இணையத்தில் அதிகமாக திட்டு வாங்குபவர்களில் காஞ்சி மடத்தின் இன்றைய தலைவரான ஜயேந்திர சரஸ்வதியும் ஒருவர். நான் ஒரு அய்யர் குடும்பத்தில் பிறந்தவன். அய்யர்களில் பலரும் காஞ்சி சங்கர மடத்தை மதிப்பவர்கள். அதனால் எனக்கு ஒரு insider perspective இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்த மடம் கிடம் ஆகியவற்றில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. நான் எழுதுவது என் சொந்த அனுபவம், perspective. இதை படித்தால் உங்கள் மனம் புண்படலாம். என் அம்மா அப்பா படித்தால் ஏண்டா இப்படி எழுதினே என்று கோபப்படலாம். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை, என் கருத்து எனக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். காஞ்சி மடத்தை பற்றிய ஐதீகங்களையும் ஆதி சங்கரர் ஐதீகங்களையும் ஓரளவு படித்திருக்கிறேன். மடத்திலேயே சில புத்தகங்கள் கிடைத்தன என்று நினைவு. காஞ்சி மடம் என்பது கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்தது, பிறகு காஞ்சிபுரத்தில் தனி மடமாக மாறிவிட்டது என்பது காஞ்சி மட ஐதீகங்களிலேயே இலைமறைகாயாக தெரிகிறது. ஆனால் official காஞ்சி மடத்து ஐதீகமோ, இது ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம் என்கிறது. ஆதி சங்கரர் முதல் மடாதிபதியாக இருந்ததாகவும் சுரேஸ்வரர் இரண்டாவாது மடாதிபதி என்றும் official காஞ்சி மடாதிபதிகள் லிஸ்டில் இருக்கிறது. சுரேஸ்வரர்தான் சிருங்கேரி மடத்தை நிறுவியர் என்பது எல்லா சங்கர மடங்களும், ஆதி சங்கரர் ஐதீகங்களும் தெளிவாக சொல்லும் விஷயம். ஒரு பொய்யின் மீது ஒரு ஆன்மீக மடம் எழுப்பப்பட்டிருப்பது எனக்கு சிறு வயதிலேயே பெரிய உறுத்தலாக இருந்தது. கிளை மடமாக இருந்தோம், இப்போது தனியாக பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டால் மடத்தின் மகிமை குறைந்துவிடுமா? அப்படி குறைந்துவிடுமென்றால் மடத்துக்கு உண்மையிலேயே ஏதாவது மகிமை இருக்கிறதா?

காஞ்சி மடத்தை பலரும் மதிக்க முக்கிய காரணம் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள்தான். காந்தி வந்து அவரை சந்தித்ததை, அவர் யாரோ ஒரு வெள்ளைக்காரருக்கு திருவண்ணாமலை ரமணரை கை காட்டியதை, சிவாஜி திருவருட்செல்வரில் அப்பருக்கு அவரை ரோல் மாடலாக வைத்துக் கொண்டதை, ஜெயகாந்தன் எழுதிய ஜய ஜய சங்கர சீரிஸ் புத்தகங்கள எல்லாம் பெருமையாக பேசுவார்கள். அவரை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். என் சிறு வயதில் காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில் உள்ள கலவையோ என்னவோ ஒரு கிராமத்தில் இருந்தார் என்று நினைவு. அங்கே ஒரு முறை போயிருக்கிறேன். பெரிய இடம், அவரைப் பார்க்க இரண்டு மூன்று மணி நேரம் ஆனது. ஆனால் அங்கே சும்மா சுற்றி நடந்து வந்து பொழுது போய்விட்டது. அவர் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவார், அதுவும் உப்பு இல்லாமல் வாழைப்பூவும் சாதமும் கலந்து ஒரு கவளம் இரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொன்னார்கள். அட சுகமாக வாழும் சந்நியாசி இல்லை போலிருக்கிறதே என்று தோன்றியது.

அவர் ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு 13-14 வயது இருக்கலாம். என்னுடைய விதவை உறவினர் ஒருவர் அவரை பார்க்க கிளம்பவில்லை. ஏனென்றால் அவர் தலை மழிக்காத விதவையை பார்த்தால் அன்று சாப்பிட மாட்டாராம். அவர் சாப்பிடும் ஒரு கவளம் இரு கவளத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று அவர் வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார். விதவை என்றால் தலையை மழித்துக் கொள்ளத்தான் வேண்டுமா, இது என்னடா கொடுமை என்றுதான் தோன்றியது. அதுவும் அந்த வயதுதான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் வயது, தனக்குத்தான் எல்லாம் தெரியும், இந்த பெரிசுகள் எல்லாம் நாட்டைக் கெடுக்கின்றன என்று ஒரு நினைப்பு இருக்கும் வயது. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது.

அப்புறம் அவருக்கு வயதாக வயதாக senile ஆகிவிட்டார், அதை யாரும் கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள் என்று தோன்றியது. தீபாவளி மலரில் அவர் படம் போடுவார்கள். ஒரு தீபாவளி மலரில் அவர் குத்துக்காலிட்டு அடி தொடை தெரிய உட்கார்ந்திருந்தார். தீபாவளியும் அதுவுமாக திவ்ய தரிசனம். வெளியிலும் வரவே மாட்டாராம். வெளியில் வந்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது என்று அவரை உள்ளேயே வைத்திருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது. அவர் மறைந்ததும் அவரை கடவுள் என்று கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆழ்வார் என்று ஒரு காரக்டர் வருவார். அவர் ஒரு icon, senile ஆனாலும் அவரை வைத்து ஷோ காட்டுவார்கள். அந்த இடத்தை படித்தபோது இவர் ஞாபகம் வந்தது.

உண்மையில் பல அய்யர்கள் அவரை கொண்டாடுவது ஜெயேந்திரர் மீது உள்ள அதிருப்தியால்தான் என்று நினைக்கிறேன். ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய போதே இந்த அதிருப்தி தொடங்கிவிட்டது. அரசியல் தலையீடு, மடத்தை புது வழிகளில் – மற்ற ஜாதியினரை போய் பார்ப்பது, கல்வி, சங்கரா யூனிவர்சிடி எல்லாம் இந்த அதிருப்தியை அதிகரித்தது. அப்புறம் கொலை கேஸ், பெண்கள் உறவு என்றெல்லாம் நியூஸ் வர ஆரம்பித்ததும் எல்லாருக்கும் அருவருப்பு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயேந்திரர் சேரிகளுக்கு போனதும், காலேஜ் திறந்ததும், மடத்தின் சொத்துகளை வைத்து, சமூகத்துக்கு ஏதோ செய்ய நினைத்ததும் எனக்கு பிடித்திருந்தது. ஏதோ கொஞ்சமாவது உருப்படியாக ஏதோ செய்கிறார் என்று தோன்றியது. இவரது முயற்சிகளுக்கு பழமையில் ஊறிய பெரியவர் முட்டுக்கட்டை போட்டிருப்பார், அதனால்தான் தாங்க முடியாமல் ஓடியிருப்பார் என்று தோன்றியது. ஆனால் அது அரசியலில் இலைமறைகாயாக தலையிடுதல், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவு என்று மாற ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால் கொலை கேஸ், பெண்கள் என்று முடிந்திருக்கிறது.

ஜெயேந்திரர் மாசு மறுவற்ற உத்தமர் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நெருப்பிலாமல் புகையாது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு மடாதிபதி, அதுவும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஒரு மடத்தின் அதிபதி என்று சொல்லிக் கொள்பவர் கொலை எல்லாம் செய்ய வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. ஜெயலலிதாவுடன் ஏதோ தகராறு, அதனால்தான் அவரை பழி வாங்கவே ஜெ இப்படி எல்லாம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஜெ ஒருவரை ஒழிக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். கைது செய்த போலீஸ் அதிகாரி பற்றியும் சில நெகடிவ் செய்திகள் வந்தது மங்கலாக நினைவிருக்கிறது. கலைஞர் ஆட்சியிலும் கேஸ் விரைந்து நடத்த முயற்சி எடுக்காதது ஏன் என்று புரியவில்லை. ஆனால் ஜெயேந்திரர் மேல் தப்பே இல்லை என்றாலும், இது காழ்ப்பு உணர்ச்சியால் மட்டுமே போடப்பட்ட கேஸ் என்றாலும் ஜெயேந்திரர் கேசை கிடு கிடு என்று முடிக்க முயற்சி செய்ய வேண்டாமா? அப்படி அவரும் முயற்சி செய்வது போல் தெரியவில்லை. அப்படி அவர் முயற்சி செய்யாததுதான் அவர் மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

