2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நண்பர் திருமலை ராஜனும் நண்பர் பாலாஜியும் நடத்திய ஒரு ப்ரோக்ராமைப் பற்றி எழுதி இருந்தோம். இப்போது அந்த ப்ரோக்ராமை இன்டர்நெட்டில் கேட்கலாம். இரண்டு பகுதிகளாக இருக்கிறது. பகுதி ஒன்று இங்கே, பகுதி இரண்டு இங்கே.

Advertisements

நண்பர்கள் திருமலைராஜனும் பாலாஜியும் நாளை ஸ்பெக்ட்ரம் 2G பற்றி ஒரு ரேடியோ ப்ரோக்ராம் நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியை இங்கே ஆன்லைனில் கேட்கலாம். நாளை (டிசம்பர் 21) பசிபிக் நேரம் காலை 7:30 a.m. – 9:00 a.m. வரைக்கும் நடக்கும். இந்திய நேரம் இரவு 9:00-இலிருந்து 10:30 மணி வரை. ராஜன் இங்கே பல பதிவுகளை எழுதி இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் நன்றாக ஆராய்ந்து பல விவரங்களை சேகரித்து பேசுபவர்.

கேட்டுப் பாருங்கள், ஒரு மணி நேரம் நன்றாக பொழுது போகும்!

பாகம் 1

பாகம் 2

(நன்றி – itsdiff.com வானொலி மற்றும் ஸ்ரீகாந்த் )


பாலாஜி என்பவர் தமிழ் ஹிந்து தளத்தில் “மிதவாத முஸ்லீம்கள் எங்கே? ” என்று ஒரு பதிவு சீரிஸ் எழுதி இருக்கிறார். நல்ல சீரிஸ். நான்கு பகுதிகள் உள்ளன. (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)

குறிப்பாக மூன்றாம் பகுதி என் போன்றவர்களுக்கு இஸ்லாம் மீது இருக்கும் திருப்தியான பதில் இல்லாத கேள்விகளை தொகுத்திருக்கிறது. படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு


(இது ஒரு guest post – ஆசிரியர் திருமலை ராஜன்)

செப் 5, 2009 சனிக்கிழமை அன்று ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் நடந்த எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டத்தில் திருமலை ராஜனால் வாசிக்கப் பட்ட எழுத்தாளர் அறிமுக உரை .

ஜெயமோகனின் சொற்பொழிவு

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் சென்று இந்தியப் பாரம்பரியம், பண்பாடு, கலைகள், வரலாறு, இலக்கியம், இந்தியத் தத்துவங்கள் என்று பல தளங்கிலும் தான் பெற்ற ஞானத்தை அமெரிக்க வாழ் தமிழர்களிடம் தனது கலந்துரையாடல்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மதிப்பிற்குரிய எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.ஜெயமோகன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வசிக்கும் தன் வாசகர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் சந்திக்க இங்கு வருகை தந்திருக்கும் ஜெயமோகன் அவர்களை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவர் சார்பாகவும் வரவேற்கிறேன்.

இங்கு கலந்து கொண்டவர்களில் ஜெயமோகன் வாசகர்களுக்கும் அவரைப் பற்றி அறிந்தவர்கள் பலருக்கும் தமிழகத்தின் தலைச் சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன் குறித்து எவ்வித அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவரது எழுத்துக்கள் மூலமாக அவரை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். இருப்பினும் சம்பிரதாயம் கருதியும், ஜெயமோகன் அவர்களது படைப்புக்களுடன் அறிமுகமில்லாமல் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் வந்திருப்பவர்களின் வசதிக்காகவும் இங்கு ஒரு சிறிய அறிமுகத்தை அளிக்க முயல்கிறேன்.

