தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி பாரதி தமிழ் சங்கம் தனிமை என்ற நாடகத்தை சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதி மக்களுக்கு அளித்தது. இரண்டு காட்சிகள். மதியம் இரண்டு மணிக்கு நாங்கள் சென்றோம். இன்னொரு காட்சி மாலை 6 மணிக்கு. வேண்டா வெறுப்பாக குழந்தைகளுக்கு தனிமையை கொடுத்துவிட்டு, நான்-சித்ரா, ஆர்வி-ஹேமா நால்வரும் கடமையே என்ற உணர்வில் சென்றோம். ஓஹ்லோனி கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடனே பார்க்கிங் லாட்டிலேயே பாரதி தமிழ் மன்ற வாலண்டியர்கள் வரவேற்று நமக்காக பார்க்கிங் டிக்கட்டை கருவியிலிருந்து தருவித்து கொடுத்தார்கள். இரண்டு ரூபாய். ஜாக்ஸன் தியேட்டருக்கு வழி சொன்னார்கள். வரவேற்ப்பு எல்லாம் பலமாக தானிருக்கிறது…உள்ளே டிராமா எப்படியோ என்று யோசனையில் பல படிகள் ஏறி ஜாக்ஸன் தியேட்டரில் நுழைந்து இருக்கையைப் பிடித்தோம்.

சரியான நேரத்திற்கு நாடகத்தை தொடங்கினார்கள். ஜாக்சன் தியேட்டரில் பல பிற மொழி நாடகங்கள் நடக்குமென புரிகிறது. அதற்க்கு தகுந்தவாறு அரங்க அமைப்பு உள்ளது. கவனத்தை ஈர்த்த்து சப்-டைட்டில் போடும் வசதி. திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் போட்டு தான் பார்த்திருக்கிறேன். புதிதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. சப்-டைட்டில் தெரியும் திரை அமைப்பு மிகவும் உயரத்திலிருந்ததால் டிவிடி மற்றும் திரைப்படங்களில் பார்ப்பதுப் போல் சப்டைட்டிலை கடைககண்ணில் பார்க்க முடியாது. நாங்களிருந்த இடத்திலிருந்து நடுப்பகுதியிலிருந்து மிகவும் கடினம். ஒன்று சப்-டைடிலைப் பர்க்க வேண்டும் அல்லது நாடகக் காட்சிகளை பார்க்க வேண்டும். இரண்டும் ஒரே பார்வையில் அடங்காது. பாக்ஸ் அமைப்பில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒருவேளை தெரியலாம்.

நாடகம் காட்சி அமைப்பு எளிமையாக இருந்தது. அதிகம் பிராப்ஸ் இல்லை.ஆனால் நாடகக் காட்சிகளுக்கே உண்டான செயற்க்கைதன்மையை மறைக்க முடியவில்லை. இந்த குறையை வலிமையான கதையினாலும் தேர்ந்த அளவான நடிப்பிலும் ஒரளவு மறைத்திருக்கிறார்கள்.

வைஷ்ணவ குடுமபத்தின் அடையாளங்களையும், ஆசாபாசங்களையும், பாரம்பரியங்களையும் பொருளியல் உலகின் சூழலில் தவற விட்டுவிட்டு கூட்டு குடும்ப வாழ்க்கையின் சுகங்களை, இன்பங்களையும் இழந்து நிற்கும் தனிமையை தன் குழந்தைகள் தன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது உணர்கிறார் மணி எனற ஒரு பெரியவர் (நவீன் நாதன்). தன் கிராமத்து அக்ரகாரத்தைத் தாண்டி பணி நிமத்தமாகவும், கூட்டுக் குடும்பத்தின் அவதிகளிலிருந்து தனனையும் தன் மனைவியையும் விடுவித்துக் கொள்ள சென்னை செல்ல முயலும் போது, குடும்பத்தின் சந்தோஷத்திற்க்கு முடிவு ஏற்ப்படுகிறது. தன் பக்க நியாத்தை விளக்க முயல பல உறவுகளின் முக்கியத்தை பலவீனமாக்கி மனங்களை புண்படச் செய்கிறார். பின்னர் தான் தனிமையாக வாழும் முதிய காலத்தில் வாழ்க்கையில் பிடிப்பற்று, நோய் நொடியில் உழன்று கொண்டு முடிவை எதிர்ப்பார்த்து விரக்தியாக காலத்தை கழிக்கும் பொழுது ஸ்ரீதர் (ஜெய் கணேஷ்) என்ற ஒரு ஒரு புதிய நண்பர் வருகிறார். பெரியவ்ரின் வாழ்வில் சீர்திருத்தங்களை செய்கிறார். பெரியவர் தனிமையிலிருந்து விடுபடுகிறார்.

பழைய கதை என்றாலும் நவீன சூழலுக்கு மாற்றிஅமைத்திருக்கிறார்கள். நாடகக் கதை அமைப்பு ஃபளாஷ் பேக் யுத்திகளால் சிறப்பாக அமைந்திருக்கிறது. கடந்த கால நிகழ் கால பிரிவினைகளை லைட்டிங் மற்றும் ஃபிரீஸ் யுத்திகளாலும் கையாண்டிருக்கிறார்கள். லைட்டிங் தரம் உயர்ந்தது. ஒலியமைப்பும் உயர்ந்த ரகமே. ஜாக்சன் தியேட்டர் அமைப்புகள் கைகொடுத்திருக்கிறது.

நாடகத்தில் நகைச்சுவை ஒரு ப்ளஸ். அதுவும் புது மருமகள் சிகரெட் பிடிப்பதாக பார்த்த மாமியார் வரும் காட்சி புனைவுகள் பிரில்லியண்ட். நாடகத்தின் மையப் பகுதியில் சற்றே தொய்விருந்தது. மற்றபடி நாடகத்தில் எந்தத் குறைப்பாடும் எனக்குத் தெரியவில்லை.

இது ஒரு கிரியா கிரியேஷன்ஸ் நாடகம்.  ஆனந்த் ராகவ் எழுதிய நாடகத்தை தீபா ராமானுஜம் டைரக்ட் செய்திருக்கிறார்.  முன்னர் ஹியூஸ்டன், மற்றும் பல நகரங்களில் நடத்தியிருக்கிறார்கள்.  தமிழகத்திலும் நடத்தியிருக்கிறார்கள்.

பாரதி தமிழ் மன்றம் இம்முறை சிறப்பாக ஆர்கனைஸ் செய்துள்ளது. அதுவும் மிகவும் சிறப்பாக. பொதுவாக சிக்கனம் கருதி பாரதி தமிழ் மன்றத்தினர் சிறிய பட்ஜெட் நிகழ்ச்சிகளாக நடத்த அது மக்கள் மனதில் பெரிதாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இம்முறை ஹை பட்ஜெட்க்கு போயிருக்கிறார்கள். பணத்துக்கு ஏற்ற தரம். சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.  பணம் செலவு செய்வது ஒரு புறம், நேரம் செலவு செய்வது ஒர் புறம். தரமான நேரத்தை தந்திருக்கிறார்கள்.

வளைகுடா பகுதியில் இது வரைப் பார்த்த நாடகங்களிலேயே மிகவும் நேர்த்தியான நாடகம். நாடக், மற்றும் பல தொழில்முறை குழுக்களைக் காட்டிலும் அபாரமாக வந்துள்ளது.

பிற்சேர்க்கை – இதில் சப்-டைட்டில் என்று நான் குறிப்பிட்டிருப்பதன் சரியான பெயர் சூப்பர் டைட்டிலாம். பின்னர் தான் அறிந்துக் கொண்டேன்.

Advertisements