(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.

பேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.

நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது.  இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின்  ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.

இன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.

இதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.

இருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.

ஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை  நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு  நேரான  வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை  நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.

சந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர்   ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

(முற்றும்)

தொடர்புடைய பிற பதிவுகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags