8 போட்டி முடிவுகளை சரியாக கணித்த பால் என்ற ஆக்டோபஸ் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இறந்தது. வயதாகி இறந்து போனதாம். (அப்பாடா! ஜாதி, மதம், வரலாறு தாண்டி லைட்டாக ஒரு பதிவு எழுதிவிட்டேன்!)

ஆக்டோபஸ் ஜோசியம் மாதிரி நிகழ்ச்சிகள் எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன, ஏன் ஊடகங்கள் இந்த மாதிரி செய்திகளை பரப்புகின்றன என்பதைப் பற்றி ஆராய்ச்சியே செய்யலாம். மால்கம் க்ளாட்வெல் எழுதிய டிப்பிங் பாயின்ட் என்ற புத்தகத்தில் இது மாதிரி பரவும் fad-களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.

நண்பர் கோபால் அனுப்பிய ஒரு ஜோக் கீழே.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

Advertisements

கோபாலின் பதிவுகளை விரும்பிப் படிப்பவர் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் அனுப்பி இருக்கும் இன்னொரு பதிவு ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். ஓவர் டு கோபால்!

வாழ்க்கையில் எது கிடைத்தாலும், ஓசியில் வாங்கி சாப்பிடுவது, அல்லது ஒரு பொருளை இலவசமாக வாங்கி உபயோகிப்பது என்பதில் கிடைக்கும் ஆனந்தம் உழைத்து சம்பாதிப்பதில் கிடைப்பதில்லை. தமிழர்களுக்கே உரித்த யதார்த்தமாக வந்த பழக்கவழக்கங்களை அவ்வளவு விரைவாக மறப்பதற்கில்லை.

ரயிலில் போகும்போது, ‘சார் கொஞ்சம் செய்தித்தாள் கொடுக்கிறீர்களா’ என்று கேட்டுவாங்கி அவர் படிக்கும் முன்பே ஒரு வரி விடாமல் படித்துவிட்டு, அவர் அதை படிக்க ஏங்கும் வரை எரிச்சலாகி, வேறு ஒரு சஞ்சிகையை வாங்கி வந்தவுடன் அதை பிடுங்கிக் கொண்டு இதை அவரிடம் கொடுத்து, “போதும் சார், நீங்க படிங்க” என்று சிரிப்பை பல்லிலும் மகிழ்ச்சியை கண்ணிலும் காட்டுவதாகட்டும், திரைப்படம் பார்க்கும் போது, தம் நண்பர்களிடம், “இப்போ பாரு, விஜயகாந்த் வில்லனை ஒரு குத்து விடுவார்” என்று முன்கூட்டியே வரும் காட்சியைக் கூறி படம் பார்க்காத நமக்கு எரிச்சல் மூட்டுவதாகட்டும், பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு அந்தத் தாளில் கையை துடைத்து நடுச்சாலையில் எறிவதாகட்டும், எது இலவசமாக கிடைத்தாலும், முதலில் போய் கால் கடுக்க நின்று வாங்கி, போருக்குப் போன வீரன் வெற்றி வாகை சூடுவது போல அந்த இரண்டணா ‘டீ’ தூளை வாங்கி வருவதாகட்டும் நமக்கு நிகர் நாமே.

இது போன்ற தினப்படி பழக்கத்தை மறக்க முயற்சிப்பது தேசத் துரோகம், இனத் துரோகம். நாம் யாருடனும் விரோதம் பாராட்டுவோம், ஆனால் இது போன்ற ரத்தத்தினூடே ஊடுருவித் தூங்கும் பழக்கத்தை நாமே நினைத்தாலும் விடமுடியாது. பள்ளிக்கு போகும்போதே, இடைவேளையில் வாங்கித் திங்க ஒன்றும் இல்லாவிட்டால், “டேய், குமார், எனக்கு ஒரு காக்காக்கடி கொடுடா” என்று ஆரம்பிக்கிறது நமது ஓசி பயணம்.

சரி, அது என்ன ஓசி? அந்தக் காலத்தில், அதாவது ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் லண்டனுக்கு தபால் அனுப்புவது என்பது மிகவும் செலவான காரியம். இங்கு ஊழியம் செய்த துரைமார்கள் அங்குள்ளவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் புனைய வேண்டுமென்றாலோ, ஒரு ஆவணத்தை அனுப்ப வேண்டுமென்றாலோ மிகச் செலவாகும்.

ஆனால், அரசாங்க கடிதங்கள் மொத்தமாக ஒரு பெரிய உறையில் போட்டு மடிக்கப்பட்டு அரசாங்கச் செலவில் அனுப்பப்படும். அதன் மேல் “OG” அதாவது “ON GOVERNMENT SERVICE” என்று எழுதப்பட்டிருக்கும். இந்த வெள்ளையப்பன்கள் தங்களின் சொந்த கடிதங்களையும் சேர்த்து மெதுவாக சேர்த்துவிடுவார்கள். லண்டனில் இருக்கும் அடிவருடிகள் அதை பிரித்து உரிய இடத்தில் சேர்த்து விடுவார்கள். இந்த நமது கதாநாயகன் தான் “ஓஜி”. சுருக்கமாக கூறுவதற்காக “SERVICE” என்பதை முதலில் வெட்டிவிட்டு, “ஓஜி” என்று கூறத் தொடங்கினார்கள். பின் நாளடைவில், அதை உறையில் “ஓஜி” என்று எழுதினார்கள். நாம்தான் எதையும் நம்மகப்படுத்துவோமே, இந்த ஓஜிதான் மருவி, ஓசி ஆனது. பின்னாளில், எது இலவசமாக கிடைத்தாலும், “என்ன ஓசியா” என்று கேட்டு அதற்குரிய மரியாதையைக்கொடுத்தோம்.

பள்ளிப் பருவத்தில் கோவிலும், ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்களிப்பது என்பது இயல்பாகவே உண்டு. அதற்கு முக்கியக் காரணம் – எந்த பண்டிகைகளோ, விழாவோ நடந்தாலும் ஓசியாக ஏதாவது சாப்பிடக்கிடைக்கும். ஒரு வெள்ளிக்கிழமையென்றால், நிறைய பேர் ‘வடல்’ என்று வட்டார வழக்கில் சொல்லப்படும் சிதறு தேங்காய் பிள்ளையாருக்கு உடைப்பார்கள். அதில் பல பசங்கள் சேர்ந்து கொண்டு, உடைத்தவுடன் அதிகம் பொறுக்கிக்கொண்டு தலைவனிடம் கொடுத்தால் ‘பொறுக்கும்’ குழுவில் சேர்த்துக்கொள்வான். ஒரு 8 மணிக்கு கோவில் மூடும்போது, அதை மொத்தமாக பனியனைக் கழட்டி அதில் கொட்டி பங்கு வைப்போம். அதில் அடிதடியெல்லாம் வந்ததுண்டு. எல்லாம் பாழாப்போன (மறுநாளைக்கு கிடைக்கும்) சட்னிக்குத்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், நாம் திறமையாக நிறைய பொறுக்கியிருந்தாலும், சம பங்கை கூறு போடும்போது, நம் பங்கு குறையும்போது, கோபம் வரும். அப்போது கட்டி புரண்டு சண்டைபோட்டுள்ளோம். அடுத்தது, இந்த ஆடி மாசம் அமாவாசை திங்கள்கிழமைகளில் வந்தால் ஒரே குஷிதான். குழந்தை பிறக்காத பணக்காரர்கள் அரச மரத்தை சுற்றி வந்து, பூஜைகள் செய்து, ஒரு 1008 சிறு மணியோ அல்லது வேறு ஏதோவொரு (பரிசுப் பொருள்) பொருளைக் கொடுப்பார்கள். ஏப்ரல் மாதம் பஞ்சாங்கம் வந்தவுடனேயே ஆடியில் திங்கள் அமாவாசை வருகிறதா என்று பார்த்துவிடுவேன். காலையிலேயே போய் எப்படியும் ஒரு 2ஆவது வெற்றிகரமாக வாங்கிவந்துவிடுவேன். நவராத்திரி வந்து விட்டால், பேப்பரை பொட்டலமாகக்கட்டிக்கொண்டு ஒவ்வொருவீட்டிலும் போய் சுண்டல் வாங்கித்தின்போம். பண்ணையார் வீடுகளில் தெண்ணந்தோப்பு இருந்தால், சில சமயம் அவர்கள் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்காக, அதை உடைத்து தண்ணீரை எல்லோருக்கும் இலவசமாக கொடுப்பார்கள். எல்லாவற்றையும் நானே குடித்துவிட வேண்டுமென்று கருதி, அதை வாளி வாளியாக, குரங்கு கள் குடிப்பது போல் குடித்துவிட்டு, வாளியில் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து மாலையில் புளித்துப்போய் (குளிர்பதன வசதி கிடையாது) கொட்டியுள்ளேன். திருவாதிரைக்கு களியும், பிள்ளையார் சதுர்த்திக்கு பலவகை கொழுக்கட்டையும், மார்கழி மாதத்தில் ‘திருப்பிட்சை’ என்றழைக்கப்படும் தயிர் சாத பிரசாதமும் ஓசியில் அனுபவித்துள்ளேன். சினிமாவிற்கும் ஓசியில் போயுள்ளேன். அந்தக் கூத்தை கேளுங்கள்.

ஒரு முறை மாமா வீட்டிற்கு மதுரையில் (விடுமுறையை அங்குதான் கழிப்போம்) இருக்கும்போது, மாமாவிடம் கெஞ்சி ஓசியில் பாஸ் வாங்கிக் கொடுக்கச் சொன்னோம். அவரும் 8 பாஸ் வாங்கி போய் அனுபவியுங்கள் என்று கொடுத்துவிட்டார். தேன் சுவைத்த வண்டு மயக்கத்தில் வட்டமிடுவது போல் மகிழ்ந்து, சிம்மக்கல்லில் இருந்த அந்தக் கொட்டகைக்கு போய், (படம்: “சிவப்புக்கல் மூக்குத்தி“) அங்குள்ள பணியாளரிடம் இலவச அனுமதிச் சீட்டுகளை கொடுத்தோம். அவரோ எங்களை அலுவலக பொறுப்பாளரிடம் கூட்டிப்போனார், அவர் எங்களை மேலேயும் கீழேயும் பார்த்து தையல்காரர் போல் கண்ணால் அளவெடுத்தார். ஒரு சலிப்புடன் “போங்க, போங்க” என்று தலையில் அடித்துக் கொண்டார். ஓஹோ, ஓசியில் வந்ததால் அவருக்கு கோபம் போல என்று எண்ணி உள்ளே போனோம். படம் ஆரம்பித்து முடியும் வரை நாங்கள் 8 பேர்தான் இருந்தோம், அவர் தலையில் அடித்துக்கொண்டது இப்போது புரிந்தது. அந்தப் படத்திற்கு கமல், ஸ்ரீதேவி நடிப்பதாக பெரிதாக விளம்பரம் செய்திருந்தார்கள். இரண்டு பேருமே ஒரு ஐந்து நிமிடம்தான் படத்தில் வருவார்கள் என்று நினைவு. ஓசிக்கு கிடைத்த அடுத்த அடி.

பின்னாளில் நகரத்திற்கு குடிபெயர்ந்தவுடன், இலவசமாக போய் வாங்குவது நம்மை கிராமத்தான் என்ற முத்திரை குத்திவிடும் என்று நினைத்து ஒரு வட்டத்தை எனக்குள்ளே போட்டுக்கொண்டேன். நகரத்தில் இருப்பவர்கள் மிகவும் யோக்கியர்கள் என்ற எண்ணம் வந்த புதிதில் இருந்தது. ஒரு முறை, ஒரு ராதா கல்யாணத்தில் ஓசியில் தேநீர் குடுத்தார்கள். அதை வாங்குவதற்க்கு ஒரு பெரிய கும்பல் அடித்துக்கொண்டிருந்தது. இதில் பணக்காரர் ஏழை என்றல்லாம் வித்தியாசம் கிடையாது. எனக்குத் தெரிந்து இந்த ஓசி அதிகமாக வாங்குவது பணக்காரர்களும், மேல்தட்டு மக்களும்தான். ஏழையாக இருப்பவனுக்கு பசிக்கும்போது மட்டும்தான் தேவைப்படும். வசதி உள்ளவனுக்கு எப்போதும் எதற்கும் பசிதான். நமக்கு இலவசம் என்றால் ஒரு போதை உண்டு. அந்த பாரம்பரியத்திலிருந்து விலகினால் நமக்கே அவநம்பிக்கை வந்துவிடும்.

