(இந்தக் கட்டுரை திரு. ராமசாமி சுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது.  திரு. ராமசாமி முதிர்ந்த வாசகர்.  காஞ்சி மடம் பற்றிய ஞானம் நிறைந்தவர். இந்த ப்ளாக்கின் சக ஆசிரியரான RVயின் தந்தையும் ஆவார். இவர்களின் குடும்ப நண்பன் என்ற வகையில் நான் அறிந்தது இது: தந்தையும் மகனும் இறை வழிபாட்டில் இரு துருவங்கள். திரு.ராமசாமி அவர்கள் இந்துச் சடங்குகளுக்கும், வழிபாடுகள், இந்து ஞானம், மடங்கள் முதலியவைகளுக்கும்  மடதிபதிகளான காஞ்சிப் பெரியவா சந்திரசேகர், ஜெயேந்திரர், விஜயேந்திரர் போன்றவர்களிடம் பக்தி மற்றும் மிகுந்த மரியாதை கொண்டவர். பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். RV (ப்ளாக் ஆசிரியர் மற்றும் என் நண்பன்) நவீன பொருளாதாரத்தில் வாழ்பவன். அவனுக்கு மேற்சொன்னவற்றில் முற்றிலும் வேறு காரணங்களுக்காக மதிப்பு இருந்தாலும் நிச்சயமாக பக்தி இல்லை.  அவனுக்கு “ரீசனிங்” (Reasoning)  என்பது முக்கியம். “நம்பிக்கை”யில் நம்பிக்கை ஓரளவே. அவனுடைய பழைய கட்டுரைகளை படித்து தந்தையின் கட்டுரைகளுடன் குழப்பிக் கொள்ளகூடாது எனபதனாலேயே இந்த தன்னிலை (அல்லது படற்கை விளக்கம்)

இது மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அவரின் எண்ணச் சிதறல்களின் முதல் பகுதி. ஓவர் டு திரு. ராமசாமி)

        இந்துத்துவம்

செய்தித்தாள்  தொலைக்காட்சி   எந்த ஊடகத்தைப்பார்த்தாலும்  கண்ணிலே அதிகமாகப்படும் முழக்கம்  இந்துத்துவம்  என்ற சொற்றொடரே! உடன் என் மனதில் தோன்றிய வினா ‘இந்துத்துவம்’ என்றால் என்ன? அதன் பதிலாகத்தோன்றிய  எண்ணச் சிதறல்களே இந்தத்தொகுப்பு.  மதம் என்பது வாழ்க்கை நெறிமுறை தானே? உச்சநீதிமன்றமும் இதைத்தானே உறுதி செய்கிறது. உண்மையும்  அதுதானே?அப்படி என்றால் இந்துத்துவம் என்பது இந்து மத பிரசார பீரங்கியா? ஒன்றுமே புரியவில்லை இருப்பினும் சிந்தனை விரிகிறது.

