கோபால் தேவன் பற்றி எழுதி இருக்கும் பதிவு. கோபாலின் இன்ஸ்பிரேஷன் தேவன்தானாம்.
துப்பறியும் சாம்பு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமிழ் கொஞ்சம் ததிங்கினத்தொமாக இருக்கும் என் பெண்ணுக்கு கூடப் பிடித்திருக்கிறது. பாதி சாம்பு கதைகளை நான் சொல்லி அவள் கேட்டிருக்கிறாள்.
ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் “குற்றவாளி” ஈஸ்வரன் என்று எழுதி இருக்கிறார். ஈஸ்வரன் டிஃபென்ஸ் வக்கீல் என்று நினைவு. சரியாக நினைவிருப்பவர்கள் சொல்லலாம்.
ஓவர் டு கோபால்!

Devanஎழுத்தாளர் தேவன் (மகாதேவன்) மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் (5, மே – 1957) ஓடிவிட்டன என்றாலும் அவர் எழுத்துக்கள் மட்டும் என்றும் மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது. மகாகவி பாரதி போல குறைந்த வயதே தேவன் பூமியில் இருந்தாலும் நிறைந்த சாதனையை தமிழ் எழுத்துலகுக்குக் கொடையாக தந்துவிட்டு வானுலகம் சென்றவர். ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக சேர்ந்து படிப்படியாக ஆசிரியராக உயர்ந்து சாதனை படைத்த இந்த மாபெரும் எழுத்தாளர் தனது 44ஆம் வயதிலேயே மறைந்து போனது தமிழுக்கும் தமிழ் எழுத்துக்கும் ஒரு பெரிய சோகம்.

எளிமையான நகைச்சுவை (தேவன் வார்த்தையில் ‘ஹாஸ்ய ரஸம்’) என்பது தேவனுக்கு கை வந்த கலை. அவரை சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, நாட்டின் அன்றைய நிலை, மக்களின் பேச்சு வழக்கு, பழகும் விதம் இவை எல்லாமே அவர் கதைகளில் மிக நேர்த்தியாகவும் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

மிஸ்டர் வேதாந்தம், மிஸ் ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, இன்னும் எத்தனையோ புதினங்கள் மூலம் தேவனின் எழுத்துக்கள் தமிழுலகத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து இருக்கும். அந்தக் காலத்தில் ஆங்கில மோகம் பிடித்து ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்ட வர்க்கத்தினரை, தன் இயல்பான நகைச்சுவை சேர்த்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் தேவன்.

என் எழுத்துகளுக்கு ஆத்திசூடி தேவன் எழுத்துகள்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். தேவனின் புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சிறு கதைகளும் கட்டுரைகளிலும் அவர் கைவண்ணம் அதிகமாகவே ரசிக்கலாம்.

1947 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவனின் ‘கோபம் வருகிறது‘ கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா? (தேவன் எழுதிய சீனுப்பயல் கதைத் தொகுப்பில் இருந்து.)

மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.
எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக் கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன். இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி சரி சீக்கிரம் இலையைப் போடு. நான் ஆபீசுக்குப் போகிறேன்!” என்பேன்.
ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.
‘இவ்வளவு நன்றாக சிசுருஷைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக் கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.
நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.
கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?
பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.
நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான். கோபம்தான் அந்தக் கத்தி.
கோபித்துக் கொள்ளாதீர்கள். கட்டுரை இங்கே முடிந்து விட்டது.

தேவனுக்கு பெரிய புகழ் பெற்றுத் தந்தவை என்னவோ அவர் ஆனந்தவிகடனில் தொடராக எழுதிவந்த புதினங்கள்தான். இந்தக் கால திரைப்படத்தில் ‘ஃப்ளாஷ்பாக்’ காட்சிகள் என்பார்களே, அதைப் புதினங்களில் எனக்குத் தெரிந்து முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தேவன் ஒருவரே. மிகப் புதுமையான முறையில் தொடர்களின் காட்சி எழுதப்படும்போது, வாசகர்கள் இயல்பாக ஒன்றிவிடுவது இயற்கைதான். மிஸ் ஜானகி என்ற ஒரு புதினத்தில் எந்த இளம் எழுத்தாளரும் பால பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டிய அளவுக்கு கதையமைப்பையும், உவமைகளையும் உருவாக்கியிருப்பது அவர் கதை எழுதும் திறனுக்கு ஒரு சான்று.

