By ஈ. கோபால்

இளங்குடி:
இந்த செவலை ஒரு முறை ஈன்றபோது அந்த பிரசவத்தை எப்படியாவது பார்க்க எண்ணி, கொல்லையில் போய் ஒளிந்து நின்று பார்த்தேன், அப்போது 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மிகவும் லாவகமாக பிரசவம் பார்த்தார் தட்சணைக்கோனார், முதலில் நான் பயந்து விட்டேன். இரண்டு நாட்கள் பின்கட்டிற்கு போகவேயில்லை. ஏன் இந்த பசு இவ்வளவு வேதனைப்படுகிறது என்ற விடை கிடைக்காமல் மனது ததும்பும். இந்த தொப்புள்கொடி என்பது கூட வரும் சதைக் கழிவுகளை “இளங்குடி” என்பார்கள் (placenta). இதை ஒரு ஓலைப்பாயில் கட்டி தனியாக எடுத்து வைத்து,  ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஆலமரத்தில் கொண்டு போய் கட்டிவிடுவார்கள். இப்படிச் செய்தால் நிறைய பால் கறக்கும் என்ற நம்பிக்கை (இது ஏன் என்று தெரியவில்லை.  ஆலமரத்தில் நூல் கட்டுவதும், குழந்தை பிறக்க வேண்டி சிறு தொட்டில்களை மரத்தில் கட்டுவதும் போல அப்போது நிலவிய ஒருவித கிராம நம்பிக்கையாக இருந்திருக்கலாம்). பல பசு மாடுகளும் ஊரில் ஈனும்போதும் இதே போல செய்வதால், நாம் எங்காவது பேருந்தில் வெளியூர் பயணிக்கும் போது, இந்த ஆலமரத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு வித வாடை மூக்கை விரல் விட்டி ஆட்டிவிட்டுச்செல்லும்.  ஆலமரம் வருவதற்கு முன்னாலேயே, நான் மூக்கைப் பொத்திக்கொள்வேன்.

சீம்பால்:
மகப்பேறிலிருந்து முதல் மூன்று(அ)ஐந்து நாட்கள் பசுவின் பால் சீம்பால் என்று அழைக்கப்படும். கன்றுக்குட்டி மட்டுமே அருந்தும், இதை நாம் குடித்தால் விஷம் என்பார்கள். விஷமெல்லாம் இல்லை, கன்றுக்குட்டிக்குரியதை நாம் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பதால் இப்படிச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். பல முறை இப்பாலை பால் கறப்பவரே எடுத்துக்கொண்டு போவதையும் பார்த்திருக்கிறேன். இப்பாலைக் கொண்டு தட்சணைக்கோனார் திரட்டுப்பால் போன்றதொரு இனிப்பைக் கிண்டியதை பார்த்திருக்கிறேன். பிறந்த மூன்று நாள் ஆகிய கன்றுக்குட்டி கூட விளையாடியிருக்கிறீர்களா? துருதுரு கண்களும், அமைதியான முகமும், அதன் அழகும் கொள்ளை கொள்ளும். அது ஒரு இனிமை. அது துள்ளித் திரிந்து, குதித்து ஓடுவதும், அதை பிடிக்க முடியாமல் திணறுவதையும் அனுபவித்தால்தான் தெரியும். அந்த கொட்டிலுக்குள்ளே அதை அவிழ்த்து விட்டு ஓடி விளையாடவேண்டும். தாய்ப் பசு பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் தாய்க்கு கோபம் வந்துவிடும். அதற்கு கைக்கு அடக்கமாக பாதி பந்தை மூங்கிலில் பின்னினார்ப்போல் ஒரு கவசத்தை மாட்டி விடுவார்கள், அது மண் தின்றுவிடாமல் இருக்க.

கோவிலுக்கு நேர்ந்து விடும் மாடுகள் பிறர் நிலத்தில் போய் மேய்ந்தால், ஒன்றும் கூறமாட்டார்கள், அதற்கு அடையாளமாக, முதுகில் ஒரு நாமம் போல் கரிக்கோடை போட்டுவிடுவார்கள்.  நம் வீட்டு மாடு மேய்ச்சலுக்கு போய்விட்டு யார் வீட்டுத் தோட்டத்திலோ, வயலிலோ, வைக்கப்படப்பிலோ மேய்ந்துவிட்டால், சத்தமில்லாமல் ஊர் கிராம அலுவலகத்தருகே உள்ள பவுண்டுத்தொழு என்ற இடத்தில் அடைத்துவிடுவார்கள். இந்த ‘பவுண்டுத்தொழு’ சுவாரசியமான ஒன்று. சுமார் ஆறடிக்கு ஆறடி என்ற கணக்கில் பெரிதான கல் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும், மேற்கூறை கிடையாது, வெட்டவெளியாக விடப்பட்ட ஒரு அறைதான் ‘பவுண்டுத்தொழு’. இதற்கு ஒரு சிறு பூட்டும், திறவுகோலும் இருக்கும், இந்த திறவுகோல் கிராம அலுவலகத்திலுள்ள அதிகாரியிடம் இருக்கும். இந்த மாடு எங்கள் விளைநிலத்தில் மேய்ந்து நெற்பயிரை நாசம் செய்து விட்டது என்று கூறி கிராம அதிகாரியிடம் திறவுகோல் வாங்கி அடைத்துவிடுவார்கள்.

காலை சுமார் 9 மணிக்கு அடைத்து விட்டார்கள் என்றால், நம் மாடை காணாமல் தேடிக் கண்டுபிடித்து ஒரு 11 மணிக்கு வந்தாலும் – அதற்குண்டான ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தி மாடை பத்திப்போகமுடியாது. சட்டப்படி மாலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான். நம் மாடு காணாமல் போய்விட்டால், நமக்கு எப்படித் தெரியும்? ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டே போகவேண்டும். சிலர், ஜோஸியரிடம் போவார்கள். குற்றங்கவாத்தியார் என்ற ஒரு ஜோசியர் இருந்தார், பானைத் தொப்பையும், காதுகளில் கடுக்கனும், சிவப்பில் வேட்டியும், கட்டி ஆஜானுபாகுவாக கண்ணை மூடிக்கொண்டு 9க்குள் ஒரு நம்பர் சொல்லு என்பார். பின் அங்கு மேய்கிறது, இங்கு மேய்கிறது என்று கூறுவார். சில நேரத்தில், ‘பவுண்டில்’ அடைத்துள்ளார்கள் என்று துல்லியமாக கணிப்பார். இவர் பையனே முன்கூட்டி எல்லா இடத்திலும் தேடிவிட்டு இவரிடம் கூறிவிடுகிறானோ என்ற சந்தேகம் நெடுநாள் எனக்குண்டு.

ஒருமுறை எங்கப்பா வைத்த உணவை சாப்பிடாமல் அடம்பிடித்த செவலைப் பசுவை அடித்துவிட்டார். அன்று எங்கம்மா மிகவும் அழுது சோகமாக்க்காணப்பட்டார். குடும்பத்தில் ஒன்றாகவே கருதப்படும் கால்நடைச் செல்வங்களால் மகிழ்ச்சியும், சரியாக சாப்பிடவில்லையென்றால் வருத்தமும் பட்ட காலங்கள் உண்டு. பருத்திக் கொட்டை, புண்ணாக்கை அரைக்கும் போது கொஞ்சம், எள்ளு, கொள்ளு, உப்பையும் போட்டு சுவையைக் கூட்ட அரைப்பார்கள். வைக்கப்படப்பு என்ற வைக்கோல் தேக்கி வைக்கும் பகுதி எப்போது ஒரு வெதுவெதுப்பாகவே இருக்கும். இதன் மேல் நாங்கள் உருண்டு பிரண்டு சண்டையிட்டுள்ளோம், உடம்பில் துணியில்லாமல் பிரளும்போது அரித்துக் கொட்டும், ஈரமாக இருந்தால் ஒருவித வாடை வரும். பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பம் குடிபெயர்ந்து வடக்கே போனபோது 2 பசுமாடு, எருமைமாடுகளை விற்கும் படி ஆயிற்று. மனது கணத்தது.

பல வருடம் உருண்டோடி, காலத்தின் சுவடில் பயணித்து, நாமும் அதே போல் மாற்றிக்கொண்டபின், என் பழைய வீட்டிற்கு போனேன். தொழுவம் இருந்தது. ஆட்டுக்கல் குழவி உடைந்து, சற்று கீழே  புதைந்து இருந்தது.  பலவருடம் உபயோகத்தில் இல்லாமல் இருந்த சுவடு தெரிந்தது. மேற்கூரை ஓடுகள் எல்லாம் உடைந்து, எல்லாமே அலங்கோலமாக இருந்தது. வைக்கோற்படப்பு இருந்த இடத்தில் கோரைப்புற்களும், மரமும் இருந்தது. பசுமாடு இருந்தபோது நடந்த இயல்பு வாழ்வும், பழைய நினைவுகளும் மட்டுமே பசுமையாக மனதில் ஓடியது.  ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வாக்கின்படி கால மாற்றத்தால் நாம் அனுபவித்த எல்லாமே கைவிட்டு போய்விட்டது ஒருவித ஏமாற்றத்தை கொடுத்தது. இனி அப்பசுமை வராது என்று உறுதியாக தோன்றியது. மனதிற்கும், உள்ளத்திற்கும் இன்பமளிக்கும் எல்லாவற்றையும் உதறிவிட்டு, எல்லாக் கெடுதல்களையும் ரசிக்க மனம் பக்குவப்பட்டுவிட்டது ஒருவிதத்தில் காலத்தின் கோலம்தான். இதுபோல் அனுபவிக்காத, ரசிக்காத வருங்காலத் தலைமுறை அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. ஒரு விதத்தில் நாமும், நம் அனுபவங்களும் ‘பவுண்டுத்தொழு’விற்குள் அடைக்கப்பட்ட பசுமாடுதான்.

(முற்றும்)

தொடர்புடைய பிற பகுதிகள்

காலத்தால் அழிந்தவை – பகுதி 1

கோபால் பக்கங்கள்

Advertisements