தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 4

சிறு வயதில் படித்ததுதான் – தமிழை இழித்துப் பேசிய கனக விஜயர் தலையிலே கல்லேற்றிக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்று வந்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்றான் கரிகால சோழன், கங்கை வரை சென்று வென்று வந்த ராஜேந்திர சோழன் என்றெல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது, மூலைக்கு மூலை அரசியல் கூட்டங்களில் – குறிப்பாக தி.மு.க. கூட்டங்களில் பேசப்பட்டது.

எல்லாம் சரிதான், அது எப்படி இந்த படையெடுப்புகளைப் பற்றி தமிழ் நாட்டுக்கு வெளியே எதுவும் பேசப்படுவதில்லை? கனக விஜயர் எந்த பகுதிக்கு ராஜா? சமுத்திர குப்தன் தொண்டை நாடு வரை திக்விஜயம் செய்தது பல்லவ அரசின் ஆவணங்களில் இருக்கிறது, மாலிக் காஃபூர் மதுரையை அழித்ததற்கு ஆவணம் இருக்கிறது, செங்குட்டுவனுக்கும், நெடுஞ்சேரலாதனுக்கும், கரிகால சோழனுக்கும் எதையும் காணோமே? சிலப்பதிகாரத்தில் கரிகாலன் மகத (இன்றைய பீகார்), அவந்தி நாடுகளை வென்றதாக இருக்கிறதாம். வட நாட்டு சரித்திர புத்தகங்களில் தெற்கே இருந்து யாரும் படையெடுத்து வந்ததாக சொல்லப்படவே இல்லையே? நான் படித்த வரையில் இவை வட நாட்டு சரித்திரத்தில், மக்கள் நினைவில் இல்லவே இல்லை.

கங்கை கொண்ட ராஜேந்திரனுக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்கு வெளியே ஆவணம் இருக்கிறது. ராஜேந்திரனும் நேர் வடக்குப் பக்கம் போகவில்லை. இன்றைய ஒரிஸ்ஸா (கலிங்கம்) வரையில் அன்றைய நட்பு நாடான வேங்கி நாடு பரந்திருந்தது. ராஜேந்திரனின் தளபதிகள் கலிங்கம் வழியாக இன்றைய வங்காள மாநிலம் வரை போய் அங்கிருந்து கங்கை தண்ணீரை சோழ நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். (கங்கை இன்றைய கல்கத்தாவுக்கு அருகேதான் கடலில் கலக்கிறது.) இது ஒன்றுதான் ஆவணங்கள் இருக்கும், கொஞ்சமாவது வடக்குப் பக்கம் போன படையெடுப்பு என்று நினைக்கிறேன்.

நான் சரித்திர நிபுணன் இல்லை. சிலப்பதிகாரத்தையும் படித்தவன் இல்லை. படித்தவர்கள், நிபுணர்கள் யாராவது இருக்கிறீர்களா? (டாக்டர் நாகசாமி மாதிரி யாரிடமாவது கேட்க வேண்டும்.) இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? இது உண்மையிலேயே வரலாறா இல்லை தொன்மமா? (legend)

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

Advertisements