தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 6

இது ஒரு மீள்பதிவு – பழைய பதிவிலிருந்து அப்டேட் செய்திருக்கிறேன். இவை எல்லாம் ப்ளாக் எழுதுவதை பற்றி நான் அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டவை.

  உங்கள் ப்ளாக் எதைப் பற்றி?

 1. ப்ளாகின் தீமை கவனமாக தேர்ந்தெடுங்கள். இந்த தீமை பற்றி ரெகுலராக எழுத முடியுமா என்று ஒரு நிமிஷமாவது யோசியுங்கள். சன் டிவியின் 75 ஆண்டு சினிமா கொண்டாட்டத்தை பற்றி எழுதுவது சுலபம் – வாரத்துக்கு ஐந்து படம் வந்தது, எழுத விஷயம் ரெகுலராக கிடைத்தது. கணேஷ் வசந்த் கதைகளை பற்றி எழுத ஆரம்பித்தேன். புத்தகங்கள் கிடைப்பதில்லை. நினைவிலிருந்து எழுதலாம் என்றால் ஒரு ரெஃபெரன்சுக்காவது புஸ்தகம் வேண்டி இருக்கிறது. ரெகுலராக எழுத முடியவில்லை. விளைவு அந்த ப்ளாக் கோமா நிலையில் இருக்கிறது.
 2. உங்கள் ரெகுலர் செயல்களை வைத்து ப்ளாக் எழுதினால் சுலபமாக இருக்கும். நீங்கள் வாரா வாரம் குமுதம், விகடன் படிப்பீர்களா? வெள்ளி இரவு ஏதாவது ஒரு பாடாவதி சினிமா பார்ப்பீர்களா? ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பீர்களா? அந்த ரெகுலர் செயலை வைத்து எழுதுவது சுலபம். (நீங்கள் புத்திசாலி என்றால் ரெகுலராக செய்ய விரும்பும், ஆனால் இது வரை செய்ய முடியாமல் இருக்கும், ஒரு செயலை வைத்து எழுதலாம் – diet, exercise மாதிரி – ப்ளாக் எழுதுவது உங்களுக்கு உதவியாக இருக்கும்). அந்த புத்திசாலித்தனம் எனக்கு இது வரை கைவரவில்லை.
 3. ப்ளாகுக்கு focus இருப்பது நல்லது. கூட்டாஞ்சோறு ப்ளாக் “anything goes” என்கிறது. அவ்வப்போது nothing goes , என்ன எழுதுவது என்று தெரியமாட்டேன் என்கிறது. சிலிகான் ஷெல்ஃப் அப்படி இல்லை – குறுகிய வட்டம், புத்தகங்கள் என்று வைத்திருக்கிறேன். எழுத சுலபமாக இருக்கிறது.
 4. தமிழர்களுக்கு பிடித்த தீம் சினிமாதான். இன்னும் சிவாஜி எம்ஜிஆர் சண்டை போடக்கூட மக்கள் இருக்கிறார்கள். ;-)) அடுத்தபடி தமிழ் நாடு அரசியல், அடுத்தபடி புஸ்தகங்கள்.
 5. ஆனால் நீங்கள் என்ன எழுதினாலும் யாராவது படிப்பார்கள். Long tail effect!

  என்ன மாதிரி பதிவுகள்?

