(ஆசிரியர்: திரு.ராமசாமி)
மாதா, அன்னை, அம்மா, தாய் என பல சொற்கள் இருந்தாலும் அவையனைத்தும் ஒருவரைத்தானே குறிக்கின்றன. நம்மை ஈன்று பாலூட்டி சீராட்டி வளர்த்த,வளர்க்கின்ற பெருமாட்டி அம்மாவைத்தவிர வேறு யார் இருக்கமுடியும்? அதனால்தானே நாம் “அன்னையும்,பிதாவும் —-மாதா பிதா  குரு,தெய்வம்’ என்றெல்லாம் அன்னையை முன்னிறுத்திப் பெருமை  கொள்கிறோம் பாராட்டுகிறோம்.நாட்டைத் தாய்நாடு என்று அழைக்கின்றோம். அப்போது கூட ‘ஜனனி,ஜன்மபூமி——-‘”பெற்ற தாயும்,பிறந்த நன்னாடும் “என்று தாய்க்கு முதலிடம் கொடுக்கிறோம்.சிரமம் பாராது ஈரைந்து திங்கள் சுமந்து தான் உண்ணும்  உணவையே தன்  .   குழந்தைக்கு உணவாக்கி, பிறந்தபின் தன்  உதிரத்தை முலைப்பாலாகக் கொடுத்து  ஆளாக்கிய தாய்க்கு எந்த இடத்திலும் முதன்மை ஸ்தானம் கொடுப்பதில் தவறேதுமில்லையே! இந்த உறவு (பந்தம்)தொப்புள் கொடி உறவாகக் கூட இருக்கலாம்.ஆனால் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்பதை முழுமையாக உணர்ந்தவர்களல்லவா  நாம்?ஆகவே தாய்க்கு எங்கும் முதலிடம் கொடுப்பதில் வியப்பெதுமில்லையே!
நிலையற்ற உலகில் நிலையாத வாழ்வு வாழ்கின்ற சாமான்யர்களே நாம்.அன்னையின் அருமையைப்புரிந்தவர்கள், தெரிந்தவர்கள்  அன்னாரது பெருமையையைத்தேரிந்த நாம் உலக நாயகியான ஜகன்மாதாவான அம்பிகையின் அருளை உணரமாட்டோமா?அவளை  அரியணையில் அமர்த்தி ஆராதிக்கமட்டோமா?ஆகவே தான் ‘மாதா’வின் முதலில் ‘ஸ்ரீ’ என்ற சொல்லைச் சேர்த்து ,’ஸ்ரீ மாதா’ என்று விளித்து மகிழ்ச்சியடைகிறோம். ‘ஸ்ரீ’ (திரு) என்றாலே இகபர செல்வங்களை அருளுபவள் என்றுதானே பொருள்.அதனால் தான் லலிதா சஹஸ்ரநாமம் “ஸ்ரீ மாதா . மகாராஞீ “என்று தொடங்குகிறது.
அன்னையின் அருள் இயல்பானது,இயற்கையானது. உள்ளன்போடு ஒரு முறை தெரிந்தோ,தெரியாமலோ அழைத்தால் கூட அருள் பாலிப்பவள் அன்னையே!அவள் அவ்யாஜ கருணா ரூபிணி. குழந்தைகளாகிய நாம் எப்படி உபாசித்தாலும் அதை ஏற்று அனுக்ரஹம் செய்யக்கூடியவள்.அவள் எதிர்பார்ப்பது “உள்ளன்பும், பக்தியும் தான்’வேறு க்ரியா லாபங்களையோ   அல்லது அவை பற்றிய ஞானத்தையோ அல்ல.இதையொட்டியே ஆசார்யாளும்

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ச்துதிமஹோ
ந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ச்துதுகதா:!
ந ஜானே முத்ராஸ்து ததபி ச ந ஜானே விலபனம்
பரம் ஜானே மாத: த்வதனுசரணம்   க்லேசஹரணம்!!
என்று சொல்லியிருக்கிறார்கள்.
பொருள்:- எனக்கு மந்திரம்,தந்திரம்,வழிபாட்டு வகை,தியானம்,முத்திரைகள் போன்று எதுவுமே தெரியாது.ஆனால்  அன்னையே!உன்னைச் சரணடைந்து பக்தியோடு வழிபட்டால் துன்பங்கள் அகலும் என்பதை உணர்ந்துள்ளேன்.
மேலும் அன்னை க்ஷிப்ர  பிரசாதினி அருள் புரிவதில்,அதுவும் விரைந்து புரிவதில் அவளுக்கு  நிகர் அவளே!அதனால்தான் அம்மையை ‘சுகாராத்யா,சுலபாகதி’ என்றெல்லாம் அழைக்கின்றோம். நியம நிர்பந்தங்களில்லாமலேயே உபாசிக்கலாம்.உபாசனை மிக மிக எளிதானது.அம்மையை ஒருமித்த மனதோடு சரணடைந்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.வேண்டும் அளவுக்கு மேலாகவே பெறலாம்.சகலவிதமான ஆபத்துகளிலிருந்து விடுபடலாம். அன்னை கருணையின் உருவம்.

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாசமதிகம் , சரண்யே லோகானாம்   தவ ஹி சரணாவேவ  நிபுணௌ                   (பயத்திலிருந்து காப்பவள்:கேட்பதற்கு  மேலாகவே நன்மை (பலன்)செய்யக்கூடியவள் அன்னையின் சரணங்களே நமக்கு எஞ்ஞான்றும்  துணை.)
நம் பாவங்களனைத்திர்க்கும்  பிராயச்சித்தம் அன்னையின் பாதங்களைப் பணிவதே.
க்ரதச்யாகில  பாபஸ் ய   ஞானதோ அஞானதோ வா ,பிராயச்சித்தம் பரம் ப்ரோக்தம் பராசக்தே:பத ஸ்மருதி:
தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் அன்னை பராசக்தியின் பாதஸ்மரணமே
ஆகவே சக்தி வழிபாடு மிகவும் சிறந்தது.மேலும் அவளே சிவசக்தி,அர்த்தநாரி .அவளை வழிபட்டு அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக!

Advertisements