எந்தவொரு மொழியின் இலக்கியத்திலும், பல தரப்பட்ட வகையான படைப்புக்கள் உருவாவது இயற்கையே. தமிழிலக்கியமும் அதற்கு விலக்கல்ல. படிக்கும் வாசகர்களுக்கு வெறும் வாசிப்பு இன்பம் மட்டும் அளித்து தற்காலிகமாக அவர்களைப் பரவசப் படுத்தும் படைப்புகள் பொதுவாகவே ஜனரஞ்சமானதாகவும் பிரபலமானதாகவும் அமைகின்றன. அது போன்ற படைப்புக்கள் ஜனரஞ்சக எழுத்து அல்லது பொழுது போக்கு வகை எழுத்துக்கள் என்று அறியப் படுகின்றன. பெரும்பாலான வாசகர்கள் தங்கள் ஆரம்ப வாசிப்பை அது போன்ற நூல்கள் மூலமாகவே துவக்கியிருந்திருக்கக் கூடும். பெரும்பாலும் இந்த வகை எழுத்துக்கள் எந்தவிதமான ஆழமான தாகக்த்தையும் சிந்தனைத் தூண்டுதலையும் வாசகர்களிடம் ஏற்படுத்துவதில்லை. துப்பறியும் நவீனங்கள், மேம்போக்கான வரலாற்றுக் கதைகள், பெண்களை அழ வைக்கும் சம்பவங்கள் நிறைந்த குடும்பக் கதைகள் போன்ற பொழுது போக்கு வகை எழுத்துக்கள் தமிழில் சிறுகதை/நாவல் இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து இன்று வரையிலும் கூட பலத்த வரவேற்பினைப் பெற்றே வருகின்றன. இருந்தாலும், தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்ப காலம் தொடங்கி தீவீரமான, வாசகர்களிடம் ஆழ் மனத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி, வாசகர்களுடன் ஆழ்ந்த உரையாடல் நடத்தி, படிப்பவர்களின் சிந்திக்கும் தளத்தினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இலக்கியவாதிகளும் சென்ற நூற்றாண்டின் நடுவில் இருந்து தமிழ் இலக்கியத்தில்  இயங்கி வருகின்றனர்.

”இலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையில் இருந்து பிறக்கிறது திட்டமிட்ட வடிவங்களால் சொல் அலங்காரங்களால் அல்ல” என்பார் இலக்கிய விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன். இந்த வகை நவீன இலக்கியங்கள், எழுத்தாளனின் கற்பனையும், ஆழ்ந்த அகத் தேடலும் கூடி உருவானவை. எழுத்தாளனின் அக அனுபமும் தேடல்களும் வாசகனின் அக அனுபவங்களுடன் கலந்து அவனது சிந்தனையை அனுபவ எல்லையை விரிவடையச் செய்வது, அது வெறும் கேளிக்கைகளையும், தற்காலிக சுவாரசியத்தையும் உருவாக்குவது அல்ல.

சாக்ரமெண்ட்டோ தமிழ் சங்க கூட்டத்தில் பேசும் பொழுது ஜெயமோகன் “இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை. உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை  அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே  பதில் சொல்லுவேன்” என்று பேசினார். அந்த வகை இலக்கியங்களே காலத்தைக் கடந்து நிற்பவை. தமிழ் நவீன இலக்கியங்களின் முன்னோடிகளானபுதுமைப் பித்தன், நகுலன்,கா நா சு, கு ப ரா, சுந்தரராமசாமி , அசோகமித்திரன், ஜெயகாந்தன் வரிசையில் என்பதாவது வருடத்திற்குப் பின் வந்த இலக்கியகர்த்தாக்களில் தனக்கென ஒரு தனியிடம் பெற்று ஒரே வகையான எழுத்துக்களில் மட்டுமே தேங்கிவிடாமல் பன்முக ஆளுமை கொண்டு இயங்கி பல லட்சம் வாசகர்களைக் கொண்டு இயங்கி வருபவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஜெயமோகனின் தாயார் விசாலாட்ச்சி அம்மையார் ஒரு தீவீரமான வாசகியாக இருந்திருக்கிறார். அவரது வாசிப்பின் தேடலால் உந்தப் பட்டு சிறு வயதில் இருந்தே எழுத்தில் ஆர்வமுடைய ஒரு தீவீரமான வாசகரகாக இருந்திருக்கிறார் ஜெயமோகன். சிறுவயதில் ஆசிரியர் “ வளர்ந்த பின் எந்த வேலைக்குப் போக விருப்பம்?” என்று கேட்க்கும் பொழுது சக மாணவர்கள் டாக்டர், இஞ்சினீயர், விமான பைலட், போலீஸ் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது ”நான் வைக்கம் பஷீராக விருப்பம்” என்று சொன்ன வித்தியாசமான மாணவராக வளர்ந்திருக்கிறார் ஜெயமோகன். ஒரு எழுத்தாளனாவதே தன் வாழ்நாளின் லட்சியம் என்று கூறி, நம்பி இன்று தமிழின் மாபெரும் படைப்பாளியாக வளர்ந்தும் இருக்கிறார். தன் லட்சியத்தை அடைந்திருக்கிறார் ஜெயமோகன்.

