என் பதிவுகளில் – குறிப்பாக சாமியார்கள், ஆன்மிகம் பற்றி எழுதும் பதிவுகளில் – சாமியார் புரிந்த அற்புதம் என்றால் ஒரு இளக்காரம் தெரியத்தான் செய்கிறது. என்னைப் பொறுத்த வரையில் மனித வாழ்க்கை என்பதே பெரிய அற்புதம். இதற்கு மேலும் அற்புதங்களைப் புரிந்து – செங்கடலைப் பிரித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க மழை பொழிய வைத்து, தீக்குளிக்க வைத்து அதன் பின் பூணூல் போட்டு சிதம்பரம் கோவிலில் நுழைய வைத்து, ஒரே நேரத்தில் பெங்களூரிலும் திருவண்ணாமலையிலும் காட்சி அளித்து கடவுள் தன் இருப்பை நமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் என்ற கருத்தாக்கத்துக்கு என்ன தேவை என்றே என் தர்க்க அறிவுக்கு புலப்படவில்லை. (இருந்தாலும் நான் கோவிலுக்குப் போவதையும் சாமி கும்பிடுவதையும் விடுவதற்குமில்லை. உணர்வு ரீதியாக கடவுள் என்ற ஊன்றுகோலின் அவசியம் எனக்கு இருக்கிறது, அப்படி இருப்பதில், இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்வதில் எல்லாம் எனக்கு எந்த கூச்சநாச்சமும் இல்லவும் இல்லை.) உலகில் நடக்கும் எல்லாவற்றையும் அறிவு, தர்க்கம், இயற்கையின் விதிகள் இவற்றின் மூலம் அறிவதையே விரும்புகிறேன். நம் தொன்மங்கள் யாவும் – ராமாயணம், மகாபாரதம், திருப்பாணாழ்வார், சோகாமேளர், பத்ராசல ராமதாசர் இன்னும் பலப்பல – இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நடந்த உண்மை நிகழ்ச்சிகளின் மேல் எழுப்பப்பட்ட புனைவுகளே என்று நான் கருதுகிறேன். பத்ராசல ராமதாசரின் மாமன்மார்கள் கோல்கொண்டா சுல்தானின் அரசவையில் முக்கிய அமைச்சர்கள், அவர்களுக்காகத்தான் – ஒரு வேளை அவர்கள் பாக்கி வரியைக் கட்டி இருக்கலாம் – ராமதாசர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும், ராமனும் லக்ஷ்மணனும் சுல்தானுக்கு பாக்கி வரியைக் கட்டி இருக்கமாட்டார்கள்.

ஆனால் நம் அறிவுக்கும் தர்க்க ஞானத்துக்கும் மீறிய சங்கதிகள் உலகில் உண்டு. ஒரு மண் புழுவால் ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொள்ள முடியுமா? நமக்கு அதிசயமாகத் தெரியும் நிகழ்ச்சிகளும் (நம்மால் புரிந்து கொள்ள முடியாத) விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். இதை நான் உணர்ந்தாலும், நம்மிடம் இருக்கும் கருவியைத்தானே பயன்படுத்த முடியும்? ஒரு அதிசய நிகழ்ச்சி என்றால் அங்கே முதலில் Occam’s Razor கோட்பாட்டை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். நித்யானந்தா திருவண்ணாமலையிலும் பெங்களூரிலும் ஒரே நேரத்தில் இருந்தார் என்று சாரு நிவேதிதா சொன்னால் சாரு கப்சா விடுகிறார் என்ற விளக்கம் நித்யானந்தா இயற்கை விதிகளை மீறி இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் இருந்தார் என்பதை விட ஏற்கக் கூடியதாக இருக்கிறது. ஏசு உயிர்த்தெழுந்தார் என்றால் முதலில் அவர் இறந்தாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சும்மா கல்லறை பக்கம் தூங்கிவிட்டு எழுந்து வருபவரைப் பார்த்து உயிர்த்தெழுந்தார் என்று கதை கட்டிவிட்டார்கள் என்ற சாத்தியம் முதலில் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது இயற்கை விதிகளுக்கு முரணாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

அப்புறம் பாருங்கள் இந்த சாமியார் அற்புதம் புரிந்தார் என்று சொல்பவர்கள் அனேகரும் அது தன் நண்பனுக்கு நடந்தது, சித்தப்பாவின் மச்சினிக்கு நடந்தது என்றுதான் சொல்கிறார்கள். தனக்கு நடந்தது என்று சொல்பவர்கள் குறைவு. அப்படி தனக்கு நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கும் தற்செயல் உள்ளிட்ட சாதாரண விளக்கங்கள் இருக்கலாம். அப்படி தனக்கு நடந்ததாக சொல்லி, வேறு எந்த சுலபமான விளக்கமும் தர முடியாவிட்டால் மட்டுமே அற்புதம், அதிசயம் என்று ஒரு நிகழ்ச்சியை விவரிக்கலாம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால் என் வாழ்விலும் என்னால் விளக்க முடியாத ஒரு அதிசய நிகழ்ச்சி உண்டு. இது என் சொந்த அனுபவம், என் அத்தையின் மாப்பிள்ளையின் பெரியப்பாவுக்கு ஏற்பட்ட அனுபவம் அல்ல.