தேவன் புதினங்களை சற்று மேலோட்டம் விடுவோமே.
தேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். சிறிய கதாபாத்திரம் ஒவ்வொன்றிலும் கூட தேவனின் கைவண்ணத்தை ஆங்காங்கே காணலாம். இதோ கல்யாணி புதினத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைப் பற்றி தேவன் சொல்வதைப் பார்ப்போம்:

கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.
மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பார் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.
ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன் பின் அறைக் கதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.
‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம். வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட். ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்ல ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ – ‘அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம். சித்தெ பொறுத்துக்குங்கோ! இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டு போகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமான்னு கேழ்க்கிறான்’ என்பார்.
எதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.
ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்ய ரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!
எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு பார்க்கலாம் போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே. காலப்பிங் டி.பி – நான் என்ன செய்யறது? ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?” என்பார். அவர் பேச்சில் நிஜ கலப்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!

தேவன் இந்த டாக்டரைப் பற்றி கதையில் முன்கூட்டியே கதாநாயகன் நண்பன் மூலமாக நமக்கு அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:

பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட். ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற பெயரை ஒரு பெரிய கதைக்கு (2 பாகங்கள்) தலைப்பாகக் கொடுத்தாலும் அதன் கதாநாயகன் மட்டும் அந்த ஜஸ்டிஸ் இல்லைதான். ஆனால் கோர்ட் அதாவது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தக் கதையின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுவார் தேவன். அவர் இந்தக் கதை எழுதிய காலக்கட்டத்தில் கோர்ட்டுகளில் ஜூரர் சிஸ்டம் உண்டு போலும். அதாவது வெவ்வேறு வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஏழு அல்லது ஒன்பது நபர்களை ஜூரர்களாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பெரிய கிரிமினல் வழக்கிலும் நியமிப்பார்கள். அந்த ஜூரர்களின் மெஜாரிட்டி முடிவின் படி ‘கனம்’ நீதிபதி தீர்ப்பு சொல்லுவார். இதற்கு அப்பீல் கிடையாது. (வழக்குகளும் விரைவாக முடிக்கப்பட்டு முடிந்தவரை நல்ல நியாயமும் கிடைக்கச் செய்யும் வழிமுறை இது)
ஜஸ்டிஸ் ஜகன்னாதன் புதினத்திலும் இப்படி ஒரு கேஸ். கொலை வழக்கு. கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் இருக்கும் ‘ஈஸ்வரன்’ ( நடுவயதுக்காரர், ஏறத்தாழ கதாநாயகன்) பாத்திரத்தை நல்லவராகவே கதை முழுவதும் சுட்டிக்காட்டி வருகிறார் தேவன். ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சாட்சிகள் இவை அனைத்தும் ஈஸ்வரனுக்கு எதிராகவே கோர்ட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சி ஒன்று ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.
அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் இப்படி பேசுகிறார்.
“பிடிச்சுகிச்சு”
அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.
“என்ன பிடிச்சுகிச்சு?”
மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தைய்யா பதில் சொல்லுவார்.
“நேத்து ராத்திரி மொட்டை மாடில படுத்தேனா? ஒரே பனியா? அதான் பிடிச்சுகிச்சு.” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.
சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி.
இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது அவர் கதைகளை படித்த பலருக்குத் தெரிந்ததுதான்.

மிஸ்டர் வேதாந்தம் என்றொரு புதினம். தேவன் ‘ஆனந்த விகடன்’ ஏறத்தாழ ஆசிரியராக 15 வருடங்கள் பணி புரிந்தவர். தன் பத்திரிகை தொழில் சம்பந்தப்பட்ட கதையாகவே ‘மிஸ்டர் வேதாந்தம்’ புதினத்தை வெளியுலகுக்குக் காட்டினாரோ என்னவோ. இந்தக் கதையின் நாயகன் வேதாந்தம் ஒரு வளரும் எழுத்தாளன். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் தன் எழுத்துக்களைப் பிரசுரிக்கும்படி கோருவான்.

