1905 ஆம் ஆண்டு.இந்திய தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்து வந்த தலைவர் ஒருவர் அந்த ஆண்டில் அதன் பிரெசிடெண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 1889ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வந்த இவர் சமுதாய சீர்த்திருத்தத்திற்க்காக அயராது உழைத்து வந்தார். பால கங்காதர திலகர், லாலா லஜ்பட் ராய், தாதாபாய் நவ்ரோஜி, பிபின் சந்திர பால் முதலியோருடன் சேர்ந்து பல ஆண்டுகளாக இந்தியர்களுக்கு தங்கள் நாட்டு அரசாங்கத்தில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஆங்கிலேயர்களுடன் போராடி வந்தார்.  சராசரி இந்தியர்களுக்கு பொது நல திட்டங்களில் முழு அதிகாரம் வேண்டும் என்பதும் அந்த போரட்டத்தின் கோரிக்கையாகும். ஆனால் ஆங்கிலேயர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

மிதவாத கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்த அவர், போராட்ட முறைகளில் கையாண்ட கருவிகள் வாதங்கள் மற்றும் தருக்கங்கள் ஆகும். இதனால் அவருக்கு ஆங்கிலேயர்களிடம் பெரு மதிப்பு இருந்தது. இந்தியர்களின் பல கோரிக்கைகள் நியாமானதாக ஆங்கிலேய அரசாங்கம் கருத காரணமானது இவரது அணுகுமுறை. ஆனால் அப்பொழுது அவருடன் இந்திய தேசிய காங்கிரஸில் வளர்ந்து வந்த திலகர் போன்ற தீவிர தேசியவாதிகளுடன் அவருக்கு எப்பொழுதும் ஒரு பிணக்கு இருந்து வந்தது. 1906ல் திலகரை காங்கிரஸிர்க்கு பிரெசிடண்டாக தேர்ந்தெடுப்பதை எதிர்த்தார். இதனால் பலரின் ஆதரவை இவர் இழக்க நேரிட்டது. ஆனாலும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தன் போராட்டங்களை தொடர்ந்தார்.

இவரின் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தவேண்டும், அரசாங்கத்தில் முழுச் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலனைக்கு ஆங்கிலேயர்களால் உட்படுத்தப்பட்டன. பிட்டிஷ் பார்லிமெண்டில் ”இந்தியன் கவுன்சில்ஸ் ஆக்ட்” (Indian Countcils Act 1909) என்ற சீர்திருத்த மசோதா ஜான் மார்லி மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் “The Earl of Minto”வாலும்  கொண்டு வரப்பட்டது. இந்தச் சீர்திருத்தங்களே மிண்ட்டோ-மார்லி சீர்திருத்தங்கள் என்று பிரபலமாக அழைக்கபட்டு வந்தது. இதன் விளைவாக இந்தியர்கள் அரசாங்கத்தில் அதிக அளவில் பங்கேற்க முடிந்தது. ஆனால் காங்கிரஸை பொறுத்த வரையில்  அது திருப்தி தராத ஏமாற்றமாகவே இருந்து வந்தது. முழுச் சுதந்திரம் வந்தால் தான் இந்தியர்களால் நிறைவு அடையமுடியும் என்று நம்பினார் அந்தத் தலைவர். என்றாலும் ஆங்கிலேயர்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளை கைவிடவில்லை. இவருடைய ராஜீய நடைமுறைகள் மேலும் மேலும் ஆங்கிலேயர்களிடம் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது.

இவரது மதிப்பினால் ஆங்கிலேய அரசாங்கத்திலும் பெரும் பதவிகள் வகித்தார். Imperial Legislative Council சேவைக்கு இவர் அழைக்கப்பட்டார். CIE என்று சொல்லப்படும்  Companion of the Order of the Indian Empire என்ற பதவியிலும் இருந்தார். மேலும் மகாத்மா காந்திக்கும் மொகமட் அலி ஜின்னாவிற்குமே இவர் நல்ல வழி நடத்துபவராக இருந்தார். தன் கலிவியினாலும், அறிவினாலும் இந்திய அரசியலில் பெரிதும் மதிக்கத் தக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்கு உருவாக்கிய பெரும் பங்கு இவரைச் சேரும். 1915ல் தனது 49வது வயதில் உடல் நலம் குன்றி இயற்கை எய்தினார்.

அந்தத் தலைவர் கோபால கிருஷண் கோகலே.

(For ItsDiff Radio 06/29/2011)
Advertisements