1853 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21 ஆம் நாள்

ஜான்சியின் மகாராஜா மரணப் படுக்கையில் இருக்கிறார். அருகில், வளர்ப்பு மகன் ஆனந்த் ராவ் மகாராணியுடன் நிற்கிறார்.

”மகாராணி, ஜான்சியை உன்னிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறேன். தக்க சமயம் வந்தவுடன் ஆனந்த் ராவின் பட்டாபிஷேகம் நடக்கட்டும். அவன் சிறப்பாக ஜான்சியை ஆள உறு துணையாக இரு” என்று மகாராணியிடம் உறுதிமொழி வாங்கிவிட்டு இயற்கை எய்தினார்.

மகாராணி அதற்கு பின்னர் ஆனந்த் ராவ் மகாராஜா ஆவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் ஆரம்பம் முதலே தடங்கல்களை சந்திக்கத் தொடங்கினார் மகாராணி.

சூது நிறைந்த பிரிட்டிஷ் அரசு லார்ட் டல்கௌசியின் “Doctrine of Lapse” என்ற சட்டத்தை ராணியின் குடும்பத்தின் மேல் பிரயோகித்தது. ”Doctrine of Lapse”ன் படி நேரடி வாரிசு இல்லாத பிராந்தியங்கள் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் கீழே வந்துவிடும். ஆனந்த் ராவ் வளர்ப்பு மகன் என்பதால் அவருக்கு மன்னராகும் உரிமை இல்லை என்று முடிவு செய்தது பிரிட்டிஷ். ராணிக்கு 60000ஆயிரம் ரூபாய்களை கொடுத்து அரண்மனையை விட்டு வெளியேறும் படி பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது.

அதுவரை பிரிட்டிஷ் கொடுமைகளை பொறுத்து வந்த ராணி இந்த துரோகத்தை பொறுக்கமுடியாமல் வெகுண்டு எழுந்தார்.
“இது வரை ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை பொறுத்து, அவர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தெல்லாம் போதும். நம் ராஜாங்கத்தை ஒரு நாளும் பரங்கியர்களுக்கு விட்டு கொடுக்கமுடியாது. போருக்கு தயாராகுங்கள்” என்று முழங்கினார்.

1858ஆம் ஆண்டு மார்ச் 23ல், Sir Hugh Rose என்ற ஆங்கில தளபதியின் கீழ் செயலாற்றிய பிரிட்டிஷ் படை ஜான்சியை முற்றுகையிட்டது. ராணியும், ராணியின் படையினரும் ஆவேசத்துடன் போர் புரிந்தனர். 20000 படைவீரர்கள் கொண்ட படையுடன் தாந்தியா தோப்பே தன் தோழியான மகராணியின் உதவிக்கு வந்தான். இருந்தும் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாடான படையுடன் மோதமுடியாமல் சிதறி ஓடியது ராணியின் படை. ஆனாலும் ராணி பிரிட்டிஷ் படையிடம் சிக்காமல் தன் மகன் ஆனந்த் ராவுடன் தப்பி ஓடினார்.

கல்பியில் தஞ்சம் புகுந்த ராணி தாந்தியா தோப்பேயுடன் படை சேர்த்து குவாலியர் கோட்டையை கைப்பற்றினார். ஆனால் அடுத்த நாள் நடந்த கடும் போரில் உயிர் துறந்தார்.

அவருடைய வீரத்தை எதிரிப்படை தளபதி Sir Hugh Rose இவ்வாறு பாராட்டினார் – “அறிவு கூர்மையான, அழகான, துனிச்சல் மிக்க ஆனால் அபாயம் நிறைந்த ஒரு தலைவி இந்த ராணி”

அந்த ராணி – ல்க்‌ஷ்மி பாய்

For ItsDiff Radio – 04/06/2011

Advertisements