அந்த தேநீர் நிகழ்ச்சி, ‘ஓஹோ நகரத்திலும் இதே நிலைதான் போலும்’ என்று எண்ண வைத்தது. இந்த ஓசி என்பது அண்ணன் என்றால், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ தம்பி மாதிரி. என்ன, இதே உத்தியை பல தொழில்களில், முக்கியமாக புடவை, பேனா, வீட்டு சாதனங்கள் எல்லாவற்றிலும் பயன்படுத்தினார்கள். ஒரு மின்விசிறி வாங்கினால் ஒரு 200 ரூ. தள்ளுபடி. இந்த மார்கட்டிங் நிறுவனங்கள் இருக்கிறதே அவற்றுக்கு நாம் எங்கே விழுவோம் என்று தெரியும். ஒரு விடுமுறைக்கு உங்களுக்கு கோவா, அல்லது கொடைக்கானல் போய் வர இலவசமாக பயணசீட்டும், தங்கும் வசதியும் கொடுக்கும் திட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால், எங்கள் அலுவலகத்தில் வந்து அதை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள். அங்கு போனால், ஒரு 1 மணிநேரம் நம் கழுத்தை அறுத்து பின் 6 மாதத்திற்குள் உபயோகிக்கும் இலவசமாக ஓசியில் தங்கும் பத்திரத்தை (அதுவும் நாம் போகாத இடமாக உ.பி-யில் ஒரு இடத்தில்) கொடுப்பார்கள்.

துபாயில் ஏர்ஷோ எனப்படும் விமான கண்காட்சிக்கு போயிருந்தேன், அங்கு எல்லோருக்கும் ஒரு நிறுவனத்தின் சார்பில் தொப்பி இலவசமாக கொடுதுக்கொண்டிருந்தார்கள். சிறிதுநே ரத்தில் எனக்கு, எனக்கு என்று கூவி ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விட்டது. நடந்த கூத்தில் தொப்பிபட்டுவாடா பண்ணுபவர் இருப்பதை போட்டுவிட்டு ஓடிவிட்டார். பார்க்க நன்றாக பொழுது போயிற்று.

பொதுவாக நகரத்தில் இருப்பவர்களும் இப்படித்தான் போலும், ஆஹா வெளிநாட்டினரை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணத்தை சற்று மாற்றினேன். சமீபத்தில் இந்த எண்ணமும் தவிடு பொடியானது. நாம்தான் பட்டிக்காடு, மற்றவர்கள் யோக்கியர்கள் என்பதற்கு ஆப்பு வைத்தது சமீபத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி.

எங்கள் நிறுவனம் பிரபல வர்த்தக மடிக்கணிணி விற்கும் பிரத்யேக உரிமை பெற்ற விற்பனையாளர்கள். புதுப்புது வடிவம் சந்தைக்கு வரும்போது, பழைய படிவங்களை ஓரளவு குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். முதலில் உள்கட்டு விளம்பரம் மூலம் இன்னென்ன தேதியில் விற்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள், 8.00 மணி முதல் 2.00 மணி வரை என்று. நான் அந்தரங்கமாக விசாரித்ததில் சுமார் 150 – 200 கணிணிவரை விற்கப்போகிறார்கள் என்றும் கடை திறந்த ஒருமணிநேரத்திற்குள் போனால் ஏதாவது தேறும் என்றும், இதற்கு எந்தவிதமான உத்திரவாதமோ, மின்கலமோ, எம்.ஸ்.ஆஃபீஸ் போன்ற மென்பொருளோ கிடையாது என்றும், வீட்டிற்கு கொண்டுபோய் வேலைபார்க்காவிட்டால் அவ்வளவுதான்! அது நம் தலைவிதி என்று விடவேண்டியதுதான் என்றும் அறிந்தேன். பல முறை இது போல ஆப்பசைத்த குரங்காக அடிபட்டுவிட்டதால், இது போன்ற அலங்கார வார்த்தைகளில் மயங்கி வாங்குவதில்லை என்ற முடிவை எடுத்து கொள்கையாக கடைபிடித்து வருகிறேன். வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாலும், அங்கு நடக்கும் கூத்தை பார்க்க ஆவலாக இருந்தது. இது போன்று ஒரு முறை கைக்கடிகார விற்பனையில் சூடு பறந்து, ‘நவாப் ராஜமாணிக்கம்’ நாடகத்தை பார்க்கமுடியாத குறைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறேன்.

சரி என்று விற்பனை தினம் சுமார் 8 மணிக்கு போனால், திருப்பதி தோற்றது அவ்வளவு கூட்டம். சுமார் 2000 பேர்கள் இருக்கும் தேரோட்டம் போல் ஜே ஜே என்று இருந்தது. ஒரே அடிதடி, “நாடோடி மன்னன்” படத்திற்கு போய் பார்த்த அடிதடி, தள்ளுமுள்ளுக்கப்புறம் இன்றுதான் பார்க்கிறேன். அங்குள்ள காவலாளி சமாளிக்க முடியாமல் ஓடிவிட்டான். முக்கால்வாசி மக்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், பகுதி இந்தியர்கள், மீதி இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள், அங்கு ஒருவர் ‘சார், இவர்கள் காலையில் 4 மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள்” என்றான். இவ்வளவு கூட்டத்தை பார்த்து அங்கு என்னவென்று பார்க்கவந்த அரசு காவலரோ தவறான வாகன நிறுத்திகளை பெண்டு எடுத்து சீட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார். பல இந்தியர்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்களிடம் தோற்று சமாளிக்க முடியாமல் புறமுதுகுகாட்டி ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் எல்லோர் மேலேயும் ஏறி ஓடிக்கொண்டிருந்தான். வெப்ப நிலை வேறு அதிகமாக இருந்ததால், சூரியன் ஒரு மணி சூட்டை காலையிலேயே ஆப்பு வைத்துக் கொண்டிருந்தான். ஒருவன் பனியன் கிழிந்து, “oh it is too much” என்று நொந்துகொண்டு புலம்பிக்கொண்டிருந்தான். 8 மணிக்கு சுமார் 5 நிமிடம் சிறிதாக கதவைத் திறந்து மூடிவிட்டார்கள். ஒரு காவலாளி வந்து, “எல்லோரும் வரிசையில் வாருங்கள்” என்று கூற, அவரை துச்சமாக மதித்து, கொத்தாக தூக்கி ஓரம் கட்டிவிட்டு கும்பல் முன்னேறியது. ஒருவன் கொண்டுவந்திருந்த குடிதண்ணீரை குடித்துக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்தவன் ஓசியில் பிடுங்கி குடித்துக்கொண்டிருந்தான். இருவருக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததுகொண்டிருந்தது. சிலபேர் அவர்கள் உற்றார் நண்பர்களை அலைபேசியில் கூப்பிட்டு சீக்கிரம் வரவும், வரவேண்டாம் என்று நேர் வர்ணனை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்த கூத்து போதாதென்று, கணிசமான பெண்கள் வேறு வந்து எங்களுக்கு தனிவரிசை வேண்டும் என்று பெண்ணுரிமையை நிலைநாட்ட முற்பட்டு 33% ஒதுக்கீட்டிற்கு நேர்ந்த கதிபோல் தோற்று ஓடிக்கொண்டிருந்தார்கள். யாரும் யாரையும் மதிக்கும் மனநிலையில் இல்லை, எல்லோருக்கும் ஒரே மனநிலைதான் “எப்படியும் ஒன்றாவது வாங்கிவிடவேண்டும்” என்ற வெறி. ரொம்ப நாளைக்கப்புறம் சிறந்த நகைச்சுவை காட்சியை நேரில் கண்டு களித்தேன்.

என் அலுவலகத்தில் சக பணியாளரிடம் கேட்டபோது “இந்த வீர விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை” என்றார்கள். யாருமே கணினி வாங்கியதாகத் தெரியவில்லை. பின் யார்தான் வாங்கினார்கள்? கடைசி முடியும் பதிலே கிடைக்கவில்லை. நான் அறியப்பட்டவரை. இந்தக் கூத்து முடியும்போது ஒன்று மட்டும் நிச்சயமாக புலப்பட்டது – இந்த ஓசி, இலவசம், தள்ளுபடி என்பவற்றிற்கு கிராமம், நகரம், உலகம் என்றெல்லாம் கிடையாது. எல்லோருக்குமே ஆழ்மனதில் ஒரு பொருளை எப்படியாவது குறைந்த விலைக்கோ, ஓசியிலோ, இலவவசமாகவோ வாங்கிவிட வேண்டுமென்ற உள்ள வேட்கை உள்ளது. ஏதோ நமக்கு பொழுது போனால் சரி என்று நினைவலைகளை அசை போட்டுக்கொண்டே செய்தித்தாளை பிரித்தேன், “ஒரு அலைபேசி வாங்கினால் ஒரு அலைபேசி இலவசம்” என்ற விளம்பரம் வந்திருந்தது. பாவம், எத்தனை எலிகள் இந்த மசால் வடைப்பொறியில் சிக்கப்போகின்றனவோ என்று பெருமூச்சு விட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கோபால் பக்கங்கள்

கோபாலின் முந்தைய பதிவுகள்:
(பருப்புருண்டை) மோர்க்குழம்பு
நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்

தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
பள்ளிக்கூடம், பரீட்சை, மாலைமுரசு
மருது பாண்டியர் பற்றி உ.வே. சாமிநாதய்யர்
பழமொழி விளக்கம் – அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்
டைம் பாஸ் கவிதைகள்
ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்
கோபாலின் நெல்லிக்காய் நினைவுகள்


நண்பர் கோபால் கொஞ்ச நாளைக்கு அப்புறம் ஒரு பதிவை அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!

————————————————————————————–

வாழ்க்கையில் சில விஷயங்களில் பிடிப்பு இல்லையென்றாலும், சாப்பாடு என்றால் ஒரு வித இனம் புரியாத ஈர்ப்பு உண்டாகிவிடும். எங்கு போனாலும், சாப்பாடு கிடைத்தால் மனது கும்மாளமிடும். அந்த சின்ன வயதில் நன்றாக சாப்பிட ஒரு வித எதிர்பார்ப்பை மனது உருவாக்கிக் கொண்டு, எதுவும் வேண்டாம் என்று சொல்வதற்குண்டான பக்குவ நிலையை தயார் படுத்திக்கொள்ளவில்லை. கூடுமான வரை கல்யாணங்களுக்கு, சடங்குகளுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு, பக்கத்து ஊரில் நடக்கும் சீதா கல்யாண வைபோபவங்களுக்கு என பட்டியல் போட்டு இவற்றை தாக்கியதுண்டு.

இது போன்ற விழாக்களுக்கு பொது அழைப்பு இருக்குமென்றாலும், சும்மா சாப்பிடக் கூடாது என்ற ரோஷமான கொள்கையை பிரசவ வைராக்கியமாக வைத்துக் கொண்டு, எல்லோருக்கும் ஒரு இரண்டு பந்திக்கு தண்ணீர் சேந்தி கொடுத்துவிட்டு சாப்பிட்டுவிடுவேன். வைராக்கியத்தில் இரண்டு வகை உண்டு, ஒன்று பிரசவ வைராக்கியம், இன்னொன்று மயான வைராக்கியம். இதில் பிரசவ வைராக்கியம் என்பது பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் இன்பம் கலந்த துன்பத்தால் இனி மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சபதமேற்று, பின் அதை மறப்பது. மயான வைராக்கியம் என்பது ஏதாவது இறந்தவர் வீட்டுக்கு போனால் நாமும் சாகப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட்டு இனி மேல் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணி, சபதமேற்று – இரண்டு நாளில் மறந்து மாமூல் வாழ்க்கைக்கு வருகிறோமே அதுதான். இவை இரண்டுமே தோன்றி மறையும் மனித அவலங்கள்.

இதில் நான் விருப்பமாக சாப்பிடும் மோர்க்குழம்பு பெரிய விருந்தில் உணவுப் பட்டியலில் இருக்காது. சில வீட்டு விருந்திலோ, தனிப்பட்ட முறையிலோதான் சமைக்கப்படும். சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உள்ளதால் -மோர்க்குழம்பு என்று ஒன்று பாரம்பரியமாக பட்டியலில் இருப்பதில்லை. அதனைத் தகுதியிழக்க செய்தவர்கள் கற்கால மனிதர்களே. கல்யாண வைபவங்களிலும் இருக்காது, கோவிலில் நடக்கும் திருவிழாக்களிலும் இதற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம், அதாவது 1978 to 1985 வருடம் என்று நினைவு பல இடங்களுக்கு பேருந்தில் பயணிக்கும்போது (தமிழ்நாட்டில்) உணவு விடுதிகளில் வெளியில் இன்று என்ன உணவுப் பட்டியல் என்று சிறு குறும்பலகையில் எழுதி வைத்திருப்பார்கள். அதை ஆர்வமாகப் படிப்பேன், சில விடுதிகளில் ‘மோர்க்குழம்பு’, ‘மிளகாய் வத்தல்’, என்றெல்லாம் எழுதியிருப்பதைப் பார்த்து நாக்கில் எச்சில் ஊறூம்.

எனக்கு மோர் என்றாலே ஒரு வித வெறுப்பு உண்டு, என்னை விரட்ட வேண்டுமென்றால் மோரை ஒரு கரண்டியில் கொண்டு வந்தால் ஓடிவிடுவேன். மோர்க்குழம்பு என்றால் ஒரு பிடி பிடிப்பேன். மோர் பிடிக்காது, தயிர் பிடிக்கும், வெண்ணை பிடிக்காது, நெய்பிடிக்கும் இது என்ன பிறவியோ தெரியவில்லை. எப்படி இந்தப் பிறவி வெட்டியாக ஓடிக் கொண்டிருக்கிறதோ, அதே போல் ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு காரணம் புரியவில்லை. பல வித சைவ உணவின் சுவையை ரசித்து ருசித்து சாப்பிட ஒரு ஆர்வம் உருவாக இரண்டு காரணங்கள். ஒன்று என் அம்மா மிகவும் அற்புதமாக சமைப்பார்கள். இரண்டு என் அப்பா எப்படிச்சமைத்தாலும் இன்னும் நன்றாக வரவேண்டும் என்பார்.

இதில் மோர்க்குழம்பு பல வகைகளில் செய்யப்படும். வறுத்து அரைத்த மோர்க்குழம்பு, பருப்புருண்டை மோர்க்குழம்பு, நீர்த்த மோர்க்குழம்பு, வெந்தய மோர்க்குழம்பு, முருங்கைக்காய் மோர்குழம்பு, திடீர் மோர்க்குழம்பு, பச்சை மோர்க்குழம்பு, மோர்க்குழம்பு ரசம், ‘திவச’ மோர்க்குழம்பு. (இந்த ‘திவச’ மோர்க்குழம்பை, தாத்தா (அ) பாட்டி ‘திவசத்தன்று’, அன்று மட்டும் மிளகை அரைத்து சேப்பங்கிழங்கு சேர்த்து செய்வர்கள் – இது தனிச் சுவை கொடுக்கும், இதைச் சாப்பிடுவதற்காக அன்று பள்ளிக்கூடம் போகமாட்டேன்) என்று பல வகையான சுவைக் குழம்புகளை கழனிப் பானையில் விழுந்த எலியாக குடித்திருக்கிறேன், தவறு சாப்பிட்டிருக்கிறேன். கேரளத்தில் மோர்க்கூட்டான் என்று ஒன்று வைப்பார்கள், கிட்டத்தட்ட நம்ம ரகம்தான் என்றாலும், அதன் சுவை சற்று மாறுபடும். இதில் கடைசிஅலங்காரத்தில் தேங்காய் எண்ணய் சேர்த்து ‘தாளித்து’ விடுவார்கள், இது சிலபேருக்கு பிடிக்காது. ஒரு முறை திருச்செந்தூர் போய்விட்டு திரும்ப வீடு வந்து சேரும்போது மிகவும் தாமதமாகி விட்டது, சிறுகுடலை பெருங்குடல் பசியால் திண்றுகொண்டிருந்தது. பசி கண்ணைக் கட்டினால் கோபம் கொப்பளிக்கும். அப்போது என் அம்மா பசக்கென்று துரிதமாக ஒரு மோர்க்குழம்பு வைத்து பசியாற்றினாள். அதன் சுவையும், நினைவுகளும் இன்னும் நினைவில் உள்ளன.

இந்த பல்கலை மன்னன்களில், பருப்பு உருண்டை மோர்க்குழம்பு மிகவும் பிரசித்தி. இதில் என் தோழன் வெங்குட்டு ஒரு பருப்பு உருண்டை வெறியன். அதுவும் மோர்க்குழம்பு பருப்பு உருண்டை என்றால் எங்குதான் ஒளித்து வைக்குமோ அவன் வயறு. அதற்காகவே நாங்கள் தவறுகள் செய்யும்போது பருப்புருண்டையை வாங்கித் தின்று எங்களை காட்டிக் கொடுத்துள்ளான் இந்த நவீன எட்டப்பன். இவனின் பருப்பு தாகத்தில் எங்கள் உறுப்பு சேதாரம் அடைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பருப்புருண்டைகளை வாயில் இரண்டு பக்கவாட்டிலும் அடக்கிக்கொண்டு நடுவில் உள்ள ஓட்டையின் வழியே தொண்டைக்குள் ஒரு உருண்டையை ‘கோல்’ அடிப்பான். எண்ணி ஒரு 10 சாப்பிட்டால் எண்ணாமல் ஒரு 12 சாப்பிடுவான். நம் வீட்டில் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு என்றால் நாசியில் ஊசி போனது போல் மோப்பம் பிடித்து வந்துவிடுவான். அவனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை வெட்கம், மானம், அனுமதி கோரல். எங்கு யார் வீட்டில் இதைச் செய்தாலும், உருண்டு வந்துவிடுவான் உருண்டையை உள்ளே தள்ள. ரேஷன் கடையில் இன்று சர்க்கரை பட்டுவாடா செய்கிறார்கள் நீ போய் வாங்கி வா என்று அவன் அம்மா கூறினால் போகமாட்டான். இதே போல், பக்கத்து வீட்டு மாமி கூப்பிட்டு “டேய் வெங்குட்டு, கொஞ்சம் போய் வாங்கி வாடா, வரிசையில் நிக்க முடியலை, உனக்கு பருப்புருண்டை மோர்க்குழம்பு வைத்து தருகிறேன்” என்றால் இன்று போய் நாளை வா படத்தில் பாக்கியராஜ் செய்வது போல் பல தடைகளை உடைத்து துரிதமாக வாங்கிவருவான். ஆளும் கழுக் மொழுக் என்று இருந்ததால் நாங்கள் அவனுக்கு பருப்புருண்டை என்று பட்டப்பெயர் வைத்தோம்.

எனக்கும் பருப்புருண்டை பிடிக்கும் என்றாலும், எல்லோரிடமும் வெளிப்படையாகக் கேட்பதில் கொஞ்சம் தயக்கம். ஒரு முறை நாங்கள் திருநெல்வேலிக்கு பள்ளிக்கூட சுற்றுலா போனபோது, ஒவ்வொரு சாப்பாட்டுக் கடையாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தான் வெங்குட்டு, வேறு எதற்கு பருப்புருண்டை கிடைக்குமா என்று பார்க்கத்தான். சில இடத்தில் அவர்கள் வேறு உருண்டையை காண்பித்தார்கள், சில இடத்தில் அவனை அடிக்காத குறைதான், இவன் ஒரு லூசு என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஊருக்கு போய் செய்து தருவதாக சொல்லித்தான் அவனை சமாதானப்படுத்த முடிந்தது. அவன்தான் எங்களின் பையை தூக்கிவருவான், இதை ஒரு சேவையாக செய்தான், அது மட்டுமல்லாது எதை கடையிலிருந்து வாங்கி வா என்றாலும் உடன் முகம் சுளிக்காமல் வாங்கி வருவான், அதனால் எங்களுக்கு அவனை சமாதானப்படுத்துவது ஒரு அத்தியாவசியத் தேவையாக இருந்தது.

இந்தப் பருப்புருண்டையை குழம்பிலும் போடுவார்கள், ஆனால், மோர்க்குழம்பில் போடும்போது ஒரு தனிவித மோகம். பல பேருக்கு பல வகை உணவில் ஆர்வம் இருக்கும், அதற்கு ஏன் என்ற காரணம் எல்லாம் கிடையாது. நாம் அறியாமலே, பழைய பாட்டை திடீர் என்று வாய் முணுமுணுக்கும், அதைக் கேட்க வேண்டும் என்று தோன்றும். அதே போல்தான் சாப்பாடும். சின்ன வயதில் பிடிக்காத உணவு வயதானவுடன் பிடிக்கும். என்ன ஒரு 500 பருப்புருண்டை சாப்பிட்டிருப்பேனா இது வரை, இருக்கலாம். படிப்பு காலம் முடியும் வரை சாப்பாடு பிரச்சனையில்லாமல் இருந்தது, பின் வேலைக்கு போக ஆரம்பத்தவுடன் மெஸ்ஸில் சாப்பிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணிலிருந்து மறைந்தது, ஆனால் எண்ணத்தில் பசுமையாக இருந்தது. பின் வெளிநாடு வந்து ஓரளவு வசதி வந்தவுடன், நாம் முயற்சித்தால் என்ன என்று கோதாவில் இறங்கினேன். அம்மாவிடம் செய்முறை விளக்கம் கேட்டேன். எழுதி வைத்து, கன்னி முயற்சியாக செய்து பார்த்தேன், திருப்தியாக இல்லை. முதல் தோல்வி. அதாவது இரண்டு தொழில் நுட்பக் கோளாறு வந்தது. ஒன்று, மோர் சூட்டில் பிரிந்து போனது, இன்னொன்று உருண்டை மிதக்கவில்லை. இரண்டையும் சரி செய்ய எண்ணி மீண்டும் பரிசோதனை முறையில் முயற்சித்தேன். கொஞ்சம் கெட்டியான மோரை தேங்காய் விழுதில் சேர்த்து அரைத்தேன். இளஞ்சூட்டை ஏற்றிக்கொண்டு, அரைத்த தேங்காய் விழுதை உருண்டையுடன் கொதிக்க வைத்து, வாணலியை இறக்கும் முன்பு மீதமுள்ள மோரைச் சேர்த்தேன், இபோது பிரமாதமாக வந்தது. வெற்றி! வெற்றி! நாலு நாளில் நாலு காகிதத்தை வைத்துக் கொண்டு அணுகுண்டை கண்டுபிடித்த வாத்தியார் போல் எக்காளமிட்டேன். பின் பலமுறை வெவ்வேறு விதமாக செய்து பார்த்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.

பல நாட்கள் கழித்து சமீபத்திய ஒரு நிகழ்வில் வெங்குட்டுவை பார்த்தேன். “என்னடா, இபோதெல்லாம் பருப்புருண்டை சாப்பிடுகிறாயா” என்றேன். முகத்தில் தேடி எடுத்த புன்னகையை, சோகத்தை குழைத்து தவழவிட்டான். ‘இல்லடா, வயசாகிவிட்டது ஒரு காரணம், கண்ணு ஒத்துழைக்கும் அளவு உடம்பும் ஒத்துழைக்கமாட்டேன்கிறது”, இதைத் தாண்டி ஒரு காரணம் இருக்குமோ என்று நினைத்து, “அதெனாலென்னடா, மாதத்திற்கு ஒரு முறை கூடவா சாப்பிட முடியவில்லை?” என்றேன். அதற்கு பதிலளித்த அவன், “என்ன செய்ய, என் மனைவிக்கு பிரசித்தி பெற்ற சமையல் பட்டியல்கள் செய்ய வராது. நானும் அழுத்தம் கொடுத்து தொந்தரவு செய்வதில்லை. பேச்சில் நாக்கை அடக்கமுடியாவிட்டாலும், சுவையில் அடக்கிக் கொண்டேன். சிறு வயதில் எல்லாம் நன்றாக அனுபவித்தாகிவிட்டது, அதனால் வருத்தமில்லை, பழைய நினைவுகள் மங்கிவிடவில்லை, எல்லாவற்றையும் கடந்து செல்வதுதானே வாழ்க்கை” என்றான்.

