By ஈ. கோபால்

பவுண்டுத்தொழு

வாழ்க்கை மாறும்போது பல நிகழ்வுகள், வாழ்வாதாரம், வாழும்முறை, சமூக கோட்பாடுஎல்லாம் கொஞ்சம் மாறும் – ஆனால், சுமார் 20 வருடங்களாக, பழைய சுவடே இல்லாமல்,தரைமட்டமாக அழிந்துபோனவற்றில் குறிப்பிடத்தக்கது – வாழ்கைமுறை, மொழிப்பயன்பாடு,இயற்கை, வனவிலங்குகளின் வாழும் உரிமை, மனிதநேயம், மரியாதை, ஒருவரை ஒருவர்மதிப்பது, மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பது, பொதுநலம் என்பவையே.

அப்போதல்லாம், ஒவ்வொரு மணித்துளிகளிலும் நாம் இயற்கையோடுதான் வாழ்ந்துள்ளோம்.நம்மை அறியாமலே விலங்கு, இயற்கை, மரம், செடி, கொடி, நட்பு, பாசம் ஆகியவற்றால்பின்னப்பட்டு சமமான வாழ்வாரத்தை பருகியுள்ளோம். பழைய வாழ்கைமுறை இன்றையசூழலுக்கு ஒவ்வாதமுறையா தெரியவில்லை. ஆனால், காலத்தின் கோலத்தில் புள்ளிவைத்துவரையத்துவங்கி பழகிவிட்டதால் – இதுவே இன்பம் என்று நினைத்து பழையவற்றைநூலைச்சுற்றி மனதில் பூட்டிவிட்டோம்.

காலையில் ஒரு நான்கு மணிசுமாருக்கு அப்பா எழுந்திருந்தால் – முதலில் கண்ணில்படுவதுநாங்கள்தான்.  தருமாஸ்பத்திரியில் படுத்துள்ளது போல் படுத்திருக்கும் எங்களை, “நேரமாச்சு,எழுந்து பசு மாட்டுக்கு தண்ணிவைக்கனும்” என்று பின்கட்டுக்கு போவார் – அப்போது ஒருஎச்சரிக்கையும் கொடுப்பார், “ம்…சீக்கிரம் எழுந்திருங்கள்”. எங்களில் முறை போட்டுக்கொண்டுபசுமாட்டிற்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு அறைத்துக்கொடுக்கவேண்டும், அதற்கென்றுதனியாக தொழுவத்தில் ஒரு ஆட்டுக்கல் பதியப்பெற்றிருக்கும். வைக்கப்படப்பிலிருந்துவைக்கோல் பிடுங்கி ஒவ்வொரு பசுமாட்டிற்க்கும் தொழுவில் போட்டுவிட்டு, முதலில் கழுநீர்(அதற்கு காப்பி) கொடுக்கவேண்டும். மாட்டின் சாணியை பல பகுதிகளிலிருந்து மொத்தமாகஎடுத்து ஒரு இடத்தில் சேர்க்கவேண்டும். பின் கிணற்றிலிருந்து ஒரு 150 வாளி தண்ணீர்இறைத்து தோட்டத்திற்கு பாய்ச்ச வேண்டும். விருமுறைநாட்கள் என்றால், முழு நாட்களும், வீட்டின் முன் யார்வந்து கழிநீர் கொண்டுவந்தாலும், வாங்கி பின் கட்டில் பசுமாட்டுத்தொட்டியில் நிறப்பவேண்டும். பூபாளத்தில் தூங்குவது ஒருவித சுகம். அன்னாளில், எதையுமே அறிந்திராதவயதில், எவ்விதகட்டுபாடும் இல்லாத மனம் இளம் காலைபோல் துள்ளித்திரியும், அப்போதுகடிவாளம் போட்டால் யாருக்குத்தான் பிடிக்கும்?.

ஒரு 4.30 மணிக்கு தட்சனைக்கோனார் என்று பால் கறக்க ஒருவர் வருவார்.  ஒல்லியான தேகம்,வாயில் எப்போதும் வெற்றிலையை அரவை இயந்திரம் போல் அரைத்துக்கொண்டிருப்பார்,சிறிய கண்கள் முழித்துள்ளாரா, விழித்திருக்கிறாரா தெரியாதிருக்கும், தலையில் ஒருமுண்டாசு, சட்டையெல்லாம் கிடையாது, வேட்டியை நம்பூதிரிகள் கட்டும் பஞ்சகச்சத்தை விட குறைவாக இறுக்கிக் கட்டி, நடையும் ஓட்டமுமாக வருவார்.  ஒரு செவலைப்பசு இருந்தது, அதுஇவர் கறந்தால்தான் ஒன்றும் பண்ணாது, வேறு யார் வந்தாலும் பதம் பார்க்கும், அடங்காது. இவர் சரியாக அதை கணிப்பார், அதன் ‘மூட்’ எப்படி, இன்னிக்கு பால் கொடுக்குமா, உடம்புசரியில்லையா, மகிழ்சியக இருக்கிறதா என்று ஒரு பார்வையில் ஆராய்ந்து கொட்டிவிடுவார். எங்கப்பா பின்கட்டிற்கு போய் 20 நிமிடத்தில், இவர் வந்தபின்புதான் பிரச்சனையே ஆரம்பமாகும். “ஏ, என்னா இன்னுமா எந்திரிக்கல, மணி 4.30 ஆச்சு, எந்திரிங்க” என்று சொல்லிக்கொண்டேபோகும்போது அவர் பேசுவது எதுவும் நமக்கு கேட்காது. இன்னாள் “திரும்பிப்பார்க்கிறேன்”கள்கனவில் வந்து அஸ்திவாரத்தை அசைத்துக்கொண்டிருக்கும்போது, தட்சினைக்கோணார்சொன்னால் காதில் கேட்கவா போகிறோம்?

கடகால்

அவருக்கு முந்தின இரவே ‘கடகால்’ என்ற நீள வட்டத்தில் ஒரு பாத்திரம் வைத்திருப்பார்கள். அதன் கூட கொஞ்சம் விளக்கெண்ணையும், தண்ணீரும் இருக்கும். இந்த ‘கடகால்’ என்பது ஒரு 35 செ.மீ நீளமும் 20 செ.மீ மேல்முகப்பு சுற்றும் உடைய எவெர்சில்வர் அல்லது பித்தளை பாத்திரம், இரண்டு காதும் இருக்கும்.  இதில் தான் பாலை கறப்பார்கள். இது நீளமாகவும், சுற்றளவு குறைவாகவும் இருக்கும். இவர் பசுமாட்டருகே போகும் முன், கொஞ்சம் வைக்கோலைப்போட்டுவிட்டு, எங்கப்பாவிடம், “பசங்க இன்னும் எழுந்திருக்கல, நான் கத்திட்டுத்தான் வாரேன்” என்று கூடுதலாக வைக்கோலைப்போடுவார்.  பின் விளக்கெண்ணையை மடுக்களில் தடவி(antiseptic?), தண்ணீரை தெளித்து, குந்தி உட்கார்ந்து இந்த ‘கடகாலை’ இரு முழங்கால் நடுவில் லாவகமாக் சொருகி பால் கறப்பார். இதில் ஒரு காம்பில் பால் கறக்க மாட்டார்கள், அது கன்றுக்குட்டிக்காக வைத்திருப்பார்கள்.

அவரின் உந்துதலாலும், எங்கள் மேல் உள்ள நம்பிக்கையாலும், அப்பா ஒரு வாளி நிறைய தண்ணீர் சேந்தி – சூடான ‘வார்ப்பில்’ பாயாசத்தை தூக்கி ஓடிவரும் சமயல்காரர்கள் போல், அரக்க பறக்க பின் கட்டிலில் தொடங்கி கொட்டில், தாழ்வாரம், ரேழி தாண்டி தூக்கிவந்து, நெல்வயலுக்கு உரம் வீசும் விவசாயி போல், போல் எங்கள் மேல் ஊற்றிவிடுவார்.  நாங்கள் படுத்திருக்கும் பஞ்சுமெத்தை வெறும் பாய், கைதான் தலையணை.  கனவில் பயத்தில் ஒண்ணுக்கு போய்விட்டாலும் சரி, இதுபோன்ற தண்டனை கொடுத்தாலும் சரி, அதை நாங்கள்தான் எடுத்துப்போய் கழுவவேண்டும்.  அண்ணா தம்பிகள் ஒரு கிரிக்கட் குழுதேரும் என்பதால், அப்பாவிற்கு துணிதோய்க்க எங்கள் முதுகே கல்லாக பயன்பட்டுள்ளது, பல சமயங்களில்.  எவ்வளவு கோபம் வந்தாலும் வீட்டுப்பெண்களை அடிக்கவோ, கடிந்து கொள்ளவோ மாட்டார்கள். “சே, நாமும் பெண்ணாய் பிறந்திருக்கலாம்” என்று பல நேரங்களில் ஏங்கியதுண்டு.  ஆனால், அன்பிற்கும் பாசத்திற்கும் ஒரு குறை வைக்கமாட்டார். எங்கள் வீட்டிலிருந்த செவலைப்பசுக்கு எல்லா கைங்கர்யம் செய்தும் அதன் மேன் ஒரு பாசம் வரும் சில நேரத்தில் ‘ஏ பசுவே உனக்கு இவ்வளவு உழைத்திருக்கிறேன், நீ எனக்கு என்ன பண்ணுவே?’ என்று கேட்டிருக்கிறேன்.  அதற்கு உடம்பு சரியில்லாவிடில் மாட்டாஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறேன். கிணற்றிலிருந்து வாளிவாளியாக இறைத்து கொட்டி அதை குளிப்பாட்டி அழகு பார்த்திருக்கிறேன். மாட்டிற்கு லாடம் அடிக்கும்போதும், மூக்கனாம் கயிறை குத்தும்போதும் விசனப்பட்டிருக்கிறேன்.

 

(தொடரும்)

தொடர்புடைய பிற பகுதிகள்

கோபால் பக்கங்கள்

 

Advertisements