எண்பதுகளில் இருந்தே எழுதத் தொடங்கிய ஜெயமோகனது சிறுகதைகள் பல இலக்கிய பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு நம்பிக்கையை அளிக்க ஆரம்பித்துள்ளன. 1990ல் அவர் எழுதிய ரப்பர் என்ற நாவல் அகிலன் நினைவுப் பரிசைப் பெற்று அகில இந்திய அளவிலும் இலக்கிய விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பலத்த பாராட்டினையும் வரவேற்பினையும் பெற்று நவீன இலக்கிய உலகில் ஜெயமோகனுக்கு ஒரு முக்கிய அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. நமது பாரதப் பண்பாடு, புராணங்கள், தொன்மங்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலமாக உருவான வரலாறு ஆகியவற்றைப் புறக்கணித்தலும், அந்நியப்படுத்தலுமே நவீன இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களின் போக்காக இருந்து வரும் இன்றைய நிலையில், நமது பாரம்பரியங்கள், தத்துவங்களின் அர்த்தங்களையும், தொன்மையான மரபினையும், பாரதப் பண்பாட்டின் பல்லாயிரக்கணக்கான வருட மரபுகளின் ஒரு தொடர்ச்சியாக ஒரு நீட்சியாக தன் படைப்புக்களை உருவாக்கி வருகிறார் ஜெயமோகன்.

தன் தாய்மொழி மலையாளமாக இருந்த பொழுதிலும், தமிழும், மலையாளமும் பரவலாகப் புழங்கும் கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்துள்ள போதிலும் தன் சிந்தனையை, கற்பனையை, படைப்பாற்றலை இலக்கியமாக மாற்றும் கருவியாக அவர் தமிழ் மொழியினையே தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் எழுத ஆரம்பித்த சில வருடங்களுக்குள்ளாகவே இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சித்து சிறந்த படைப்புகளை அந்த அனைத்து வடிவங்களிலும் உருவாக்கியுள்ளார். சிறுகதை, நாவல், கட்டுரை, மலையாளத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் மொழிபெயர்ப்புக்கள், கவிதை, தத்துவக் கட்டுரைகள் ஏன் காதல் கதைகள், ஒற்றர்கள் பற்றிய புனைவுகள் என்று அனைத்து வகையான இலக்கிய வடிவங்களிலும் தனது அபாரமான சொல்லாட்சியினாலும்,கற்பனைத் திறத்தாலும், மொழி நேர்த்தி கொண்டும் பல சிறப்பான படைப்புக்களை படைத்துள்ளார்.

அவரது முதல் நாவலான ரப்பரில் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் மூலமாக அந்தக் குடும்பத்திலும் அந்த சமுதாயத்திலும், அந்த வட்டாரத்திலும் நடந்த சமூகப், பொருளாதாரா, சுற்று சூழல், விவசாய மாற்றங்களை மிகக் கச்சிதமாக விவரிக்கிறார். ஒரு சமூகத்தில் ஏற்படும் எழுச்சியும் வீழ்ச்சியும் எப்படி அதனை ஒட்டிய பிற சமூகங்களையும், அந்த நிலப் பரப்பின் சூழலையும் பாதிக்கிறது என்பதை மிக ஆழமாகச் சொல்லும் நாவல் ரப்பர். தமிழ் நவீன இலக்கியத்தில் அவசியம் படிக்கப் பட வேண்டிய முக்கியமான சூழலியல் இலக்கியம் ரப்பர், அவரது முக்கிய படைப்புக்களில் ஒன்று ரப்பர்.

ரப்பர் நாவலைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், குறு நாவல்களையும், புனைவில்லாத படைப்புக்களையும்  பல தளங்களைத் தொட்டு எழுதி வருகிறார். நாவல்களில் ரப்பரைத் தொடர்ந்து பரவலான கவனிப்பையும், விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்த நாவல் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் என்ற இரு பெரும் நாவல்கள். இந்த இரண்டு நாவல்களும் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான மாபெரும் பிருமாண்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. இந்த இரு நாவல்கள் குறித்தும் சற்று விரிவாக நண்பர்கள் பாலாஜியும், அருணகிரியும் பேச இருக்கின்றார்கள்.

ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாவது உலகம், கன்யாகுமரி, காடு, கொற்றவை ஆகியவை ஜெயமோகன் படைத்துள்ள நாவல்களாகும். இதில் ஏழாவது உலகம் படித்த வாசகர்களின் மனசாட்சியையெல்லாம் உலுக்கிய நம் சமூகத்தின் லட்சியங்கள், அறங்கள், கோட்பாடுகள் தர்ம நியாங்கள் குறித்த அடிப்படைக் கேள்விகளை எழுப்பிய ஒரு படைப்பாகும். பிச்சைக்காரர்களின் உலகத்தை அவர்களுடன் பழகி, வாழ்ந்து நம்மிடையே நாம் காணாத ஒரு உலகத்தை, ஏழாவது உலகத்தை நமக்கு நெருங்கிய நாம் உணரத்தக்க ஒரு அனுபவமாக மாற்றியிருக்கிறார் தன் ஏழாவது உலகம் நாவல் மூலமாக. தமிழில் வாசிக்கத் தெரிந்த ஒவ்வொரு வாசகரும் தவறாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் ஏழாவது உலகம். நாம் இது வரை அறிந்த உலகத்தின் யதார்த்தத்தில் இருந்து நம் மனசாட்சியை உலுக்கும் படைப்பு ஏழாவது உலகம்.

ஜெயமோகனின் மற்றொரு முக்கியமான படைப்பு காடு என்னும் நாவல். அது மனித உறவுகளின் காடு. கருமையும் பசுமையும் போர்த்திய அடர்ந்த ஒரு வனம், இதில் காடு  மாபெரும் ஒரு குறியீடாக வருகிறது. குறிஞ்சித் திணையை அடிப்படையாகக் கொண்டு தமிழின் மரபிலக்கியத்தின் நீட்ச்சியாக படைக்கப் பட்டுள்ள அற்புதமான நவீன இலக்கியம் காடு.

ஜெயமோகனின் மாபெரும் நாவல்கள் தவிர அவர் எழுதியுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் கூட ஆழமான மனத் தாக்கத்தையும், சிந்தனைகளையும் தூண்டுபவையே. அவற்றின் வடிவங்கள் பலவிதமானவை. ஜெயமோகனின் சிறுகதை உலகில் ஒரு சிறுகதை போல் மற்றொன்று இருப்பதில்அலை. அதன் நேர்த்தி, வடிவம், சொல்லாட்சி, மொழித் திறன், அழகியல் காட்சிகள், கற்பனை வளம் அனைத்தும் சிறுகதைக்குச் சிறுகதை வேறு படுபவை. ஜெயமோகனின் சிறுகதைகளில் மாடன் மோட்சம், படுகை, போதி, நதி, பல்லக்கு, ஊமைச் செந்நாய், மத்தகம் போன்ற சிறுகதைகளும், குறு நாவல்களும் குறிப்பிடத்தக்க ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளாகும்.

