நண்பர் ராஜன் இங்கே உள்ளூரில் – அதாவது சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் – ஒரு மலைக்கோவிலுக்கு போனதைப் பற்றி எழுதி இருக்கிறார். ஓவர் டு ராஜன்!

புதிதாக ஏதோ அனுமார் கோவில் வந்திருக்கிறதாமே பக்கத்து வீட்டு பூஜா அம்மா சொல்கிறாள் ”எங்களை அழைத்துக் கொண்டு போங்கள் அனுமாரை வேண்டினாலாவது உங்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்” என்று என் மனைவி சில பல மாதங்களாகவே அனத்திக் கொண்டிருந்தாள். இங்கு மாதம் ஒரு புதிய கோவில் முளைத்துக் கொண்டிருக்கிறது, வீடுகளையெல்லாம் கோவில்களாக மாற்றி விடுகிறார்கள் இல்லாவிட்டால் சிறுவர்களைப் புணர்ந்த வழக்கிற்குக் காசு கொடுக்க முடியாமல் போண்டியாகும் சர்ச்சுகளும் கோவில்களாக மாறி விடுகின்றன என்பதினால் நானும் அதிக அக்கறை காட்டாமல் போகலாம், போகலாம் அனுமார் எங்கும் பறந்து போய் விடமாட்டார் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே அசுவாரசியமாக இருந்து வந்தேன். எனக்கு புத்தியும் வளர்ந்த மாதிரி தெரியவில்லை.

சென்ற வாரம் மூன்று நாட்கள் லீவு வர இப்பவாவது மடோனா மலை அனுமார் கோவிலுக்குப் போகலாமே என்று என் மனைவி மீண்டும் சொன்ன பொழுது “ இரு, இரு மலை மேல் அனுமாரா?” என்று கேட்டேன். ஆமா இத்தனை நாள் அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன், பக்கத்தில் ஒரு மணி தூரத்தில் ஒரு மலைச் சிகரத்தின் மேலே காட்டுக்குள் மலை உச்சியில் அனுமார் கோவில் இருக்கிறதாம் என்று சொல்லவும் “மலை மேலே என்று முதலிலேயே சொல்லித் தொலைத்திருந்தால் என்ன” என்று கேட்டு விட்டு, “மலை என்றால் சரி உடனே கிளம்பலாம்” என்று உற்சாகமாக காரைக் கிளப்பி விட்டேன்.

நாங்கள் இருக்கும் பகுதி ஒரு பள்ளத்தாக்கு. மேற்கே பசிஃபிக் மஹாசமுத்திரம் ஒரு மலைத்தொடரின் இடுக்கு வழியே காயலாக எங்கள் வீட்டிற்கு அருகே வருகிறது. மலைத்தொடரின் இந்தப் பக்கம் சிலிகான் வேலி மலைத் தொடரின் அந்தப் பக்கம் பசிஃபிக் மஹா சமுத்திரம். பள்ளத்தாக்கின் கிழக்கே இன்னும் ஒரு மலைத் தொடர். இரண்டு மலைத் தொடருக்கும் நடுவே இருப்பதுதான் சிலிக்கான் பள்ளத்தாக்கு. சரி பூகோளம் இருக்கட்டும் மீண்டும் அனுமாருக்கு. பசிஃபிக்கைத் தொட்டடுத்து இருக்கும் மலைத் தொடரில் உள்ள ஒரு மலையுச்சியில்தான் இந்த சங்கட் மோச்சா அனுமார் இருக்கிறார்.

சமவெளியே விட்டு விலகியதும் பாதை வளைந்து வளைந்து அடர்ந்து வளர்ந்த ரெட் வுட் காட்டின் வழியாக சிறு சாலை ஒன்றில் மேலே ஏறி, ஏறி ஒரு உச்சியை அடைந்தது. அந்த மலைக்கு மடோனா என்பதினால் அந்த வளாகத்திற்கும் மடோனா மையம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் மற்றபடி மடோனா செண்ட்டருக்கும், அனுமாருக்கும் பாடகி மடோனாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