இந்து என்ற சொல்லே சிந்து என்பதன் மருவு தானே?அதேபோல் மாறுபட்டு வருகின்ற சமுதாயத்திலே மாற்றங்கள் ஏற்படும்போது இந்து என்ற சொல்லோடு மதமும் சேர்ந்து இந்து மதமாக மாறியதோ?அதன் தொடர்ச்சியாக இந்துத்துவமும் உருவாகியதோ?எது எப்படி இருந்தாலும் இந்து மற்றும் இந்துத்துவம் என்ற சொல் பெருமைக்குரியதுதானே! பிறர் அதை ஏன் குறைபடப் பேசுகிறார்கள்? நாம் ஏன் பொறுமை காக்கிறோம்? நாம் பெருமைப்படுவதும் இல்லை; சிறுமை கண்டு  பொங்குவதில்லை நம் பழக்க  வழக்கங்களையும்  சடங்குகளையும் -நம்மில் பலரும் இதில் பங்கு கொள்வோரே -எள்ளி நகையாடுகின்றனரே அவர்கள் ஆதியில் எந்த  மதத்தினைச்ச்சர்ந்ந்து இருந்தவர் என்பதை மறந்து விட்டனரே?அவர்கள் சார்ந்துள்ள இன்றைய மதத்தில்  சடங்குகள் கிடையாதா?
இதனை எதிர்கொள்ள இந்துத்துவம்  வலிமை பெற வேண்டாமா? நம்மைப்பற்றி  நாம் முதலில் தெரிந்துகொள்வோம், பெருமை கொள்வோம்.
இந்த சிந்தனை விரிந்தபோதுதான் திரு.அருணகிரி அவர்களின் இந்துத்துவம் -மூவகைப்பாகுபாடு என்ற கட்டுரையைக் காண நேர்ந்தது.முரண்பட்ட கருத்துக்களும் ஒற்றுமையை உருவாக்கும் என்பதை உணரமுடிந்தது அவர் பாகுபடுத்தியது.  என் எண்ணங்களை  வலுவாக்கியது.அவர் கண்ட  பகுப்பு பின்வருமாறு
சடங்கு  இந்துத்துவம் :-சடங்குகள் தோன்றிய காலம் எது?  வேத காலமாக இருக்கலாமா? வேதங்கள் என்ன கூறுகின்றன?
உருக்குவேதம்  கோட்பாடுகளை வரையறுக்கின்றது. இயற்கை  சீற்றத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இயற்கை சக்திகளெல்லாம் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டன. மனிதனது தேவைக்கேற்ப வேண்டுதல்கள்  வைக்கப்பட்டன. கேள்வி-பதில் என்ற முறையில் கல்வி குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. வாய்மொழிப்பாடம் தான். ஏனெனில்  வேதங்கள் அனைத்தும் எழுதாக் கிலவிகள் தாமே.  “நேதி ,நேதி “-இது இல்லை,அது இல்லை இப்படி பல விஷயங்களைத் தவிர்த்து  கடைசியில் முடிவு எட்டப்பட்டது.
உருக்கு  வேதத்தில் சொல்லப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தும் வகையில்   யசுர்  வேதத்தில் செயல்பாடுகள் (சடங்குகள்) அறிமுகப்படுத்தப்பட்டன அனைத்து சமயங்களிலும் சடங்குகள் உண்டு  செயல்பாடுகளை எளிதில் நினைவு  கூறத்தக்க வகையில் சாமவேதம் இசையாக அமைந்தது. அதர்வ வேதம் தான்த்ரீக முறை அறிவியல் கோட்பாடுகள்  கொண்டது   அனைத்து வேதங்களுமே இறை வழிபாடே  யன்றி  வேறொன்றுமில்லை
சடங்குகளைச் செயல்படுத்தும்போது உயிர்ப்பலி  கூட  அவசியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது  ஏனெனில் விவசாயம் அன்று முழு வளர்ச்சி பெறவில்லை  எளிதில்  கிடைத்த உணவு இறைச்சியும்  காய்கனிகளுமே இந்த சடங்குகளை எதிர்க்கும் வகையில் -முக்கியமாக பிராணி வதை  தடுக்கக்கோரி புதிய மதங்கள் -பௌத்தமும் சமணமும்  தோன்றின.
இன்று கூட இந்துத்துவத்தில் சடங்குகள் பின்பற்றப்பட்டு   வருகின்றன அவற்றுள் பல ஆழ்ந்த பொருள் பொதிந்தவையே. இவை சமுதாயக்கட்டமைப்பை உருவாக்குகின்றன  என்பது ஏற்கப்படவேண்டிய கருத்தே அவை தொடர்ந்து  பின்பற்றப்பட்டு வருவதும் உண்மையே ஆனால் அவை ஏன் பின்பற்றப்பட்டன  என்பதை விளக்கிச்சொல்வார் யாருமில்லை.

(தொடரும்)

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1

Advertisements