பல பிரபலமான இலக்கியகர்த்தாக்களைப் போன்று படைப்புலகுடன் மட்டும் தன் மொழி வளத்தையும், கற்பனைத் திறனையும், வளமான அறிவையும், அகண்ட வாசிப்பையும், குறுக்கிக் கொள்ளாமல் இந்தியத் தத்துவங்கள், இந்திய வரலாறு, பாரம்பரிய சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்று சூழல், காந்தியம், உலக இலக்கியம், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியம் மற்றும் அரசியல் ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள், பகவத் கீதை, வேதங்கள், மார்க்சியம், காந்தியம், ஓவியம், சிற்பம், இந்தியக் கலைகள், நடனங்கள், மலையாள மொழி இலக்கியம், சினிமா மற்றும் பல்வித நுண்கலைகள் என்று எண்ணற்ற துறைகளிலிலும் தான் பெற்ற பரந்த அறிவையும், நுட்பமான அலசல்களையும், ஆராய்ச்சிகளையும் தன் வாசகர்களுடன் ஆயிரக்கணக்கான தன் கட்டுரைகள் மூலமாகத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். ”அவற்றுள் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற நூல் குறிப்பிடத் தகுந்த ஒரு தத்துவ விளக்க நூலாகும். இந்து தத்துவ மரபுகளை எல்லாம் சடங்குகள் சார்ந்த பக்தி மரபுகள் என்று ஒதுக்குவோர் ஒரு குழுவாகவும், அவை எல்லாம் வணங்குவதற்குரிய சடங்குகள் நிறைந்த ஒரு பக்தி மரபு என்று பக்திபூர்வமாக எடுத்துக் கொள்வோர் ஒரு குழுவாகவும் நம் தத்துவங்களை அணுகி வரும் நிலையில், இந்துத் தத்துவ்ங்களின் சாரங்களாகிய வேதங்களையும், அதில் இருந்து கிளைத்த உபநிடதம் மற்றும் பிரிவுகளையும் மிக விரிவாக எளிய முறையில் அந்தத் தத்துவங்களின் பின்னால் உள்ள பிரபஞ்சம் சார்ந்த அறிவியல் பார்வையை இந்த நூல் அணுகுகிறது. இந்து தத்துவங்கள் என்பது அனைத்து வித வழிகளையும் உள்ளடக்கியது என்பதையும் அதன் பிரபஞ்சத் தேடல்கள் குறித்தும் மிக எளிமையாக இந்த நூல் அறிமுகப் படுத்துகிறது. இந்துத் தத்துவங்களில் ஜெயமோகன் அவர்களுக்கு உள்ள ஆழ்ந்த ஞானத்தை இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.

இலக்கிய விமர்சனம் என்பது தமிழில் அருகி வரும் ஒரு பிரிவாக இருக்கிறது. அந்தப் பணியையும் ஜெயமோகன் செவ்வனே செய்து வருகிறார். தமிழின் முன்னோடி இலக்கியவாதிகளை அறிமுகப் படுத்தியும், அவர்கள் படைப்புக்களை விமர்ச்சித்தும் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் 13 மூன்று நூல்களாக வெளி வந்துள்ளன. இன்னும் பல தொகுப்புகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் இரு நூல்கள் எழுதியுள்ளார். மலையாள நூல்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். இவரது பேட்டிகள், உரையாடகள் ஆகியவை தொகுக்கப் பட்டு மூன்று நூல்களாக வெளி வந்துள்ளன.

ஜெயமோகன் இந்தியாவின் மீதும் இந்தியப் பண்பாட்டின் மீதும் அளவற்ற நேசமும் நம்பிக்கையும் கொண்டுள்ளவர். இந்தியா முழுவதையும் பல முறைகள் பயணித்திருக்கிறார். கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்த ஜெயமோகன் காஷ்மீர், இமயமலைகள் வரை பல இடங்களுக்கு இரண்டு வருட காலமாக ஒரு எளிய துறவி போலச் சென்று இந்திய தரிசனத்தை அடைந்துள்ளார். தொடர்ந்து இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டே வருகிறார். அவரது இந்தியப் பயண அனுபவங்கள் பிற பயண நூல்களில் இருந்து பெரிதும் வேறு படுபவை. செல்லும் இடங்களின் பண்பாடு , சமூகம் அந்த மக்களின் தொன்மப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கூர்மையாக அவதானித்துத் தன் பயண அனுபவங்களாகப் பதிந்து வருகிறார். ஜெயமோகனின் இந்தியப் பயணம் குறித்தான கட்டுரைத் தொடர்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு அனைத்து இந்தியர்களாலும் அவசியம் படிக்கப் பட வேண்டியவை. அந்தக் கட்டுரைகளை இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் www.jeyamohan.in என்னும் ஜெயமோகன் வலைத் தளத்தில் படிக்கலாம். தற்பொழுதைய அமெரிக்க பயண அனுபவங்கள் குறித்தும் ஜெயமோகன் தன் வலைப் பதிவில் எழுதத் துவங்கியுள்ளார்.

