எனக்கு படிப்பதில் ஒரு பித்து ரொம்ப வருஷமாக இருக்கிறது. சாண்டில்யனை பற்றி எழுதியபோது இந்த பித்து எப்படி வளர்ந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சரி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிசை ஆரம்பிக்கிறேன். முதலில் எழுபதுகள் நடுவில். என்னுடைய ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை.

சின்ன வயதில் நான் கிராமங்களில் வளர்ந்தவன். நான் வளர்ந்த கிராமங்களில் அரசு அமைப்புகள் என்றால் எலிமெண்டரி ஸ்கூல், ஹைஸ்கூல், மாட்டாஸ்பத்திரி (மனித ஆஸ்பத்திரிக்கு ஒரு பத்து மைல் போக வேண்டும், அதுவும் அரசு ஆஸ்பத்திரி கிடையாது), அப்புறம் லைப்ரரி. குக்கிராமம் என்றால் எலிமெண்டரி ஸ்கூல் மட்டும்தான் இருக்கும். எனக்கு அப்போதெல்லாம் நான் கிராமத்தில் இருக்கிறேன், குக்கிராமத்தில் இல்லை என்று ஒரு சின்ன பெருமை உண்டு. 🙂

அந்த கிராமத்து லைப்ரரிகளில் ஒரு ஆயிரம் ஆயிரத்தைநூறு புஸ்தகம் இருக்கும். புது புஸ்தகங்கள் எனக்கு தெரிந்து பத்து வருஷங்களில் வந்ததில்லை. பேப்பர் வரும். பத்திரிகைகள் வரும். ஒரு நூறு புஸ்தகம் சிறுவர் புஸ்தகம் ஆக இருக்கும்.

எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை அந்த லைப்ரரியில் ஒரு மெம்பராக சேர்த்துவிட்டாள். நான் ஒன்றிரண்டு வருஷங்களில் அந்த சிறுவர் புஸ்தகங்களை முடித்துவிட்டேன். எனக்கு இன்னும் நினைவிருப்பவை வாண்டு மாமாவின் காட்டுச்சிறுவன் கந்தன், பூவண்ணனின் காவேரியின் அன்பு, அப்புறம் ஆலம் விழுது – ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள் குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்துவார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகக் கூட வந்தது. (அதில் ஒரு அற்புதமான காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)

சரி எங்கெல்லாமோ போய்விட்டேன். நூறு புஸ்தகம் என்றால் படித்துவிடலாம். அவற்றை முடித்த பிறகு என்ன படிப்பது என்று தெரியவில்லை. முதல் வழிகாட்டி அம்மாதான். எட்டு வயதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் அம்மா கை காட்டிய சாண்டில்யன் புஸ்தகங்கள் எல்லாம் படித்தேன். சரித்திரப் பாடப் புத்தகத்தில் தெரிந்து கொண்டதைவிட சாண்டில்யன் மூலமாக தெரிந்து கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த வயதில் சாண்டில்யன் இளவரசிக்கு மேடு, காடு என்று எழுதினால் அதெல்லாம் புரியவில்லை. சாகசங்கள் – கடல் புறா, மலை வாசல், ராஜ முத்திரை, யவன ராணி – மட்டுமே மனதில் நின்றது.

ஆனால் ஒரு பத்து புத்தகம் படித்த பிறகு சாண்டில்யன் ஃபார்முலா பிடிபட்டுவிட்டது. ஒரு கற்பனையான அல்லது நிஜமான, சரித்திரத்தில் பெரிய இடம் பெறாத பாத்திரம்தான் ஹீரோ. யாராவது ஒரு mentor இருப்பார். ஹீரோயின் எப்போதும் 40-20-40 சைசில் இருப்பார். (இந்த சைசின் மகத்துவம் ஒரு பனிரண்டு வயது வாக்கில் புரிய ஆரம்பித்தது). நிறைய இயற்கை வர்ணனை இருக்கும். சுலபமாக அலுப்பு தட்டிவிட்டது.

அடுத்தபடி என் அம்மா படிக்க சொன்னது ஜெயகாந்தன். அந்த வயதில் எனக்கு போர் அடித்தது. அவர் கதைகளில் வருபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பாதி நேரம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள், சில பல சிறுகதைகள் எதுவும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் ரொம்ப பிடித்திருப்பது போல (அம்மா எனக்கு ரசனை இல்லை என்று நினைத்துவிட்டால்?) பாவ்லா செய்து கொண்டிருந்தேன். முதல் முதலாக பிடித்தது அவர் ஜய ஜய சங்கர என்று எழுதிய ஒரு சீரிஸ்தான். இன்றும் நான் சி.நே.சி. மனிதர்கள், ஜ.ஜ. சங்கர தாண்டிப் போகவில்லை. என்றாவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படிக்க வேண்டும்.

