ஜூன் 17, 1911

மணியாச்சி புகை வண்டி சந்திப்பு.

மெலிந்த உருவம் கொண்ட குடுமி வைத்திருந்த ஒரு வாலிபன் தன் நணபனுடன் மணியாச்சி மெய்லிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறான். பாண்டிச்சேரியில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ரகசிய கூட்டத்தில் வ.வே.சு.அய்யர் அவனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தார். வ.வே.சு அய்யர் ஆசியுடன் அதனை நிறைவேற்ற அன்று தயாராக வந்திருந்தான்.

முன்னதாக தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு வந்த கலெக்டர் ஆஷ், காலை 9:30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து கிளம்பிய மணியாச்சி மெயிலில் முதல் வகுப்பில்  தன் மனைவியுடனும் அவர்களின் நான்கு குழந்தைகளுடனும் அமர்ந்திருந்தார்.

காலை மணி 10:38. புகைவண்டி மணியாச்சி ஜங்ஷனுள் நுழைந்தது. 10:48ற்க்கு வரும் சிலோன் போட் மெயிலுக்காக ஆஷ் குடுமபத்தினர் வண்டியின் உள்ளேயே காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொடைக்கானல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்தத் தருணத்திற்க்காக காத்துக் கொண்டிருந்த வாலிபன், ஆஷ் இருந்த பெட்டியினுள் நுழைந்தான். அவனைப் அங்கு எதிர்பார்க்காததால் ஆஷ்   சற்றே ஆச்சரியம் அடைந்தார். அவர் சுதாரித்துக் கொள்வதற்கு முன் இளைஞன் தன் மடியிலிருந்த பெல்ஜியம் துப்பாக்கியை எடுத்து ஆஷை நோக்கி சுட்டான். குண்டு ஆஷின் நெஞ்சில் பாய்ந்தது. கலெக்டர் ஆஷ் கீழே சரிந்தார். தோட்டாவின் வெடி சத்தம் காற்றிலே கரைந்தது.

வாலிபன் நேராக ப்ளாட்பாரத்திலிருந்த கழிப்பறைக்குள் நுழைந்து தன்னைத் தானே சுட்டு கொண்டு வீர மரணம் எய்தினான். அவன் சட்டைப்பையிலிருந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தான்:

”ஆங்கிலேய மிலேச்சர்கள் நமது நாட்டை கைப்பற்றியதுமல்லாமல் இந்து சனாதன தர்மத்தை அழிக்க முயலுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் ஆங்கிலேயர்களை விரட்டி, சுவராஜ்யத்தை அடைந்து சனாதன தர்மத்தை நிலைநாட்ட முயல்வான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தன், அர்ஜுனன் ஆகியோர்கள் ஆண்டு எல்லா தர்மங்களை காத்து வந்த இந்த நாட்டிற்கு பசுவின் மாமிசத்தை புசித்து வாழும் மிலேச்சன் ஐந்தாம் ஜார்ஜை மண்ணனாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். ஐந்தாம் ஜார்ஜ் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் அவனை கொல்ல மூவாயிரம் தமிழர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். இதை பிறருக்கு உணர்த்தவே இன்று நான் இந்த செயலை நான் செய்திருக்கிறேன்.இது தான் ஹிந்துஸ்தானில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகும்.”

இந்த வீரன் வாஞ்சிநாதன்

(For ItsDiff Radio)

தொடர்புள்ள சுட்டி: வாஞ்சிநாதன் ஜாதி வெறியரா?