நினைவு தெரிந்த நாளாக சரியோ தப்போ எந்த குட்டையில் ஊறிய மட்டை பெட்டர் என்று ஒரு திடமான கருத்து இருந்தது. இந்த தேர்தல் மாதிரி மோசமான மன நிலையில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கு காரணம் இலங்கைத் தமிழர்கள்தான்.

இலங்கைத் தமிழர்கள் இன்று செத்துக் கொண்டிருக்காவிட்டால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று தைரியமாக சொல்வேன் – காங்கிரஸ் நல்லவர்கள் என்பதற்காக இல்லை, பா.ஜ.க. முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் பிரித்து வைப்பதை ஒரு strategy ஆக கொண்டிருப்பதால்.

கலைஞரும் ஜெவும் மற்ற குட்டித் தலைவர்களான சிதம்பரமும் ராமதாசும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கையை விரித்துவிட்டால் கூட பரவாயில்லை. இவர்களது போலித்தனம் மகா வெறுப்பை கிளப்புகிறது. என்ன மாதிரியான தலைவர்கள் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார்கள்? ஜெ துணிச்சலாக திமிராக மனதில் பட்டதை சொல்வார் என்று எனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது. தேர்தல் வந்தவுடன் உண்ணாவிரதமாம். அயோக்கியத்தனம் மட்டுமே உள்ள தலைவர்கள்.

ஆனால் யாராவது ஆட்சிக்கு வரத்தான் போகிறார்கள். யார் வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையாவது மிஞ்சும்?

அத்வானி இல்லை. பா.ஜ.க. இந்திய இறையாண்மையை காங்கிரசை விட சென்சிடிவாக பார்க்கும் – அவர்களுக்கு இலங்கையின் இறையாண்மை பலவீனப்படுவது நல்ல விஷயம் இல்லை.

கம்யூனிஸ்டுகள்? இல்லை. அவர்களுக்கு வழிகாட்டியான சீனா எப்போதுமே உயிர்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. அவர்கள் ஆதரவு ராஜபக்செவுக்குத்தான்.

மாயாவதி போன்ற யாராவதா? இலங்கையை பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?

காங்கிரசா? இது நப்பாசைதான் – கலைஞர் வாயை திறக்க மாட்டார்தான், ஆனால் காங்கிரஸ்காரர்களுக்கு புரியாமல் போய்விடுமா? என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா? தமிழ் நாட்டில் பேருக்காவது கட்சி இருக்கும் ஒரே “தேசியக் கட்சி” இதுதான். காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எழுத கை கூசுகிறது. நம்பிக்கை இல்லைதான். ஆனால் மற்ற பேர் மீது 0% நம்பிக்கைதான் இருக்கிறது. இவர்கள் மீது ஒன்றிரண்டு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிதம்பரமும், மணிஷங்கர் ஐயரும், இளங்கோவனும், ஜி.கே. வாசனும் அடி முட்டாள்களா? ப்ராக்டிகலாக யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு உள்ள மாற்று இலங்கை தமிழர்களின் நிலையை இன்னும் மோசமாக்குவார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என்ன கொடுமைடா சாமி! போயும் போயும் இவர்கள்தான் இருப்பதிலே நல்ல சாய்ஸ் என்றால் என்னத்தை செய்வது!

இந்திய பிரச்சினைகள் மட்டுமே என்றால் எனக்கு காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட நாள் முதல் நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். அன்று உருவான strategy-ஐ பா.ஜ.க. மாற்றிக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. மாயாவதி போன்றவர்களை விட காங்கிரஸ் பெட்டர் என்பது என் திடமான அபிப்ராயம். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம், ஆனால் அவர்கள் கூட்டாளிகள் அதை ஈடு செய்துவிடுவார்கள். மேலும் அவர்கள் கம்யூநிச்டுகளா, காபிடலிஸ்டுகளா என்பதே இப்போதெல்லாம் குழப்பமாக இருக்கிறது. (நந்திக்ராமத்தை பாருங்கள்!)


துக்ளக் என்னை மன்னிக்கட்டும்!

நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் தானே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்குமா என்று கேட்டதற்கு கருணாநிதி தன் இஷ்டம் போல வளைப்பதற்கு இது அவரது வீட்டின் ஜன்னல் சட்டம் அல்ல, நாட்டின் சட்டம் என்று பதிலளித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் சோனியா காந்தி புரட்சித் தலைவி, தமிழகத்தின் தவப் பயன், மகாத்மா ஜெயலலிதா டெல்லியில் நிற்க மனு தாக்கல் செய்யாவிட்டால் சோனியா காந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று மகாதேவன் அறிவித்திருக்கிறார். சோனியா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லையே, அவரை எப்படி நீங்கள் நீக்க முடியும் என்று கேட்டதற்கு டி.டி.கே. தினகரன் முதலில் அவரை உறுப்பினராக்கி பிறகு நீக்குவோம் என்று சொன்னார். திவாகரன் அதெல்லாம் வேண்டாம், சோனியாவை காங்கிரசிலிருந்து நீக்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா 552 தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியை வெளியிடும்போது “முன்னாள் முதல்வர்” ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு எழுதும்படி தினகரன், மகாதேவன், திவாகரன் மூவரும் நிருபர்களை கேட்டுக் கொண்டார்கள்.

கலைஞர் பேட்டி
இது பற்றி பேட்டி அளித்த கலைஞர் நாற்பது ஆண்டு கால நண்பரான எம்ஜிஆர் கூட நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவேன் என்று சொன்னதில்லை என்பதை சுட்டி காட்டினார். இது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நல்லி சில்க் உடுத்தும் நய வஞ்சகி, நச்சுப் பாம்பு ஜெயலலிதா போன்று தான் எப்போதும் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்றும் வருத்தத்தோடு கூறினார். உடனே தான் நல்லி சில்க் முதலாளியான செட்டியாரின் இனத்துக்கு எதிரி இல்லை என்றும், செட்டியாரியத்தை மட்டுமே எதிர்ப்பதாகவும் ஒரு விளக்கமும் அளித்தார். கூட்டணி தர்மத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்த ராமதாசும், கம்யூனிஸ்ட் கட்சி அவாளும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் வினவினார். முதுகில் குத்தும் துரோகி, கழக கண்மணிகளின் முதல் விரோதி வைக்கோ தி.மு.க. அணிக்கு மாற விரும்பினால் அவரை இரு கரம் நீட்டி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோ கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த சோ, பிஜேபிக்கு இரண்டு சீட் கொடுத்துவிட்டு மிச்ச 38 சீட்டில் ஜெ நின்றிருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். யாருக்கு வாய்ப்பு அதிகரித்திருக்கும், ஜெவுக்கா, பிஜெபிக்கா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. நரேந்திர மோடி குஜராத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று அவர் பிஜேபி தலைமைக்கு ஆலோசனை தெரிவித்து வருகிறதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி கட்சிகள் நிலவரம் 
கூட்டணியில் குழப்பம் விளைக்க கலைஞர் செய்யும் முயற்சிகள் படுதோல்வி அடையும் என்று ஜெயலலிதா இன்று பேட்டி அளித்திருக்கிறார். இந்த முயற்சிகளை கலைஞர் உடனே நிறுத்தாவிட்டால் அடுத்த திமுக உள் கட்சி தேர்தலில் எல்லா பதவிகளுக்கும் தான் போட்டி இட வேண்டி வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் மீண்டும் கலைஞரை அணுகியதாகவும், கலைஞர் அவருக்கு இதயத்தில் இடம் தருவதாக கூறியதாகவும் தெரிகிறது. அன்புமணிக்கு உடனடியாக மந்திரி பதவியும், பிறகு ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக சொல்லி இருப்பதால் டாக்டர் இந்த ஏற்பாட்டை ஒத்துக் கொள்வார் என்று தெரிகிறது.

கட்சியிலிருந்து நிற்க வைக்க ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லாததால் வைக்கோ மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது. அம்மாவை தலைவராக ஏற்றுக்கொண்டது பெரிய தீர்க்கதரிசனம் என்று அவர் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இது தெரிந்த ஜெயலலிதா “இவர் ரொம்ப நல்லவரு! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு” என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் 
லாயிட்ஸ் ரோடில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டி இட வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் மனு கொடுக்க க்யூவில் நிற்பதால் லாயிட்ஸ் ரோடில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவினரின் அராஜகம் என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் சொல்லி உள்ளார்.

 

தி.மு.க. தொகுதி பங்கீட்டில் தகராறு

தி.மு.க. அணியில் தொகுதி பங்கீட்டு தகராறுகள் இன்னும் முடியவில்லை. காங்கிரசுக்கு 20 சீட், விடுதலை சிறுத்தைகளுக்கு 1 சீட் என்ற அளவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டாலும் ஸ்டாலின் அழகிரிக்கு இடையே தொகுதி பங்கீடு முடியாததால் கலைஞர் பெரும் கவலையில் இருக்கிறார் என்று தெரிகிறது. சீக்கிரம் பங்கீட்டை முடிக்கும்படியும், இல்லாவிட்டால் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை சமாளிக்க முடியாது என்றும் அவர் சொன்னதாக தெரிகிறது. மு.க. முத்து இந்த முறை இதயத்தில் மட்டும் இடம் தந்தால் போதாது என்றும் சொல்லி வருவதாக நமது நிருபர் தெரிவிக்கிறார்.

