தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 2

தமிழ் நாடு அரசு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை காலி அறிக்கையில் பிற்சேர்க்கையாக ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் லிஸ்டை கொடுத்திருந்தார்கள். அதில் சில ஜாதிகளின் பெயர்கள் வினோதம்!
ஆதி திராவிடர் லிஸ்டில் பள்ளர், பறையர், அருந்ததியர், தேவேந்திர குலத்தார் மட்டும் இல்லை; கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னன் என்ற ஜாதியினர் ஆதி திராவிடராம். சேரமான் என்று ஆதி திராவிடர் ஜாதி இருக்கிறதாம்.

மன்னன் ஜாதியினர் பழங்குடிகள் லிஸ்டிலும் இடம் பெறுகிறார்கள். மலயாளி என்ற ஜாதியினர் பழங்குடியினராம். இவர்கள் மலையாளம் பேசுவார்களா, இல்லை மலைப்பகுதியில் வாழ்பவர்களா என்று தெரியவில்லை.

தென்னிந்திய திருச்சபை, லத்தீன் கத்தோலிக்கர்கள் பிற்படுத்தப்பட்டவராம். இது சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததாக இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் லத்தீன் கத்தோலிக்க கிருஸ்துவ வண்ணார் என்று ஒரு உட்பிரிவு!

தங்கப் பதக்கம் திரைப்படம் பார்த்தபோது தமிழர்களில் யார் சௌத்திரி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் சௌத்திரி என்பது பிற்படுத்தப்பட்ட ஒரு ஜாதியின் பெயராம்!

ஏனாதி நாயனார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனாதி என்பது ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியின் பெயராம்! பெரிய புராணத்துக்கும் முந்தைய காலத்திலிருந்தே இந்த ஜாதி இருக்கிறது போலும்!

செட்டியார்களில் எத்தனை வகை? கற்பூர செட்டியார் (கற்பூரம் மட்டும் விற்றார்களா?), பன்னிரண்டாம் செட்டியார் (மிச்ச பதினொன்று செட்டியார் உட்பிரிவுகள் என்ன ஆயிற்று?), உத்தம செட்டியார், சாதுச் செட்டி, சுந்தரம் செட்டி (என்ன அழகான செட்டியார்கள் என்று பேர் வாங்கியவர்களா?) என்ற பெயர்கள் ஆச்சரியப்படுத்தின.

வேளாளர்களும் இப்படித்தான் – குடிகார வேளாளர் (அனேகமாக குடிபடை என்ற அர்த்தத்தில் இருக்கும் என்று ஒரு நிமிஷத்துக்கு அப்புறம்தான் தோன்றியது), பொடிகார வேளாளர் (பொடிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?) உட்பட பல பிரிவுகள்.

யோகீஸ்வரர் என்று ஒரு MBC பிரிவு. யோகிக்கே ஜாதியா?

யவனர் என்றால் வெளிநாட்டவர், குறிப்பாக கிரேக்க நாட்டவர் என்று யவன ராணி படித்த காலத்திலிருந்து நினைத்துக் கொண்டிருந்தேன். யவன என்று ஒரு ஜாதி இருக்கிறது! அந்த காலத்தில் இங்கே வந்து போன யவனர்களின் வாரிசுகளோ?

தக்காளி முஸ்லிம் என்று ஒரு உட்பிரிவு!

(ராமகிருஷ்ண)ஹெக்டே – (தேவே)கௌடா சண்டை கர்நாடகத்தில் பிரபலம். தமிழ்நாட்டில் ஹெக்டே, கௌடா இரண்டும் பிற்படுத்தப்பட்ட ஜாதி.

சொன்னால் நம்பமாட்டீர்கள், கேப்மாரிகள் என்று சீர்மரபினர் ஜாதி இருக்கிறது. (சீர்மரபினர் அந்த காலத்து “குற்றப் பரம்பரையின்” நீட்சியோ?) கேப்மாரி என்பது சென்னை வட்டாரத்தில் ஒரு வசவு. யாரோ ஒருவர் சொன்னார், கேனையன் என்பது தருமபுரி வட்டாரத்தில் ஒரு ஜாதி என்று! இந்த லிஸ்டில் காணவில்லை.

லிஸ்டில் ஆந்திர, கர்நாடக, கேரள மூலம் உள்ள ஜாதிகள் நிறைய தெரிகின்றன. செட்டியார், போயர், ஒட்டர், நாயக்கர் மட்டுமில்லை. ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் பல உட்பிரிவு. குறவர் என்றால் அதில் ஒரு இருபது முப்பது உட்பிரிவு, போயர், தேவர், வன்னியர் என்று எல்லா ஜாதியிலும் இப்படித்தான்.

சமூக ஆராய்ச்சி செய்ய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் ஜாதிப் பெயர்கள் மட்டுமே கூட ஒரு fertile ground ஆக இருக்கும். மன்னன் ஒரு காலத்தில் குறுநில மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த மாநில எல்லைகளுக்கு அர்த்தமே இல்லை என்று தெரிகிறது. செட்டியார் தமிழர், செட்டி ஆந்திராவிலிருந்து வந்தவர்; அப்படி என்றால் செட்டிகள் ஆந்திராவுக்கு போய் செட்டிலான செட்டியார்களின் வாரிசுகளா? கர்நாடகப் பகுதியிலும் ஷெட்டி என்று ஒரு பிரிவு உண்டு. இதை எல்லாம் பற்றி ஆராய தமிழ் நாட்டுக்கு ஒரு டி.டி. கோசாம்பி வேண்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜாதி

தொடர்புடைய சுட்டிகள்:
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை காலி அறிக்கை (ஜாதிகள் லிஸ்ட் பிற்சேர்க்கை) – pdf download

Advertisements