ஜூன் 20, 1909.

லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸில் ஒரு திட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. இந்திய தேச விடுதலைக்காக ஒரு புரட்சி வீரன் அன்று ஒரு முக்கிய பணியை முன்னிட்டு  வீர் சாவர்க்கருடன் சில முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தான். புரட்சி வீரன் அமைதியாக திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சாவர்க்காரின் சம்மதத்தைப் பெற்றான். இறுதியில் ஜூலை ஒன்றாம் நாள் அந்தப் திட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திட்டத்தின் படி அந்த புரட்சி வீரன் ஒரு ஆங்கிலேயரை கொலை செய்யும் கடமையை ஏற்றுக் கொண்டான்

இதன் பின்புலம் என்ன?

”இண்டியா ஹவுஸ்” என்பது வீர் சாவர்க்கரால் தேச பக்தியை ஒருங்கிணைப்பதற்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்க்காகவும் லண்டனில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இதில் அனேகமாக லண்டனுக்கு பல்வேறு துறைகளில் கல்வி பயில வந்த தேச பக்தி மிகுந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள். இதனால் இண்டியா ஹவுஸ் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலாகவே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் அரசும் தன் பங்குக்கு ஒரு அமைப்பை போற்றி வளர்த்து வந்தது. அது தேசிய இந்திய கூட்டமைப்பு என்ற பெயரில் லண்டனில் இயங்கி வந்தது. இதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்று லண்டனுக்கு கல்வி கற்க சென்ற இளைஞர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவார்களேயானால் மூளை சலவை செய்து அவர்களை தேசபக்தியற்றவர்களாக செய்வதாகும். அதன் செயலாளர் எம்மா ஜோசஃபின் என்னும் அம்மையார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தக் அமைப்பின் அங்கத்தினர்களை மூளை சலவை செய்வதற்க்காக மூவர் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கியிருந்தது. அந்தக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் சர் வில்லியம் கர்ஸன் வைலி. கர்ஸன் வைலியின் தந்திரத்தினால் பல இந்திய இளைஞர்கள் இதயத்தில் குடியிருந்த இந்திய விடுதலை போராட்டம் என்ற மாயை விலகி தேசபக்தியை கைவிட்டனர். இதனால் கொதிப்படைந்தது ”இண்டியா ஹவுஸ்”.

அன்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டதன காரணம் இதுவே. புரட்சி வீரன் எம்மா அம்மையாரை நட்பு செய்து கொண்டான். பின்னர் அவருடைய அமைப்பில் முழு உறுப்பினரானான். பின்னர் ஜூலை 1, 1909ல் தேசிய இந்திய கூட்டமைப்பு வருடாந்திர தினத்தை கொண்டாடுவதற்க்காக இம்பீரியல் இன்ஸ்டிடுயூட் ஜெஹங்கீர் ஹாலிற்கு வந்த கர்ஸன் வைலியை சுட்டுக் கொன்றான்.

விரைவில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அவனும் அதையே விரும்பினான். காரணம், அப்பொழுதுதான் மேலும் பல இந்திய இளைஞர்கள் கொதிப்படைந்து தேச விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்பதே.

அந்த புரட்சி வீரன் மதன்லால் திங்க்ரா.

Advertisements