அழகிரி கை ஓங்குகிறது
இன்று இந்த தேர்தலின் விசேஷ பொறுப்பாளராக அழகிரி நியமிக்கப்பட்டார். இதை பற்றி பேசிய கலைஞர் அழகிரி ஏற்கனவே தென் மண்டல செயலாளராக இருப்பதாகவும், தமிழ் நாடு இந்தியாவின் தென் மண்டலத்தில்தான் இருப்பது பெரியார் வழி வந்து புவியியல் பயின்றவர்களுக்கு தெரியும் என்றும், அதனால் அழகிரியே இந்த தேர்தலுக்கு முழு பொறுப்பை ஏற்கப்போவதாகவும் சொன்னார். அழகிரி அவருக்கு ஒரு சால்வை போட்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேராசிரியர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அழகிரி நிருபர்களிடம் பேசுகையில் ஸ்டாலின் என்பது ரஷியப் பெயர், ஸ்டாலினுக்கு ரஷிய தேர்தலில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தினகரன் அலுவலகம் மதுரையில் மூடப்பட்டதற்கும் இந்த செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சன் டிவியின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

தயாநிதி மாறன் மதுரையில் போட்டி!
அழகிரி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் சமரசம் ஏற்பட்டதாகவும், அதனால் தயாநிதி மதுரையில் போட்டி போட இருப்பதாகவும் தெரிகிறது. அழகிரியின் மகனான தயாநிதி சன் டிவியின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்பார் என்றும ஒரு வதந்தி உலவுகிறது.

 

 

ராஜீவ் மரணம் தற்கொலை – சுப்ரமணிய சாமியின் அதிர்ச்சி தரும் அறிக்கை

“இங்கே பாருங்கோ, ராஜீவ் எக்ஸ் ப்ரைம் மினிஸ்டர். அவருக்கு நிறைய செக்யூரிடி எல்லாம் உண்டு. அவர்கிட்ட எப்படி பாம் போக முடியும்? அந்த பாம் அவரோட உடம்பிலேயே இருந்துது. அவருக்கு குடும்பத்திலே சோனியா ரொம்ப தொந்தரவு கொடுத்தாலே அந்த மனுஷன் பாவம் அவர் உடம்பிலே அவரே பாம் செட்டப் பண்ணி தற்கொலை பண்ணிண்டுட்டார். இதுக்கு என்கிட்டே நிறைய எவிடன்ஸ் இருக்கு. அதை எல்லாம் எனக்கு பிரபாகரனே கொடுத்திருக்கார்” என்று சாமி சொன்னதாக கேட்ட நாம் அதிர்ந்து போனோம். அவரிடம் நீங்கள்தான் புலிகளோட எதிரியாச்சே என்று கேட்டோம். அதற்கு அவர் “இல்லே இல்லே நான் காங்கிரசுக்கு எதிரி. பிரபாகரனும் அப்படித்தான். அதனால அவர் என்னோட நண்பன், இதுக்கு உங்களுக்கு எவிடன்ஸ் வேணும்னா தாவூத் இப்ராஹீம் கிட்ட கேட்டுக்குங்கோ” என்று சொன்னார்.

இதனால் ஜெ அவருக்கு மதுரை தொகுதியை விட்டுத் தருவார் என்றும், மிச்சம் உள்ள 39 தொகுதியில் மட்டுமே போட்டி இடுவார் என்றும தெரிகிறது. அந்த பாம்பை(bomb) செட்டப் செய்தது கருணாநிதி என்னும் பாம்புதான் என்றும், ராஜீவின் தற்கொலைக்கு கருணாநிதி அவருக்கு கமர்கட் கொடுக்காததும் ஒரு முக்கிய காரணம் என்றும், ஜெ முழங்கினார்.
இதை கேட்டதும் கலைஞர் எழுதிய கவிதை.

ஜெயலலிதா வட்டமிடும் கழுகு,
நான் உனக்காக உருகும் மெழுகு,
தமிழா நீ பார்த்து பழகு.

