கலைஞர்-ஜெயலலிதா கூட்டணி

நம் நிருபரின் ஸ்கூப்!

தற்போதைய கூட்டணியின் துணைக் கட்சிகள் தரும் தலைவலி தாங்க முடியாமல் கலைஞர் தானே ஜெயலலிதாவுக்கு ஃபோன் போட்டாராம். ஆளுக்குப் பாதி சீட், முதல் இரண்டரை வருஷம் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி, அடுத்த இரண்டரை வருஷம் கலைஞரோ ஸ்டாலினோ முதல்வர், நாடாளுமன்றத்தில் அதிமுக அழகிரியின் தலைமையில் செயல்படும், அதிமுக எம்பி தம்பிதுரை ஜேபிசியில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவார், ஜேஜே டிவியை ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு மாற்றிக் கொடுப்பது என்ற ஃபார்முலாவை இருவரும் ஒத்துக்கொண்டுவிட்டார்களாம்.

ஜூவி ரிப்போர்ட்:

கழுகாருக்கு நாம் வேர்க்கடலையும் வெள்ளரிக்காயும் போட்ட ஒரு கப் ரசம் சுடச்சுட கொடுத்தோம். அதை என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று குபுக் குபுக் என்று குடித்துவிட்டு நமக்கு நியூஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

சிபிஐ அடக்கி வாசிப்பது என்பது நடக்காத விஷயம், கனிமொழி ஜெயிலுக்கு போவதை தடுக்க முடியாது என்று கலைஞருக்கு ரகசியத் தகவல் வந்ததாம். 63 சீட்டும் கொடுத்து ஜெயிலுக்கு போவதா என்று ராஜாத்தி அம்மாள் போர்க்கொடி உயர்த்தினாராம். அடுத்த குறி தான்தான் என்று தயாளு அம்மாளும் கவலைப்பட்டாராம். கலைஞருக்கு நிம்மதியே இல்லையாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே பெட்டர் என்ற முடிவுக்கு வந்தாராம். ஜெயலலிதாவும் ஒத்துக்கொண்டாராம். ஆனால் யார் முதல்வர் என்பதுதான் இழுபறி பிரச்சினையாக இருந்ததாம். தான் முதல்வர் ஆகாவிட்டால் கூட்டணி இல்லை என்று ஜெ உறுதியாக சொல்லிவிட்டாராம். பிறகு முதல் இரண்டரை வருஷம் ஜெயலலிதா முதல்வர், பிறகு கலைஞரின் உடல்நிலையைப் பொறுத்து கலைஞரோ ஸ்டாலினோ முதல்வர் ஆவார்கள் என்று ஒப்பந்தம் போட்டார்களாம்.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி இல்லை என்று தெரிந்ததும் அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி அனைவரும் இந்த திட்டத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம். பேராசிரியர் அன்பழகனின் அபிப்ராயத்தை யாரும் கேட்காவிட்டாலும் அவர் தானும் இந்த திட்டத்தை ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தாராம். ஸ்டாலினை சமாதானப்படுத்த அவருக்கு ஜேஜே டிவி கொடுக்கப்படுகிறதாம்.

திமுக, அதிமுக தலைவர்களின் ரியாக்ஷன்:

துரைமுருகன் கலைஞரின் அரசியல் சாணக்கியத்துக்கு இது ஒரு உதாரணம் என்று பேட்டி கொடுத்தார். நீங்கள் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தீர்கள் என்று சொல்கிறார்களே, இதனால் கூட்டணியில் குழப்பம் வராதா என்று கேட்டதற்கு சேலை நன்றாக இருக்கிறதே, என் மனைவிக்கும் ஒன்று வாங்கிக் கொடுக்கலாமே, விலை என்ன என்று விலைச்சீட்டை பார்க்க முயன்றதை விஷமிகள் திரித்துவிட்டார்கள் என்று அவர் விளக்கினார்.