இது நடந்து ஒரு இருபது வருஷம் இருக்கலாம். எம்.டெக். முடித்துவிட்டு வேலையில் சேரும் முன் ஆறேழு வாரம் இடைவெளி. என் நண்பன் அரவிந்த கிருஷ்ணனைப் பார்க்க (சேலத்தின் அருகே இருக்கும்) ஆத்தூர் போயிருந்தேன். அவன் அப்போது தியானம், கியானம் என்றெல்லாம் மும்முரமாக இருந்தான். நானோ அப்போதெல்லாம் (இப்போதும் கூட) பிரார்த்தனை என்பது தனிப்பட்ட விஷயம், கூட்டு பஜனை, பிரார்த்தனை இத்யாதியின் ஒரே பயன் ஓசியில் கிடைக்கும் சுண்டல்தான் என்று நினைத்தவன்/நினைப்பவன். இவன் என்னை வலுக்கட்டாயமாக ஒரு தியானக் கூட்டத்துக்கு இழுத்துக் கொண்டு போனான். நான் எத்தனையோ சொல்லிப் பார்த்தேன் – நான் தியானம் கியானம் எல்லாம் பண்ணும் டைப் இல்லை, அங்கே வந்து அடக்க முடியாமல் சிரித்துவிட்டால் உனக்குத்தான் பிரச்சினை என்று பயமுறுத்திக் கூடப் பார்த்தேன். அப்படிப்பட்ட ஆட்களைத்தான் எங்கள் குரு விரும்புகிறார் என்று அவன் என்னை விடாக்கண்டனாக இழுத்துக் கொண்டு போய்விட்டான்.

அங்கே போனால் ஒரு பதினைந்து இருபது பேர் ஒன்றாக உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறார்கள். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்ததோ என்னவோ நினைவில்லை. நானும் தலையெழுத்தே என்று கோஷ்டி கானம் பாட உட்கார்ந்தேன். இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் புள்ளியில் focus செய், அதை மட்டும் தனியாக உணரப் பார், நீ சரியாக concentrate செய்தால் உனக்கு ஒரு அனுபவம் ஏற்படும் என்று சொன்னார்கள். என்ன அனுபவம் என்று விவரமாக சொன்னார்களா என்று நினைவில்லை, அப்படி சொன்னது அரவிந்த கிருஷ்ணன்தானா என்றும் நினைவில்லை. ஒரு பத்து நிமிஷம் அப்படி செய்து பார் என்று சொன்னார்கள். நானும் முயற்சி செய்தேன். இரண்டு மூன்று நிமிஷங்களில் என் புருவங்களின் மத்தியில் குறுகுறு என்ற ஒரு உணர்ச்சி – யாரோ நகத்தை வைத்து சுரண்டுவது போல, கொஞ்சம் வெப்பமாக உணர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் அது தொடர்ந்து கொண்டே இருந்தது. தியானம் முடிந்த பிறகும் அந்த உணர்ச்சி தொடர்ந்தது.