அப்புறம் காண்டேகர். காண்டேகர் என்று சொல்லக் கூடாது, யயாதி என்றுதான் சொல்ல வேண்டும்.இப்போது யோசித்து பார்த்தால் யயாதி அந்த வயதுக்கு கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றுகிறது. மிகவும் பிடித்திருந்தது. கச்ச தேவயானியின் கதை, யயாதியின் தேடல், யதியின் தேடல், சர்மிஷ்டையின் தேடல் – எல்லாம் மிக அற்புதமாக வந்திருந்தன. அந்த வயதில் பாயிண்ட் ஆஃப் வ்யூ யயாதியிலிருந்து தேவயானியிலிருந்து சர்மிஷடக்கு மாறுவது மிக அற்புதமாக டெக்னிக் என்று தோன்றியது. காண்டேகரின் பிற புத்தகங்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை.

என் அம்மாவின் சிபாரிசுகளில் அற்புதமான புத்தகம் என்று நான் அப்போது நினைத்தது, இப்போதும் நினைப்பது சா. கந்தசாமியின் சாயாவனம்தான்.

அடுத்தபடி குமுதம், விகடனில் வரும் தொடர்கதைகளை ஒரு பத்து வயதில் படிக்க ஆரம்பித்தேன். ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியோர் பரவாயில்லை என்று தோன்றியது. மணியன் உலக மகா போர். பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் ஓரளவு பிடித்திருந்தது. தேடித் பிடித்து அப்போது படித்த புத்தகங்கள், ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை, பாக்யம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி, சாவியின் வாஷிங்டனில் திருமணம். அம்மாவும் நானும் இவற்றை பற்றி பேசுவோம்.

என்னுடைய sources இவைதான் – கிராம நூலகங்கள், பாப்புலர் பத்திரிகைகளான குமுதம், விகடன், கோகுலம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பத்திரிகைகலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட தொடர்கதைகள், இந்த கால கட்டத்தின் இறுதியில் வரத் தொடங்கின மாத நாவல்கள் (ராணி முத்து ரொம்ப நாளாக வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் மாலைமதி ஆரம்பித்தது.) எனக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கும் இவைதான் sources. எனக்கு தெரிந்த எல்லாருக்குமே இவைதான் sources. புத்தகங்களை வாங்கலாம் என்று எனக்கு தோன்றியது கூட இல்லை.

இன்றைக்கு நாஸ்டால்ஜியா, மற்றும் நல்ல புத்தகங்கள் என்று நான் இந்த காலத்தில் படித்த புத்தகங்களுள் சிபாரிசு செய்வது:

நல்ல புத்தகங்கள்:
1. சா. கந்தசாமியின் சாயாவனம்
2. வி. எஸ். காண்டேகரின் யயாதி
3. ஜெயகாந்தனின் ஜய ஜய சங்கர (4 மாத நாவல்கள், ஒரு சீரிஸ்)
4. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இந்த வயதில் பிடிக்கவில்லை, ஓரளவு பெரியவன் ஆன பிறகு பிடித்திருந்தது)

இரண்டாம் பட்டியல்:
1. ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை
2. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி புத்தகங்கள் அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும்
3. பாக்கியம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி
4. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
5. சாண்டில்யனின் யவன ராணி
6. சாண்டில்யனின் கடல் புறா
7. சாண்டில்யனின் ராஜ முத்திரை
8. சாண்டில்யனின் மலை வாசல்
9. சாண்டில்யனின் கன்னி மாடம்
10. சாவியின் வாஷிங்டனில் திருமணம்

நாஸ்டால்ஜியா:
1. வாண்டு மாமாவின் காட்டு சிறுவன் கந்தன்
2. பூவண்ணனின் காவேரியின் அன்பு
3. பூவண்ணனின் ஆலம் விழுது

ஐந்தாறு வருஷ படிப்புக்கு பதினேழு புஸ்தகம்தான் தேறுகிறது. வேண்டுமானால் இன்னும் சில சாண்டில்யன் கதைகள், எஸ்.ஏ.பி. அண்ணாமலை (கதை பெயர் எதுவும் ஞாபகம் வரவில்லை) சேர்த்துக் கொள்ளலாம்.