ஆர்எம்வி கட்சியின் இமாலய வளர்ச்சி – தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்

பல நாட்களாக அவார்டா கொடுக்கறாங்க என்ற ப்ளாக்-ஐ எழுதி வரும் ஆர்வி இன்று ஆர்எம்வி கட்சியில் சேர்ந்தார். ஆர்விக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பழைய கால சினிமா பற்றி ஆர்எம்வியை பேட்டி காண முயற்சித்ததாகவும், ஆர்எம்வி தவறாக புரிந்து கொண்டு அவரை கட்சி உறுப்பினர் ஆக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவரது எம்ஜிஆர் கழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கை போன வருஷத்தை விட 100% அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எம்ஜிஆர் கழகத்துக்கு ஒரு சீட் – கலைஞர் அறிக்கை
தமிழக அரசியல் மாற்றங்களை எப்போதும் கூர்ந்து கவனித்து வரும் கலைஞரின் கழுகுக் கண்களிலிருந்து எம்ஜிஆர் கழகத்தின் இமாலய வளர்ச்சி தப்பவில்லை என்று தெரிகிறது. இன்று மாலை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாற்பது ஆண்டு நண்பர் எம்ஜிஆருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவரும், ஏமாற்றங்களை அண்ணாவின் ஆணைப்படி எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டு தாங்கிக் கொள்பவருமான ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு வரும் தேர்தலில் அமெரிக்காவில் ஒரு சீட் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இதன் மூலம் வெளி நாடுகளிலும் போட்டியிடும் முதல் இந்தியக் கட்சி தி.மு.க.தான் என்ற ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சீட்டில் அமெரிக்காவில் வாழும் ஆர்வி போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆர்எம்வியிடம் தமிழகத்தில் சீட் கிடைக்காததற்காக ஏமாற்றம் அடைகிறீர்களா என்று கேட்டதற்கு அவர்
“உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்”
என்று பாடிவிட்டு, எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் ராஜு, வட அமெரிக்காவில் வாசு என்று இரண்டு படங்களை எடுக்க திட்டம் போட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

ஆர்விக்கு மாரடைப்பு
உலகம் சுற்றும் வாலிபனை பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த ஆர்வி வட அமெரிக்காவில் வாசு பற்றி வந்த செய்தியை படித்துவிட்டு தான் அமெரிக்காவில் தி.மு.க. அணியில் போட்டி இடப்போவதை தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது மாரடைப்பு இல்லை, வாயு தொந்தரவுதான் என்று டாக்டர்கள் சொன்னாலும் அவர் தேர்தல் முடியும் வரை கோமாவிலிருந்து வெளி வரமாட்டேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் -ஆர்எம்வி ஆலோசனை
ஆர்வி பார்ப்பன ஜாதியில் பிறந்தவர் என்பதை இப்போதுதான் கலைஞர் அறிந்தார். அவர் உடனே “அவாள் நமக்கு எப்போதுமே சவால்தான்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சமீபத்தில் 1964-இல் கூடுவாஞ்சேரி இடைத்தேர்தலில் ஒரு குல்லுக பட்டர் தி.மு.க.வின் முதுகில் குத்தியதையும், ஜெயலலிதா சட்டசபைய்ல் தான் பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதையும், அதே சட்ட சபையில் ஜாதி பேதத்தை ஒழிப்பதற்காக தான் சூத்திரன், நாலாம் வருணத்தவன் என்று சொல்லி கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு தென்சென்னை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதால், ராஜாஜியை மூதறிஞர் என்று முதலில் அழைத்தது தான்தான் என்பதையும் நினைவு கூர்ந்தார். தான் பார்ப்பனர்களுக்கு எதிரி இல்லை, பார்ப்பநீயத்துக்குத்தான் என்று இலக்கிய ரசம் சொட்ட சொட்ட இன்னொரு கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த கவிதை நாளை தினகரன், முரசொலியில் வரும் என்றும், இந்த கவிதைக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நமீதா அபிநயம் பிடித்துக் காட்டுவார் என்றும் தெரிகிறது.

பிறகு ஆர்எம்வி இது போன்ற துயர சம்பவங்களை தவிர்க்க விரும்புவதாகவும், அதனால் வழக்கம் போல் கலைஞர் இதயத்தில் மட்டும் சீட் கிடைத்தால் போதும் என்று கூறினார். கலைஞர் தான் எதையும் தாங்கும் இதயம் உள்ள அண்ணாவின் வழி வந்தவன், ஆர்எம்வியையும் தாங்குவேன் என்று குறிப்பிட்டார்.

காதில் விழுந்த துணுக்கு செய்திகள் 

ரஜினி ஆதரவு யாருக்கு?
ரஜினி நான் யாருக்கு ஆதரவு தரணும், எப்படி ஆதரவு தரணும், எப்போ ஆதரவு தரணும் அப்படின்றதெல்லாம் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதையே இந்திரன் படத்தில் ஒரு பன்ச் ஆகவும் வைத்த்ருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. படத்தின் ரகசியங்கள் வெளி வருவதால் ஷங்கர் மிக கோபத்தில் இருக்கிறாராம்.

