நாதசுர சக்கரவர்த்தி, தோடி ராகத்தில் மிகவும் பிரபலமானவர் என்ற செய்தியறிந்த ஒரு பெரும் பணக்காரர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை சந்தித்து, தனது மகள் கல்யாணத்தில் தாங்கள் வந்து வாசிக்க வேண்டுமென்று மிகவும் கேட்டுக்கொண்டார். டி.என்.ஆர் கல்யாணக் கச்சேரிகளில் வாசிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் வந்தவரிடம் ஒரு பெரும் தொகையை கேட்டார். “தாங்கள் எவ்வளவு கேட்டாலும் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்தில் டி.என்.ஆர் பல மணி நேரங்கள் தனது புகழ் பெற்ற தோடி ராகத்தை வாசித்து முடித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மணமகளின் தந்தை, டி.என்.ஆரின் அருகில் வந்து, “தாங்கள் தோடி ராகத்தில் வாசிப்பதில் புகழ் பெற்றவராச்சே, அந்த ராகத்தை வாசியுங்கள்” என்று கேட்டார்.

டி.என்.ஆருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. பக்கத்தில் ஒத்து ஊதிக்கொண்டிருந்தவரைப் பார்த்து கடின சொற்களில், “தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வா, எடுத்து வா என்று பலமுறை சொன்னேனே, ஏன் எடுத்து வரவில்லை?” என்று சொல்லி, கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார் (மணமகளின் தந்தை, அந்த கோடீஸ்வரரை அறைவதற்குப் பதிலாக, ஒத்து ஊதுபவரை அறைந்தார் என்பதை நீங்கள் என்னும் புரிந்து கொள்ளாமலா இருப்பீர்கள்?).

மிகவும் பயத்துடன் பெண்ணின் தகப்பனார், “அவரைக் கோபிக்காதீர்கள், அடுத்த முறை வரும்போது தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வந்தால் போச்சு” என்று பணிவாக டி.என்.ஆரிடம் சொன்னார்.
       —–திரு. எஸ்.எம். உமர் எழுதிய கலைமாமணி என்ற நூலிலிருந்து

நண்பர் கோபால் அனுப்பிய பதிவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கோபால் பக்கங்கள்

Advertisements