தற்செயலாகத்தான் இந்த ப்ளாகை பார்த்தேன். ஜீவி என்பவர் எழுதுகிறார். சில எழுத்தாளர் அறிமுகங்கள் என்னை கவர்ந்தன.

ஜீவிக்கு பிடித்த எழுத்தாளர்களில் எனக்கு பிடித்தவர்கள் குறைவுதான். அவரது அறிமுகங்களும் ஓரளவு சம்பிரதாயமானவைதான். பாட புத்தகங்களில் வரும் கட்டுரைகள் மாதிரி ஒரு ஃபீலிங் வருகிறது. அதனால் என்ன? அவருடைய எழுத்தில் காணப்படும் உண்மையான உணர்வு இந்த குறைகளை போக்கி விடுகிறது.

கீழே இருப்பது அவரது அறிமுகங்கள் லிஸ்ட், என் சிறு குறிப்புகளுடன். பேரை க்ளிக் செய்தால் ஜீவியின் பதிவை காணலாம்.

எஸ்.ஏ.பி. – எஸ்.ஏ.பி குமுதம் ஆசிரியர், குமுதத்தை மிக பெரிய முறையில் வெற்றி பெற வைத்தவர். அவர் எழுபதுகளிலேயே கதைகள் எழுதுவதை குறைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனக்கு மங்கலாக ஞாபகம் இருக்கும் ஒரு தொடர்கதையில் ஆளவந்தார் என்ற ராசியான போலி டாக்டர் ஹீரோ. அப்போது சுவாரசியமாகத்தான் இருந்தது. ஜீவி அவரது காதலெனும் தீவினிலே, நீ, பிரமச்சாரி, சொல்லாதே, இங்கே இன்றே இப்பொழுதே, ஓவியம், நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று போன்ற நாவல்களை சிலாகிக்கிறார். ஜெயமோகன் தமிழின் சிறந்த social romances லிஸ்டில் அவரது சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.

பி.எஸ். ராமையா – ராமையாவை நான் அதிகம் படித்தத்தில்லை. படித்த கொஞ்சமும் (பூவிலங்கு என்ற நாடகம், பாக்யத்தின் பாக்யம் என்ற சிறுகதை தொகுப்பு) சொல்லும்படி இல்லை. படித்ததில் ஓரளவு பிடித்தது குங்குமப் போட்டு குமாரசாமிதான். அதுவும் சிறு வயதில் கிராம நூலகம் ஒன்றில் படித்தது. (என் படிப்பு அனுபவத்தில் கிராம நூலகங்களின் பங்கு பற்றி இந்த பதிவில் காணலாம்.) ஜீவி கு.பொ. குமாரசாமி, மலரும் மணமும், தேரோட்டி மகன், பிரசிடென்ட் பஞ்சாட்சரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி எங்கேயோ இவர் நல்ல எழுத்தாளர் இல்லை என்றும் சி.சு. செல்லப்பா இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது ஏனென்று புரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். ஜெயமோகனும் இவரை நல்ல எழுத்தாளர் என்று நினைக்கவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் இவர் எழுதிய பூச்சூட்டல் என்ற சிறுகதை தான் தமிழ் சிறுகதைகளை தொகுத்தால் அதில் இடம் பெறும் என்று சொல்லி இருக்கிறார். ஜெயமோகன் இவரது பிரேம ஹாரம் என்ற நாவலை சிறந்த social romance லிஸ்டில் சேர்க்கிறார்.

ஜெகசிற்பியன் – இவரையும் நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில புத்தகங்கள் மேலும் படிக்க வேண்டும் என்று தோன்ற வைக்கவும் இல்லை. நந்திவர்மன் காதலி, திருச்சிற்றம்பலம் நினைவிருக்கிறது. இவருக்கு சாண்டில்யன் பரவாயில்லை என்று நினைத்ததும் நினைவிருக்கிறது. ஜீவி இவரது பல நாவல்களை குறிப்பிடுகிறார். ஜெயமோகன் இவரது திருச்சிற்றம்பலத்தை Historical Romances லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

ஆர்வி – ஆர்வியையும் நான் அதிகமாக படித்ததில்லை. ஒரு வெள்ளிக்கிழமையில் என்ற சிறுகதை தொகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன். அதிலும் எனக்கு ஒரே ஒரு கதைதான் தேறியது – வரவேற்பு. காதலித்து கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலைமை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் பந்தம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயமோகன் அணையாவிளக்கு நாவலை தன் social romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். ஜீவி ஒரு வெள்ளிக்கிழமையில், அணையாவிளக்கு தவிரவும் பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