 1. ப்ளாகுக்கு hit rate உயர நல்ல வழி ஏதாவது தகராறுதான். ஜெயமோகன் சிவாஜி எம்ஜிஆரை கிண்டல் செய்தார், அவர் ஒரு ப்ளாக் எழுதுவது தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்தது. நான் சிவாஜியை அதிகமாக கிண்டல் செய்கிறேன் என்று எனக்கு ஒரு reputation ஒரு காலத்தில் இருந்தது. அதனால் சில தீவிர சிவாஜி ரசிகர்களுடன் ஓரளவு பழக்கமும், கொஞ்சம் சண்டையும் ஏற்பட்டது, எனக்கும் வாசகர்கள் அதிகமானார்கள். எந்த ப்ளாகிலாவது பிராமணர்களை திட்டினால் அடுத்த இரண்டு நாள் அந்த ப்ளாக் பாப்புலராக இருக்கிறது. நீங்கள் காந்தி நல்லவர் என்று எழுதினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காந்தி கெட்டவர் என்று எழுதினால் ப்ளாக் சர்குலேஷன் உயரும். “Dog Bites Man” vs “Man Bites Dog” மாதிரிதான். பொதுவாக தமிழர்கள் தங்கள் iconகளை யாராவது எழுத்தில் கிண்டல் செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், பொங்கி எழுந்து விடுவார்கள். ஆனால் “அசத்த போவது யாரு” மாதிரி நிகழ்ச்சிகளில் கிண்டல் செய்தால் ரசித்து சிரிப்பார்கள்.
 2. ஆனால் பரபரப்புக்காக உங்களுக்கு நம்பிக்கை இல்லாத எதையாவது எழுதாதீர்கள். controversial, uncomplimentary கருத்துக்களில் எது உண்மை, எது சும்மா என்று வெகு விரைவில் எல்லாரும் புரிந்துகொள்வார்கள். உண்மைக்கு ஒரு தனி கவர்ச்சி இருக்கிறது. அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.
 3. முடிந்த வரை ஒரு consistent value system வைத்துக் கொள்ளுங்கள்.
 4. முடிந்த வரை topical ஆக எழுதுங்கள். அங்காடித் தெரு பற்றி ஆறு மாதம் கழித்து விமர்சனம் எழுதினால் அதை படிப்பவர்கள் குறைவுதான். பராசக்திக்கு இப்போதுதான் விமர்சனம் எழுதுபவன் இப்படி சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா? 🙂
 5. ப்ளாக் எழுதுவது என்று வைத்துக்கொண்டால் ரெகுலராக எழுதுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையோ, இரண்டு நாளைக்கு ஒரு முறையோ வாரத்துக்கு ஒரு முறையோ என்னவோ – உங்கள் ப்ளாகை படிப்பவர்களுக்கு அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கவேண்டும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவேண்டும். உங்களால் அப்படி ஒரு நாள் எழுத முடியவில்லையா, இன்று எழுதமுடியவில்லை, அப்டேட் இப்போது வரும் என்றாவது தெளிவாக சொல்லிவிடுங்கள்.

