1948ல் அம்பேத்கார், நேரு, சர்தார் படேல் ஆகியோர் மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பையும், பெண்கள் விடுதலையையும், மற்ற பல முன்னேற்றக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்திய சட்டத்தை தயார் செய்தனர்.  இது தனிப்பட்ட ஹிந்து சட்டத்தை எதிர்த்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கொளகையை முன் வைத்தது. இதை ஹிந்து-சட்ட-மசோதா (Hindu code Bill) என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படை வேலைகள் இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாத ஒன்று என்று தெரிய வரும் பொழுதே ஆரம்பித்து விட்டது. அதாவது 1941லேயே அனைத்து இந்துக்களுக்கும் ஒருமையான சட்டத்தை ஏற்படுத்த சர்.பி.என்.ராவ் தலைமையிலான கமிட்டியை பிரிட்டிஷார் உருவாக்கினர்.  இந்தச் சட்டம் மிதாக்‌ஷரத்தையும், தாயாபாகத்தையும் நிலைகுலையச் செய்தது. அதனால் பல இந்து மேல் ஜாதியினரை பகைத்து கொண்டார் நேரு.

இந்த சீர்திருத்தச் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்*:

1. மிதாக்‌ஷரத்தையும்,  தாயபாகத்தையும் முழுமையாக அல்லாவிட்டாலும்  பல பகுதிகளை புறக்கணித்தல் – சுருக்கி சொல்லப்போனால் மகனுக்கும் மகளுக்கும் அப்பாவின் சொத்தில் 50-50

2. பெண்களுக்கு அலிமோனி – விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவானாம்சம்

3.  ஜாதி மாற்று திருமணங்களை அங்கீகரித்தல் – அதாவது சட்டப்படி ஜாதி மாற்று மணங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்டப்படி ஒரே ஜாதியில் திருமணம் பண்ணியவர்கள் போன்று அணைத்து உரிமையும் பெறுதல் – அதாவது சொத்துரிமை போன்றவை.

4. பெண்களுக்கும் டைவோர்ஸ் உரிமை

5. மோனோகாமி – ஒரு மனைவியோ, ஒரு கணவனோ மட்டும் இருக்கவேண்டும்

6. வேறு ஜாதிக் குழந்தைகளை தத்தெடுப்பது

*(”காந்திக்கு பிறகு இந்தியா” – ராமச்சந்திர குகா)

நல்லச் சட்டங்கள் தானே என்று தோன்றுகிறதல்லவா? உங்களுக்கு தோன்றுகிறதோ இல்லையோ, பல முன்னேற்ற சமுதாயத்திற்கு காலகாலமாய் தோன்றிக்கொண்டு தானிருந்திருக்கிறது. இந்த மாதிரி சீர்திருத்தங்களெல்லாம் கௌடிலயர் காலத்திலிருந்தே பல மேல ஜாதி இந்துக்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரவிந்தன் நீலகண்டன்  ”இந்துத்வத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்” (“பண்பாட்டை பேசுதல்”  – தமிழ்ஹிந்து பதிப்பகம்) என்ற கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். ஸின் முக்கிய கோட்பாடான சாதிய புறக்கணிப்பிற்கு  சத்தியகாம ஜாபாலா, ஸ்ரீமத் பி.ஸ்ரீ.ஆச்சாரியார் முதற் கொண்டு பல உதாரணங்கள் கூறுகிறார். வீர் சாவர்க்கர், குருஜி மாதவ சதாசிவ கோல்வால்க்கர் முதலியோர்கள் சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ். மேடைகள் எப்பொழுதும்  ரைகவர் முதல் அம்பேத்கார் வரை முன் வைத்து பேசுகிறது என்பதையெல்லாம் அரும்பாடுபட்டு விளக்குகிறார். அவரின் பிரயத்தனம் புரிகிறது. மேல் ஜாதி ஹிந்துக்கள் முற்போக்கு சிந்தனைக்கு தடையாக இருந்ததை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது என்ற செய்தியை சொல்ல பாடுபடுகிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் ஜாதியத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளை சுட்டுகிறார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  ”ஹிந்து சட்ட மசோதா”விற்கு கடின எதிர்ப்பு தெரிவித்ததாக வரலாறு கூறுகிறது. அனைத்திந்திய இந்து-சட்ட-மசோதா-எதிர்ப்பு என்ற அமைப்பிற்க்கு தன் முழு ஆதரவை அளித்திருக்கிறது. துவாரகாவின் சங்கராச்சாரியர், பழமைவாத(conservative) வக்கீலகள், மற்றும் பலரின் இந்த மசோதா எதிர்ப்பிற்கு பின்னால் தன் முழு பலத்தையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அளித்ததாக ராமச்சந்திர குஹா கூறுகிறார். இந்தச் சட்டம் ”ஹிந்து இனத்திற்கு ஒரு அணு குண்டு” என்று ஆர்.எஸ்.எஸ்.ச்ஸை சேர்ந்தவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

இன்று ஆர்.எஸ்.எஸ். இதை எப்படி நியாயப்படுத்துகிறது?

Advertisements