ஸ்வீட் எஸ், சீட் நோ
சரத்தின் மூத்த மகளுக்கு நேற்று 25 வயது முடிந்தது. இதை குடும்பத்தில் அனைவரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள். தன் கட்சி சார்பில் நிற்க மூன்று தகுதி உள்ளவர்கள் கிடைத்துவிட்டதால் சரத் ஆனந்தத்தில் மிதக்கிறார். ஆனால் ராதிகாவோ ஸ்வீட் கொடுத்து கொண்டாடினால் ஓகே, ஆனால் சீட் கொடுத்து கொண்டாடக் கூடாது, பணத்தை எல்லாம் முதல் தாரத்து வாரிசுங்க மேலயே விட்டீங்க, அப்புறம் தெரியும் சேதி என்று உறுமுகிறாராம்.

முன் வந்த பதிவுகள்
சுப்பிரமணிய சாமி – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்டி. ராஜேந்தர் தனது அறைக்குள் சினம் கொண்ட சிங்கத்தை போல் – சீச்சி மதம் கொண்ட யானையை போல் – நடை போட்டுக் கொண்டிருக்கிறார். உஷா ஒரு சோஃபாவில். சிம்பு “வேர் இஸ் த பார்ட்டி” என்று பாடிக் கொண்டே உள்ளே நுழைகிறார்.

உஷா: நம்ம ஊட்டிலதாண்டா பார்ட்டி! உனக்காக எவ்ளோ நேரமா காத்திருக்கிறது? உங்க அப்பா என்ன தூங்கவும் வுடமாட்டேன்றார்.
சிம்பு: மம்மி, ஐ அம் எ யூத்! நைட் பர்ட்! பார்ட்டிம்மா!
டிஆர்: இங்கேயும் பார்ட்டிதாண்டா! நம்ம கட்சி ஆலோசனைக் கூட்டம். நீ வேர் இஸ் த பார்ட்டின்னு அலையறே. உங்க பாட்டி இருந்தா இப்போ உன்னை பாத்து பாத்து, உனக்காக்க காத்து காத்து..
சிம்பு: டாடி! மூடுங்க உங்க வாய் அண்ட்…
உஷா: ஓடி வந்து சிம்புவின் வாயை பொத்துகிறார். கஷ்டப்பட்டு உஷாவின் கையை எடுத்துவிட்டு. உளறல்னு சொல்ல வந்தேம்மா! நீங்க நினைக்கற மாதிரி டயலாக் எல்லாம் படத்தில்தான் வைப்பேன். அப்போதான் யூத் வருவாங்க.
டிஆர்: வாடா என் மச்சி வெங்காய பஜ்ஜி என்னாச்சு கட்சி, எதிர்க்கறவனை குதறிடுவேன் கட்சி!
சிம்பு: ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ஓ கடிச்சு குதறிடுவேன் அப்படின்றீங்களா? வர வர உங்க தமிழ் எனக்கே புரிய மாட்டேங்குது. சரி மற்ற கட்சி நிர்வாகிகள் எல்லாம் எங்க?
உஷா: உன் தம்பி தங்கச்சி எப்பவோ எஸ் ஆயிட்டாங்க. நான்தான் மாட்டிக்கிட்டேன்.
சிம்பு: ஆமா, கட்சி ஆலோசனை கூட்டமா இல்லை ராத்திரி குடும்பத்தில எல்லாரும் உட்காந்து சாப்பிடுறமான்னு தெரியல. இதுக்கு ஒரு கட்சி வேற!
டிஆர்: கலைஞர்தான் எனக்கு ரோல் மாடல். அவருக்கும் குடும்பம்தான் கட்சி. எனக்கும் அப்படித்தான்.
உஷா: சரி விஷயத்துக்கு வருவோம்டா. எனக்கு தூக்கமா வருது, இவரு புடிச்சு வச்சிக்கிட்டு உட மாட்டேன்றார்.
சிம்பு: என்னா ஆலோசனை? தேர்தல்ல நிக்கக் கூடாது. சம்பாதிக்கற பணத்த எல்லாம் இப்படி உட முடியாது.
டிஆர்: நானே உடையார். என்கிட்டயே உட முடியாதுன்னு பேசறியா! தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி, ஊட்டி வளர்த்த ஓரன்பு தங்கச்சி
சிம்பு: டாடி! நான் புள்ள! ரைமிங்க்க்காக புள்ளைய தங்கச்சின்னு மாத்தறீங்களே!
உஷா: கொட்டாவி விடுகிறார்.
டிஆர்: சரி யூத்துக்காக அம்மாடி ஆத்தாடி பாட்டை ரீமிக்ஸ் பண்ணி அம்மாடி ஆத்தாடி ஓட்டை எனக்கு தரயாடின்னு மாத்தி பாடினால் ஜிங்குச்சான் ஜினுக்குச்சான் 234 தொகுதியும் நமக்குத்தான்.
உஷா: ஏங்க இப்படி குழப்பறீங்க! இப்ப நடக்குறது டெல்லி தேர்தல். அங்க 40 தொகுதிதான்.
சிம்பு: பாரு இவருக்கு தேர்தல் பத்தி ஒன்னும் தெரியாமலே கட்சியாம், ஆலோசனையாம்.
டிஆர்: இருந்தாலும் நம்ம கவுரவத்தை காப்பாத்திக்கணும் இல்லே!
சிம்பு: இந்த தேர்தலை புறக்கனிக்கிறோம்னு ஒரு அறிக்கை விடுங்க! கத முடிஞ்சுது.
டிஆர்: ஆ! அதுவும் நல்ல யோசனைதான். இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் விட வேண்டும், வென்றவர்கள் மேல் பன்னீர் இல்லை அப்படின்னு ஒரு அறிக்கை விட்டுடறேன்.
உஷா இதுதான் சாக்கு என்று குட் நைட் என்று கத்திவிட்டு ஓடி விடுகிறார். சிம்பு வேர் இஸ் த பார்ட்டி என்று திரும்ப வெளியே போய்விடுகிறார். டிஆர் தனியே உட்கார்ந்து அறிக்கை எழுத ஆரம்பிக்கிறார்.

