நண்பர் கோபால் ஒபாமாவின் இந்திய விஜயத்தால் இந்தியாவுக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார். ஊடங்கள் ஒபாமா இங்கே வந்தது நமது பூர்வ ஜன்ம புண்ணியம் என்ற ரேஞ்சில் பேசுவதை எதிர்த்துப் பொங்குகிறார்.

செய்தி: வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது சிரமம் என, ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒபாமா இந்தியா வரப்போகிறார். இந்த ஒரு வரியை வைத்தே ஆரம்பித்து விட்டார்கள், ஒபாமா சிரிக்கிறார், ஒபாமா ஒடுக்கப்பட்டவர்களின் காவலன், இந்தியாவின் விடிவெள்ளி, ஒபாமா சிரிக்கிறார், ஒபாமா தீபாவளி கொண்டாடுகிறார் – காது ஜவ்வு கிழியும் அளவுக்கு அடிக்கும் தம்பட்டம் அவர் திரும்பிப் போனாலும் ஒலிக்கும் போல் உள்ளது. பொதுவாகவே நம் ஜனங்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு, வெள்ளைக்காரனிடம் ஒரு சான்றிதழை வாங்கி சட்டம் போட்டு மாட்டிவிட்டால் ஜன்ம சாபல்யம் கிடைத்த்து போல் ஆகிவிடும். மரத்தடியில் ஒரு ஜோசியன் பல படங்களை மாட்டியிருப்பான். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பிரபல நடிகைகள், நடிகர் கூட படங்கள் எடுத்துக் கொண்டு மாட்டி நம்மை வசீகரிப்பான். இந்த நிலையில்தான் நம் ஊடகங்களும், அரசாங்கமும் இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது. பாமா விஜயம் என்ற படத்தில், ஒரு சினிமா நடிகை பக்கத்து வீட்டில் குடி வந்து, அவளை ஒரு முறையாவது வீட்டிற்க்கு விஜயம் செய்ய வைக்க வேண்டும் என்ற மயக்கத்தில், சீரான குடும்பம் எப்படி தடம் புரள்கிறது என்பதை அற்புதமாக்க் காண்பித்திருப்பார்கள். அன்று பாமா, இன்று (ஒ)பாமா, அவ்வளவுதான் வேறுபாடு. இதில் குடும்பம்தான் இந்தியா.

ஒரு வித லாபத்தையோ, இவனால் ஒரு நன்மை நமக்கு உண்டு என்பதை உறுதியாக்கிக்கொண்டே அமெரிக்கா நம்மிடம் நட்பு பாராட்டும், இதற்கு அமெரிக்கா மட்டுமல்ல எந்த உலக நாடுகளுமே விதிவிலக்கல்ல.

“இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கறாண்டா” என்று மற்றவர் எடைபோடும் தூரத்தில்தான் நம்மை வைத்துக் கொண்டுள்ளோம். அவனுக்கு ஒரு ஆதாயம் இல்லாமல் நம்மிடம் வரமாட்டான் என்பது எப்படியோ, நாமும் அதே போல் அவனிடம் இருந்து ஏதாவது பிடுங்கிக் கொண்டு விடவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நிரந்தர உறுப்பினராக ஆவதற்குண்டான தகுதி அணுகுண்டு வெடித்தனாலேயே மட்டும் வருவதில்லை என்பதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா ஒரு வளரும் பொருளாதார யானை, மென்பொருளில் நம்மை அடிக்க ஆளில்லை, சினிமாவில் ஹாலிவுட்டுக்கே சவால் விடுத்து “என்ன ஒரு கை பார்க்கலாமா” என்று கேட்டுவிட்டதாம், இது போல் பல ஆசீர்வாதங்களை நமக்கு நாம சூட்டி மகிழ்ந்தாலும், சில உண்மைகளை மறைத்து முன்னேற்றத் தடைகள் என்னவென்று கண்டுபிடித்து களைய மறுக்கிறோம். உலகத்தில் ஒரு பொதுப் பிரச்சனை என்றால் முதலில் நம் அரசாங்கம் பண்ணுவது ஒரு நாலு குழக்கட்டையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டுவிடும். நம் நிலைப்பாடு எண்ண என்பதை கூறாமல் அப்படியே விட்டுவிட்டு, ‘அப்பா, இந்தியாவின் என்னே சாணக்கியம்” – “அரசியல் அரங்கில் ஒரு சாதுர்யம்” என்று நம்மை பாராட்டிக் கொள்வோம், அல்லது இந்தியா ஒருபோதும் இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாது என்று கூறிக்கொள்வோம். இந்த வித மனவழுக்கல்களை உள்ளே வைத்துக்கொண்டு, வெளியே வெற்றி வெற்றி என்று கூவிக் கொள்வது நமக்கு உதவுமே ஒழிய, உலக அரங்கில் இந்தியா முடிவெடுக்கும் திறனில் உறுதியான ஒன்று என்ற மாயையை ஒருபோதும் ஏற்படுத்தாது. இத்தகைய அனுகுமுறையால், நாம் ஒரு பலம் குன்றிய நாடாகவே கருதப்படுகிறோம்.