சிவசங்கரி: ஒரு காலத்தில் சிவசங்கரி விகடன் போன்ற பத்திரிகைகளின் தொடர்கதை ராணி. அவரது மார்க்கெட் பெண்கள். அப்போதெல்லாம் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். அப்பவே ஆனால் பிடிக்கவில்லை. எனக்கு தெரிந்த பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, என் அம்மாவின் சிநேகிதி பெண்கள் எல்லாரும் இவரை விழுந்து விழுந்து படிப்பதால், அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இவரது தொடர்கதைகளை விடாமல் படித்தேன். பெண்களிடம் உருப்படியாக பேசவும் முடியவில்லை என்பதுதான் சோகமான விஷயம். ஒரு மனிதனின் கதை, பாலங்கள், அருண் ஹீரோவாக வரும் ஒரு முக்கோணக் காதல் கதை போன்றவை பாப்புலராக இருந்தன. ஜெயமோகனும் ஒ.ம. கதை, பாலங்கள் ஆகியவற்றை தன் social romances லிஸ்டில் குறிப்பிடுகிறார். ஜீவி பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

தி. ஜானகிராமன்: தி.ஜாவை பற்றி நான் எதுவும் புதிதாக சொல்லிவிட போவதில்லை. மனிதர் ஜீனியஸ், அவ்வளவுதான். அவருடைய எழுத்துகளில் படிப்பவரை அதிர்ச்சி செய்ய வேண்டும் என்று கொஞ்சம் விருப்பம் தெரிகிறது. எனக்கு மோக முள் தமிழின் டாப் டென் நாவல்களில் ஒன்று. அம்மா வந்தாள் முக்கியமான ஒரு நாவல். ஜெயமோகனுக்கும்தான். எஸ். ராமகிருஷ்ணனும் தமிழின் சிறந்த நாவல்களாக இவற்றை குறிப்பிடுகிறார்.

நா. பார்த்தசாரதி: நா.பா. கொஞ்சம் உபதேசம் செய்பவர். இருந்தாலும் குறிஞ்சி மலர், சத்திய வெள்ளம் மாதிரி சில நாவல்கள் நன்றாக வந்திருக்கின்றன. ஜெயமோகன் ராணி மங்கம்மாள், மணிபல்லவம் ஆகிய இரண்டு நாவல்களையும் historical romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். மங்கம்மாள் சுமார்தான். மணிபல்லவம் நினைவில்லை. குறிஞ்சி மலர், பொன் விலங்கு, சமுதாய வீதி ஆகியவற்றை தன் social romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். சமுதாய வீதி சுமார்தான். அதில் வில்லனாக வருபவர் சிவாஜி கணேசனை வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதுதான் கொஞ்சம் அதிசயம். ஜீவி அவரது தீபம் பங்களிப்பை புகழ்ந்து எழுதி இருக்கிறார்.

விந்தன்: விந்தனின் எழுத்துகள் என்னை கவரவில்லை. நான் படித்ததும் கொஞ்சம்தான் – மனிதன் மாறவில்லை என்ற நாவல். அவரது பாலும் பாவையும் நாவலை ஜீவி சிலாகிக்கிறார்.

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு காலத்தில் பேசப்பட்டவர்கள். பாப்புலராக இருந்தவர்கள். ஆனால் தி.ஜா. ஒருவர்தான் இந்த லிஸ்டில் மறக்க முடியாதவர்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:
ஜெயமோகனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
எஸ். ராமகிருஷ்ணனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்


தமிழில் சரித்திர நாவல்களை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் நான் சிபாரிசு செய்யும் நாவல்கள் எவை என்று தெளிவாக குறிப்பிடவில்லை. என் லிஸ்ட் ரொம்ப சின்னது.

என் கணக்கில் மூன்றே மூன்று பேர்தான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சரித்திர நாவல்களை எழுதி இருக்கிறார்கள் – கல்கி, சாண்டில்யன், சுஜாதா.

ராங்க் படி என் சிபாரிசுகளை வரிசைப்படுத்தி இருக்கிறேன்.
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. யவன ராணி
4. கடல் புறா
5. பார்த்திபன் கனவு
6. ராஜ முத்திரை
7. மலை வாசல்
8. ரத்தம் ஒரே நிறம்

கொஞ்சம் பெரிய லிஸ்ட் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக – ஜெயமோகன் தனது சிபாரிசுகள் லிஸ்டில் historical romances என்று ஒரு பகுதி எழுதி இருந்தது ஞாபகம் வந்தது. சவுகரியத்துக்காக அதை இங்கே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.

வரலாற்று மிகு கற்பனைப் படைப்புகள்
1) பொன்னியின் செல்வன் — கல்கி.
2) சிவகாமியின் சபதம் — கல்கி.
3) மன்னன் மகள் — சாண்டில்யன்.
4) யவன ராணி — சாண்டில்யன்.
5) கடல் புறா — சாண்டில்யன்.
6) வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்.
7) ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்.
8) திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்.
9) வேங்கையின் மைந்தன் — அகிலன்.
10) மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி.

