சாரதா ரொம்ப ஃபிலாசஃபிக்கலாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்!

For the record, நாளைக்கு இருக்க மாட்டோம் என்பதனால் இன்றைக்கு ஏன் மனதைப் போட்டு உழப்பிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான் (ஆர்வி).

தினம் தினம் இப்போதெல்லாம் மற்றவர்களின் மரணச்செய்திகள் கேட்கக் கேட்க மனதுக்குள் பயம் எட்டிப்பார்க்கத் துவங்கிவிட்டது. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது சின்ன வயதிலிருந்தே கேள்விப்பட்டதுதான் என்றாலும் கூட, கண் முன்னேயே பச்சிளம் குழந்தைகள் கூட மரணிப்பத்தைக் கண்டபோதும் கூட ஆறிலும், பதினாறிலும், இருபத்தாறிலும் ஒரு அசட்டு தைரியம், நமக்கு இன்னும் வயதிருக்கிறதே என்று. என்னவோ இத்தனை வயதுக்குப் பின்தான் மரணம் வருமென்று இறைவன் சொல்லிவிட்டது போல.

ஆனால் இப்போதெல்லாம் அந்த அசட்டுத் துணிச்சலும் கூட இல்லை. ஒவ்வொரு மரண ஓலம் கேட்கும்போதும் அடுத்தது நாமோ என்ற பயம். இது ஒன்றும் வரிசையில் நின்று வாங்கும் பொருள் அல்ல, நமக்கு முன்னால் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்று தைரியம் கொள்வதற்கு. உலகத்திலேயே மிகப் பெரிய பம்பர் குலுக்கல் நடத்திக் கொண்டு இருப்பவன், யாருக்கு அடுத்து மரணத்தை பரிசாகத் தருவானென்பது மிகப் பெரிய புதிர். நூறு வயது முதியோரை அடுத்து ஆறுமாதக் குழந்தையை அழைப்பான். அது தெரிந்தும் ஆட்டம் போடுகிறோம். மரணித்தவனை குழியில் தள்ளி மூடிவிட்டு வந்த நமக்கு அடுத்து சிரிப்பதற்கு எப்படி வாய் வருகிறது? அடுத்த மரணத்தைப் பார்த்ததும் அந்த சிரிப்பை சிறிது காலம், அல்லது சிறிது நேரம் தற்காலிகமாக ஒத்திப்போட்டுவிட்டு மீண்டும் அழுகிறோமே அது எப்படி?

பெரிய பெரிய கோட்டை கொத்தளங்களையும், அரண்மனைகளையும் கண்டு ‘அடேயப்பா இதை எப்படிக் கட்டினார்கள்?’ என்று வியப்பதற்கு முன் நமக்கு (எனக்கு) தோன்றுவது ‘இதைக் கட்டியவர்கள் எல்லாம் இப்போது எங்கே?. இதை ஆண்டு அனுபவித்தவன் இப்போது எங்கே? காலம் முழுவதும் நிலைத்திருப்போம் என்றுதானே இவற்றைக் கட்டினான்? அவன் ஆசைப்படி இருந்தானா? மரணத்தைப் பற்றி சிறிது சிந்தித்திருந்தால் இவற்றைக் கட்டுவதில் மெனக்கெட்டிருப்பானா?’ என்ற எண்ணம்தானே தோன்றுகிறது என்னென்ன ஆடம்பரங்கள் எத்தனை வேலைப்பாடுகள்! இவற்றைப்பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்குத் தர வேண்டுமாம். எதற்கு? நாமே ‘நாலாளுக்கு மேலாளாக’ப் போகும்போது யாருக்காக இவையெல்லாம்?

இப்போதெல்லாம் சுவையான உணவுகளை ஏற்பதற்குக் கூட நாவும், மனமும் மறுக்கிறது. விருந்துகளைப் புறக்கணிக்கிறேன். காரணம் அவ்வாடம்பர விருந்துகளில், இவ்வுலகின் நிலையாமை மறக்கப்படுகிறது. கேலிக்கூத்துகள், வேடிக்கைகள் முதலிடம் பிடிக்கின்றன. நமக்கோ மனம் கூசுகிறது. இதை விட சுவையாகச் சாப்பிட்ட நம் முப்பாட்டன் எல்லாம், அடையாளத்துக்கு எலும்புக் கூடு கூட இல்லாமல் போய்விட்ட பிறகும் அதை மறந்து மீண்டும் கேளிக்கைகளில் மனம் ஈடுபட துணிவது எப்படி? சில நாள் முன்பு வரை நாமும்தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு ஆடினோம் என்ற சமாதானத்தை இப்போது மனம் ஒப்பவில்லை. இளைய சமுதாயத்துக்கு நிலையாமை பற்றிய அச்சம் ஊட்டப்பட்டால், அனாச்சாரங்கள் குறைய வாய்ப்புண்டோ? ‘நாம் இளைய தலைமுறையாய் இருந்தபோது சிந்தித்தோமா’ என்பதைவிட, நமக்கு அச்சமூட்ட வேண்டியவர்களின் மெத்தனப் போக்கும் காரணமாக இருந்திருக்கக்கூடும். முந்தைய தலைமுறை செய்த அதே தவறை நாமும் செய்து இளையோர்களின் வாழ்க்கையை அச்சமூட்டி நெறிப்படுத்துவதில் தவற வேண்டுமா?

வீடு : ஒரு காலத்தில் பார்த்தோர் வியக்கும் கலைக்கூடமாக இருந்த என் வீடு, இப்போது நேர்மாற்றமாக. இப்போது பார்ப்பவர்களும் வியக்கிறார்கள், இந்த வீட்டிலும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று. அப்படி அதிசயிக்கும் மானிடப்பிறவிகளே, நாம் நிரந்தரமாகப் போக இருக்கும் மண்ணறை, இதைவிட பல நூறு மடங்கு மோசமானதாயிற்றே, உணர்ந்தீரா?

தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம்

Advertisements