வருஷம் 1946. இந்தியா விடுதலைப் பெறப்போவது உறுதியாகிவிட்டது. ஒரு இடைக்கால மத்திய அரசை அமைக்க வேண்டும். காங்கிரஸ், ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் இரண்டையும் ஒரு கூட்டணி அரசை அமைக்க வைஸ்ராய் கூப்பிட்டிருந்தார். முஸ்லிம் லீக் பயங்கர வீம்பு பிடித்துக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த முஸ்லிமும் அமைச்சராகக் கூடாது என்று நிபந்தனை. இதை காங்கிரஸ் நிராகரித்தது. (அபுல் கலாம் ஆசாத் ஒரு வருஷம் முன்பு வரை காங்கிரசின் தலைவராக இருந்திருக்கிறார்) லீக் பழிக்குப் பழி உளிக்கு உளி என்று தானும் ஒரு ஹிந்துவை அமைச்சராக்கியது. யார் அந்த முஸ்லிம் லீகின் (ஒரே ஒரு) ஹிந்து? அவர்தான் இந்த ஜோகேந்த்ரநாத் மண்டல்.

இதைப் பற்றி முதன்முதலாக தெரிந்து கொண்டபோது முஸ்லிம் லீகில் எப்படி ஒரு ஹிந்து போய்ச் சேர்ந்தார் என்று வியந்தேன். அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை பல விஷயங்களை விளக்குகிறது. மண்டல் தலித் தலைவர். தலித்களும் முஸ்லிம்களும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள், அதனால் அவர்களது இலக்குகளில் இசைவு உண்டு, சேர்ந்து இருந்தால் அது பலத்தை அதிகரிக்கும் என்று கருதி இருக்கிறார். ஜின்னாவால் கவரப்பட்டு அவருக்கும் லீகுக்கும் உண்மையான விசுவாசியாக இருந்தார். பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானுக்குப் போனார். அங்கே சட்ட அமைச்சராக இருந்தார். ஜின்னா இருந்தவரைக்கும் எல்லாம் சரியாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ஜின்னாவின் மறைவுக்குப் பிறகு அங்கே ஹிந்துக்கள் ஒடுக்கப்படுவதைப் பார்த்து வேறு வழியில்லாமல் தன பதவியை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

மண்டல் தலித்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவர். அவரது ஆதரவு இல்லாவிட்டால் சுராவர்தி 1946-இல் வங்காளத்தில் வெற்றி பெற்று முஸ்லிம் லீக் அரசை அமைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படி முஸ்லிம் லீக் அரசு அமைதிருக்காவிட்டால் கல்கத்தா, நவகாளி கலவரங்கள் எல்லாம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. வங்காளத்தில் நடந்தது சுராவர்தி அரசின் மறைமுக ஆதரவோடு நடந்த கலவரம். (ஹே ராம் படத்தில் காண்பிக்கப்படுவது இந்த கலவரம்தான்.) அப்படியே யோசித்துக் கொண்டே போனால் பிரிவினைக்கே இவர்தான் காரணமோ என்று தோன்றுகிறது!

சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம், கண்மூடித்தனமான விசுவாசம், தப்புக் கணக்கு ஆகியவை நல்ல தலைவராக பரினமித்திருக்கக் கூடிய ஒருவரை எப்படி திசை மாற்றி இருக்கிறது என்பதற்கு மண்டல் ஒரு உதாரணம்.

நல்ல கட்டுரை எழுதி இருக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
ஜோகேந்த்ரநாத் மண்டல் – விக்கி குறிப்பு
ஜோகேந்த்ரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்

Advertisements