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


sarath_radhika

சரத் குமார் அறையில் அங்கும் இங்குமாக உலாத்திக் கொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே நுழைகிறார்.
சரத்: என்ன இவ்வளவு லேட்டு? நம்ம நிர்வாகிகள் எல்லாம் இங்கே காத்துக்கிட்டுருக்காங்க இல்ல?
ராதிகா: அங்கும் இங்கும் திரும்பி பார்க்கிறார்.
சரத்: அட என்னத்தான் அம்மணி சொல்றேன். நம்மள நாமே பெருமையா பேசினாத்தான் இந்த ஊர் சனம், பதினெட்டு பட்டி எல்லாம் பெருமையா பேசும்.
ராதிகா: ஆமா இந்த பதினெட்டு பட்டின்னு சொல்லி சொல்லியே தலையில மண்ண வாரி போட்டுக்கிட்டீங்க. பேசாம கலைஞரோடவே இருந்திருந்தா என்னிக்காவது ஒரு நாள் மந்திரி பதவி கிடைச்சிருக்கும். எம்.பி. சீட்டாவது வாங்கி இருக்கலாம். அட இருந்திருந்து ஒரு படம் எடுத்தீங்களே, 1977-ன்னு, அதையாவது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அளிக்கும்னு அவருக்கு வித்துப் போட்டிருக்கலாம். இப்ப பாருங்க கட்சியில் பதினெட்டு பேர் கூட இல்ல.
சரத்: அது என்ன நீ அப்படி சொல்லிப்போட்டே தாயி! திருமங்கலம எலெக்ஷன்ல நமக்கு எவ்வளவு ஓட்டு கிடைச்சது பாத்தில்ல?
ராதிகா: உங்க படம் பேரு 1977. 1977 ஓட்டு கூட கிடைக்கலே. கட்சி செலவு, தண்டமா படம் எடுக்க செலவு. பணம் போய்க்கிட்டே இருக்கு.
சரத்: சரி விடு அம்மணி! படத்தை கூடத்தான் 1977 பேர் கூட பாக்கலே. அதையெல்லாம் நான் சொல்லிட்டு திரியறனாக்கும்! இப்போ ஆக வேண்டியதை பாப்போம் புள்ள! நாம இந்த பிஜெபியோட கூட்டு சேந்தா என்ன?
ராதிகா: நான் சோத்தோட கூட கூட்டு சேக்கறதில்ல. எப்பவும் பொரியல்தான்.
சரத்: அட விளையாடாத புள்ளே! நாம, இந்த பிஜேபி, கார்த்திக் எல்லாம் ஒண்ணா சேந்தா தெற்கே ஒண்ணு ரெண்டு எம்.பி. சீட் கிடைக்காதா?
ராதிகா: தெற்கே, வடக்கே எல்லாம் கிடைக்கும். நமக்கு கிடைக்குமா? அதான் கேள்வி.
சரத்: அட என்னா புள்ள! அபசகுனம் மாதிரி பேசறே!
ராதிகா: த பாருங்க, நாம கலைஞரோட சேர்றதுதான் நல்லது. குறைஞ்ச பட்சம் உங்க 1977 படத்தை சன் டிவிலே போடுவாங்க.
சரத்: அட நீ வேற புள்ள! கலைஞர் நமக்கு இதயத்தில்தான் இடம் கொடுப்பாரு.
ராதிகா: யோவ்! அதுக்குத்தான்யா அங்கே சேரலாம்னு சொல்றேன். பணமாவது மிச்சமாகும்!

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


rmv1

2009 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

ஆர்எம்வி தன் அறையில் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆர்எம்வி: (தனக்கு தானே) இந்த வீட்ல எதுவும் வச்சது வச்ச இடத்தில இருக்காது. எல்லாத்தையும் கலைச்சு போட்ருவாங்க. ஆச்சி! ஆச்சி!

அவரது மனைவி சலித்துக் கொண்டே வருகிறார்.
மனைவி: நல்ல அளகான வள்ளியம்மைன்ற பேரை விட்டுட்டு ஆட்சி என் கையில சொல்லிக்கறத்துகாகவே என்னை ஆச்சி ஆச்சின்னு கூப்பிடுறாஹ.

மனைவி: என்னங்க?
ஆர்எம்வி: இங்க வச்சிருந்த பேப்பர் எல்லாம் எங்க போட்டே?
மனைவி: என்னா பேப்பர்?
ஆர்எம்வி: அதன் 1998-இலிருந்து நியூஸ்பேப்பர் எல்லாம் இங்க அடுக்கி வச்சிருந்தனே?
மனைவி: அட என்னாங்க? பத்து வருஷம் பழைய பேப்பரை தேடிக்கிட்டு? தூசி பறக்குதுன்னு அதையெல்லாம் தூக்கி எடைக்கு போட்டுட்டேன்.
ஆர்எம்வி: அடிப்பாவி! காரியத்தை கெடுத்திட்டியே! இப்ப என்ன செய்யறது?
மனைவி: இப்போ என்னா ஆயிடுச்சு? என்னவோ உங்க அம்மா எனக்கு கொடுத்த நகையெல்லாம் தூக்கி போட்டுட்ட மாதிரி பேசரீயளே! அதுவும் உங்க அம்மா எனக்கு நகை கிகை கொடுத்துற கிடுத்துறப் போறாங்க! உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டேன்?
ஆர்எம்வி: சரி சரி ஆரம்பிக்காத! எல்லா பேப்பரையும் போட்டுட்டியா? 2006-ஆம் வருஷ பேப்பர் கூட?
மனைவி: அட இது என்னடா வம்பா போச்சு? அதை வச்சு என்ன பண்ணப் போறீங்க?
ஆர்எம்வி: அது இல்ல, கலைஞர் வழக்கம் போல இதயத்தில மட்டும்தான் இடம் கொடுக்கப் போறாரு. மீண்டும் இதயத்தில் மட்டுமே இடம் என்பது ஏமாற்றமே, அடுத்த முறையாவது சீட் கொடுங்கள் என்று பழைய எலெக்ஷன் சமயத்தில் விட்ட அதே அறிக்கையையே திருப்பி கொடுத்திடலாம்னு பாத்தேன். ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா எழுதி கொடுக்கறதுக்கு தனியா பணம் தரணுமில்லெ?
மனைவி: செட்டியாரு பணத்தில கெட்டிதான்.
ஆர்எம்வி: இல்லாமலா எம்ஜிஆர் கிட்ட இத்தன வருஷம் குப்பை கொட்டினேன்?
மனைவி: இதிலெல்லாம் சிக்கனம் பாக்காதீங்க. இதயத்தில் இடம் என்பதை மாற்றுவார் உதயம் அப்படின்னு ஏதாவது புதுசா எழுத சொல்லுங்க. அப்பத்தான் ஸ்டாலின் பிள்ள உதயநிதி தி.மு.க. தலைவராகும்போதாவது உங்களுக்கு சீட் கொடுப்பாங்க!

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


actor_karthik 2009 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று நடிகர் கார்த்திக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்:

கார்த்திக் ஆளுயரக் கண்ணாடியை பார்த்து பேசிக் கொள்கிறார்.