அவனைப் பார்த்துக் கொண்டே எண்ண ஓட்டத்தை நழுவவிட்டேன். எல்லா வித படைக்கப்பட்ட பொருளுக்கும் இரண்டு வித உபயோகம் உண்டு என்பார்கள். ஒரு பொருளினால், கெட்டதும், நல்லதும் ஒருங்கே வரும். உடம்பில் எந்தக் கழிவை வெளியேற்ற உறுப்பு தேவையோ அதே உறுப்பினால் ஒரு உயிர் உற்பத்தியாகிவிடுவது மஹேசனின் மஹிமை. அதே போல் எந்த உடம்பிற்கு ‘வேண்டும்’ என்று தோன்றும் உணவு, ஒரு கட்டத்தில் அதே ‘உடம்பினால்’ வெறுக்கப்பட்டுவிடுகிறது. இந்த எழுதாக்கிளவியாகிய தத்துவத்தைத்தான் வெங்குட்டு யதார்த்தமாகச் சொன்னான். “இந்த தத்துவத்தையெல்லாம் என்னிடம் கொண்டு வந்து போணி பண்ணாதே” என்றது என் மனம். இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பை போல், என் மனதும், உடம்பும் கை கோர்த்து, “நான் விடுவதாக இல்லை” என்றது.

எப்போது பருப்புருண்டையை பார்த்தாலும், கர்ணன் படத்தில் தேவிகாவிற்கு நாயகனின் முகம் ‘நிலவில்’ வந்து மறைவதுபோல என் நண்பணின் எண்ணச் சிதறல்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. நான் ஒரு வேளை சின்ன வயது வெங்குட்டுவாக மாறிவிட்டேனோ? காலந்தான் பதில் சொல்லவேண்டும்!

இனி எனக்குத் தெரிந்த சமையல் பக்குவத்திலிருந்து மோர்க்குழம்புகளில் ஒரு தினுசு, உங்களுக்காக:
பருப்புருண்டை தயாரிப்பது எப்படி?
ஒரு சிறிய டம்ளர் துவரம்பருப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்துக்கொள்ளவும். பின் அதை அரைக்கும்போது மிளகாய் வத்தல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்த விழுதில் கொஞ்சம் கட்டித் தன்மைக்காக அரிசி மாவு சேர்த்து கட்டியாக வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணையில் கடுகு வெடித்ததும், அரைத்த விழுதை கொட்டி, (கொஞ்சம் எண்ணை அதிகமாக விடவும் அப்போதுதான் ஒட்டாமல் உதிர், உதிராக வரும், சுவையும் கூடும்), உதிராக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும். எலுமிச்சை அளவுக்கு சிறு உருண்டையாகப்பிடித்து, இட்லி பானையில் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மோர்க்குழம்பு தயாரிப்பது எப்படி?

தேவையான சாமான்கள்: ஒரு தேக்கரண்டி: ஜீரகம், அரிசி, கொத்துமல்லி விதை, 3 மிளகாய்ப்பழம் (தேவைப்பட்டால் காரத்தை கூட்டி குறைத்துக் கொள்ளவும்). கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு மூடி தேங்காய், கட்டியான தயிர் அல்லது புளித்த மோர்.

செய்முறை: ஜீரகம், அரிசி, 3 மிளகாய்ப்பழம், கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு மூடி தேங்காய் இவற்றை 2 கரண்டி எண்ணையில் வறுத்துக் கொள்ளவும், பின் தேங்காயைச் சேர்த்து அரைக்கும்போது அரவையில் தண்ணீருடன் கொஞ்சம் மோரை சேர்க்கவும், கட்டியான தயிர் அல்லது புளித்த மோரை கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கொதிக்க விடும்போது உருட்டி வைத்த உருண்டைகளை சேர்க்கவும். மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை சேர்க்கவும். ஒரு கொதி வந்த பின், மீதமுள்ள மோரை சேர்த்து இளஞ்சூட்டிலேயே இறக்கிவிடவும் (உருண்டைகள் மிதக்க வேண்டும்). பின் பச்சைக் கொத்துமல்லி தழைகளை சிறிதாக வெட்டிப் போடவும் (கத்திரிக்கோலை வைத்து அலம்பிய தழைகளை அப்படியே வெட்டிப் போடலாம்). நாலு மோர் மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து, கொஞ்சம் கருவேப்பிலை, சேர்த்து தாளித்து பெருங்காய கரைசலுடன் கொட்டவும். பருப்புருண்டை மோர்க்குழம்பு தயார். அலங்கார வேலைகள் முடிந்தவுடன் பார்த்தால், பூனையின் கண்கள் போல் எண்ணை மிதக்கவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

கோபாலின் முந்தைய பதிவுகள்:
நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்
தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
பள்ளிக்கூடம், பரீட்சை, மாலைமுரசு
மருது பாண்டியர் பற்றி உ.வே. சாமிநாதய்யர்
பழமொழி விளக்கம் – அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்
டைம் பாஸ் கவிதைகள்
ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்
கோபாலின் நெல்லிக்காய் நினைவுகள்


கோபால் எனக்கு நண்பர் ராஜு மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் மிடில் ஈஸ்டில் வாழ்பவர்கள். கோபாலின் நாஸ்டால்ஜியா பதிவுகள் பெரும் வரவேற்பை பெற்றவை. மனிதருக்கு நகைச்சுவை நன்றாக கை வருகிறது! கோபாலின் பதிவுகளை கோபால் பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.

ராஜன் உள்ளூர்க்காரர் (சிலிகான் பள்ளத்தாக்கு). சினிமா, படிப்பு ஆகியவற்றில் ஆழ்ந்த ரசனை உடையவர். பேசினால் மட்டும் போதாது என்று செயலிலும் ஈடுபடுபவர். பல தமிழ் எழுத்தாளர்கள் இவருக்கு நண்பர்கள். எனக்கு புஸ்தகம் இரவல் கொடுப்பவர். (இது ஒன்று போதாதா?) ராஜனின் பதிவுகளை ராஜன் பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். நிறைய விட்டுப் போயிருக்கிறது. கண்ணில் படும்போதெல்லாம் சேர்ப்பதாக ஐடியா. உங்களுக்கும் ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.

நானே பழைய சினிமா பைத்தியம். சாரதா என்னை விட பெரிய சினிமா பைத்தியம். 🙂 நான் குறை சொல்லிக்கொண்டே பார்ப்பேன், சாரதாவுக்கு படத்தின் நிறைகளை சொல்ல மட்டுமே பிடிக்கும். 🙂 சாரதாவின் பதிவுகளை சாரதா பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். அவார்டா கொடுக்கறாங்க முகப்பிலேயே தெரியும். ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.

அது ஏன் சாரதா பக்கத்தை மட்டும் அவார்டா கொடுக்கறாங்க தளத்தின் துணைப்பக்கமாக போட்டிருக்கிறீர்கள் என்றெல்லாம் என்னை கேட்கக்கூடாது. ஆனால் கூட்டாஞ்சோறு தளத்தின் முகப்பில் நண்பர்கள் என்று ஒரு பக்கம் தெரியும். அங்கே கிளிக்கினால் இந்த மூவருடைய பக்கங்களுக்கும் லிங்க் கிடைக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி


கோபால் தேவன் பற்றி எழுதி இருக்கும் பதிவு. கோபாலின் இன்ஸ்பிரேஷன் தேவன்தானாம்.
துப்பறியும் சாம்பு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமிழ் கொஞ்சம் ததிங்கினத்தொமாக இருக்கும் என் பெண்ணுக்கு கூடப் பிடித்திருக்கிறது. பாதி சாம்பு கதைகளை நான் சொல்லி அவள் கேட்டிருக்கிறாள்.
ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் “குற்றவாளி” ஈஸ்வரன் என்று எழுதி இருக்கிறார். ஈஸ்வரன் டிஃபென்ஸ் வக்கீல் என்று நினைவு. சரியாக நினைவிருப்பவர்கள் சொல்லலாம்.
ஓவர் டு கோபால்!

Devanஎழுத்தாளர் தேவன் (மகாதேவன்) மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் (5, மே – 1957) ஓடிவிட்டன என்றாலும் அவர் எழுத்துக்கள் மட்டும் என்றும் மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது. மகாகவி பாரதி போல குறைந்த வயதே தேவன் பூமியில் இருந்தாலும் நிறைந்த சாதனையை தமிழ் எழுத்துலகுக்குக் கொடையாக தந்துவிட்டு வானுலகம் சென்றவர். ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக சேர்ந்து படிப்படியாக ஆசிரியராக உயர்ந்து சாதனை படைத்த இந்த மாபெரும் எழுத்தாளர் தனது 44ஆம் வயதிலேயே மறைந்து போனது தமிழுக்கும் தமிழ் எழுத்துக்கும் ஒரு பெரிய சோகம்.

எளிமையான நகைச்சுவை (தேவன் வார்த்தையில் ‘ஹாஸ்ய ரஸம்’) என்பது தேவனுக்கு கை வந்த கலை. அவரை சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, நாட்டின் அன்றைய நிலை, மக்களின் பேச்சு வழக்கு, பழகும் விதம் இவை எல்லாமே அவர் கதைகளில் மிக நேர்த்தியாகவும் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

மிஸ்டர் வேதாந்தம், மிஸ் ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, இன்னும் எத்தனையோ புதினங்கள் மூலம் தேவனின் எழுத்துக்கள் தமிழுலகத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து இருக்கும். அந்தக் காலத்தில் ஆங்கில மோகம் பிடித்து ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்ட வர்க்கத்தினரை, தன் இயல்பான நகைச்சுவை சேர்த்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் தேவன்.

என் எழுத்துகளுக்கு ஆத்திசூடி தேவன் எழுத்துகள்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். தேவனின் புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சிறு கதைகளும் கட்டுரைகளிலும் அவர் கைவண்ணம் அதிகமாகவே ரசிக்கலாம்.

1947 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவனின் ‘கோபம் வருகிறது‘ கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா? (தேவன் எழுதிய சீனுப்பயல் கதைத் தொகுப்பில் இருந்து.)

மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.
எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக் கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன். இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி சரி சீக்கிரம் இலையைப் போடு. நான் ஆபீசுக்குப் போகிறேன்!” என்பேன்.
ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.
‘இவ்வளவு நன்றாக சிசுருஷைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக் கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.
நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.
கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?
பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.
நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான். கோபம்தான் அந்தக் கத்தி.
கோபித்துக் கொள்ளாதீர்கள். கட்டுரை இங்கே முடிந்து விட்டது.

தேவனுக்கு பெரிய புகழ் பெற்றுத் தந்தவை என்னவோ அவர் ஆனந்தவிகடனில் தொடராக எழுதிவந்த புதினங்கள்தான். இந்தக் கால திரைப்படத்தில் ‘ஃப்ளாஷ்பாக்’ காட்சிகள் என்பார்களே, அதைப் புதினங்களில் எனக்குத் தெரிந்து முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தேவன் ஒருவரே. மிகப் புதுமையான முறையில் தொடர்களின் காட்சி எழுதப்படும்போது, வாசகர்கள் இயல்பாக ஒன்றிவிடுவது இயற்கைதான். மிஸ் ஜானகி என்ற ஒரு புதினத்தில் எந்த இளம் எழுத்தாளரும் பால பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டிய அளவுக்கு கதையமைப்பையும், உவமைகளையும் உருவாக்கியிருப்பது அவர் கதை எழுதும் திறனுக்கு ஒரு சான்று.

