ஒரு வாரம் பாரிசுக்கு போயிருந்தோம். ஃபிரெஞ்சில் தெரிந்த ஒரே வார்த்தை உய் (oui).

பக்கத்து மளிகைக் கடையில் சாமான் வாங்கப் போனேன். வெண்ணெய் வாங்க வேண்டும், எங்கே என்று தேடிப் பார்த்தேன் தென்படவில்லை. சரி யாரையாவது கேட்க வேண்டியதுதான் என்று ஒரு பணி செய்பவரைப் பிடித்தேன். பட்டர், பட்டர் என்று சொல்லிப் பார்த்தேன், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ப்ரெட் பட்டர் என்றேன், அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ப்ரெட் மேல் வெண்ணெய் தடவுவது போல அபிநயம் செய்தேன், சான்சே இல்லை. திடீரென்று மண்டையில் ஒரு லைட் எரிந்தது. அமெரிக்காவில் petit beurre என்ற பேரில் பிஸ்கட்களைப் பார்த்திருக்கிறேன். Beurre என்றால் வெண்ணெய் என்று தெரியும். ப்யூரே ப்யூரே என்றேன். அவர் முகத்திலும் ஒரு லைட் எரிந்தது. வா வா என்று வேகவேகமாக போய்க்கொண்டே சைகை செய்தார். நானும் பின்னாலேயே விரைந்தேன். அங்கே ஒரு ஷெல்ஃபில் நிறைய tomato puree cans இருந்தன, அதைக் காண்பித்தார்.

திருப்பி அடியைப் பிடிடா பாரதபட்டா என்று பட்டர், ப்ரெட், வெண்ணை தடவும் ஆக்ஷன், ப் ப் ப் ப்யூரே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாலு ஷெல்ஃப் தள்ளி petit beurre பிஸ்கட் பாக்கெட்டே தெரிந்தது. பல நாளாக தேடிய பொக்கிஷம் கிடைத்தது போல ஒரு ஃபீலிங். ஓடிப் போய் அதை எடுத்தேன், அவரிடம் காட்டி ப்யூரே ப்யூரே என்றேன். அவர் ஓ! புர்! என்றபடி என்னை அழைத்துச்சென்று புர்ரை எடுத்துத் தந்தார். ஜன்ம சாபல்யம் ஆனது.

என் பெண்களிடம் இந்த நிகழ்ச்சியை சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னும் யாரும் வீட்டில் பட்டர் என்று சொல்வதில், புர்தான்!

Advertisements