வரலாற்று மிகு கற்பனை படைப்புகள் இரண்டாம் பட்டியல்
1) பார்த்திபன் கனவு — கல்கி.
2) ஜல தீபம் — சாண்டில்யன்.
3) கன்னி மாடம் — சாண்டில்யன்.
4) மூங்கில் கோட்டை — சாண்டில்யன்.
5) ராஜ முத்திரை — சாண்டில்யன்.
6) கயல்விழி — அகிலன்.
7) வெற்றித் திருநகர் — அகிலன்.
8) ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா.
9) கோபுர கலசம் — எஸ்.எஸ். தென்னரசு.
10) ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி.
11) ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி.
12) தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி.
13) பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்.
14) நந்திபுரத்து நாயகி — விக்ரமன்.
15) திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்.


இந்தத் தளத்தின் பதிவுகளில் இது மிகப் பிரபலமானது. இதை மேம்படுத்தி ஒரு சீரிசாகவே சிலிகன் ஷெல்ஃப் தளத்தில் மீள்பதித்திருக்கிறேன்.

சாண்டில்யன் பற்றிய பதிவில் சாண்டில்யன் பல தளங்களில் – கரிகால் சோழன் காலம், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், ராஜஸ்தானம், பல்லவர்கள், கதம்பர்கள், மராத்தியர்கள், குப்தர்கள் – கதை எழுதியவர் என்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார். உண்மைதான். அது சாண்டில்யனின் ப்ளஸ் பாயின்ட்தான். அதனால்தானோ என்னவோ தமிழின் சரித்திர நாவல் என்றாலே சான்டில்யன்தான் என்று ஆகிவிட்டது. ஆனால் அவரது கதைகள் இரண்டாம் தரமானவைதான்.

தமிழில் முதல் தரமான சரித்திர நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். கதை பின்னல் என்றால் இந்த கதைதான். எத்தனை முடிச்சுகள், எத்தனை பலமான பாத்திரங்கள்? சிறு ரோல்களில் வரும் பார்த்திபேந்திரன், கந்த மாறன், சின்ன பழுவேட்டரையர், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், ஏன் குடந்தை ஜோதிடர் கூட மிக நுண்மையாக செதுக்கபட்டிருப்பார்கள். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, மந்தாகினி, ஆதித்த கரிகாலன் போன்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். இதை விட சிறந்த சரித்திர நாவலை நான் படித்ததில்லை. விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபில்ஸ் இதற்கு சமமானது என்று சொல்லலாம். ஆனால் ஹ்யூகோ எழுதும்போது இது ஒரு சம காலத்திய நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்.

கல்கியின் சிவகாமியின் சபதம் பொ. செல்வனுக்கு அடுத்தபடி சொல்ல வேண்டிய நாவல். முதன் முதலாக படித்தபோது ஒரு வாரம் நாக நந்தி கனவில் வந்தார். தூக்கத்தில் திடீர் திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொள்வேன். ஆயனர், மகேந்திர வர்மர், புலிகேசி, பரஞ்சோதி, கண்ணபிரான், நரசிம்ம வர்மர் எல்லாம் மிக அற்புதமான பாத்திரங்கள். சிவகாமி அருமையான படைப்பு.

கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கக் கூடியதுதான். சாண்டில்யனின் பெஸ்ட் நாவல்களுக்கு இணையான தரம். கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரியும். கல்கியின் முதல் சரித்திர நாவல் இதுதான். இதை ப்ராக்டிசுக்காக அவர் எழுதி இருக்க வேண்டும்.

இந்த மூன்று நாவல்களையும் வைத்து சொல்கிறேன், கல்கிதான் தமிழின் மிக சிறந்த சரித்திர நாவலாசிரியர்.

சாண்டில்யனை இதற்கு அடுத்தபடி சொல்லலாம். அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

ஞாபகம் வரும் வேறு சிலர்:
அகிலன் – கயல்விழி. மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இந்த நாவல் பிடிக்காததால், நான் வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும. ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. கபாடபுரம் பெரிய ப்ளேடு.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்: படிக்கலாம், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கோவி. மணிசேகரன்: குற்றாலக் குறிஞ்சி என்று ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் ஏதாவது ஒரு ராகம் பற்றி இருக்கும். அது மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.

கௌஸிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

படிக்க விரும்புபவை: யாரோ அனுஷா என்பவர் காவிரி மைந்தன் என்று பொ. செல்வனுக்கு ஒரு sequel எழுதி இருக்கிறாராம். பாலகுமாரனின் உடையார் என்ற புத்தகத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இவை இரண்டையும் படிக்க விரும்புகிறேன்.

இவர்களைத் தவிர விக்ரமன், அரு. ராமநாதன், ஜெகசிற்பியன், கௌதம நீலாம்பரன், மு. மேத்தா, தாமரை மணாளன், ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை. கண்ணதாசனின் விருது பெற்ற சேரமான் காதலி என்ற புத்தகத்தில் என்னால் ஐம்பது பக்கத்தை தாண்டமுடியவில்லை.

தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னால் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்! இந்த தளத்தில் நான் எழுதுவதே அடுத்தவர்கள் சொல்வதை கேட்கலாம் என்றுதான்…