தேவன் புதினங்களை சற்று மேலோட்டம் விடுவோமே.
தேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். சிறிய கதாபாத்திரம் ஒவ்வொன்றிலும் கூட தேவனின் கைவண்ணத்தை ஆங்காங்கே காணலாம். இதோ கல்யாணி புதினத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைப் பற்றி தேவன் சொல்வதைப் பார்ப்போம்:

கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.
மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பார் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.
ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன் பின் அறைக் கதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.
‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம். வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட். ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்ல ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ – ‘அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம். சித்தெ பொறுத்துக்குங்கோ! இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டு போகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமான்னு கேழ்க்கிறான்’ என்பார்.
எதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.
ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்ய ரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!
எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு பார்க்கலாம் போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே. காலப்பிங் டி.பி – நான் என்ன செய்யறது? ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?” என்பார். அவர் பேச்சில் நிஜ கலப்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!

தேவன் இந்த டாக்டரைப் பற்றி கதையில் முன்கூட்டியே கதாநாயகன் நண்பன் மூலமாக நமக்கு அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:

பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட். ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற பெயரை ஒரு பெரிய கதைக்கு (2 பாகங்கள்) தலைப்பாகக் கொடுத்தாலும் அதன் கதாநாயகன் மட்டும் அந்த ஜஸ்டிஸ் இல்லைதான். ஆனால் கோர்ட் அதாவது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தக் கதையின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுவார் தேவன். அவர் இந்தக் கதை எழுதிய காலக்கட்டத்தில் கோர்ட்டுகளில் ஜூரர் சிஸ்டம் உண்டு போலும். அதாவது வெவ்வேறு வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஏழு அல்லது ஒன்பது நபர்களை ஜூரர்களாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பெரிய கிரிமினல் வழக்கிலும் நியமிப்பார்கள். அந்த ஜூரர்களின் மெஜாரிட்டி முடிவின் படி ‘கனம்’ நீதிபதி தீர்ப்பு சொல்லுவார். இதற்கு அப்பீல் கிடையாது. (வழக்குகளும் விரைவாக முடிக்கப்பட்டு முடிந்தவரை நல்ல நியாயமும் கிடைக்கச் செய்யும் வழிமுறை இது)
ஜஸ்டிஸ் ஜகன்னாதன் புதினத்திலும் இப்படி ஒரு கேஸ். கொலை வழக்கு. கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் இருக்கும் ‘ஈஸ்வரன்’ ( நடுவயதுக்காரர், ஏறத்தாழ கதாநாயகன்) பாத்திரத்தை நல்லவராகவே கதை முழுவதும் சுட்டிக்காட்டி வருகிறார் தேவன். ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சாட்சிகள் இவை அனைத்தும் ஈஸ்வரனுக்கு எதிராகவே கோர்ட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சி ஒன்று ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.
அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் இப்படி பேசுகிறார்.
“பிடிச்சுகிச்சு”
அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.
“என்ன பிடிச்சுகிச்சு?”
மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தைய்யா பதில் சொல்லுவார்.
“நேத்து ராத்திரி மொட்டை மாடில படுத்தேனா? ஒரே பனியா? அதான் பிடிச்சுகிச்சு.” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.
சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி.
இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது அவர் கதைகளை படித்த பலருக்குத் தெரிந்ததுதான்.

மிஸ்டர் வேதாந்தம் என்றொரு புதினம். தேவன் ‘ஆனந்த விகடன்’ ஏறத்தாழ ஆசிரியராக 15 வருடங்கள் பணி புரிந்தவர். தன் பத்திரிகை தொழில் சம்பந்தப்பட்ட கதையாகவே ‘மிஸ்டர் வேதாந்தம்’ புதினத்தை வெளியுலகுக்குக் காட்டினாரோ என்னவோ. இந்தக் கதையின் நாயகன் வேதாந்தம் ஒரு வளரும் எழுத்தாளன். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் தன் எழுத்துக்களைப் பிரசுரிக்கும்படி கோருவான்.

‘ஸார், நீங்க படிச்சுப் பார்த்துட்டு நல்லா இருந்தா உங்கப் பத்திரிகைல பிரசுரம் பண்ணுங்க ஸார். நான் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கேன் ஸார்.”
அதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிதானமாக சொல்லுவார்.
‘எல்லாம் சரிப்பா. நீ நல்லாவே எழுதியிருக்கே. ஆனா பாரு, எங்களது என்னவோ பிரபல பத்திரிகை. அதனால நீ என்ன பண்றே, முதல்ல அங்க இங்க எழுதி பிரபலமாயிட்டு அப்பறமா இங்கே வா. அப்ப நீ ஒரு குப்பையை எழுதிக் கொடு, அத அப்படியே நாங்க எங்க பத்திரிகைல பிரசுரிக்கிறோம். அதுவரைக்கும் நீ எத்தனை நல்லா எழுதினாலும் அது குப்பைக்கூடைக்குத்தான் போகும்.”

தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் சத்தியமான நிலையில் நிலைத்து நிற்கின்றன. பிரபல பத்திரிகைகளும் இன்றளவிலும் அவர் வார்த்தைகளை அப்படியே காப்பாற்றுகின்றன.

துப்பறியும் சாம்பு
1950-60களில் துப்பறியும் சாம்புவை தெரியாதவர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன். அவ்வளவு பாப்புலர். இப்போது கூட தேவனின் பெயரை வைத்து ஏதாவது பேசினால், துப்பறியும் சாம்பு தேவன்தானே என்று சடக் கென நம் மக்கள் கூறுவர். தேவனின் சித்திரக்கதைகளாக வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’வை பின்னாளில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் தத்ரூபமாக நமக்கு காட்டினார். அதன்பின் ஏராளமான நாடகங்களில் சாம்புவின் கதை மேடையேறியது. காத்தாடி ராமமூர்த்தி 1980களில், தொலைக்காட்சி தொடர் மூலம் சிறிது காலத்திற்கு சாம்புவின் புகழை தமிழுலகத்தில் பரப்பினார்.
தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. இதுதான் தேவனின் எழுத்து மகத்துவம்.
தேவனே தன் கதாநாயகனான துப்பறியும் சாம்புவை முதலில் எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.
‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்.

தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னாளில் ரொம்பவுமே புகழ் பெற்று தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும்.
எல்லாமே சின்ன சின்னக் கதைகள். எல்லாமே படிக்கத் தெவிட்டாத தேன் துளிகளைக் கொண்ட கதைகள். ஒவ்வொரு கேஸிலும் சாம்புவுக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவது நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது எழுத்தாளரின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன்.
‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ என்றொரு கதை. இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ராவ்சாகிப் நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.
ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிறது.
‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.
‘நீதான் விடு’ இது சாம்பு.
இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ஆஹா! என்ன ஆச்சரியம்! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடித்துவிட்டார். இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்.’ என்றும் கூவுகிறார்.
அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள். ‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார். அவர் மந்திரவாதியோ இட்சிணியோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்!’

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவன் எழுத்துக்களைப் பற்றி இங்கே எழுதும்போது ‘கோபம் வருகிறது’ என்ற கட்டுரையில் ஆரம்பித்தேன். இனியும் யாருக்காக கோபம் வந்தால் உடனே தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படியுங்கள். கோபமெல்லாம் பறந்துவிடும்.

ராஜத்தின் மனோரதம் என்ற ஒரு புத்தகம். ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டுவது எப்படி என்பதை ஒவ்வொரு அங்குலமாக நம் கண் முன்னே அரங்கேற்றியிருப்பார். அற்புதமான எழுத்து.

தேவன் எழுத்துலகில் ஜாம்பவான் என்று சொல்வதற்கு அவரின் எழுத்துத் திறன் மட்டும் காரணம் இல்லை. பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர் என்று பல முகங்கள் கொண்டவர். பழகுவதற்கு மிக எளிய மனிதராகவே கடைசி மூச்சு வரை இருந்தார். தமிழ் எழுத்துலகம் நிச்சயமாக தேவனால் மிகப் பெரிய புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு->தேவன் பக்கம், நண்பர்கள்->கோபால் பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
கிழக்கு பதிப்பகம் மறுவெளியீடு செய்திருக்கும் தேவனின் புத்தகங்கள்
தேவனின் “கோமதியின் காதலன்”
எழுத்தாளர் தேவன் பற்றி சுஜாதா

பிற்சேர்க்கை: டோண்டு இங்கே சாம்புவையும் சி.ஐ.டி. சந்துருவையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.


கோபாலின் நாஸ்டால்ஜியா பதிவுகள் – டாங்கர் பச்சடி பதிவு, ரெகார்ட் டான்ஸ் பதிவு எல்லாம் மிகவும் பாப்புலரானவை. அந்த வரிசையில் இன்னும் ஒன்று.

பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டுமென்றாலே கசப்பு மருந்து குடிப்பது போல்தான். எப்பொழுதும் விளையாட்டு மேல்தான் எண்ணம். அப்போதெல்லாம், “எலிமெண்ட்ரி” எனப்படும் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியும், “மிடில் ஸ்கூல்” எனப்படும் ஒண்ணிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றும், பின் “ஹை ஸ்கூல்” எனப்படும் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையும் தனித்தனியாக நிர்வாகம் செய்யும் பள்ளிகளும் உண்டு. இதில் 1-8 வரை படித்துவிட்டு, 9லிருந்து மேற்படிப்பிற்கு அரசாங்கப் பள்ளிக்கூடத்திற்கு தாவி படிக்க வேண்டும்.

ஒண்ணாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது “சிலேட்” எனப்படும் குட்டி கரும்பலகைதான் கொண்டு போக வேண்டும். அது முக்கால்வாசி கல்லில்தான் இருக்கும். அதை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும், நல்ல கனமாக இருக்கும், உடைந்துவிட்டால் வேறுதான் வாங்கவேண்டும். ஒரு ஜென்மத்திற்க்கு ஒன்றுதான் வாங்கித் தருவார்கள். அதில் ‘சிலேட் குச்சி’ எனப்படும் விறைப்பான “சாக்” கொண்டு எழுத வேண்டும். 40 பீஸ் 5 ரூபாய். 10 பைசா கொடுத்து ஒரு குச்சி வாங்கிக் கொடுப்பார்கள். முழுப் பரிட்சை எனப்படும் (ஒண்ணாம் வகுப்பு/இரண்டாம் வகுப்பு final exam) போது, பலப்பத்தில் பெரிய கோழிமுட்டை போட்டு விகடன் சினிமா விமர்சனம் மாதிரி மதிப்பெண் போடுவார்கள் – அதை அழிக்காமல் வீட்டில் கொண்டு போய் காட்டவேண்டும். எல்கேஜி/யூகேஜி எல்லாம் கிடையாது. வரும் வழியிலேயே நான் ஒரு பலப்பத்தை எடுத்து 33 என்பதை 88 ஆக்கி பின்னாளில் நான் பெரிய ‘கே.டி’-யாக வரப்போகிறேன் என்று நங்கூரமிட்டேன். என் நண்பன், “டேய் இதெல்லாம் வேண்டாம், உங்கய்யா ஆசிரியிரிடம் விஜாரித்தால் உன் முதுகுத்தோல் உரிந்துவிடும்” என்பான். “போடா, அவர் என்ன இதெல்லாம் தாளில் எழுதியா வைத்திருக்கிறார்?” என்பேன். முக்கால்வாசி வாத்தியார்கள் அந்தத் தெருவிலேயே வசித்து வந்ததால், சந்திக்கும் போது என்ன பையன் எப்படி படிக்கிறான் என்று கேட்டு வைப்பார்கள். “படிப்பே வரல, இன்னும் கொஞ்சம் முனைப்பு வேண்டும்” என்று கூறினால் அந்த ஆசிரியருக்கு முன்னாலேயே ஒரு ‘பதம்’ நடக்கும். இப்படி 88 போட்டுவிட்டு, அப்பா காய்கறி வாங்க என்னை அழைத்துக் கொண்டு போனார். காய்கறி வாங்க போனால் நாம்தான் ஒரு பையை தூக்கிக் கொண்டு பின்னால் ஓடவேண்டும். அப்பொழுது எதிர்ப்பட்டார் அந்த 33. ஆஹா, மாட்டிக்கொண்டோமே, தப்பிக்கவும் முடியாதே ஆண்டவா என்று மனம் வெதும்பியது.