Ceaser’s wife must be above suspicion என்று சொல்வார்கள். கேஸ் முடியும் வரைக்கும் என்னை நானே சஸ்பெண்ட பண்ணிக் கொள்கிறேன், மடத்தின் லௌகீக விஷயங்களை ஒரு கமிட்டி கவனிக்கும், ஆன்மீக விஷயங்களை கவனிக்க இன்னொரு வாரிசை தேர்ந்தெடுக்கிறேன், கேஸ் முடிந்த பிறகுதான் நான் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பேன் என்று சொன்னால், அது அவருக்கும் கௌரவம். அப்படி அவர் செய்ய விரும்புவதாகவே தெரியவில்லை. எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் கேசை இழுத்தடிப்போம் என்றுதான் முனைவதாக தோன்றுகிறது. இது அவருக்கும் இழுக்கு, சங்கர மடம் என்ற அமைப்புக்கும் இழுக்கு.

இன்றைக்கும் அய்யர்கள் காஞ்சி மடத்துக்கு போகத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு காஞ்சி மடம் ஒரு ஆன்மீக ஸ்தலம் மாதிரி. குல தெய்வம் கோவிலில் பூசாரி சரி இல்லை என்றாலும் கடா வெட்டி பூசை செய்வது நிறுத்தாமல் நடப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் எல்லாருக்கும் ஒரு தயக்கம், இங்கே போகிறோமே என்று கொஞ்சம் கவலை எல்லாம் இருக்கிறது. அது எல்லாம் மூத்தவரை கடவுளாகவே பாவிக்கும் நிலையாக உருவாகி இருக்கிறது.

உண்மையில் நாம் கேட்க வேண்டிய கேள்வி வேறு. இந்த கால கட்டத்தில் மடங்கள் போன்ற மத அமைப்புகள் (முஸ்லிம், கிருஸ்துவ, சீக்கிய அமைப்புகளுக்கு பேர் தெரியவில்லை) தேவைதானா? ஒரு மடாதிபதியின் கடமைகள் என்ன? அதை பெரியவரும் ஜயேந்திரரும் செய்தார்களா? பெரியவர் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவரா? ஒரு நல்ல மடத்தின், மடாதிபதியின் இலக்கணம் என்ன? இன்றைய கால கட்டத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும்? Does a mutt have any relevance today? அதை பற்றி இன்னொரு பதிவில்.

இன்றைய சமுதாயத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காஞ்சி மடாதிபதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? முடிந்தால் எழுதுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சி மடம் ஆதி சங்கரர் நிறுவியது இல்லை

Advertisements

(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்


சமீபத்தில்தான் ஒரு பதிவில் இந்த தொகுப்பை பற்றி குறிப்பிடிருந்தேன். அந்த தொகுப்பை வெளியிட்ட மோதி ராஜகோபால் என்பவர் இறந்துவிட்டாராம். அவரை பற்றிய விவரங்களை ஜெயமோகனின் இந்த பதிவில் பார்க்கலாம்.

மோதி ராஜகோபாலுக்கு என் அஞ்சலி.


எனக்கு படிப்பதில் ஒரு பித்து ரொம்ப வருஷமாக இருக்கிறது. சாண்டில்யனை பற்றி எழுதியபோது இந்த பித்து எப்படி வளர்ந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சரி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிசை ஆரம்பிக்கிறேன். முதலில் எழுபதுகள் நடுவில். என்னுடைய ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை.

சின்ன வயதில் நான் கிராமங்களில் வளர்ந்தவன். நான் வளர்ந்த கிராமங்களில் அரசு அமைப்புகள் என்றால் எலிமெண்டரி ஸ்கூல், ஹைஸ்கூல், மாட்டாஸ்பத்திரி (மனித ஆஸ்பத்திரிக்கு ஒரு பத்து மைல் போக வேண்டும், அதுவும் அரசு ஆஸ்பத்திரி கிடையாது), அப்புறம் லைப்ரரி. குக்கிராமம் என்றால் எலிமெண்டரி ஸ்கூல் மட்டும்தான் இருக்கும். எனக்கு அப்போதெல்லாம் நான் கிராமத்தில் இருக்கிறேன், குக்கிராமத்தில் இல்லை என்று ஒரு சின்ன பெருமை உண்டு. 🙂

அந்த கிராமத்து லைப்ரரிகளில் ஒரு ஆயிரம் ஆயிரத்தைநூறு புஸ்தகம் இருக்கும். புது புஸ்தகங்கள் எனக்கு தெரிந்து பத்து வருஷங்களில் வந்ததில்லை. பேப்பர் வரும். பத்திரிகைகள் வரும். ஒரு நூறு புஸ்தகம் சிறுவர் புஸ்தகம் ஆக இருக்கும்.

எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை அந்த லைப்ரரியில் ஒரு மெம்பராக சேர்த்துவிட்டாள். நான் ஒன்றிரண்டு வருஷங்களில் அந்த சிறுவர் புஸ்தகங்களை முடித்துவிட்டேன். எனக்கு இன்னும் நினைவிருப்பவை வாண்டு மாமாவின் காட்டுச்சிறுவன் கந்தன், பூவண்ணனின் காவேரியின் அன்பு, அப்புறம் ஆலம் விழுது – ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள் குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்துவார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகக் கூட வந்தது. (அதில் ஒரு அற்புதமான காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)

சரி எங்கெல்லாமோ போய்விட்டேன். நூறு புஸ்தகம் என்றால் படித்துவிடலாம். அவற்றை முடித்த பிறகு என்ன படிப்பது என்று தெரியவில்லை. முதல் வழிகாட்டி அம்மாதான். எட்டு வயதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் அம்மா கை காட்டிய சாண்டில்யன் புஸ்தகங்கள் எல்லாம் படித்தேன். சரித்திரப் பாடப் புத்தகத்தில் தெரிந்து கொண்டதைவிட சாண்டில்யன் மூலமாக தெரிந்து கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த வயதில் சாண்டில்யன் இளவரசிக்கு மேடு, காடு என்று எழுதினால் அதெல்லாம் புரியவில்லை. சாகசங்கள் – கடல் புறா, மலை வாசல், ராஜ முத்திரை, யவன ராணி – மட்டுமே மனதில் நின்றது.

ஆனால் ஒரு பத்து புத்தகம் படித்த பிறகு சாண்டில்யன் ஃபார்முலா பிடிபட்டுவிட்டது. ஒரு கற்பனையான அல்லது நிஜமான, சரித்திரத்தில் பெரிய இடம் பெறாத பாத்திரம்தான் ஹீரோ. யாராவது ஒரு mentor இருப்பார். ஹீரோயின் எப்போதும் 40-20-40 சைசில் இருப்பார். (இந்த சைசின் மகத்துவம் ஒரு பனிரண்டு வயது வாக்கில் புரிய ஆரம்பித்தது). நிறைய இயற்கை வர்ணனை இருக்கும். சுலபமாக அலுப்பு தட்டிவிட்டது.

அடுத்தபடி என் அம்மா படிக்க சொன்னது ஜெயகாந்தன். அந்த வயதில் எனக்கு போர் அடித்தது. அவர் கதைகளில் வருபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பாதி நேரம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள், சில பல சிறுகதைகள் எதுவும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் ரொம்ப பிடித்திருப்பது போல (அம்மா எனக்கு ரசனை இல்லை என்று நினைத்துவிட்டால்?) பாவ்லா செய்து கொண்டிருந்தேன். முதல் முதலாக பிடித்தது அவர் ஜய ஜய சங்கர என்று எழுதிய ஒரு சீரிஸ்தான். இன்றும் நான் சி.நே.சி. மனிதர்கள், ஜ.ஜ. சங்கர தாண்டிப் போகவில்லை. என்றாவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படிக்க வேண்டும்.

அப்புறம் காண்டேகர். காண்டேகர் என்று சொல்லக் கூடாது, யயாதி என்றுதான் சொல்ல வேண்டும்.இப்போது யோசித்து பார்த்தால் யயாதி அந்த வயதுக்கு கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றுகிறது. மிகவும் பிடித்திருந்தது. கச்ச தேவயானியின் கதை, யயாதியின் தேடல், யதியின் தேடல், சர்மிஷ்டையின் தேடல் – எல்லாம் மிக அற்புதமாக வந்திருந்தன. அந்த வயதில் பாயிண்ட் ஆஃப் வ்யூ யயாதியிலிருந்து தேவயானியிலிருந்து சர்மிஷடக்கு மாறுவது மிக அற்புதமாக டெக்னிக் என்று தோன்றியது. காண்டேகரின் பிற புத்தகங்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை.

என் அம்மாவின் சிபாரிசுகளில் அற்புதமான புத்தகம் என்று நான் அப்போது நினைத்தது, இப்போதும் நினைப்பது சா. கந்தசாமியின் சாயாவனம்தான்.