  உங்களைத் தவிர்த்த மற்றவர்கள் – வாசகர்கள், பதிவர்கள், சக ஆசிரியர்கள்

 1. பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுங்கள். வாசகர்கள்தான் ப்ளாகை அர்த்தம் உள்ளதாக ஆக்குகிறார்கள். அவர்களிடம் அந்த குறைந்த பட்ச கர்ட்டிசி இருக்க வேண்டும்.
 2. தமிழ் ப்ளாக் உலகில் ஒரு சோர்வடைய வைக்கும் விஷயம் – உருப்படியாக பேசுபவர்கள் குறைவு. கருத்து வேறுபாடு இருந்தால் அதை கருத்தளவில் வைப்பவர்கள் குறைவு. தனி மனித தாக்குதல்கள் அதிகம். ஆனால் சோர்வடையாதீர்கள், உங்கள் கருத்துகளை முன் வைக்க ப்ளாக் உலகம் நல்ல வாய்ப்பு. அதை பயன்படுத்துங்கள். உங்களுக்கு உண்மையான நம்பிக்கை உள்ள எந்த கருத்தானாலும் சரி, எவ்வளவு controversial ஆனாலும் சரி, அதைப் பற்றி எழுதுங்கள். திட்டுபவர்களைப் பற்றி எல்லாம் பெரிதாக கவலைபடாதீர்கள். என்ன இவர்கள் சொல்வதை வைத்தா உங்கள் வாழ்வு? நீங்கள் ஏணி என்றால் அடுத்தவர் கோணி என்றுதான் சொல்வார். அதுதான் மனித இயல்பு. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை சொல்லும்போது ஏதோ ஒரு புள்ளியில் அடுத்தவர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார். அதற்குப் பிறகுதான் நீங்கள் சொல்வதை ஏற்பதும் மறுப்பதும். அதுதான் உங்கள் வெற்றி!
 3. கூட எழுத கூட்டாளி(கள்) இருந்தால் நல்லது. நீங்கள் தளர்ச்சி அடையும்போது, உங்களுக்கு வேலைகள் வந்து அம்மும்போது, அவர்(கள்) கை கொடுப்பார்(கள்).
 4. கூட்டாளிகளை சேர்க்கும்போது எதிர்பார்ப்புகளை தெளிவாக்கிவிடுங்கள். கருத்து வேறுபாடுகள் சில சமயம் கசப்பாக மாறலாம். ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம் இருந்தால் நல்லது.
 5. முடிந்த வரை அடுத்தவர் சுட்டிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள். அவர்கள் சுட்டிகளுக்கு லிங்க் கொடுங்கள், இல்லை அவர்கள் கருத்துகளை சொல்லிவிட்டு மேலே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். எதுவும் சரிப்படாவிட்டால் கொட்டை எழுத்தில் யாருடைய சுட்டி என்றாவது தெளிவாக தெரிவியுங்கள். (இந்த தளத்திலும் சில முறை தவறு செய்திருக்கிறோம்)

  நகாசு வேலைகள்:

 1. நல்ல தலைப்பு முக்கியம். உங்கள் ப்ளாக் அனேகமாக ஒரு திரட்டியில் சேர்க்கப்பட்டிருக்கும். அங்கே தலைப்பைப் பார்த்துதான் உங்கள் ப்ளாகுக்கு வருவதா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படுகிறது. “என் வீட்டுத் தோட்டத்தில்” என்று தலைப்பு வைத்தால் என்ன இருக்கும் என்று யூகிப்பது கஷ்டம். “ரோஜாச்செடி நன்றாக வளர வழி” என்று தலைப்பு வைத்தால் என்ன எழுதுகிறீர்கள் என்று புரியும், இண்டரஸ்ட் உள்ளவர்கள் படிப்பார்கள்.
 2. முடிந்த வரையில் அறிமுகம் (நறுக்கு) என்று இரண்டு வரிகள் எழுதுங்கள். ஆர் எஸ் எஸ் ரீடர் அந்த சுருக்கத்தை தலைப்போடு சேர்த்துத் தரும்.
 3. படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை சேர்ப்பது நல்ல விஷயம். பழைய படங்களுக்கு ஸ்டில் தேட ரொம்ப கஷ்டப்பட்டேன். சில சமயம் சோம்பேறித்தனத்தால் எதையும் சேர்க்காமல் விட்டுவிடுவேன். அந்த தவறை செய்யாதீர்கள்.
 4. முடிந்த வரை ஒரு பக்கத்துக்கு மேல் ஒரு போஸ்டை எழுதாதீர்கள். (படிப்பவருக்கு ஸ்க்ரோல் செய்யும் சிரமம் இருக்கக்கூடாது.) இந்த கலை எனக்கும் இன்னும் கைவரவில்லை. ஆனால் என்ன செய்வது, மேலும் பதிவுகளில் யூட்யூப் சுட்டிகளை சேர்த்தால் பாதி ஸ்க்ரீன் அங்கேயே போய்விடுகிறது.
 5. முடிந்த வரையில் எல்லா திரட்டிகளிலும் உங்கள் பதிவை சேருங்கள். தமிழ்மணம் போன்றவற்றில் உங்கள் ப்ளாகை ரெஜிஸ்டர் செய்தால் பதிவுகள் அங்கே அப்டேட் ஆகும்.
Advertisements