1858ஆம் ஆண்டு மார்ச் 23 பொழுது புலராத அதிகாலை.

ஜான்ஸியின் ராணி லக்‌ஷ்மி பாய் தன் அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தில் தன் அமைச்சர்களுடனும் தளபதிகளுடனும் போர்கால அவசர கூட்டத்தில் வீற்றிருந்தார். அனைவரும் போர்களத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்டு பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஹுயூக்ஸின் படை சூழ்ந்து நெருங்கிவிட்டது. வெகுநேரமாக தடுத்துப் போராடிகொண்டிருக்கும் நம் படை வீரார்கள் இனி ஒரு முழு நாள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது உறுதி. நானா சஹேபின் படைதளபதி, மஹாவீரன், என் ஆருயிர் நண்பன் தாந்தியா தோப்பே நம்மையும், நம் படைகளையும், இந்த ஜான்ஸி மண்ணையும் காப்பாற்ற படை அனுப்பியதாக ஓலை வந்தும் இதுவரை படைகள் வந்த சேரவில்லை. மெய்யான நிலமை இன்று மதியத்திற்குள் அவர்கள் வந்து சேரவில்லையென்றால் நம் படை சர்வ நாசம் அடையும். போர்களத்தின் தற்போதைய நிலவரமும், அங்கிருந்து வரும் மற்றச் செய்திகளும், நான்  உடனே ஜான்ஸியை விட்டு வெளியேறாவிட்டால் அவர்கள் நாளை காலைக்குள் என்னைப் சிறைப்பிடித்து விடுவார்கள் என்பது தின்னம். நான் அப்படி தப்பிச் சென்றேன் என்றால் எஞ்சியிருக்கும் நம் படை உடனே சரணடைந்து விடும். நமக்கு வேண்டிய அவகாசமெல்லாம் தாந்தியாவின் படை வந்தடையும் வரைதான். அதன் பின்னர் ஹுயூக்ஸின் படைகளை நாம் ஜான்ஸியை விட்டு பின்னடையச் செய்யலாம்” என்று லக்‌ஷ்மி பாய் சபையில் கூறினார்.

“மகாராணி, உங்கள் எண்ணம் புரிகிறது. அதுவே என் எண்ணமும். ஆனால் தளபதி தாந்தியாவின் படையை நம்பி நாம் வாழாயிருந்தால், அது ஆபத்தில் முடியும். முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்றார் சேனாதிபதி.

அப்பொழுது கூட்டத்தில் இருந்த ராணியின் தோழி “ராணியாரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பலரும் உங்களுக்கும் எனக்கு உருவ ஒற்றுமையிருப்பதாக கூறியிருக்கிறார்கள். நான் உங்களைப் போல் உடையணிந்து உங்களுக்கு பதில் தளபதி தாந்தியாவின் படை வரும் வரை நம் படைகளுக்கு தலைமை தாங்கி போராடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதற்குள் தப்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்.

தோழியாரின் யோசனையக் கேட்ட அனைவரும் அவருடைய வீரத்திற்க்காகவும், ராஜதந்திரத்திற்க்காகவும் அவரை பெரிதும் பாராட்டினார்கள்.

ராணி தோழியரைப் பார்த்து “என் அருமை தோழியே, எனக்காகவும், நம் நாட்டிற்க்காகவும் உன் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த வீரச் செயலுக்காக துணிந்துள்ளாய். உன் வீரம் நம் பாரத வரலாற்றில் நீங்காத இடம் பெரும்” என்று கூறி விடைபெற்றார்.

பின்னர் அந்தத் தோழி போர்முனையில் வீரமாக போராடினார். ஆனால் ஹுயூக்ஸின் பெரும்படையின் முன் தோழி தலைமையேற்று வந்த ஜான்சியின் படை தோல்வியுற்றது. தோழி சிறைபிடிக்கப்பட்டார். தோழி தாங்கள் தேடி வந்த ஜான்சி ராணி லக்‌ஷ்மி பாய் அல்ல என்றுணர்ந்த ஹுயூக்ஸ் தோழியின் வீரத்தையும், தியாகத்தையும் பார்த்து வியந்து அவரை விடுதலை செய்தார்.

விடுதலைக்கு பின்னர் இந்திய அரசாங்கம் அந்தத் தோழியின் வீரத்தை போற்றும் வகையில் ஒரு தபால் தலையை வெளியிட்டது.

அந்தத் தோழி ஜல்காரி பாய்.

(For ItsDiff Radio 05/11/11 – Dramatization by Bags)

Advertisements