“என்ன சௌகர்யமா?” என்று கேட்டதோடு முடித்துக் கொண்டு, அவசரமாகப் போவதால் பின்னொரு முறை சந்திப்பதாகக் கூறி விடை பெற்றார். ஒரு வழியாய் கரணம் தப்பி மரணத்திலிருந்தும் தப்பினேன். இதன் பின்னால் யாரோ போட்டுக்கொடுக்க, வாத்தியார் “மதிப்பெண் போடும்போது யாரோ மாற்றுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது, யார் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும், அவர்களாகவே கையைத் தூக்கி விடுங்கள்” என்றார். நான் கையை தூக்கவே இல்லை. இதன் பின் அவர் ஒரு உத்தியைக் கையாண்டார், மதிப்பெண் போடும்போது இரண்டு கோடுகளை -3- பக்கவாட்டில் போட்டார் – மாற்ற முடியாமல். இப்படி போட்டபோது நானும் இரண்டு பக்கவாட்டு கோடுகளை முடிவிலிருந்து பாதியாக அழித்துவிட்டு என் சித்து விளையாட்டை காட்டினேன். இப்படியாக நாளொரு “கோல்டும்” பொழுதொரு “மெடலுமாக” படிப்பில் முன்னேறினேன். இந்த “சிலேட்டை ஒருநாள் என் நண்பன் சண்டை போடும்போது நடுவில் மின்னல் வெட்டியதுபோல் உடைத்து விட்டான். அந்த பாதி “சிலேட்டை” வைத்து அந்த வருடத்தை ஓட்டினேன்.

மழைக்காலம் வந்தால் ஒரு ‘பீரீட்’ முன்னாலேயே யாராவது வந்து பசங்களை அழைத்து போய் விடுவார்கள். நமக்கு யாரும் வரமாட்டார்களா என்று மனம் ஏங்கும். காலை 9.30க்கு ஆரம்பம், பின் 11 மணிக்கு ஒரு சிறிய இடைவேளை, பின் 12.30லிருந்து 2 மணிவரை மதிய உணவு, பின் 4.20க்கு முடிந்துவிடும். பின் சனி, ஞாயர், சப்பு, சவரு எல்லாவற்றிற்கும் விடுப்புதான். இடைவேளையின் போது, பஞ்சு மிட்டாய், புளி இஞ்சி, இனிப்பு மிட்டாய், கைகடியார மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிடுவோம். பள்ளிக்கு எதிரே ஒரு மண் சுவர் இருக்கும் அதன் மேல் தான் 1 அடிக்கவேண்டும். அதில் வரிசையாக நின்று எவ்வளவு ஆழ் துளை போடுகிறோம் என்று போட்டி நடக்கும். காலையில் assembly நடக்கும், அதில் அறிவுரையெல்லாம் கூறுவார்கள் – முக்கால்வாசி நாள் எங்களுக்குள்ளே சிரித்துக் கொள்வோம். அதில் பிடிபட்டு அடி வாங்கியிருக்கிறோம்.

இப்படியாக ஐந்து/ஆறாவது வந்துவிட்டேன். ஒவ்வொரு வகுப்பிலும் பெரிய கரும்பலகை ஒன்று இருக்கும், நாளாக நாளாக அது பொலிவிழக்கும், அப்போது ஆசிரியர் அதற்கு பூச்சு கொடுக்கச்சொல்லுவார். அதாவது ஊமத்தை இலை, கத்தாழை இவற்றை தண்ணீர்விட்டு பாலக்கல்லில் உட்கார்ந்து கல்லை வைத்து மசித்து, கரும் மையாக ஆக்கி அந்த பலகை முழுவதும் அப்ப வேண்டும். இதற்கு கடைசி பீரியட் முழுவதும் நமக்கு இலவசம், படிக்கவும் வேண்டாம். ஆர்வத்துடன், சட்டையெல்லாம் கழட்டி, எல்லா கரும்பலகைக்கும் அடிப்போம்.

தேனீர் விருந்து:

ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு போகும்போது “தேனீர் விருந்து” என்று மாணவர்களின் செலவில் வைப்பார்கள். வருடம் முழுவதும் பணத்தை சேர்த்து வைத்து ஒரு 5 ருபாய் வரை தேறும். ஆனால் நாங்களோ 15 ரூபாய் சேர்த்து IPL ‘மோதி’ போல் பண மமதை கொண்டோம். அதை வைத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு 100 கிராம் அல்வா, கொஞ்சம் காராச்சேவு, ஒரு பழம், ஒரு குளிர்பானம். இதை ஒவ்வொரு வகுப்பிலும் போய் கொடுக்கவேண்டும். கடைசியில் நம்ம பங்கை சாப்பிடும்போது என்ன ஆனந்தம்! இதே போல் ஏழாம் வகுப்பில் நமச்சிவாயம் என்று ஒரு வாத்தியார் இருந்தார். மிகவும் அற்புதமான கலா ரசனை உள்ளவர். அவர் முதுகில் அடிக்கும் போது கூட மேலிருந்து கீழாக தடவுவார். ஆட்டுக்கடா மீசையை வருடும்போது ரசனையோடு பண்ணுவார். வீதியில் நடக்கும் போது வேட்டியின் ஒரு முனையை கையால் பிடித்துக்கொண்டு நடப்பார். தூய வெள்ளை ஆடையே உடுத்துவார். அவர் தோட்டத்தில் விளைந்த பழக்குலையை எங்களிடம் கொடுத்துவிடுவதாகவும், கடையில் என்ன கொடுப்போமோ அதை கொடுத்தால் போதும் என்றார். நாங்களோ பழம் எவ்வளவு நீளம் என்று கேட்க, அவரோ “இம்மாந்தடி இம்மான் நீளம்” என்று மல்யுத்த வீரர் போல் முழங்கையிலிருந்து அளவைக் காட்டினார். வாழைப்பழம் அவ்வளவு பெரியதா, நம்மமுடியவில்லையே என்றோம். அவரோ, “ஏலே, இது புது வகைல, இதைச் சாப்பிட்டா இரண்டு நா சாப்பிடவேண்டாம்ல” என்று கூறியபோது எங்கள் வாய் காண்டாமிருகமாகியது. ஆனால் அப்பழத்தை காண்பிக்க மறுத்துவிட்டார். கடைசியாக 9 ரூபாய்க்கு ஒத்துக்கொண்டு, ‘பார்ட்டி’ நடக்கும் நாளில் அறுத்துக் கொடுத்தார். மதுரையம்பதியிலிருந்து துரத்தப்பட்ட ஹேமநாத பாகவதர் போல் அப்பழத்தின் பருமன் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பழம் கட்டைவிரல் அளவுக்கே இருந்தது. எங்களால் வேறு பழமும் தருவிக்க முடியாத நிலை. ‘என்ன சார்வாள் (அங்கு, ஆண்பால், பெண்பால் – எல்லா ஆசிரியரையும் இப்படித்தான் விளிப்பார்கள்) எங்களை இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்றபோது” அவரோ, மிருதுவாக “எலே 15 நாள் முன்னாடி பழுத்தபோது அப்படித்தாம்ல இருந்தது, இப்போ பறிக்கும்போது இப்படி ஆயிரிச்சில. போய் வேலைய பாருங்கலே” என்று விரட்டிவிட்டார். வேறு வழியில்லாமல், கண்ணில் கண்ணீரையும் தொண்டையில் குளிர்பானத்தையும் பாய்ச்சி ஆறுதல் அடைந்தோம். பார்ட்டி கனவு அதோடு தவிடுபொடியாகியது. அவர் நமக்கு வாத்தியாராக இருப்பதால் யாரிடமும் போய் அவதூறு கூறவும் முடியாமல் போனது.

பரீட்சைக்கு படித்தல்:
அப்போதெல்லாம் 8-ஆம் வகுப்பிற்கு மினி-பொதுத்தேர்வு உண்டு(ESLC). அதை உயர்நிலைப் பள்ளியில் போய் எழுதவேண்டும். ஆனால் வெற்றி, தோல்விக்கான முடிவுகள் நடுநிலைப்பள்ளியிலேயே அறிவிக்கப்படும். இதில் 9ம் வகுப்பு மிகவும் சுவாரசியமாக போகும். பத்து வந்தால் பொதுத்தேர்வுக்கான மன உளச்சல் அதிகம், ஆனால் இப்போது போல் அழுத்தம் இல்லை. 9-ல் வகுப்பு ஆங்கிலத்திற்க்கு சுப்பையா பிள்ளை என்று ஒரு வாத்தியார் வந்தார். பூசணிக்காயை நசுக்கியது போல் முகம், மாநிறம், வெள்ளைவெளேர் என்று சட்டை. பல்செட் பற்கள் வரிசையாக மின்னும். அடித்தால் அளவுகோலை எடுத்து அடிப்பார். அவருக்கு எல்லாமே அளவுகோல்தான் எங்களின் அடுத்தவயது பெரிய பசங்கள் ஒரு துப்புக் கொடுத்தார்கள். அதாவது பரீட்சையில் இவரிடம் மதிப்பெண் பெற வேண்டுமென்றால், இவர் ஏதாவது வீட்டு வேலை சொல்லச்சொன்னால் செய்யவேண்டும். கேள்விக்கு பதில் எழுதும்போது முதல் இரண்டு வரியும், கடைசி இரண்டு வரியும் சரியாக எழுதி நடுவில் நம் சொந்த கதை எழுதினாலும் பரவாயில்லை என்றார்கள். ஏனென்றால், அவர் ஒரு அளவுகோலை வைத்து அளந்து பார்த்தே மதிப்பெண்போடுவார் அதனால் இந்த எண்ணம். ஆங்கில அறிவு எப்படியும் தேர்வில் 40-ஐ தொடும் அளவிற்க்கு இருந்ததால், இவரை ஒரே அமுக்கா அமுக்குவதுதான் நல்லது என்று பட்டது. இந்த இரண்டு துப்பையும் துடுப்பாக்கிக்கொண்டு, அவர் சொல்வதை கேட்பதாக பாவ்லா செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் வீட்டிற்கு வெளியில் விறகு காய்வதாகவும், அதை தூக்கி உள்ளே போடவேண்டுமென்றும் பணித்தார். நான் முந்தி நீ முந்தி என்று போட்டி வேறு! மதிப்பெண் வேண்டுமே. நாங்கள் ஒரு நால்வர் படை பறந்து சென்று விறகை அப்புறப்படுத்தியது. அதற்க்கு பின் வந்த பரீட்சையில் மதிப்பெண்போடவில்லை. அவரிடம் சென்று, “சார், என்ன இது அநியாயம், உரிய மதிப்பெண் வரவில்லையே என்றோம்” அதற்கு அவர், மிகவும் அமைதியாக “நீங்கள் குறைந்த அளவே விறகை அப்புறப்படுத்தினீர்கள் – அதற்குரிய மதிப்பெண்ணைக் கூட்டித்தான் போட்டுள்ளேன்” என்றார். மறுபடியும் ஏமாற்றமடைந்து, வேறு வழியைத் தேடினோம்.

பொதுத்தேர்வும், இலக்கும்:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வந்துவிட்டாலோ ஏதோ தேர்த் திருவிழா போல் அல்லோகலப்படும். அதுவும், தேதி குறித்துவிட்டால், நமக்கு எங்கிருந்து வருமோ வீர சாகசங்கள். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பிலிருந்துதான் படிப்பே நினைவுக்கு வரும். எல்லா பாடத்திற்கும் வழிகாட்டி வாங்கி, வாசல் திண்ணையில் உட்கார்ந்து கத்திப் படிப்போம். தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல் பிரச்சனை இல்லை, கணக்கு ஆமணக்காக மிரட்டியது. குறைந்தபட்ச மதிப்பெண் கூட தாண்டுமா, இல்லை எல்லைக்கோட்டை தாண்ட முயற்சித்த தீவிரவாதி கதை ஆகிவிடுமா என்று அச்சமாக இருந்தது. கணக்கென்றாலே உதறல்தான். நாகூர் மீரான் என்ற மிகவும் கண்டிப்பான வாத்தியார் 10-ம் வகுப்பிற்கு வந்தார். கணக்கு போடாவிட்டால் மோதிரத்தை வைத்து குட்டுவார்.