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சிவமும் சக்தியும் இணைந்த பிறகு அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்று சென்னை நகரம் முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார். இதனால் கலைஞர் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதை சசிகலாவே நேரடியாக சென்று விளக்கம் அளித்து தீர்த்து வைக்க வேண்டி இருந்ததாகவும் தெரிகிறது.

அதிமுகவில் ஜெயலலிதாவைத் தவிர வேறு தலைவர்கள் இல்லாததால் எந்த ரியாக்ஷனும் இல்லை.

கலைஞர் பேட்டி

நிருபர்: ஜெயலலிதா உங்கள் பரம எதிரியாயிற்றே?
கலைஞர்: அன்புத் தங்கை ஜெயலலிதா பெரியாரின் பேத்தி; அண்ணாவின் தங்கை; எம்ஜிஆரின் – சரி அதை விட்டுவிடுவோம். இந்த உண்மையை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்.
நிருபர்: இத்தனை நாள் எதிர்த்த அதிமுகவுடன் எப்படி கூட்டணி?
கலைஞர்: தமிழர் நலம் காக்க யார் முன்வந்தாலும் நாங்கள் அவர்களோடு கூட்டணி வைக்க தயங்கவே மாட்டோம்.
நிருபர்: தமிழர் நலம் என்றால்?
கலைஞர்: இது கூடவா தெரியவில்லை? ராசா போன்ற அடிமட்ட தலித் தோழர்கள், கனிமொழி போன்ற நாடார் குல திலகங்கள்தான் தமிழர்கள்.
நிருபர்: அமைச்சர்கள் ராஜினாமா எப்போது?
கலைஞர்: அவர்களாக போ என்று சொன்னால் போய்விட வேண்டியதுதான். எங்களைப் பொறுத்த வரையில் மன்மோகன் சிங் எங்கள் மனம் கவர்ந்த தலைவரே. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டின்படி செயல்படவே விரும்புகிறோம்.
நிருபர்: ஏறகனவே காங்கிரசுடன் சட்டசபைத் தேர்தலுக்கு அமைத்திருந்த கூட்டணி ஏன் உடைந்தது?
கலைஞர்: முதலில் 48 சீட் என்றார்கள். சரி என்றோம், உடனே 50, 55, 58, 60, 63 என்று அவர்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மாறிக்கொண்டே போனது. இப்படி மாற்றிக்கொண்டே போவது கூட்டணி தர்மம் இல்லை என்று அமைச்சர்கள் ராஜினாமா செய்யவும் தயாரானார்கள். இருந்தாலும் அவர்கள் கேட்ட 63 சீட்டை தர ஒத்துக் கொண்டோம். பிறகு அவர்கள் மீதும் தங்கள் நிலையை மாற்றினால்? கூட்டணியில் தொடர அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்துகொண்டோம்.
நிருபர்: மீண்டும் மாற்றினார்களா? இப்போது எவ்வளவு கேட்டார்கள்?
கலைஞர்: 35

ஜெயலலிதா பேட்டி:

நிருபர்:டான்சி கேசில் உங்களுக்கு குடைச்சல் தந்தவரோடு இப்போது எப்படி கூட்டணி வைத்தீர்கள்?
ஜெ: டான்சி போன்ற விவகாரங்களே எங்களுக்கு குடைச்சல்; ஆனால் கலைஞரோ ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை அனாயாசமாக சமாளிக்கிறாரே! கலைஞர் போன்ற அனுபவசாலியிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, நாம் தமிழ்நாட்டு அளவில்தான் புழங்குகிறோம், இந்தியா மிகப் பெரியது என்பதை உயிர்த்தோழி சசிகலாவும் எடுத்துச் சொன்னார். அதனால்தான்.
நிருபர்: அதிமுக போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டீர்கள். அதில் பல இன்றைய திமுக எம்எல்ஏக்களின் தொகுதி ஆயிற்றே?
ஜெ: 234-ம் எங்களுக்குத்தான், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

மூன்றாவது அணி உதயம்!