அடுத்தபடி குமுதம், விகடனில் வரும் தொடர்கதைகளை ஒரு பத்து வயதில் படிக்க ஆரம்பித்தேன். ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியோர் பரவாயில்லை என்று தோன்றியது. மணியன் உலக மகா போர். பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் ஓரளவு பிடித்திருந்தது. தேடித் பிடித்து அப்போது படித்த புத்தகங்கள், ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை, பாக்யம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி, சாவியின் வாஷிங்டனில் திருமணம். அம்மாவும் நானும் இவற்றை பற்றி பேசுவோம்.

என்னுடைய sources இவைதான் – கிராம நூலகங்கள், பாப்புலர் பத்திரிகைகளான குமுதம், விகடன், கோகுலம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பத்திரிகைகலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட தொடர்கதைகள், இந்த கால கட்டத்தின் இறுதியில் வரத் தொடங்கின மாத நாவல்கள் (ராணி முத்து ரொம்ப நாளாக வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் மாலைமதி ஆரம்பித்தது.) எனக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கும் இவைதான் sources. எனக்கு தெரிந்த எல்லாருக்குமே இவைதான் sources. புத்தகங்களை வாங்கலாம் என்று எனக்கு தோன்றியது கூட இல்லை.

இன்றைக்கு நாஸ்டால்ஜியா, மற்றும் நல்ல புத்தகங்கள் என்று நான் இந்த காலத்தில் படித்த புத்தகங்களுள் சிபாரிசு செய்வது:

நல்ல புத்தகங்கள்:
1. சா. கந்தசாமியின் சாயாவனம்
2. வி. எஸ். காண்டேகரின் யயாதி
3. ஜெயகாந்தனின் ஜய ஜய சங்கர (4 மாத நாவல்கள், ஒரு சீரிஸ்)
4. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இந்த வயதில் பிடிக்கவில்லை, ஓரளவு பெரியவன் ஆன பிறகு பிடித்திருந்தது)

இரண்டாம் பட்டியல்:
1. ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை
2. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி புத்தகங்கள் அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும்
3. பாக்கியம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி
4. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
5. சாண்டில்யனின் யவன ராணி
6. சாண்டில்யனின் கடல் புறா
7. சாண்டில்யனின் ராஜ முத்திரை
8. சாண்டில்யனின் மலை வாசல்
9. சாண்டில்யனின் கன்னி மாடம்
10. சாவியின் வாஷிங்டனில் திருமணம்

நாஸ்டால்ஜியா:
1. வாண்டு மாமாவின் காட்டு சிறுவன் கந்தன்
2. பூவண்ணனின் காவேரியின் அன்பு
3. பூவண்ணனின் ஆலம் விழுது

ஐந்தாறு வருஷ படிப்புக்கு பதினேழு புஸ்தகம்தான் தேறுகிறது. வேண்டுமானால் இன்னும் சில சாண்டில்யன் கதைகள், எஸ்.ஏ.பி. அண்ணாமலை (கதை பெயர் எதுவும் ஞாபகம் வரவில்லை) சேர்த்துக் கொள்ளலாம்.


ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் அவரது தாக்கம் பெரியது. அக்னிப்ரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் என்ற மூன்று அம்ச சிறுகதை/நாவல்கள் மிகவும் புகழ் பெற்றன. பாரீசுக்கு போ, ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்றவையும் நல்ல நூல்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. அவரது ஜெய ஜெய சங்கர சீரிஸ் நான் சிறு வயதில் படித்த போது பிடித்திருந்தது.

அவரது சினிமாக்களும் இன்னும் பேசப்படுகின்றன.

அவரது கதைகளில் லெக்சர் அடிக்கும் தோரணை தெரியும். அது அவரது பலவீனம். சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகளில் அளவுக்கு அதிகமாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (இது எழுபதுகளில் எழுதப்பட்ட கதை, இப்போது கூட ஆங்கிலம் அதிகமாக தெரிகிறது.)

இது பொருத்தமானவருக்கு கொடுக்கப்பட்ட விருது. தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். மேலும் அசோகமித்திரன், பூமணி, கி. ராஜநாராயணன், ஜெயமோகன் போன்றவர்களும் தகுதியானவர்களே. அவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

பின்குறிப்பு: ஐராவதம் மகாதேவனுக்கும் பத்மஸ்ரீ கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் சரியானவருக்கு கொடுக்கப்பட்ட விருது.