இது போன்ற வறட்சியான ஆளுமைத் தன்மையில் நம்பிக்கையில்லாததனாலேயே, ஐ.நா.வின் காரியதரசிப் போட்டியில் சஷி தரூரை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. அவர் ஒரு நல்ல புத்திசாலிதான், அனுபவஸ்தர், பல காலம் ஐ.நாவிலேயே பணிபுரிந்து நெளிவு சுளிவுகளை கற்றுள்ளார், இருந்தாலும், அவர் போட்டியிடும்போது நான் தெள்ளத்தெளிவாக நினைத்தேன் “இவரை அமெரிக்கா ஒரு போதும் முன் நிறுத்தாது” என்று – அதேபடி நடந்தது. ஐ.நாவில் பல உணர்ச்சிகரமான விஷயங்களாகட்டும், தன்னால் மீறிய ஒரு தீர்மானத்தை தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணமாகட்டும், அமெரிக்கா தன்னுடைய வெட்டாணையை உபயோகித்து தடுத்துவிடும், இதுபோன்றதொரு தீர்மானத்தை கொண்டு வரும்போது, ஐந்து ‘பிரத்யேக வெட்டாணை’ வைத்திருக்கும் நாடுகளான சைனா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ருஷ்யா – கருத்துவேறுபாட்டில் வாக்களித்தாலும் ஏதாவது தகிடுத்த்தம் செய்து தடுத்துவிடும். இவற்றில் ரஷ்யா எதிராகவும், சைனா முக்கால்வாசி யாருக்கும் இல்லை என்ற நிலையையும், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் சார்பு நிலையையும் எடுக்கும்போது அமரிக்காவின் நிலை சுளுவாக முடிந்துவிடும். இந்நிலையில்தான் காரியதரசியும் அவருடைய செயலும் நம்மூர் சபாநாயகர் மாதிரி ஆசி பெற்றிருப்பாதால் – பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக முடிந்துவிடும். சமீபத்திய சஷி தரூரின் பலவிதச்செயல்கள் அவர் ஒருவேளை ஐ.நா.காரியதரசி ஆகியிருந்தால் என்னவாயிருக்குமோ என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துபவையாகவே உள்ளன. (“டெட்” என்ற “புதிய கருத்துக்களை” மக்களிடம் கொண்டுசெல்லும் தனியார் தொலைக்காட்சியில் இவரின் பேச்சைப் பார்த்தேன். பேச்சுத் திறன் நன்றாக இருந்தாலும், இந்தியா எதில் எப்படி முன்னேறியுள்ளது என்று கூறினாரே ஒழிய, எது இருந்தால் இந்தியா மிளிரும், நம்முடைய பலம் என்ன, எதில் நாம் பின் தங்கியுள்ளோம், என்று அலச மறுத்து, ஒரு உப்புக்குச் சப்பாணியின், சராசரி மனிதனின் பேச்சாகவே இருந்தது என் எதிர்பார்ப்புகளை தகர்த்தது. திரும்பத் திரும்ப அவருக்கு சரியென்ற சம்மந்தமில்லாத ஒரு கருத்தை கூறியதும் சலிப்பைத் தட்டியது).

இது போன்ற உலக கட்டப்பஞ்சாயத்தை ப்ரமாதமாக நடத்தும் அமெரிக்கா, முக்கியமாக மத்திய-கிழக்கு நாடுகளுக்கு எதிராகவோ, அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடக்கவோ, இஸ்ரேலுக்கு ஆதரவாகவோ செவ்வனே கையாளும். இந்தியாவோ முடிவெடுக்க ஒரே குழப்பம்தான், உதாரணத்திற்கு, ஈராக்கில் ராணுவ ஊடுருவல் கூடாது என்று சொல்லிவிட்டு, தனியாக ஒரு தொலைபேசியில் “அண்ணே நீ அடிக்கற மாதிரி அடி, நான் அழற மாதிரி அழறேன்” என்று கூறிவிட்டு போர் விமானங்களுக்கு எண்ணெயை நிரப்பிவிட்டு வானில் தள்ளிவிடும். இதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிடும்போது, நமது பிரதமர், துணிச்சலுடன், யார் எண்ணெய் நிரப்பி விட்டது என்று ஒரு ஆணைக் குழு நியமித்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லுவார். அதோடு அதற்கு ‘நீத்தார் கடன்’ முடியும்.