ஜெயமோகன்.இன் வலைத்தளம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு இணைய தளம். தினமும் பத்தாயிரத்திற்கும் மேலான தமிழ் வாசகர்களை படிக்க ஈர்த்து வரும் ஒரு வலைத் தளம். அதில் ஜெயமோகனின் அபாராமான நகைச்சுவை உணர்வும், அங்கதமும் வெளிப்படும் பல கட்டுரைகளையும் படிக்கலாம். அவரது பன்முக ஆளுமையையும் விரிவான ஞானத்தையும் விளக்கும் ஒரு விரிவான இணைய தளம் அது. அவரது ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் விவாதங்களையும் கொண்டு மேலும் விரிந்து வரும் ஒரு தளம். அவரது புனைவுகள், பயணக் கட்டுரைகள், தத்துவ கட்டுரைகள், சினிமா கலை சம்பந்தமான கட்டுரைகள், விரிவான காந்தியத்தின் அலசல்கள் என்று பல துறைகளிலும் விரியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளின் ஒரு இணையக் களஞ்சியம் அவரது இணைய தளம் www.jeyamohan.in

பன்முகத் திறன் படைத்த ஜெயமோகனின் படைப்பாற்றல் தமிழ் சினிமா உலகிலும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. அவரது நண்பரும் மலையாள சினிமா உலகின் சிறந்த க்தாசிரியருமான சமீபத்தில் மறைந்த லோகிததாஸின் இயக்கத்தில் வெளி வந்த கஸ்தூரி மான் என்ற படத்திற்கு தமிழில் வசனம் எழுதியுள்ளார். ஜெயமோகன். அதைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, ஜெயமோகனின் ”ஏழாவது உலகம்” என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்கிய நான் கடவுள் என்ற படத்திற்கான வசனமும் எழுதி அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளி வர இருக்கும் அங்காடித் தெரு என்னும் படத்திற்கும், பழசி ராஜா என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வடிவத்திற்கும் இன்னும் சில படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார் ஜெயமோகன். மலையாளப் படங்களில் எம் டி வாசுதேவன் நாயர், தகழி, பத்மராஜன் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் சினிமாவாக எடுக்கப் பட்டு வெகுஜன வரவேற்பைப் பெறுகின்றன. தமிழ் திரைப்பட உலகிலும் அது போன்ற ஒரு ஆரோக்யமான சூழல் ஜெயமோகன் போன்ற படைப்பாளிகளின் முயற்சியினால் தமிழிலும் தரமான படங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையை இவரது திரைப்படப் பங்களிப்பு ஏற்படுத்துகிறது.

பல திசைகளிலும், பல துறைகளிலும் நிறைந்த அறிவும், அனுபவமும் பெற்ற ஜெயமோகன் அவர்களை இந்தச் சிறிய அறிமுகம் முழுமையாக விளக்கி விட முடியாது. அவரைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள அவரது எழுத்துக்களைப் படிப்பது ஒன்றே வழி. கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் ஒரு பெரிய பனி மலையைப் போன்ற ஒரு பிருமாண்டமான ஆளுமையின் ஒரு சிறிய முனையை மட்டுமே இந்தக் கூட்டத்தில் என்னால் இயன்ற அளவில் உங்களுக்கு அறியத் தர முடிந்தது. அவரது பன்முக ஆளுமையினையும், அவரது படைப்புக்களையும் நேரடியாகப் படிப்பதன் மூலமே அதன் பயனை நீங்கள் அடைய முடியும், அந்த ஆர்வத்தை உங்களிடம் ஏற்படுத்தவும், அதை நோக்கிய உங்களது முயற்சிக்கும் எனது சிறிய அறிமுக உரை உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாலாஜியின் அறிமுக உரை

தமிழ் இலக்கிய உலகிற்கும், அறிவுலகிற்கும் தனது பரந்த அறிவினாலும், செழுமையான மொழி வளத்தாலும், எல்லையில்லாத கற்பனை வளத்தாலும், தமிழ் இலக்கியத்தைச் வளப் படுத்தியும், அதன் வாசகர்களின் சிந்தனைத் தளத்தை உயர்த்தியும் வரும் ஜெயமொகன் அவர்களின் பங்களிப்பை இந்த வளைகுடாப் பகுதி தமிழர்களின் சார்பாக பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டதற்கான நன்றியையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயமோகனின் இரு நாவல்கள் குறித்த அறிமுக உரைகளைத் தொடர்ந்து ஜெயமோகன் அவர்களை இந்த கூட்டத்தில் உரையாற்றுமாறு அழைக்கிறேன்.

தொடர்புள்ள பிற பதிவுகள், மற்றும் சுட்டிகள்

ஃப்ரீமாண்டில் ஜெயமோகன் ஆற்றிய உரை

ஜெயமோகனின் வளைதளம்