நானும் என் வகுப்புத் தோழனும் வியூகம் வகுத்தோம். ‘பிட்’ அடிக்கவோ பயம், பரீட்சையில் தோல்வியுற்றால் தோல் பிய்ந்துவிடும். பழைய வாத்தியார் என்னையும், என் நண்பனையும் பார்த்து விட்டு, “எலே பசங்களா, பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்ல. ஊரை சுற்றி வந்துகிட்டிருந்தா எப்படி தேறும்? புத்தகம் என்று ஒன்று இருக்கிறது, அதை எடுத்து படிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லையே” என்று கடிந்து கொண்டார். நாங்களோ பதிலுக்கு, “எல்லாம் முடிச்சாச்சு சார் – எல்லாவற்றிலும் 100/100 வாங்குவோம்” என்றபோது சிவபெருமேன் மன்மதனை எரித்த பார்வையை போர்வையாக வீசினார். “மாலை முரசு வரட்டும்ல, உங்க மானம் கப்பலேறும்” என்று துர்வாசரானார்.

பரீட்சை நாட்கள் வந்து விட்டாலே, பக்தி மணம் கமழும், எல்லா தெய்வங்களையும் காலைமுதலே வேண்டிக் கொள்வேன். படிப்பில் பெரிய நம்பிக்கையில்லாததால், தெய்வத்தில் நம்பிக்கை வைத்தேன். பெரிய ‘க்ளிப்’ பொருத்திய அட்டையில், ‘க்ளிப்’பின் மேல் ‘உ’ என்று எழுதுவேன். (பொதுத்தேர்வில் பிள்ளையார் சுழி போட்டால் தகுதி இழக்கப்படுவோம் என்று எச்சரித்தார்கள் அதனால், கண்ணுக்கு தெரியாதவாறு மெல்லிசாக போட்டேன்). தேர்வு வந்துவிட்டாலே சில எழுதப்படாத தர்மங்களை எல்லோரும் கடைபிடிப்போம்.

ஒன்றுக்கு இரண்டாக பென்சில், பேனா எல்லாவற்றையும் நன்றாக சோதித்து பார்த்து பையில் சொருகிக்கொள்வேன். சகுனம் பார்த்துத்தான் கிளம்புவேன். இலங்கை வானொலியில் ”நேரம் சரியாக ஒன்பது மணி” என்ற அறிவிப்பை காதில் வாங்கிக்கொண்டு கிளம்புவோம். இதில் அந்த தேர்வுக்குரிய பாடப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு போவேன், மணியடிக்கும் போது “எல்லோரும் புத்தகத்தை வெளியில் போட்டு வாருங்கள்” என்று அறிவுரை வரும்போது வேக வேகமாக எல்லாபக்கத்தையும் புரட்டி, விடாமல் புல்லட் ட்ரயின் போல் மனதில் பதிவு செய்ய முயற்சிப்பேன். எல்லோரும் போனவுடன் கடைசியாக தேர்வறைக்குள் போவேன். முதலில் வினாத் தாள்கள் ஒரு சிறு அடைப்பு பைக்குள் கச்சிதமாக பொருத்தி, + போல் நூலை கட்டியிருப்பார்கள். நம் முன்னால் அதை உடைத்து, பகிர்ந்தளிப்பார்கள். கைக்கு வந்தவுடன், அதை முகர்ந்து பார்ப்பேன், சாணித் தாளில் ஒருவித மணம் கமழும். வினாக்களை தீர்க்கமாக படித்துவிட்டு, அறையை ஒரு நோட்டம் விடுவேன். அப்போதெல்லாம் 20 நிமிடத்தில் ஒன்றும் தெரியவில்லையென்றால், தேர்வுத்தாளை மடித்து கொடுத்துவிட்டு வந்துவிடலாம். இப்போது குறைந்தது 1 மணித்துளிகள் இருக்கவேண்டுமாம். என்ன கொடுமை இது? முதலில் தெரிந்த விடைகளை எழுதிவிட்டு, தெரியாத வினாக்களுக்கு விடையை மூளை தயாரிக்கும், வேறு வழி? தேவையில்லாமல், “வீட்டில் அம்மா இன்று பஜ்ஜி பண்ணுவாளா மாட்டாளா?” என்றும், ‘பரீட்சை முடிந்தவுடன், குமாரின் பம்பரத்தில் ஆழமாக ஒரு ‘ஆக்கர்’ வைக்கவேண்டும்” என்றும் மனது மாத்தி யோசிக்கும்.

முதலில் கொடுக்கப்படும் விடைத்தாள் 16 பக்கம் இருக்கும், நெருக்கி நெருக்கியெழுதாமல் 2 கட்ட இடைவெளிவிட்டு எழுதி நிரப்புவேன். வக்கீல் ரிட் அடிப்பது போல், இடமிருந்து நெல் காயப்போடும் அளவிற்கு, கால்பகுதிக்கு இடம் விட்டிருப்பேன். அப்படியும் 1 பக்கம் மீதம் வரும். “சார், இன்னோரு செட் தாள்” என்று கேட்பேன். அதாவது தேர்வு தொடங்கி ஒரு மணிநேரத்தில் கூடுதல் காகிதம் கேட்டுவிட்டால், மற்ற பசங்களெல்லாம், “ஏ அப்பா, நிறைய எழுதரானே” என்று நினைப்பார்கள். ஆய்வாளரோ, என்னுடைய விடைத்தாளை வாங்கிப்பார்த்துவிட்டு, “இதில் ஒரு பக்கம் இன்னும் இருக்கு, முதலில் அதை முடி, கூடுதல் தாள் அப்புறம் கொடுக்கப்படும்” என்று கூறிவிட்டார். கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு அறையாக தண்ணீர் பட்டுவாடா நடந்தது- அதை வாங்கி குடித்து நேரத்தை போக்கினேன். நூல் கொடுக்க ஒருவர் வந்தார் (பக்கங்களை இணைப்பதற்கு), ஒரு நூலை வாங்கிவிட்டு, அக்கம் பக்கம் பார்த்தேன், ஒருவர் ‘ஓட்டை’ (punching machine) போடும் கொக்கியை ஒவ்வொரு பெஞ்சாக கொண்டுவந்து விடைத்தாளை வாங்கி ஓட்டை போட்டார். எல்லோரும் போல், “நேரம் முடிந்துவிட்டது, எல்லாப்பக்கங்களையும் இணைக்கவும்” என்று கூறியவுடன், அசுர வேகம் வந்து எழுதினேன், என்ன எழுதுகிறேன் என்பது கணக்கல்ல – எப்படி எழுதுகிறேன் என்பதே கணக்கு என்று சளைக்காமல் ஓட்டினேன் வண்டியை. பின்னர் கண்காணிப்பாளர் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார். பல கரடுமுரடு மணித்துளிகளை கடந்து ஒரு வழியாக பரீட்சையை முடித்தேன்.

பத்தாம் வகுப்பு வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும் தினம் வந்து விட்டால் – படபடப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. மாலை முரசு – சிறப்பு பதிப்பு வெளிவரும். ஒரு மூன்று/நான்கு மணிக்கு (பிற்பகல்) வரும். இப்பத்திரிகையில் மட்டும்தான் தேர்வு முடிவுகள் வரும். அதை பக்கத்து ஊரிலிருந்து ஒருவன் சைக்கிளில் வாங்கிவரும்போது ஒரு கூட்டம் பின்னாலேயே ஓடும். ஒன்று அல்லது இரண்டு பிரதிகள்தான் கிடைக்கும். எல்லோரும் ஒரு கொத்தாக எண்களை வைத்திருப்பார்கள். இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், எல்லோரும் மத்தவர்களின் எண்கள் வந்துள்ளதா என்று முதலில் எட்டிப்பார்ப்பார்கள். யார் தோல்வியடைந்தார்களோ அவர்களை பரிகசிப்பார்கள், இதற்கு பயந்து தேர்வு எழுதிய பல பேர் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள். தான் வெற்றியடைந்துவிட்டோம் என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் வெளிப்படுவார்கள். இந்த கூத்தில், மறுநாள் – அச்சுப்பிழை காரணமாக விடுபட்ட எண்கள் என்று ஒரு பிற்சேர்கை வரும், வடுபட்ட இதயத்திற்கு ஆறுதலாக. இதை மனதில் வைத்துதான் முன்னாள் ஆசிரியர் “மாலைமுரசு” சாபமிட்டார். இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க, மதுரையில் உள்ள மாமா வீட்டில் தஞ்சம் புகுந்தேன். எப்படியோ ஊடுருவிய எதிரிபோல் எல்லைக்கோட்டை தாண்டி வெற்றி பெற்றுவிட்டேன். கணக்கில் நான் வெற்றி பெற்றதை நினைத்து கால் விரலால் தரையில் கோலமிட்ட மங்கை போல் நாணமுற்றேன். என் நண்பர்களுக்கு 50 கிராம் அல்வாவும், சேவும் வாங்கி மகிழ்வித்தேன்.

பல வருடம் கழித்து, என் மனைவி என்னிடம், “நம்ம பொண்ணு கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறாள், எல்லாம் பரம்பரையா வர மூளை” என்றாள். ஒரு செயற்கையான புன்னகையை முகத்தில் தவழவிட்டு, ஜன்னல் வழியே வெறித்து பார்த்து நினைத்துக் கொண்டேன், ‘உலகம் எவ்வளவு போலியானது’ என்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்


கோபாலின் இன்னொரு பதிவு. உ.வே.சா.வின் நினைவுகளை எல்லாம் எங்கே தேடிப் பிடித்தாரோ தெரியவில்லை. சுவாரசியமாக இருக்கிறது.

தட்டச்சு செய்து அளித்தவர் : திருமதி கீதா சாம்பசிவம்

Marudhu Brothersசிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கி வந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவனவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர் மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்பப் பாடப் பெற்ற பல தனிப் பாடல்களும் அங்கங்கே வழங்கி வருகின்றன. சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருட்டுப் பயம் முதலியன கிடையா. அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.

அவர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்து வரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவ தானமாக நிலங்களை அளித்திருக்கின்றார். முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடிமலைமேற் சில மண்டபங்களைக் கட்டியிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பட்டன. அவற்றில், மேலே உள்ளது மருதபாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழ்ச்சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்கு முன் கட்டப்பட்டது. அவற்றைக் குறித்து, “மேலைச்சாரம் எங்களப்பன், கீழைச்சாரம் வெங்களப்பன்” என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கி வருகிறது.

அக்காலத்தில் ஜனங்கள் மருதபாண்டியரை, ‘எங்களப்பன்” எனச் சொல்லிவந்தனரென்பதனாலேயே அவருடைய உத்தமகுணங்க்ளும் அவர் பால் இருந்த அன்பும் புலப்படும். காளையார் கோவிலிலுள்ள மிகப் பெரிதான யானைமடு என்னும் தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து நாற்புறமும் படித்துறை கட்டுவித்தார். அந்த ஸ்தலத்தில் கோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது மிக்க தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டி யிருந்தன. அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு மனிதராக நிற்க வைத்து ஒருவர் கை மாற்றி ஒருவர் கையிற் கொடுக்கும்வண்ணம் செய்து செங்கற்களை வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் அடிக்கடி கொடுத்து அவர்களுக்குக் களைப்புத் தோன்றாமல் செய்வித்தார்.

