ஏப்ரல் 18, 1859. குவாலியரிலிருந்து 75ந்து மைல் தொலைவிலுள்ள ஷிவ்புரி.
மாலை நான்கு மணி.
இடம் – தூக்குமேடை.

கைதி – நானா சாகிப்பின் தளபதி.

தளபதி புன்முறுவலுடன் தன் முகத்தில் கறுப்பு திரையை அணிவிக்க வந்த வீரர்களை தடுத்து நிறுத்தினான்.
”இதெல்லாம் எனக்கு தேவையில்லை” என்று சொல்லியவாறு தன் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு வீர மரணம் எய்தினான்.

தளபதியின் மரணத்திற்கு பிண்ணனி என்ன?

1857 ஆம் ஆண்டு இந்திய முதல் சுதந்திர போராட்டம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. கிழக்கிந்திய  கம்பெனியிடம் ராஜியத்தை இழந்து ஒய்வூதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கான்பூரின் அருகேயுள்ள பிரம்மவர்த்தா என்ற நகரில் தஞ்சம் அடைந்திருந்தார் இரண்டாம் பாஜி ராவ். டல்கௌசி பிரபு, பாஜி ராவின்  மகன் நானா சாகிபிற்கு ஓய்வூதியத்தை கொடுக்க மறுத்தார். ஏற்கனவே கம்பெனியின் அநீதிகளையும்  மக்களுக்கு விளைவித்த கொடுமைகளையும் பார்த்துக் கொதிப்படைந்த நானா சாகிபும், புரட்சி தளபதியும் இனியும் பொறுத்திறுக்க விரும்பவில்லை. அடிமை தனத்தை உடைத்து நாட்டை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்க முடிவு செய்தனர்.

நானா சாகிபும், தளபதியும் மே 31 1857ல் ஒரு பெரும் புரட்சிக்கு திட்டம் வகுத்தனர் . குறித்த நேரத்தில் ஜான்சியை ராணி லெக்‌ஷ்மிபாயும், கான்பூர் பிரம்மவர்த்தா பகுதிகளை நம் தளபதியும் தாக்கினர்.வெற்றியும் பெற்றனர், நானா சாகிப் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால் கான்பூரில் படையை பெருக்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவிலேயே கான்பூரை மீட்டது.

புரட்சி தளபதி, நானா சாகிபுடனும், படைகளுடனும் பின் வாங்கினான். பின்னர் தனித்தனியாக தலை மறைவாக இருந்து தாக்க திட்டமிட்டான். இதுவரை இணை பிரியாமலிருந்த நானாசாகிபும் புரட்சி வீரனும் விரைவிலேயே தங்கள் தேசத்தின் விடுதலைக்காக பிரிய நேர்ந்தது.

கொரில்லா போர்முறையில் வல்லவனான தளபதி, ஷிவராஜபுரம், கான்பூர் முதலிய இடங்களை வெற்றிகரமாக முற்றுகையிட்டான். பிரிட்டிஷ் படையினர் மின்னலென தாக்கும் தளபதியிடமும், அவனுடைய படையினிடமும் செய்வதறியாது திகைத்தனர். தளபதி விரைவில் கல்பி என்னும் நகரை முற்றுகையிட்டான். கல்பியை ஆயுதம் தயாரிக்கும் ராணுவகிடங்காக மற்றினான். குவாலியரில் கிளர்ச்சியைத் தூண்டினான்.

அதன் பின்னர் பிரிட்டிஷிடம் சிறை பிடிக்கப் பட்ட தன் தோழியான லக்‌ஷ்மிபாயை மீட்க ஜான்சியை நோக்கி தன் படையுடன் முன்னேறினான். ஆனால் தளபதியின் ஆவேசமான தாக்குதலில் கலங்கியிருந்த பிரிட்டிஷ் படை இம்முறை நன்கு திட்டம் தீட்டியிருந்தது. தளபதியை சிறைபிடிக்க ஜான்சியில் காத்திருந்தது, அடுத்து அடுத்து வெற்றிகளைப் பார்த்து வந்த தளபதியின் படை சற்றே அசட்டையுடன் ஜான்சியை அணுகியது. அதனால் தளபதி வீரமாக போரிட்டாலும், அவன் படை பிரிட்டிஷ் படையின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் சின்னா பின்னமாகியது. தளபதி மட்டும் தப்பி ஓடினான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவன் சென்று தஞ்சம் அடையக் கூடிய நண்பன் மான் சிங்கை வளைத்து கையூட்டுக் கொடுத்தது. கையூட்டில மயங்கிய மான் சிங் அவனிடம் வந்த தளபதியை காட்டிக் கொடுத்தான்.

அந்த தளபதி தாந்தியா தோப்பே.

For ItsDiff Radio

Advertisements