இந்த மடோனா செண்ட்டர் என்பது யோகா, ஆயுர் வேதம், தியானம், போன்ற வியாபாரமாகக் கூடிய இன்ன பிற இந்திய சமாச்சாரங்களை எல்லாம் பேக்கேஜ் செய்யும் விற்கும் ஒரு அழகிய இடமாகத் தோன்றியது. அடர்ந்த வனப் பகுதியின் நடுவே மலையுச்சியில் ஒரு பெரிய ரிசார்ட். அங்கு ஒரு பெரிய தியான மையம், ஆஞ்சனேயா கேஃப் என்று ஒரு சின்ன காண்ட்டீன் அதில் எப்பொழுதுமே சமோசா தீர்ந்து போய் விட்டது என்று அறிவிக்கும் ஒரு நிரந்தர பலகை, பூங்காக்கள், நீரூற்றுகள், பழத் தோட்டங்கள், ஒரு சின்ன பள்ளி, யோகா கற்றுக் கொள்ள ஆயுர் வேத சிகிச்சைக்கு வருபவர்கள் தங்க தங்கும் விடுதி என்று எல்லாமே இருக்கிறது. இவ்வளவு இந்திய சமாச்சாரங்களை விற்கும் இடத்தில் கோவில் இல்லாவிட்டால் எப்படி ? ஆகவே போனசாக ஒரு கோவிலும் இருக்கிறது அந்தக் கோவிலில் இருக்கும் மூலவர்தான் ஹனுமான். அவரைச் சேவிக்கத்தான் நாங்கள் 65 மைல் கடந்து மலையேறி வந்திருக்கிறோம்.

யோகா மற்றும் தியான மையம் மிகப் பெரிது. சுற்றிலும் இருக்கும் கண்ணாடிச் சுவர்களின் வழியாக தூரத்தில் பரந்து விரிந்திருக்கும் சான் ஓசே பகுதி சிலிக்கான் வேலி எங்கு திரும்பினாலும் கீழே விரிகிறது. எங்கும் பசுமையும் அமைதியும். சில்லென்ற குளிர் எல்லா இடங்களிலும் உறைந்திருக்கிறது. யோக மையத்தில் ஏராளமான வெள்ளைக்காரர்கள் இந்துப் பெயர்களில் இருக்கிறார்கள். எங்கும் பரிபூரண அமைதி. ஒரு சிறு பள்ளியும், பயிற்சி நிலையமும் அருகே உள்ளது. படிகளில் ஏறி மேலே சென்றால் ஒரு சிறிய அனுமார் கோவில். சின்ன 10க்கு 10 கர்ப்பக் கிரகத்தில் ஒரு நாலடி உயர அனுமான் எழுந்தருளியிருக்கிறார். கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே வெட்ட வெளி, மேலே ஒரு சின்ன ஷாமியான மூடல் மட்டும். அமர்ந்து வழிபடும் இடம் நாலாபுறமும் வெட்ட வெளியாக சுற்றிலும் கீழே பள்ளத்தாக்கும், ஒரு புறம் உருக்கி விட்ட வெள்ளி படர்ந்தது போன்ற சமுத்திரமும், மேலே நீல வானமும், நடுவே மேகங்களும் விரிய அற்புதமான ஒரு தியான மோன சூழல் கவிந்தது. மெல்லிதாக நம் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ராம பஜன் எங்கோ மறைவில் இருக்கும் ஒரு ஸ்பீக்கரில் இருந்து வழிந்து கொண்டிருக்கிறது. அனுமாரிடம் எனக்கு புத்தி தருமாறு என் மனைவியும் பெண்ணும் வேண்டிக் கொண்டார்கள் நானும் அவர்கள் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு வேண்டிக் கொண்ட பின்னர் கீழே இறங்கி மடோனா மையத்தைச் சுற்றிப் பார்த்தோம். மிகவும் அமெச்சூர் பொம்மை செய்பவர்களால் விநாயகர், சிவன், ஹனுமான் ஆகிய கடவுள்களின் உருவங்கள் நீரூற்றுக்களின் நடுவே அமைக்கப் பட்டிருந்தன. இன்னும் முடியாமல் அனக்கோண்டா பாம்பின் பிருமாண்ட உருவத்தில் நான்கு காங்க்ரீட் பாம்புகள் ஒரு குளத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. முகம் முழுவதும் வெண்தாடியிலும், மீசையிலும் மறைத்திருந்த ஒரு வெள்ளைக்காரர் என்னை அருகினார். ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்த பொழுது “ஹவ் ஆர் வீ?” என்ற கேள்வியை தன் உள்ளங்கையில் பதுக்கி வைத்திருந்த ஒரு சின்ன கரும் சிலேட்டில் எழுதிக் கேள்வித்தார். மொளன விரதமோ அல்லது பேச முடியாதவரோ போலும். வெரி குட் என்று அமைதியாகச் சிரித்தேன். மரங்களுக்குள் மறைந்து போனார்.

ஒரு விஷயம் கவனித்தேன். மடோனா செண்டரில் அனுமார் இருக்கிறார், பெருமாள் இருக்கிறா, விநாயகர் இருக்கிறார். எங்கும் ராம் ராம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் சரிதான் ஆனால் அவர்களின் கலர் கலரான சிறு கையேடுகளிலோ விளம்பரப் பலகைகளிலோ அல்லது இணைய தளத்திலோ “இந்து” என்றொரு பெயரை மட்டும் மிகக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள். ஒரு வேளை “இந்து மதம்” என்பது ஒரு கெட்ட வார்த்தை என்றநம் இந்திய சூடோ செக்குலாரிஸ்டுகள் பரப்பும் செய்தி இவர்களுக்கும் எட்டி விட்டதோ என்னமோ? அல்லது ஒரு வேளை அனுமார் அஹமதியா மதத்தைச் சேர்ந்த கடவுளோ என்னமோ? அதன் ரகசியத்தை அவர்களது தளத்துக்கு விஜயம் செய்து கொஞ்சம் அறிந்து சொல்லுங்கள்.

அனுமாரை தரிசித்த திருப்தியுடன் மலையின் அந்தப் பக்கமாக இறங்கி பசிஃபிக் சமுத்திரத்தின் கரை வழியாக ஒரு புறம் மலை தொடர மறுபுறம் அதல பாதாளத்தில் கொந்தளிக்கும் சமுத்திரம் நடுவே தொங்கிய சாலையில் காரில் நாங்கள். வரும் வழியில் ஒரு சிற்றாறு கடலைக் கடக்கும் இடத்தில் காரை நிறுத்தி ஆற்றின் உள்ளேயே நடந்து கடலில் அது கலக்கும் இடத்திற்குச் சென்றோம். சிற்றாறு கடலில் கலக்கும் இடத்தில் சில ராட்சச கடல் யானைகள் “அடப் போடா” என்று அலுப்புடன். உலகக் கவலைகள் ஏதுமின்றி அக்கடா என்று கடற்கரை மணலில் புரண்டு கொண்டிருந்தன.

அமெரிக்காவில் யானை கிடையாது. ஆனால் கடல் யானைகள் உண்டு. ஒரு வகை சீல்களுக்குச் சின்னதாக ஒரு தும்பிக்கையிருப்பதினால் கடல் யானைகள் என்று பெயர், இந்த வகை சீல்கள் ஆண்டின் டிசம்பர் முதல் மார்ச் வரை பேறுகாலத்திற்காகவும், உற்பத்தி செய்து கொள்வதற்காகவும், முடி உதிர்த்துக் கொள்ளும் பொருட்டும் ஒரு சில கடற்கரைகளில் மட்டுமே ஒதுங்குகின்றன. அப்படி ஒரு ஒதுங்கும் ஒரு இடத்தில் இந்த இடமும் ஒன்று. அவைகளுக்கு உலகத்தில் வேறு எந்தவொரு கடற்கரையும் ஒதுங்கப் பிடிப்பதில்லை. பிறந்தகத்திற்குப் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளப் போவது போல வருடா வருடம் இந்தக் கரையில் இவைகள் ஒதுங்குகின்றன. ஒவ்வொரு சீலும் வழ வழவென விளக்கெண்ணையில் பொரித்த வெண்டைக்காய் போல மாமிச மலைகளாக இருக்கின்றன. அருகில் சென்றால் கூட யாரையும் பொருட்படுத்துவதில்லை. நிறைய சீல்கள் ஒதுங்கும் பொழுது பெண் சீல்களை அடையும் பொருட்டு இவைகள் ஆக்ரோஷமாக உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு சண்டை போடுவதைக் கண்டிருக்கிறேன். ஒரு சில சமயங்களில் கடற்கரையில் மணலே தெரியாத வண்ணம் நூற்றுக் கணக்கில் இந்த மாமிச மலைகள் ஆக்ரமித்துக் கொள்வதுண்டு. நாங்கள் சென்ற நேரம் ஒரு மூன்று சீல்கள் மட்டும் போரடித்துப் போய் கரை ஒதுங்கியிருந்தன. புகைப் படம் எடுத்த என்னை அசுவாரசியமாக ஒரு சீல் கண்ணை உருட்டிப் பார்த்துக் கொண்டு கிடந்தது, மற்றொன்று ஒரு முறை புரண்டு படுத்துக் கொண்டது. படங்களில் காணலாம்.

அனுமார் கோவில் தளம் இங்கே.

நான் எடுத்த புகைப் படங்களை இங்கே காணவும்.

ஜெயமோகனுடன் இதே கடற்பகுதிக்குச் சென்ற பொழுது நாங்கள் கண்ட கடல் யானைகளை இங்கே காணலாம்

தொகுக்கப்பட்ட பக்கம்: ஊர் சுற்றல், நண்பர்கள்->ராஜன் பக்கம்

Advertisements