காளையார் கோவிலுக்குத் தேர் ஒன்று மிகப் பெரியதாக அமைக்கவேண்டுமென்று அவர் கருதித் தக்க சிற்பிகளை வருவித்து வேண்டியவற்றையெல்லாம் சேகரித்து முடித்தார். அத்தேரின் அச்சுக்கு ஏற்றதாக ஒரு பெரிய மரம் கிடைக்கவில்லை. பல இடங்களுக்குச் செய்தி அனுப்பி விசாரித்து வந்தார். அப்பொழுது அவருடைய ஆட்சிக்குட்பட்ட திருப்பூவணத்தில் வையை ஆற்றிற்குத் தென்கரையில் ஆலயத்துக்கு எதிரில் மிகப் பழையதும், பெரியதுமாக மருதமரம் ஒன்று இருப்பதாக அறிந்தார். அதனை அச்சுக்கு உபயோகப்படுத்தலாமென்றெண்ணி, உடனே அதனை வெட்டி அனுப்பும்படி அங்கே உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார்.

அதனைப் பெற்ற அதிகாரிகள், அவ்வாறே செய்ய நினைந்து வேண்டிய வேலையாட்களை ஆயுதங்களுடன் வருவித்து மரத்தை வெட்டத் தொடங்கினார்கள். அப்பொழுது, அதனைக் கேள்வியுற்று அத்தலத்தில் திருப்பூவணநாதருக்குப் பூசை செய்து வருபவர்களுள் ஒருவராகிய புஷ்பவனக் குருக்களென்னும் பெரியோர், “அந்த மரத்தை வெட்டக் கூடாது” என்று ஓடி வந்து தடுத்தார். “ராஜாக்கினைக்கு மேலேயோ உம்முடைய ஆக்கினை?” என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் அதனை வெட்டும்படி வேலைக்காரர்களை ஏவினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஆத்திரம் மிக்கவராகி, “மகாராஜா மேல் ஆணை! நீங்கள் இந்த மரத்தை வெட்டக் கூடாது!” என்று மீட்டும் தடுத்தார். அவ்வாறு ஆணையிட்டு மறித்ததனால் அவர்கள் அஞ்சி வெட்டுதலை நிறுத்திவிட்டு உடனே அச்செய்தியை மருத பாண்டியருக்குத் தெரிவித்தார்கள்.

அதனை அறிந்த மருத பாண்டியர், “ஸ்ரீ காளீசுவரருடைய திருத்தேருக்காக நாம் வெட்டச் சொல்லியிருக்கும்பொழுது அதைத் தடுக்கலாமோ? அவ்வளவு தைரியத்தோடு தடுத்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்?? நாமே நேரிற் போய் இதை விசாரித்து வர வேண்டும்” என்றெண்ணித் தமது பரிவாரங்களுடன் சென்று திருக்கோயில் வாயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார். கோவில் அதிகாரிகள் மரியாதைகளோடு வந்து அவரைக் கண்டனர். பாண்டியர் விபூதி குங்குமப் பிரஸாதங்களைப் பெற்று அணிந்து கொண்டார்.

அப்பால், “கோயிற் காரியங்கள் குறைவின்றி நடந்து வருகின்றனவா?” என்று விசாரித்தார். பின்பு, அவர்களை நோக்கி, ” இங்கே உள்ள குருக்களில் ஒருவர், வையைக் கரையிலுள்ள மரத்தை வெட்டக் கூடாதென்று தடுத்ததாகக் கேள்விப்பட்டோம். நம்முடைய கட்டளையைத் தடுத்த அவர் யார்? இப்பொழுது அவர் எங்கே உள்ளார்?” என்று கேட்டார். அவர்கள், “இதோ, இப்பொழுதுதான் மகாராஜா அவர்களுக்குப் பிரஸாதங்கள் கொடுத்துவிட்டு அவ்விடத்துக்கு அஞ்சி மதுரைக்குப் போய்விட்டார். இவ்வளவு நேரத்திற்குள் வெகு தூரம் போயிருப்பார்.” என்று நடுநடுங்கிச் சொன்னார்கள்.

புஷ்பவனக் குருக்கள், தாம் செய்த செயலால் தமக்கு என்ன துன்பம் வருமோவென்றஞ்சி, மருத பாண்டியருடைய அதிகாரத்துக்குட்படாத இடத்திற்குப் போகவேண்டுமென்று கருதி, முன்னரே ஸித்தம் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறி, மதுரை போய்ச் சேர்ந்துவிட்டார்.

மருத பாண்டியர், உடனே மதுரைக்குச் சென்ற குருக்களுக்கு ஓரபய நிருபம் எழுதுவித்து அதைக் காட்டி அவரை அழைத்துவரும்படி ஒருவரை அனுப்பினா. அபய நிருபம் என்பது, பழைய காலத்தில் குற்றவாளிகளுக்கேனும், அஞ்சி ஓடி ஒளித்த பகைவர்களுக்கேனும், “நீங்கள் அஞ்ச வேண்டாம்; இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது” என்று அரசர்களால் அவர்களுக்குள்ள பயத்தைப்போக்குவதற்காக எழுதப்படுவது.

அந்நிருபத்தைப் பெற்ற புஷ்பவனக்குருக்கள் திருப்பூவணம் வந்து மருதபாண்டியர் முன்னே நடுக்கத்தோடு நின்றார். பாண்டியர் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு அவரை இருக்கச் சொல்லி, “நீர்தாம் அந்த மரத்தை வெட்டக் கூடாது என்று சொன்னவரோ?” என்று கேட்டார்.

குருக்கள்: ஆமாம், மகாராஜா!

பாண்டியர்: காளையார் கோயில் தேருக்கு உபயோகித்தற்காக நாம் அதை வெட்டச் சொல்லியிருக்கும்போது நீர் தடுக்கலாமா??

குருக்கள்: அதற்குத் தக்க காரணங்கள் இருந்தமையால்தான் அப்படிச் செய்தேன்.

உடனிருந்த அதிகாரிகளும் ஊராரும் பிறரும் மருத பாண்டியர் குருக்களை என்ன செய்து விடுவாரோவென்றும் குருக்கள் தாம் செய்த குற்றத்திற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறாரோவென்றும் அஞ்சி அவ்விருவர்களுக்கும் இடையே நடந்த சம்பாஷணையை ஆவலோடு கவனித்து வந்தார்கள்.

பாண்டியர்: என்ன காரணங்கள் இருக்கின்றன? அஞ்சாமற் சொல்லும்.

குருக்கள்: இந்த ஸ்தலம் மிகவும் சிறந்தது; பழமையானது; மதுரைச் சுந்தரேசுவரர் பொன்னணையாளுக்காக இரசவாதம் செய்த இடம். இறந்து போன ஒருவனுடைய எலும்பு இத்தலத்தில் வையையாற்றிற் போட்ட பொழுது புஷ்பமாக ஆயிற்று. அதனால் இது புஷ்பவன காசி என்று பெயர் பெறும். இந்த ஸ்தலத்தை மிதிக்க அஞ்சி நாயன்மார் மூவரும் வையைக்கு வடகரையிலேயே இருந்து தரிசனம் செய்து கொண்டு சென்றார்கள். அதற்கு அறிகுறியாக வடகரையில் அம்மூவர்களுக்கும் ஆலயம் உண்டு. இவை போன்ற பெருமைகளால் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இவ்வூர் இருந்து வருகிறது. அயலூரிலிருந்து எவ்வளவோ ஜனங்கள் நாள்தோறும் வந்து வந்து வையையில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லுகிறார்கள். வையையில் எப்பொழுதும் நிறைய ஜலம் ஓடுவதில்லை. கோடைக் காலத்தில் வடகரை ஓரமாகத் தான் கொஞ்சம் ஜலம் ஓடும். அப்பொழுது அங்கே சென்று ஸ்நானம் செய்து வருபவர்கள் மணலில் நடந்து துன்பமுற்று வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்வதற்கு இந்த மருத மரத்தின் கீழிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நிழலுக்காக இதன் கீழ் இருக்கலாம்.

மருத பாண்டியர், இங்ஙனம் குருக்கள் கூறும் காரணங்களைக் கேட்டுக் கொண்டே வந்தார்; அவை பொது ஜனங்களின் நன்மையைக் கருதியவை என்பதை அறிய அறிய அவருடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்துகொண்டே வந்தது. பின்னும் கூர்ந்து கேட்கலாயினர்.

“மகாராஜாவுக்கு, இந்த மரத்தினால் ஜனங்களடையும் பெரும் பயன் தெரிந்திருந்தால் இப்படிக் கட்டளை பிறந்திராது என்று எண்ணினேன். இந்த மரத்தை வெட்டிவிட்டால், அயலூர்களிலிருந்து, பிரார்த்தனைகளைச் செலுத்தும்பொருட்டு, ஸ்நானம் செய்துவிட்டு வரும் கர்ப்ப ஸ்திரீகளும், குழந்தைகளோடும் பிராயம் முதிர்ந்தவர்களோடும் வரும் பக்தர்களும், பிறரும் வெயிற்காலத்தில் மிக்க துன்பத்தை அடைவார்கள். அக்கரையிலிருந்து வருபவர்களும் வெயிலில் வந்த இளைப்பை ஆற்றிக் கொள்ள இடமில்லாமல் தவிப்பார்கள். மகாராஜா நினைத்தால் இந்த ஸமஸ்தானத்தில் எவ்வளவோ மரங்கள் கிடைக்கக் கூடும். இந்த ஒரு மரந்தான் இருக்கிறதென்பதில்லை, இந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மகாராஜாவின் ஞாபகம் வரும். இது பல ஜனங்களுடைய தாபத்தைப் போக்கி அவர்களுள்ளங் குளிரச் செய்து நிழலளித்து மகாராஜாவைப் போல் விளங்கி வருகின்றது. அன்றியும் மற்றொரு முக்கியமான விஷயந்தான் என்னுடைய மனத்தில் அதிகமாகப் பதிந்திருக்கின்றது. இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றது. இந்த மரம் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்பதே, மகாராஜாவின் க்ஷேமத்தையே குறித்து ஸந்நிதியில் அர்ச்சனை செய்துவரும் எனது பிரார்த்தனை. இதை வெட்டலாமா?” என்று கூறிக் குருக்கள் நிறுத்தினார்.

பக்கத்தில் நின்ற யாவரும் தம்மையே மறந்து, “ஹா!ஹா!” என்று தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். “மகாராஜாவினுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு இது நிற்கின்றது” என்று சமயோசிதமாக அவர் சொல்லிய வாக்கியமானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் உருக்கத்தையும் உண்டாக்கிவிட்டது.

பராமுகமாகக் கேட்டுக் கொண்டு வந்த மருத பாண்டியர் முகமலர்ந்து நிமிர்ந்து குருக்களைப் பார்த்தார். அவருடைய உள்ளம் குருக்களுடைய நல்லெண்ணத்தை அறிந்து கொண்டது. உண்மையான அன்பே அவரை அவ்வாறு தடுக்கச் செய்ததென்பதை அவர் உணர்ந்து, “சரி; நீர் செய்தது சரியே! உமக்கு நம் மேல் உள்ள விசுவாசத்தையும் பொது ஜனங்களின் மேல் உள்ள அன்பையும் கண்டு சந்தோஷிக்கிறோம்.” என்று கூறினார்.

மருத மரம் வெட்டப்படாமல் நின்றது. குருக்கள் அச்சம் நீங்கினார். காளையார் கோயில் தேருக்கு வேறொரு மரம் அச்சு ஆயிற்று.

சிறுவயல் ஜமீன்தாராக இருந்த முத்துராமலிங்கத் தேவரவர்களும், குன்றக்குடி மடத்தில் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப்பிள்ளையவர்களும் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

பிற்சேர்க்கை: டோண்டு உ.வே.சா. வாழ்க்கையிலிருந்து இன்னொரு சம்பவத்தை இங்கே “கள்ளா வா புலியைக் குத்து” என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். சீவக சிந்தாமணியில் ஒரு வரி அவருக்கு புரியவில்லையாம், யாரோ ஒருவர் தற்செயலாக சொன்னது அவருக்கு மூளையில் பலப் எரிந்திருக்கிறது! அவருடைய தேடல் எவ்வளவு ஆழமானது என்று நன்றாகப் புரிகிறது