இன்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ், ஜெயந்தி நடராஜன் மற்றும் பலரும் சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். ஆறு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு அன்னை சோனியாவின் முடிவுப்படியும் தந்தை ராகுலின் முடிவுப்படியும் நடப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்குத் தெரிவித்தார். ராகுல் தந்தை, சோனியா அன்னை என்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டவுடன் இந்த தலைவர்கள் மீண்டும் சோனியாவை எப்படி அழைக்க வேண்டும், ராகுலை எப்படி அழைக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் முடிவு தெரியவில்லை.

லேட் நியூஸ்! காங்கிரஸ், விஜயகாந்த், ராமதாஸ், வைக்கோ, திருமா, கம்யூனிஸ்டுகள் ஓரணியில் திரண்டனர்!

பல கட்சிகளும் இப்போது ஒரே அணியில் இருப்பதால் இங்கி பிங்கி பாங்கி முறையில் தொகுதிகளைப் பிரித்துக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசுக்கு கிடைக்கும் தொகுதிகளை ஜி.கே. வாசன், தங்கபாலு, சிதம்பரம், மற்றும் பலர் இங்கி பிங்கி பாங்கி முறையில் பிரித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம் என்று தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையும், விஜயகாந்த் வீராவேசமும்

இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்று விஜயகாந்த் அறிவித்தார். எல்லாருக்கும் கரண்டை தொட்டால் ஷாக்கடிக்கும், என்னைத் தொட்டால் கரண்டுக்கே ஷாக்கடிக்கும், அப்படி ஷாக்கடிப்பதை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ் நாட்டின் மின்சாரத் தேவையை தீர்ப்பேன் என்று அவர் நேற்று கொருக்குப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் எல்லாருக்கும் தினமும் இரண்டு வேளை ஒரு டம்ளர் பால், மற்றும் ஒரு ஸ்பூன் காப்பிப்பொடி, ஒரு ஸ்பூன் சர்க்கரை இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக வீட்டுக்கு ஒரு மாடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. விஜயகாந்த் வீட்டுக்கு ஒரு மாடு, அதில் தானே தினமும் பால் கறந்து காப்பி கலந்து எல்லாருக்கும் ஊட்டியும் விடுவேன் என்று அறிவித்திருக்கிறார்.

கார்த்திக் தலைமையில் மூன்றாவது அணி!

கார்த்திக் இன்று தன் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்று தெரிவித்தார். எங்கெல்லாம் போட்டி இடுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் லண்டன், பாரிஸ், டோக்கியோ தொகுதிகளில் போட்டி இடுவதாக அறிவித்தார்.

டி. ராஜேந்தர் இன்று ஆ டண்டணக்கா, ஆ டனக்குனக்கா, நான் உனக்குக் கொடுக்கறேன் பேட்டி, தேர்தலில் இல்லை போட்டி என்று அறிவித்தார். சிம்புவை நமது நிருபர் பேட்டி கண்டபோது அப்பா இப்போது வேர் இஸ் தி பார்ட்டி என்று தேடிக் கொண்டிருப்பதாகவும், கிடைத்தவுடன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்தார். எப்போது கிடைக்கும் என்று கேட்டதற்கு, We அதை hide பண்ணி வச்சிருக்கோம், my dad ஈசியா கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தீப்பொறி ஆறுமுகம் அரசியலிலிருந்து விலகுகிறார்!

புரட்சித் தலைவியையும் திட்டக்கூடாது, கலைஞரையும் திட்டக்கூடாது என்றால் நான் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை தவிர என்னதான் பேசுவது என்று கண்ணீர் விட்ட தீப்பொறி ஆறுமுகம் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்டுள்ளார். கூட்டணி உடையும்போது யார் நல்ல டீல் கொடுக்கிறார்களோ அங்கே சேர்ந்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். வெற்றிகொண்டான் கொடுத்து வச்சவர், இந்த மாதிரி சிக்கல் வருவதற்கு முன்னாலேயே போய்விட்டார் என்று தன் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.