ஒரு நிலை எடுத்தால்தான் நாம் எதிலுமே வெற்றி கொள்ளமுடியும், ஒன்று நட்பு, இல்லை பகை, அல்லது விவேகம். இதில் ஒன்றுமே இல்லாத இரண்டும்கெட்டான் நிலையினால் பல நன்மைகளை விட துன்பங்களே அதிகரித்துள்ளது. வேகம் இல்லையானலும் விவேகம் வேண்டும். இது போன்ற அணுகுமுறையால் பல கெட்டவை நடந்துள்ளது. சாதாரண பங்களாதேஷிடமும், இலங்கையிடமும், பாகிஸ்தானிடமும் எப்படி நடந்து கொள்வது, அவர்களை எப்படி கையாளவேண்டும் என்பது கூட தெரியாமல் பொங்கப்பொடி வாங்கப் போன குமாஸ்தா போல் இளித்துக்கொண்டும், கையை பிசைந்து கொண்டும் உள்ளோம். நம்மிடம் உள்ளது எது வேண்டுமானாலும் மற்றவன் எடுத்துக்கொள்ளலாம், உன்னிடமிருந்து எதுவும் வேண்டாம் என்று பெரிய விசாலமான மனதுக்காரன் என்று நினைத்துக் கொள்கிறோம். நினைப்பு பிழைப்பைக் கெடுக்கிறது.

இவ்வளவு சொல்லும் ஒபாமா, வாடிக்கையாளர்களை கையாளும் பணிகளை இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாதென்று ஒப்பந்தம் கொண்டு வந்துள்ளார், இதை நாம் குறை சொல்லமுடியாது, அவர் உள்நாட்டுப் பிரச்சனையை கையாள இதையும் சேர்த்துக்கொண்டுள்ளார். இங்கு வருவதற்கு முன், தீபாவளி கொண்டாடப் போகும் ஒபாமா, அருமையான சிவகாசி பட்டாஸை வெடித்துள்ளார். அது பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் ஆயுதத் தளவாடங்கள் வாங்க நிதி உதவும் அறிக்கைதான் அது. இதைப் பற்றி பிரதம மந்திரி முதல், ராணுவ அமைச்சர் வரை வாயைத் திறக்க வேண்டுமே. இப்போது ஏதும் சொல்லி ஒபாமா கோபித்துக்கொண்டு, டில்லி வந்து தாஜ்மஹாலை பார்க்கமாட்டேன் என்று அடம் பிடித்துவிட்டால்? எதற்கு வம்பு என்று நம் பிரதமர், அன்னை கூட்டிய கூட்டத்தில் போய் கீழே உட்கார்ந்து கையை தூக்கி காரிய குழுவில் எல்லா அதிகாரத்தையும் அதிகார மையத்திற்கு கொடுத்ததோடு தன் கடமை முடிந்ததாக இருந்துவிட்டார். எதிர்கட்சியோ கேட்கவே வேண்டாம், அவர்களுக்குள் கட்டைப்பஞ்சாயத்து பண்ணவே நேரமில்லை, எல்லோருக்குமே தான்தான் அடுத்த பிரதமர் என்ற நினைப்பு.

இனம் தெரியாத பயம், அவன் என்ன நினைப்பானோ என்ற கிலி, நமக்கேன் வம்பு என்ற உதாசீனம், இவையெல்லாம் அமெரிக்காகாரனுக்கு தீபாவளி மருந்து, நம் பலவீனம் இன்றைய ஜனாதிபதியிலிருந்து கடைசி ஜனம் வரை ஊடுருவி மனதில் கூடாரம் இட்டுள்ளது.

யார் எக்கேடும் கெட்டால் என்ன, நாம் போய் ரங்கநாதன் தெருவில் போய் தீபாவளி துணியையும், அர்ச்சனாவில் இனிப்பையும், சிவகாசிப்பட்டஸையும் வாங்கி கொண்டாடுவோம். ஒபாமா விஜயம் செய்தால் என்ன விஜயம் செய்தால் என்ன, நமக்கு பாமா விஜயம் ஒன்றே போதும், வாருங்கள், தீபாவளி எண்ணெயை தலையில் வைத்துக்கொள்வோம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கோபால் பக்கம்

Advertisements