எனக்கு ஏன் திடீரென்று நாட்டு நடப்பு பற்றி எல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றி இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. சரி என் ஆசையை நானே முறித்துக் கொள்வானேன்!

நெல்லை கண்ணன் மோடியைப் பற்றியோ அமித் ஷாவைப் பற்றி சோலிய முடிங்க என்றெல்லாம் பேசியது எனக்கு கொஞ்சமும் வியப்பாக இல்லை. அங்கே நாலு பேர் கைதட்டுவார்கள் என்று நினைத்திருப்பார். அதற்கப்புறம் மருத்துவமனையில் போய் உட்கார்ந்து கொண்டது, தலைமறைவானது எதுவும் ஆச்சரியப்படுத்தவில்லை.

ஆனால் கைது செய்ய வேண்டிய அளவுக்கெல்லாம் நெ. கண்ணன் வொர்த் இல்லை. ஏதோ கைதட்டல் கிடைக்கும் என்று நினைத்து சவடால் பேச்சு, அவ்வளவுதான். இவரை எல்லாம் பொருட்படுத்தி, பேப்பரில் பேரெல்லாம் வரச்செய்து, நாலு போலீஸ்காரர்கள் நேரத்தை வீணடிக்கத்தான் வேண்டுமா என்று தோன்றுகிறது. (இன்னொரு பக்கம் இப்படி எல்லாம் செய்தால்தான் அடுத்த வாய்ச்சொல் வீரர் அடக்கி வாசிப்பார் என்றும் தோன்றுகிறது.) ஆனால் பாருங்கள், இன்னும் இரண்டு வருஷம் கழித்து எவனாவது மாட்டினால் என்னைப் பார்த்து மோடியே பயந்துவிட்டார் என்று உதார் விட்டாலும் விடுவார்!

கண்ணனை நான் ஒரு முறை நண்பன் வீட்டில் கூட்டத்தோடு கோவிந்தாவாக சந்தித்திருக்கிறேன். அடுத்த முறை தவிர்த்துவிட வேண்டும் என்று சில நிமிஷத்திலேயே தோன்ற வைத்துவிட்டார். ஜாதியே மனிதனின் குணத்தை தீர்மானிக்கிறது என்று சந்தித்த இரண்டாவது நிமிஷம் சொன்னார். ஐயருங்க அளவுக்கு படிப்பு வராது, பிள்ளைமார்ங்க உசத்தி என்றெல்லாம் பேசிக் கொண்டே போனார். My jaw literally dropped. அதை கவனித்துவிட்டாரோ என்னவோ நீங்க என்ன நினைக்கிறீங்க என்று குறிப்பாக என்னை வேலை மெனக்கெட்டு கேட்க வேறு கேட்டார். மரியாதைக்காக நான் ஆமாம் போடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ. எனக்கு சபை இங்கிதம் எல்லாம் குறைவு. நான் மறுத்துப் பேச என் மேல் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார். நான் கிளம்பும் வரைக்கும் அந்தக் கடுப்பைக் காட்டினார்.

நண்பன் வீட்டிலிருந்து உடனடியாகக் கிளம்ப முடியாமல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். அந்த முக்கால் மணி நேரத்தில் 40 நிமிஷம் இவரே தன் வீரப் பிரதாபங்களைப் பற்றி மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார். ஐயருங்களுக்குத்தான் படிப்பு வருமாம், ஆனால் இவர் பரம்பரையே தமிழைக் கரைச்சுக் குடிச்சவங்களாம், எப்படி இவருக்கு மட்டும் படிப்பு வந்ததோ தெரியவில்லை.

இவர் தலைமையில் நண்பர்கள் ஏதோ நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது, நானும் தலையைக் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆளை விடுங்கடா சாமி என்று ஓடிவிட்டேன். நிகழ்ச்சியிலும் ஏதோ குட்டையைக் குழப்பினார் போலிருக்கிறது, அழைத்த நண்பர்களும் அப்புறம் அய்யோ அம்மா அம்மம்மா என்று அலுத்துக் கொண்டார்கள்.

வெற்று சவடால்தான் என்றாலும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய பேச்சு. இதை எல்லாரும் உட்கார்ந்து கேட்டார்கள் என்பது அதை விட கண்டிக்க வேண்டிய விஷயம். ஒரு வேளை என்னையும் பிற நண்பர்களையும் போல captive audience-ஓ? ஒருவர் பேசும்போது வாயை மூடுயா என்று ‘நாகரிகம்’ இல்லாமல் எப்படி கத்துவது என்று தயங்கினார்களோ?

தவறு என்று நினைப்பவர்கள் – குறிப்பாக முஸ்லிம்கள், ஹிந்துத்துவம்/பாஜக எதிர்ப்பாளர்கள் – இப்போதாவது இது தவறான பேச்சு, கண்டிக்கப்பட வேண்டிய பேச்சு என்பதை கட்டாயம் பதிவு செய்யுங்கள்! பாஜக ஆதரவாளர்கள் சொல்வதை விட எதிர்ப்பாளர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்வது முக்கியம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு