(சமீபத்தில் உமா சங்கர் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வந்திருந்தார்.  ராஜன் அவரை பற்றி இந்த இடுகையை அனுப்பியுள்ளார். ஓவர் டூ ராஜன்…)

 

உமா சங்கர் ஐ ஏ எஸ் பேச இருப்பதாக  பே ஏரியா தமிழ் மன்றத்தில் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. எனக்கோ சில ஆச்சரியங்கள். உமா சங்கர் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சமீப காலங்களில் ஆளும் குடும்பத்தின் சக்தி வாய்ந்த பிரமுகர்களான மாறன் சகோதரர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்று கோரியதாலும், கருணாநிதியின் துணைவி தன்னை அழைத்து தனக்கு வேண்டப் பட்டவருக்கு ஆர்டர் தருமாறு வற்புறுத்தியதாகவும் ஆளும் குடும்பத்தை எதிர்த்துத் துணிந்து நின்றதால், தமிழக அரசினால் குற்றம் சாட்டப் பட்டு, கருணாநிதி அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப் பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப் பட்டவர். அப்படி அரசுக்கு வேண்டப் படாத ஒரு அதிகாரி எப்படி, எதற்காக அமெரிக்கா வருகிறார் என்பது முதல் ஆச்சரியம்? பொதுவாக அரசு செலவில் அதிகாரிகளை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் நிறைய அரசியல் நிலவும். ஆளுக் கட்சிக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளும் அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் அல்லது முறைத்துக் கொள்ளாத அதிகாரிகளைத்தான் வழக்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு சலுகையாக அனுப்பி வைப்பார்கள். வேண்டாத அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்யவே அரசின் தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி அளிக்க மறுத்து விடுவார்கள். அப்படியாகப் பட்ட ஒரு விசேஷ சலுகையை ஆளும் கட்சியை முறைத்துக் கொண்ட ஒரு ஐ ஏ எஸ் ஸுக்கு தருவது சாத்தியமேயில்லை. ஆகவே அவர் அரசுப் பயணமாக வந்திருக்கச் சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை. ஆக இது ஒரு தனிப் பட்ட விஜயமாகவே இருக்க முடியும். அப்படியே அவர் தனிப் பட்ட முறையில் விஜயம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டப்படாத ஒரு அரசு அதிகாரிக்கு அனுமதி அளித்தது மற்றொரு ஆச்சரியம். ஏனென்றால் வேண்டாத அதிகாரி என்றால், அவரது சொந்த வேலையின் காரணமாகக் கூடச் சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் என்றால் கூட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்ப்பார்கள், அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆகவே உமா ஷங்கர் அமெரிக்கா வருகை தருகிறார் என்ற செய்தி பலத்த ஆச்சரியத்தை அளித்தது.

அடுத்து பே ஏரியா தமிழ் சங்கம்  கருணாநிதிக்கு நடிகர்களுக்குப் போட்டியாக  ஆடல் பாடல்களுடன் டெலிகாம் விழா எடுத்திருந்தார்கள். அப்படியாகப் பட்ட ஒரு கருணாநிதி ஆதரவு தமிழ அமைப்பு எப்படி கருணாநிதி அரசை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரியை வரவேற்று மேடை வழங்குகிறார்கள் என்பது இரண்டாவது ஆச்சரியம். எனக்கு உமா ஷங்கரின் மீது குறிப்பிட சில காரணங்களினால் சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட நேரில் போய் அவரை யார் அழைத்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார், என்ன பேசப் போகிறார் என்று கேட்டு விடலாம் என்று வழக்கமான சனிக்கிழமை மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு, கூட்டம் நடைபெற இருந்த மில்பிட்டாஸ் ஸ்வாகத் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருந்தேன். நம் பாரதப் பண்பாட்டின் படி மூணு மணிக்கு கூட்டம் என்றால் எப்படியும் நான்கு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் நான் 3.45க்கு சென்றிருந்தேன். நம் கலாச்சாரம் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணி அளவில்தான் மில்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டலில் ஒரு பக்கம் தீபாவளிக்காக நகை விற்கும் நகைக் கடைக்காரர்கள் பளிச்சென்று விளக்கு போட்டு நகைகளை அடுக்கியிருக்க அதன் வெளிச்சத்தின் நடுவே, பொன்னகைகளின் நடுவே புன்னகையோடு உமா ஷங்கர் நின்று பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்பே வரவேற்பு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்திருந்தன.

வழக்கமாக நான் சந்தித்திருக்கும் பெரும்பாலான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் போன்ற உயரமோ, கம்பீரமான தோற்றமோ, அர்விந்த் சாமி பள பளப்போ, ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கே இருக்கும் இயல்பான அதிகாரக் களையோ, பயமுறுத்தும் அதிகார முறுக்கோ இல்லாமலும், முக்கியமாக அரசு அதிகாரிகள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல பிறக்கும் பொழுதே தைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போன்ற சஃபாரி சூட்டு கோட்டு இல்லாமலும் வெகு சாதாரணமான தோற்றத்தில் நம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் போல, பே ஏரியா டெக்கிகள் வீடுகளில் (இங்கு ஆஃபீசுக்கே அரை டவுசரில்தான் வேலைக்கு வருவார்கள்) அணிவது போன்றே ஒரு காலர் இல்லாத சாதாரண டீ ஷர்ட்டுடன் இயல்பாக எளிமையாகத் தோற்றமளித்தார். இவர் வழக்கமான அரசு அதிகாரி இல்லை என்பதும் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிதானவர், அதிகார பந்தா மிரட்டல் இல்லாத வித்யாசமான ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை அவரது பேச்சும், உடல் மொழியும் தோற்றமும் அளித்தன. அவரது பேச்சும் கூட அலங்காரம் இல்லாத ஆடம்பரமில்லாத எளிய தமிங்க்லீஷ் பாணியிலேயே இருந்தது.

அங்கு வைக்கப் பட்டிருந்த விளம்பர பேனர்களைப் பார்த்தவுடன் அவர் யாரால் அழைக்கப் பட்டு இங்கு வந்திருக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. ஆந்திராவில் லோக்சத்தா அமைப்பின் டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் (இவரைப் பற்றியும் இவரது லோக் சத்தா அமைப்பினைப் பற்றியும் இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்) அவர்களால் உந்தப் பட்டு தமிழ் நாட்டில் அது போன்ற ஒரு அமைப்பான மக்கள் சக்தி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். அதன் அமெரிக்க கிளையுடன் சேர்த்து ஃபிப்த் பில்லர் என்றொரு நான் ப்ராஃபிட் அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் ஊழலை எதிர்க்க ஆரம்பிக்கப் பட்ட ஒரு இயக்கம். லஞ்சம் கேட்டால் மறுக்கவும் பதிலாக பூஜ்ய ரூபாய் நோட்டைக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் ஒரு இயக்கம். லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்பது இந்த அமைப்பின் பிரச்சார கோஷம். ”அன் எரப்ஷன் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” என்ற கோஷத்தோடு இந்த இயக்கம் ஐந்தாம் தூண் செயல் படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய் ஆனந்த மக்கள் சக்தி கட்சி மக்கள் சக்தி கட்சி என்ற அரசியல் அமைப்பையும் ஆந்திராவில் ஆரம்பிக்கப் பட்டுள்ள லோக் சத்தாவின் தமிழ் நாட்டும் வடிவமாக துவக்கியுள்ளார். ஐந்தாவது தூண் என்ற இவர்களது அமெரிக்க அமைப்பின் மூலமாக  தமிழ் நாட்டில் லஞ்ச ஊழலை எதிர்த்துத் துணிவுடன் போராடும் உமா சங்கர் ஐ ஏ எஸ் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அழைப்பின் பேரில் உமா ஷங்கர் அமெரிக்கா வந்துள்ளார்.

வந்த இடத்தில், லோக்கல் தமிழ் சங்கத்தின் ஆதரவைக் கோரியும் அவர்களுடன் இணைந்தும் கூட்டம் நடத்துகிறார்கள். உள்ளூர் பே ஏரியா தமிழ் மன்றம் இது நாள் வரை இவரைப் போன்ற ஒரு விஸில் ப்ளோயருக்கு ஆதரவும் மேடையும் அமைத்ததில்லை.  சமீபத்தில் இப்பகுதிக்கு வந்திருந்த இந்தியாவின் மற்றொரு முக்கியமான ஊழல் எதிர்ப்புப் விழிப்புணர்வாளர்களான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களை பே ஏரியா தமிழ் மன்றம் என்றுமே ஆதரித்து வரவேற்றதில்லை. ஆனால் முதன் முறையாக ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இல்லாமல்  ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற வகையில் உமா ஷங்கர் அவர்களுக்கு பே ஏரியா தமிழ் மன்றம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு மாற்றமாகும். வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனி நபராகப் போராடி வரும் டாக்டர் சுவாமிக்கும் இதே ஆதரவை அளித்து அவருக்கும் மேடை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற சிறிய சர்ச்சைக்குப் பின்னால் ஆந்திர மாநில லோக்சத்தா அமைப்பினர் சிலரும் கூட்டத்திற்கு வந்திருந்தபடியால் ஆங்கிலத்திலேயே அவர் பேசுவதாக முடிவாகியது.

(தொடரும்)

 

தொடர்புடைய பிற பதிவுகள்

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags

Advertisements