‘ஸார், நீங்க படிச்சுப் பார்த்துட்டு நல்லா இருந்தா உங்கப் பத்திரிகைல பிரசுரம் பண்ணுங்க ஸார். நான் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கேன் ஸார்.”
அதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிதானமாக சொல்லுவார்.
‘எல்லாம் சரிப்பா. நீ நல்லாவே எழுதியிருக்கே. ஆனா பாரு, எங்களது என்னவோ பிரபல பத்திரிகை. அதனால நீ என்ன பண்றே, முதல்ல அங்க இங்க எழுதி பிரபலமாயிட்டு அப்பறமா இங்கே வா. அப்ப நீ ஒரு குப்பையை எழுதிக் கொடு, அத அப்படியே நாங்க எங்க பத்திரிகைல பிரசுரிக்கிறோம். அதுவரைக்கும் நீ எத்தனை நல்லா எழுதினாலும் அது குப்பைக்கூடைக்குத்தான் போகும்.”

தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் சத்தியமான நிலையில் நிலைத்து நிற்கின்றன. பிரபல பத்திரிகைகளும் இன்றளவிலும் அவர் வார்த்தைகளை அப்படியே காப்பாற்றுகின்றன.

துப்பறியும் சாம்பு
1950-60களில் துப்பறியும் சாம்புவை தெரியாதவர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன். அவ்வளவு பாப்புலர். இப்போது கூட தேவனின் பெயரை வைத்து ஏதாவது பேசினால், துப்பறியும் சாம்பு தேவன்தானே என்று சடக் கென நம் மக்கள் கூறுவர். தேவனின் சித்திரக்கதைகளாக வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’வை பின்னாளில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் தத்ரூபமாக நமக்கு காட்டினார். அதன்பின் ஏராளமான நாடகங்களில் சாம்புவின் கதை மேடையேறியது. காத்தாடி ராமமூர்த்தி 1980களில், தொலைக்காட்சி தொடர் மூலம் சிறிது காலத்திற்கு சாம்புவின் புகழை தமிழுலகத்தில் பரப்பினார்.
தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. இதுதான் தேவனின் எழுத்து மகத்துவம்.
தேவனே தன் கதாநாயகனான துப்பறியும் சாம்புவை முதலில் எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.
‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்.

தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னாளில் ரொம்பவுமே புகழ் பெற்று தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும்.
எல்லாமே சின்ன சின்னக் கதைகள். எல்லாமே படிக்கத் தெவிட்டாத தேன் துளிகளைக் கொண்ட கதைகள். ஒவ்வொரு கேஸிலும் சாம்புவுக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவது நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது எழுத்தாளரின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன்.
‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ என்றொரு கதை. இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ராவ்சாகிப் நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.
ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிறது.
‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.
‘நீதான் விடு’ இது சாம்பு.
இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ஆஹா! என்ன ஆச்சரியம்! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடித்துவிட்டார். இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்.’ என்றும் கூவுகிறார்.
அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள். ‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார். அவர் மந்திரவாதியோ இட்சிணியோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்!’

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவன் எழுத்துக்களைப் பற்றி இங்கே எழுதும்போது ‘கோபம் வருகிறது’ என்ற கட்டுரையில் ஆரம்பித்தேன். இனியும் யாருக்காக கோபம் வந்தால் உடனே தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படியுங்கள். கோபமெல்லாம் பறந்துவிடும்.

ராஜத்தின் மனோரதம் என்ற ஒரு புத்தகம். ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டுவது எப்படி என்பதை ஒவ்வொரு அங்குலமாக நம் கண் முன்னே அரங்கேற்றியிருப்பார். அற்புதமான எழுத்து.

தேவன் எழுத்துலகில் ஜாம்பவான் என்று சொல்வதற்கு அவரின் எழுத்துத் திறன் மட்டும் காரணம் இல்லை. பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர் என்று பல முகங்கள் கொண்டவர். பழகுவதற்கு மிக எளிய மனிதராகவே கடைசி மூச்சு வரை இருந்தார். தமிழ் எழுத்துலகம் நிச்சயமாக தேவனால் மிகப் பெரிய புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு->தேவன் பக்கம், நண்பர்கள்->கோபால் பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
கிழக்கு பதிப்பகம் மறுவெளியீடு செய்திருக்கும் தேவனின் புத்தகங்கள்
தேவனின் “கோமதியின் காதலன்”
எழுத்தாளர் தேவன் பற்றி சுஜாதா

பிற்சேர்க்கை: டோண்டு இங்கே சாம்புவையும் சி.ஐ.டி. சந்துருவையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

Advertisements