மார்ச் 29, 1857. மாலை நேரம். பராக்பூர் நகரம்.

34ஆவது Bengal Native Infantry ரெஜிமண்ட் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு வீரன் ரெஜிமண்ட்டின் காவலர்கள் அறையின் வாயிலில் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கியை வைத்து கொண்டு மேலும் கீழுமாக நடந்துக் கொண்டிருக்கிறான். அவன் முகமும் கண்களும் சிவந்திருக்கின்றன. மனதில் வெறுப்பு நிறைந்திருக்கிறது.

அவன் அனைவரையும் பார்த்து கர்ஜிக்கிறான் –

”வீரர்களே, நாம் இந்தியர்கள். நாம் நம் நாட்டிலேயே ஆங்கிலேயர்களுக்கு சேவை புரிந்துகொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்குதான் அடிமைகளாக இருப்பது? புனிதமான நாம் வணங்கும் பசுவின் கொழுப்பையும் நம் இஸ்லாமிய சகோதரர்களின் உணர்ச்சிகளை அவமதிக்கும் வகையில் பன்றியின் கொழுப்பையும் தோட்டாககளில் பிரயோகப் படுத்தினால் துப்பாக்கியை கையாள முடியாது என்று பல முறை எடுத்துரைத்தாலும் ஆங்கில அரசாங்கம் நம் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார்கள். பல காரணங்களுக்காக வேண்டுமென்றே இதை செய்கிறார்கள். இன்னும் என்ன தயக்கம்? கொதித்து எழுங்கள்”

வீரர்கள் உணர்ச்சியுடன் அதை ஆமோதிக்கிறார்கள். மேலும் வீரன் “நான் முடிவிற்கு வந்துவிட்டேன். எந்த ஒரு ஐரோப்பியன் என் கண்ணில் படுகிறானோ அவன் இந்த துப்பாக்கியின் தோட்டாவுக்கு இறையாவான்” என்று முழங்குகிறான்.

ரெஜிமண்டின் லெஃப்டிணண்ட் போ அங்கே வருகிறான். வீரன் அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுடுகிறான். குறி தவறுகிறது. தோட்டா குதிரையை வீழ்த்துகிறது. இந்த நேரத்தில் மேஜர் ஹுயூஸன் அங்கு வருகிறான். அவன் ரெஜிமண்ட்டின் ஜெமதாருக்கு நம் வீரனை கைது செய்ய உத்தவு கொடுக்கிறான். ஜெமாதர் மறுக்கிறான். மற்ற வீரர்களும் மறுக்கிறார்கள்.

கோபமடைந்த ஹுயூஸன் தன் கட்டளைக்கு உட்படாத அனைவரையும் சுட்டு விடுவதாக அச்சுறுத்தியதில் சிப்பாய்களின் கொந்தளிப்பு கட்டுக்குள் அடங்குகிறது. சிறையில் அடைக்கப்பட்ட வீரனை ஆங்கிலேயர்கள் ஏப்ரல் 8, 1857 இல் தூக்கிலிடுகிறார்கள். வீரனின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. புரட்சி தோல்வியடைந்தாலும், இது இந்திய  வரலாற்றில் முதல் விடுதலை போராக பதிவு செய்யப்படுகிறது. வீரன் “தியாகி” எனப் பின்னால் கருதப்பட்டான்.

அந்த வீரன் மங்கள் பாண்டே!

(Dramatization by Bags For ItsDiff Radio)

Advertisements