மில்லியன் டாலரும் இருந்தாலும் கொசு கடிக்கும் மாம்பலம்தான் என் ஊர் என்ற ரேஞ்சில் யாரோ ஒருவர் “கவிதை” எழுதி இருந்தார். அந்த மாதிரி இருக்கிறது.

பதிவு 28: வீரமணியை சோ கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களும் தவறானவையே என்று சொல்ல வைக்க ததிங்கினத்தோம் போட்டுப் பார்க்கிறார், முடியவில்லை. ஆனால் என் நெருங்கிய நண்பன் தங்கமணிமாறன் திராவிட கழகக் குடும்பத்தவன். அவன் எனக்கு கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை எதிர்க்கும் திராவிட கழக பிரசுரங்களை காட்டி இருக்கிறான். அவன் சொன்ன விளக்கம் “எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. பெரியார்/தி.க. சில விஷயங்களில் focus செய்ய முடிவு செய்தது. அதனால் அவர்கள் கிருஸ்துவ மதம் சரி, ஹிந்து மதம் மட்டுமே தவறு என்று நினைப்பதாக முடிவு செய்யக் கூடாது”. இந்த அணுகுமுறையில் எனக்கு தவறு எதுவும் தெரியவில்லை. ஆனால் அதை வீரமணி வெளிப்படையாக சொல்லாதது, அதுவும் இப்படி கிடுக்கிப்பிடி போட்டு கேட்கும்போது சொல்லாதது சரி என்று அவனால் கூட சொல்ல முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
பெரியார் – என் மதிப்பீடு
பெரியார் திரைப்பட விமர்சனம்

வைக்கம் போராட்டம் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2

போகப் போகத் தெரியும் கட்டுரைகளின் தொகுப்பு
போகப் போகத் தெரியும் கட்டுரைகள் புத்தகமாக வெளி வருகிறது
போகப் போகத் தெரியும் பகுதி 2 – ஜெயிலில் மத மாற்றம்
போகப் போகத் தெரியும் பகுதி 28 – சோ வீரமணியை எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி