கார்ல்சன் இன்றைய செஸ் ஆட்டக்காரர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இருபது வயது இளைஞர். ஆனந்தை தோற்கடித்து அடுத்த சாம்பியன் ஆகிவிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர் திடீரென்று தான் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.

பிரச்சினை இதுதான் – உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு ஸ்டேஜ் உண்டு. முதல் ஸ்டேஜில் இப்போதைய சாம்பியனோடு யார் போட்டி இடுவது என்று தேர்ந்தெடுப்பார்கள். அவர்தான் சாலஞ்சர். இரண்டாவது ஸ்டேஜில் தற்போதைய சாம்பியனோடு சாலஞ்சர் விளையாடுவார். யார் இந்த இருவரில் ஜெயிக்கிறாரோ அவர்தான் அடுத்த சாம்பியன். அதாவது ஃபெடரர் தற்போதைய விம்பிள்டன் சாம்பியன் என்று வைத்துக் கொண்டால்: முதலில் நடால் உட்பட்ட பலரும் யார் ஃபெடரரோடு ஃபைனல்ஸ் விளையாடுவது என்று தீர்மானிக்க போட்டி இடுவார்கள். ஃபெடரர் நேராக ஃபைனல்சுக்கு வந்துவிடுவார். நடால் பல கேம்கள் விளையாடி களைத்துப் போய் ஃபைனல்ஸ் வந்து இன்னும் தம் பிடித்து ஃபெடரரை வெல்ல வேண்டும். ஏழெட்டு வருஷம் முன்னால் ஒரு சாம்பியன்ஷிப் போட்டியில் இப்படித்தான் ஆனந்த் அற்புதமாக விளையாடி கடைசி ஸ்டேஜில் கார்போவிடம் தோற்றுப் போனார்.

இது அநியாயம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போதுதான் 15-20 வருஷங்களுக்குப் பின் செஸ் உலகம் ஒன்றுபட்டு ஆனந்த் சாம்பியன் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் சாம்பியன் என்ற பதவியின் மதிப்பை குறைக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத் தக்கது இல்லை. கார்ல்சன் சரியான செயலை தவறான நேரத்தில் செய்திருக்கிறார். சரி ஆனந்துக்கு போட்டி இன்னும் சுலபம் ஆகிறது…

செஸ்ஸில் எப்போதுமே சாம்பியன்களுக்கு அதிக சலுகை அளிக்கப்படுகிறது. முன்னாளில் இதை விட மோசம்; இரண்டாவது ஸ்டேஜில் சாம்பியனும் சாலஞ்சரும் பத்து கேம் விளையாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஜெயித்தால் ஒரு பாயின்ட், டிரா செய்தால் அரை பாயின்ட், தோற்றால் பாயின்ட் கிடையாது. சாலஞ்சர் 5.5 பாயின்ட் பெற்றால்தான் அடுத்த சாம்பியன் ஆக முடியும். சாம்பியன் ஐந்து பாயின்ட் பெற்றால் போதும், அவரே சாம்பியனாகத் தொடர்வார். அதாவது சாலஞ்சர் என்று வருபவர் தான் சாம்பியனை விட பெட்டர் என்று நிரூபித்தால்தான் தற்போதைய சாம்பியனுக்கு கல்தா கொடுப்பார்கள். சாம்பியனுக்கோ தன்னை விட யாரும் பெட்டர் இல்லை (ஆனால் தனக்கு சமமாக இருக்கலாம்) என்று நிரூபித்தால் போதும். சமீப காலத்தில்தான் இந்த விதியை கழற்றிவிட்டு டைப்ரேக்கர் எல்லாம் வைக்கிறார்கள். போட்வினிக் இரண்டு முறை இப்படி பிரான்ஸ்டீனுடனும் ஸ்மிஸ்லோவுடனும் டிரா செய்தே உலக சாம்பியன் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஐம்பது வருஷம் முன்னால் நிலை இதை விட மோசம்: சாலஞ்சர் வென்று உலக சாம்பியன் ஆன பிறகும் பழைய சாம்பியன் அவரை ஒரு rematch-க்கு கூப்பிடலாம். (ஆனால் சாலஞ்சர் கூப்பிட முடியாது). போட்வினிக் இப்படி இரண்டு முறை rematch-இல் ஜெயித்து தன சாம்பியன் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்மிஸ்லோவ், தால் இருவரும் அப்படி தங்கள் உலக சாம்பியன் பதவியை கொஞ்ச காலத்திலேயே கோட்டை விட்டார்கள்.

கார்ல்சன் அடுத்த போட்டி வரை பொறுத்திருந்திக்கலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

Advertisements