கார்த்திக்: என்னப்பா, எல்லாரும்ம்ம்…. வந்தாச்சா!
கண்ணாடி கார்த்திக்: ஆமா, அத்தனை பேரும் வந்துட்டோமில்ல!
கார்த்திக்: இப்போ பார்லிமென்ட் தேர்தல் வருது. கலைஞரு ஒரு பக்கம் நிக்குறாரு, அம்மா ஒரு பக்கம். நம்ம எந்த பக்கம்னு பாக்கணும்.
க.கா: ஆமா, நாமதான் பாக்கணும். நாமளும் பாக்கலேன்னா யாரு பாப்பாங்க?
கார்த்திக்: நாம முக்குலத்தோர். நமக்கு சரனாலயம்னு ஒரு அமைப்பு வேறு இருக்கு. இப்ப ஃபார்வர்ட் ப்ளாக் தலைவர் வேற ஆகி இருக்கோம்.
க.கா: தலைவா, உன்னை ஃபார்வர்ட் ப்ளாக்லேந்து தூக்கி ரொம்ப நாளாச்சு!
கார்த்திக்: தூக்கிட்டாங்களா? சொல்லவே இல்ல? சரி அதை விடு. கலைஞர், காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. எல்லாரும் ஒரு அணியிலே இருக்காங்க.
க.கா: வாயை திறந்து உடனே மூடிக் கொள்கிறார். அவர் மனதுக்குள் எண்ணம் ஓடுகிறது – கட்சியிலேர்ந்து தூக்கிட்டாங்கன்னே தெரியலே, இவர் கிட்ட போய் ம.தி.மு.க. அம்மா பக்கம் போய்ட்டாங்க, பா.ம.க. போறாங்கன்னு என்னிக்கு புரிய வச்சு என்னிக்கு இந்த கூட்டம் முடியறது? கண்டுக்காம விட்ருவோம்.
கார்த்திக்: நமக்கு அம்மாதான் வசதி. அவங்களுக்குத்தான் தேவர் ஆதரவும் அதிகம். அப்புறம் கலைஞர் இதயத்தில மட்டும்தான் இடம் கொடுப்பார்.
க.கா: அம்மாவுக்கு நாம வசதிப்படணுமே?
கார்த்திக்: இந்த நடராஜனைப் பிடிச்சு அவர் மூலமா அவங்ககிட்ட மூணு சீட் கேப்போம். அவங்க ரெண்டு தந்தா கூட போதும். அதிலே ஒன்னுலே நான் ஜெயிச்சு எம்.பி. ஆயிடறேன். அப்புறம் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு – 2009 வரைக்கும் – நான்தான் இளைஞர் நலத்துறை அமைச்சர்!
க.கா: கார்த்திக் இப்போதுதான் 2004 தேர்தலுக்கு திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்து மயக்கம்!


இது ஒரு மீள்பதிவு – தேர்தல் நெருங்கும் காலத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு ஒரு 22 வயது என்று வைத்துக்கொள்வோம். (அட கனவாவது காண்போமே!) எனக்கு அரசியலில் ஈடுபாடு இருக்கிறது என்றும் நான் ஒரூ கட்சியில் சேர விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கட்சியிலும் சேருவதற்கான காரணங்கள்:

திமுக: எனக்கு கலைஞரின் தமிழ் பிடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என் அப்பா தி.மு.க.வில் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் கலைஞரின் குடும்பம் உயர நான் எதற்கு உழைக்க வேண்டும்?
அதிமுக: எனக்கு சசிகலாவின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும்.
பாமக: நான் வன்னியராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்நியர்தான்.
விடுதலை சிறுத்தைகள்: நான் தலித்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சலித்துக் கொள்வார்கள்.
சரத்குமார் கட்சி: நான் நாடாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரத் என்னை நாடார், அதாவது நாட மாட்டார். (ராடான் டிவியின் பெயர் மர்மம் இப்போதுதான் புரிகிறது)
தேதிமுக: தமிழில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் கேப்டனாக இருக்கவேண்டும்.
பாஜக: நான் சோவாக இருக்கவேண்டும்.
காங்கிரஸ்: எனக்கு பைத்தியம் பிடித்திருக்கவேண்டும்.
மதிமுக: எனக்கு பைத்தியம் முற்றி இருக்க வேண்டும்.
சுப்ரமணிய சாமி கட்சி: எனக்கு பைத்தியம் குணமாக வாய்ப்பே இல்லாமல் இருக்க வேண்டும்.
கார்த்திக் கட்சி: அஹம் பிரம்மாஸ்மி!
ரஜினிகாந்த் ஆதரவாளர்: வரும்ம்ம், ஆனால் வராது என்று ஒரு உறுதியோடு இருக்க வேண்டும்.

இதில் எனக்கு எந்த தகுதியுமே இல்லாதது வருத்தம்தான். ஏதாவது ஒன்றாவது இருந்திருந்தால் 2011இல் நான்தான் முதலமைச்சர்!