Search Results for 'சில்பி'ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளிருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட பழைய தொடர்கதைகள் பல உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் புழங்கும். எனக்கு அந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் மிச்ச பக்கங்களை படிப்பது பிடிக்கும். அப்படிதான் நான் சில கோவில் ஓவியங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் சில்பி என்ற பெயர் தெரியாது. (பெயர் தெரிந்த முதல் ஓவியர் ஜெயராஜ்தான்.) யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான். சமீபத்தில் வரலாறு.காம் என்ற தளத்தில் சில்பியை பற்றிய சில கட்டுரைகளைப் பார்த்தபோது பழைய ஞாபகங்கள் வந்தன. அங்கே சில்பியின் வாழ்க்கை, சில்பியின் கோட்டோவியங்கள், சில்பியைப் பற்றி ஒரு அறிமுகம் என்று மூன்று கட்டுரைகளைப் பார்த்தேன்.

(விகடனுக்கும் பசுபதிக்கும் வரலாறு.காம் தளத்துக்கும் நன்றி!) உதாரணத்துக்காக அங்கிருந்து ஒரு ஓவியத்தை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன். அதில் எத்தனை நுணுக்கம்? ஒரு புகைப்படத்தில் கூட இப்படி ஒரு எஃபெக்டை கொண்டு வருவது கஷ்டம். (படத்தை கிளிக்கினால் பெரிய சைஸ் ஓவியம் தெரியும்.)

ராஜன் உபயத்தில் இந்த சிற்பத்தின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது. இது ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ள ஒரு சிற்பமாம்.

சில்பி விகடனில் பணி புரிந்திருக்கிறார். ஊர் ஊராகப் போய் அங்குள்ள கோவில்களை – கோவில் என்றால் மூலவர் உற்சவர் கோபுரம் மட்டுமில்லை – எந்த மூலை முடுக்கில் அவரை ஒரு சிற்பம் கவர்ந்தாலும் அதை வரைவார். தென்னாட்டு செல்வங்கள் என்று ஒரு தொடர் வந்ததாம். அது பூரா இவர் ஓவியங்கள்தானாம். இங்கே இருக்கும் ஓவியம் கூட அந்த தொடரில் வந்ததுதானாம்.

எனக்கு ஓவியத்தின் கலை நுணுக்கம் எல்லாம் தெரியாது. ஓவியம் பிடித்திருக்கிறது இல்லை என்பது பார்த்த நொடியில் படுவதோடு சரி. அதன் பின்னால் இருப்பது க்யூபிசமா, சர்ரியலிசமா, பாயிண்டிலிசமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் இது பார்ப்பதை அப்படியே பிரதி எடுக்க முயற்சி என்பது தெரிகிறது. என் கண்ணில் சிறந்த ஓவியம், ஆனால் ஓவியக் கலைஞர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. டாக்டர் ருத்ரன் மாதிரி யாராவது என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

சிற்பியின் ஓவியங்களின் பிரின்ட் எங்காவது இன்னும் கிடைக்கிறதா? இணையத்தில் பார்க்க முடியுமா? “தென்னாட்டு செல்வங்கள்” தொடர் புத்தகமாக கிடைக்கிறதா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

பிற்சேர்க்கை: ஸ்ரீனிவாஸ் இரண்டு ஓவியங்களை அனுப்பி இருக்கிறார். இடது பக்கம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். அதற்கு அடுத்தபடி இருப்பது திருவாலங்காடு சிவன் கோவில். அவருக்கு நன்றி!

சில்பியின் பாணி, தரம் போன்றவை என் போன்ற பாமரனுக்கு மட்டும்தான் பிடிக்குமா இல்லை ஓவியர்களும் கலை விமர்சகர்களும் அதை உயர்ந்த ஓவியம் என்று கருதுகிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. டாக்டர் ருத்ரன் நல்ல ஓவியர், எனக்குத் தெரிந்த ஒரே ஓவியர். அவரைக் கேட்டேன் – அவர் வார்த்தைகளில்:

சில்பி ஒரு மேதை மட்டுமல்ல, மகான். அப்படி வரைவது வெறும் திறமையாக எனக்குப் படுவதில்லை, அது அருள், வரம்.

