தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 3

யார் பிரதமரானாலும் முதல்வரானாலும் அமைச்சரானாலும் நம் அன்றாட வாழ்வில் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதுவும் இப்போதெல்லாம் யாரும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் அரசியலில் நுழைவதும் இல்லை. ஆனால் நேரடியாக சாதாரண (மத்தியதர) மக்களிடம் தாகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள்:

மது தண்டவதே, ரயில்வே அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – ரயில் பிரயாணத்தின் கஷ்டத்தை குறைத்தது.
ஒரு காலத்தில் பயணம் என்றாலே ரயில் பயணம்தான். இந்த ஜனதா அரசுக்கு முன் ரயில் பயணம், அதுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றால் மிகவும் சிரமம்தான். அது சிரமம் என்று கூடத் தெரியாது, ஏனென்றால் ஒப்பிட்டுப் பார்க்க வேறு எதுவும் இல்லை. கட்டை பெஞ்சுகள், மிகவும் வசதி குறைந்த ரயில் பெட்டிகள் என்றுதான் இருக்கும். முதல் வகுப்பை பொறாமையால் எட்டிப் பார்த்தால் குஷன் வைத்த சீட்டுகள் தெரியும். (வேறு என்ன இருக்கிறது என்று தெரியாது, உள்ளே போனால்தானே?) தண்டவதே ரயில்வே அமைச்சரானதும் எல்லா வகுப்புகளிலும் சவுகரியம் உயர்ந்தது, கட்டை பெஞ்சுகள் ஒழிந்தன, எல்லா பெட்டிகளிலும் குஷன் வைத்த சீட்டுகள் வந்தன, நெடுந்தூர ரயில் பயணம் என்பது சிரமமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை என்று முதன்முதலாக புரிந்தது.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தொழில் அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – அயல் நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளை வெளியேற்றியது
இந்த liberalization எல்லாம் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஐபிஎம்மும், கோகோ கோலாவும் மார்க்கெட்டை பிடித்திருந்தன. (மார்க்கெட்டின் சைஸ் சின்னது, வசதியானவர்கள் மட்டும்தான் கோகோ கோலா குடிப்பார்கள், மிச்ச பேர் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் காளி மார்க்தான்) ஃ பெர்னாண்டஸ் என்ன நினைத்தாரோ தெரியாது, எல்லா அயல்நாட்டு கம்பெனிகளையும் இந்தியாவை விட்டு துரத்திவிட்டார். (ரஷியாவுக்கு மிக நெருக்கமானவர் என்று அறியப்பட்ட, சோஷலிசம் சோஷலிசம் என்று பேசிய இந்திரா காந்தி அயல் நாட்டு கம்பெனிகளை வெளியேற்றவில்லை, வலதுசாரி என்று அறியப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில்தான் இதெல்லாம் நடந்தது.) அவர் என்ன நினைத்து இதை செய்தாரோ தெரியாது, ஆனால் அதனால் அடுத்த ஜெனரேஷன் லிம்கா, கோல்ட் ஸ்பாட் குடித்து வளர்ந்தது, ஹெச்சிஎல், விப்ரோ மாதிரி கம்பெனிகளில் அவர்களுக்கு வேலை கிடைத்தது, மத்திய தர வர்க்கத்தின் நிலை கொஞ்சம் உயர்ந்தது.

எம்ஜிஆர், தமிழக முதல்வர், 1977-87 – தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள்
நிறைய தமிழர்கள் இன்று ஓரளவு வசதியாக வாழ்வது அவர்கள் அப்பா அம்மா கடனை உடனை வாங்கி அவர்களை எஞ்சினியரிங் படிக்க வைத்ததால்தான். அதற்கு முன்னாள் தமிழ் நாடு முழுவதும் ஒரு 2500-3000 சீட்தான் எஞ்சினியரிங், மருத்துவ கல்லூரிகளில். யோசித்துப் பாருங்கள், அன்றைக்கு ஒரு நாலு கோடி தமிழர் இருந்திருப்பார்கள், ஒரு கோடி குடும்பம் என்று வைத்துக் கொள்ளலாம். வருஷத்துக்கு ஒரு பத்து லட்சம் பேர் ப்ளஸ்டூ பாஸ் செய்திருப்பார்கள், அதில் மூவாயிரம் பேருக்குத்தான் தொழில் கல்லூரிகளில் சீட் என்றால் மிச்ச பேர் என்ன செய்வது?

மன்மோகன் சிங்-நரசிம்ம ராவ், காங்கிரஸ் (மத்திய) அரசு – 1991-96 Liberalization
பெரும் தாக்கம் உள்ள முடிவு இது. இந்தியாவின் மத்திய தர வர்க்கம் மேலெழுந்தது. பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதித்தார்கள். கன்ஸ்யூமர் காலம் என்று சொல்லலாம். ஆனால் ஏழைகள் வாழ்க்கை இன்னும் கீழே போனதோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதைத் தவிர காமராஜின் மதிய உணவுத் திட்டம், தமிழக தொழிலமைச்சர் ஆர்வியின் (ஜனாதிபதி ஆன ஆர். வெங்கட்ராமன்) வேலை வாய்ப்பு தரும் பல தொழில்களை வளர்த்தது, சி. சுப்ரமண்யம் முன்னின்று இயக்கிய பசுமைப் புரட்சி என்றும் சொல்லலாம். ஆனால் இவை எனக்கு பர்சனலாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. (சின்னப் பையங்க!) அதனால்தான் இவற்றை குறிப்பிடவில்லை.

அமைச்சர்கள் நினைத்தால் மக்களுக்கு முன்னேற வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதுவே நல்ல அமைச்சர்களின் அடையாளம். அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவாக இருப்பது நம் துரதிருஷ்டம்.

அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கிய அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்று நீங்கள் யாரையாவது நினைக்கிறீர்களா? பதில் எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

Advertisements