அரவிந்த கிருஷ்ணன் மிகவும் excite ஆகிவிட்டான். இப்படி முதல் இரண்டு மூன்று நிமிஷங்களிலேயே ஏற்படுவது மிக அபூர்வமாம். குருவிடம் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன், உனக்கு தீட்சை கொடுப்பார் என்று சொன்னான். அவன் குரு பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் (ஏத்தாப்பூர்?) இருந்தார். குடும்பஸ்தர். அரசு கால்நடை மருத்துவராக வேலை பார்த்தார் என்று நினைவு. அவர் பேரையும் மறந்துவிட்டேன். அடுத்த நாளோ என்னவோ பஸ்ஸில் போனோம். மிகவும் அழகான கிராமம். அவர் வீடு கொஞ்சம் பெரியது. பணக்காரரோ இல்லையோ, ஓரளவு வசதியானவர்தான். வீட்டுக்கு எதிரில் கூரை வேய்ந்து தியானம் செய்பவர்களுக்காக பெரிய மண்டபம் மாதிரி இருந்தது. தீட்சை கொடுக்க வேண்டுமென்றால் சாதாரணமாக ஒரு மாதம்(?) தியானம் செய்து பழக வேண்டும், அப்போதுதான் தர முடியும் என்று சொன்னார். அரவிந்த கிருஷ்ணன் இவன் வெளியூர்க்காரன், வேலையில் சேர ஹைதராபாத் வேறு போக வேண்டும், ஒரு மாதம் கழித்து வருவது கஷ்டம், இரண்டு நிமிஷத்திலேயே அந்த உணர்வு வந்துவிட்டது என்றெல்லாம் சொன்னான். எனக்கோ தீட்சை கொடுத்தால் சந்தோஷம், கொடுக்காவிட்டால் அதை விட சந்தோஷம் என்ற மனநிலைதான். அவர் அரவிந்த கிருஷ்ணன் முகத்துக்காக அரை மனதோடு எனக்கு தீட்சை கொடுத்தார். தீட்சை கொடுப்பது என்றால் அவர் ஒன்றும் மந்திரம் மாயம் செய்யவில்லை. உனக்கு தீட்சை கொடுக்கிறேன், நீ தினமும் காலை மாலை இரண்டு முறை பத்து நிமிஷம் உன் புருவத்தின் மத்தியில் இருக்கும் அந்த புள்ளியை உணரப் பார் என்று சொன்னார், அவ்வளவுதான். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பார் என்று சொன்னார்.

எனக்கு அந்த உணர்வு போகவே இல்லை. எப்போதும் கொஞ்சம் சூடாக இருக்கும், யாரோ சுரண்டுவது போலவே இருக்கும். நின்றால், நடந்தால், சாப்பிட்டால், படித்தால், காலைக்கடன் கழித்தால், எப்போதும் இருக்கும். முழிப்பு இருக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்த வெப்பத்தையும் குறுகுறு என்பதையும் உணர்ந்தேன். நான் அன்றைக்கு அங்கிருந்து கிளம்பி வேறு நண்பர்களைப் பார்க்கப் போனேன். இரண்டு மூன்று நாளாயிற்று, இந்த உணர்வு நிற்கவே இல்லை. எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன். அப்படியும் அந்த உணர்வு போகவில்லை. எப்படியாவது இதை நிறுத்த வேண்டும் என்று முயற்சித்தேன், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வாரக் கெடுவுக்கு முன்னாலேயே நண்பனுடன் அவர் முன்னால் போய் நின்றேன். எனக்கு இந்த மாதிரி இருக்கிறதே என்று கேட்டேன். அவர் நீ இன்னும் தயாராகவில்லை என்று சொல்லி, என் தீட்சையை வாபஸ் வாங்கினார். அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த உணர்ச்சி இருந்தது. ஆனால் மெதுமெதுவாக குறைந்துகொண்டே போனது.

இது psychosomatic நிகழ்ச்சி என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அவ்வளவுதான் என்று எனக்கே இன்னும் கூட முழு நம்பிக்கை வரவில்லை. இன்றிருக்கும் தெளிவு அன்றிருந்தால் அந்த உணர்வை நிறுத்த எல்லாம் முயற்சித்திருக்க மாட்டேன். மீண்டும் அப்படி என்னால் உணர முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. எனக்கு அது இன்று ஒரு பெரிய regret ஆகத்தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நமக்குத் தெரிந்த அறிவியல், தர்க்கம் ஆகியவற்றை மீறிய விஷயங்கள் உண்டு என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது. ஆனால் அறிவியலையும், தர்க்கத்தையும் விட சிறந்த கருவிகள் என்னிடம்/நம்மிடம் இல்லை, அதனால் அவற்றை வைத்துத்தான் எல்லாவற்றையும் எடை போட வேண்டி இருக்கிறது. யாராவது மந்திரம், மாயம் என்றால் நம்பாதீர்கள் என்றுதான் நான் சொல்வேன். எனக்கு நடந்தது என்றால் பேசுங்கள் – என் நண்பனின் நண்பனுக்கு நடந்தது, என் சித்தப்பா கேட்ட கதை என்று வருவதெல்லாம் கட்டுக்கதை இல்லை என்று நினைக்க நமக்கு எந்த முகாந்தரமும் இல்லை.

அரவிந்த கிருஷ்ணனுடன் டச் விட்டுப்போய்விட்டது. அந்த குருவின் பேர் தெரியவில்லை. அந்த கிராமத்தின் பேர் ஏத்தாப்பூர் என்று நினைக்கிறேன், ஆனால் சரியாகத் தெரியவில்லை. உங்கள் யாருக்காவது தெரியுமா?

Advertisements