சில்பியின் ஓவியங்களை லக்ஷ்மி எனும் விமர்சகரும் பார்வதி கலைக்கூடத்தின் உரிமையாளரும் ஒரு நூலாக்க சில வருடங்களுக்கு முன் முயன்றார்கள். சில்பியின் குடும்பத்தினர் ஒத்துவரவில்லை என்று சொல்லப்பட்டது.
விகடனுக்கு அப்புறம் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் சில்பி வரைந்து வந்தார். அவற்றுள் காந்திமதியும் அபிராமியும் அற்புதம்.

ரகுவீரதயாள் திருப்பதி ஐயங்கார் என்பவர் “தென்னாட்டு செல்வங்கள்” தொடரின் சில பகுதிகளை தொகுத்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் அவற்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி! இரண்டு பகுதிகள் நெட்டில் கிடைக்கின்றன. முதல் பகுதி தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றியது. இரண்டாம் பகுதி திரிபுவனம் கோவிலைப் பற்றியது.

தொடர்புடைய பக்கங்கள்:
சில்பி – ஒரு அறிமுகம்
சில்பியின் கோட்டோவியங்கள்
சில்பியின் வாழ்க்கை வரலாறு
வரலாறு.காம் தளம்

தஞ்சாவூர் பெரிய கோவில் – சில்பியின் ஓவியங்கள்
திரிபுவனம் கோவில் சித்திரங்கள்


நான் படிக்கும் காலத்தில் கோனார் நோட்ஸ் ரொம்ப பிரபலம். தமிழ் புத்தகம் வாங்கும்போதே கோனார் நோட்சும் வாங்கிவிடுவோம் (நான் ஓசி வாங்கியே காலத்தை தள்ளினேன்) அவ்வப்போது நண்பர்கள் வட்டத்தில் கேட்டுக் கொள்வோம் – யார்ரா இந்த கோனார், இப்படி நோட்ஸ் போட்டே பெரிய பணக்காரர் ஆயிருப்பார் போலிருக்கே என்று. பல வருஷக் கேள்விக்கு விகடனில் விடை கிடைத்தது.

அவர் பேர் ஐயம் பெருமாள் கோனாராம். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவராம். எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் கோனார் நோட்ஸ் எண்பதுகளின் முற்பாதி வரைக்குமாவது பயன்படுத்தப்பட்டது என்று தெரியும். விகடனின் வார்த்தைகளில்:

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! மாணவர்களுக்குக் கல்வியறிவோடு ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை நல்லதொரு குடிமகனாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள்தான் வருங்கால சமுதாயத்தின் ஆணி வேர். அப்படித் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடு கல்விப் பணி ஆற்றிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை ‘ஆசிரிய ரத்தினங்கள்’ என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது விகடன். அவர்களைக் கோட்டுச் சித்திரமாக வரைந்து நம் முன்னே கொண்டு நிறுத்தியவர் இறையருள் ஓவியர் சில்பி. இங்கே படத்தில் இருக்கும் ஆசிரிய ரத்தினம் திரு. ஐயன் பெருமாள் கோனார். திருச்சி ஜோஸப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கொண்டு வந்ததுதான் பிரபல ‘கோனார் நோட்ஸ்’.

எழுத்தாளர் சுஜாதாவுக்கு இவர்தான் காலேஜில் தமிழ் ப்ரொஃபசர். தனக்கு தமிழார்வம் அதிகரிக்க ஐயம்பெருமாள் கோனார் முக்கிய காரணம் என்று சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

கோனாரின் ஓவியம் இங்கே.

பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார்

பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார்

கோனார் நோட்சை பதிப்பித்தவர்கள் பழனியப்பா பிரதர்ஸ் என்று கிங் விஸ்வா தகவல் தருகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
சுஜாதா வாழ்க்கை குறிப்பு – முரளிகிருஷ்ணனின் தளத்திலிருந்து