தமிழ்மணம் நட்சத்திர பதிவர் பதிவு 1

முதலில் ஹிந்துத்துவம் என்ற வார்த்தையே தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஹிந்துத்துவம் என்றால் ஹிந்துக்களின் மத, பண்பாட்டு சூழல் என்று பொருள் வருகிறது. நான் ஒரு ஹிந்து. மனப்பூர்வமாக கடவுளை வழிபடுபவன். கோவில்கள் என் உள் மனதில் பதிந்தவை. மகாபாரதமே உலகின் சிறந்த இலக்கியம் என்று நினைப்பவன். (ராமாயணத்துக்கு இரண்டாவது இடம்). ஆனால் இன்று பரவலாக பொருள் கொள்ளும் விதத்தில் நான் ஹிந்துத்துவவாதி இல்லை.

சரி பார்ப்பனீயம் என்ற வார்த்தை பிரயோகம் தவறானது என்றே ஒத்துக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிக்கும் கூட்டம் ஒன்று இங்கே அலைகிறது. இதில் இன்னொரு வார்த்தை பிரயோகத்தைப் பற்றி பேசப் புகுந்தால் ஹனுமார் வால் மாதிரி நீளும். இப்போதைக்கு பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அர்த்தத்திலேயே – காலம் காலமாக ஹிந்துக்கள் விட்டுக்கொடுத்து வந்திருக்கிறார்கள், இந்த அநியாயத்தை சமன்படுத்த ஹிந்துக்கள் கட்டுக்கோப்பாக, ஒரு அமைப்பினால் வழி நடத்தப்பட வேண்டும் – இனி மேல் பேசுவோம்.

நான் சிறு வயதிலிருந்து கண்ட ஹிந்து மதம் மிக சிம்பிள். என் அம்மாவுக்கு பக்தி அதிகம். கோவில் குளம் என்றால் பித்து. காலையில் கந்த சஷ்டி கவசம் சொன்னால்தான் காப்பி கிடைக்கும். என் அம்மாவின் அதிகமான பக்தியால் டீனேஜ் காலத்தில் என் rebellion கொஞ்சம் உக்ரம். கடவுள் நியாயமானவர் என்றால் கோவிலுக்கு போய் ஜால்ரா அடித்தால்தான் எனக்கு நல்லது செய்வாரா? நான் அயோக்கியத்தனம் செய்தாலும் கோவிலுக்கு போனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா? நான் படிக்காமல் தேங்காய் உடைத்தால் எனக்கு அதிக மார்க் வந்துவிடும் என்றால் அது கஷ்டப்பட்டு படித்தவனுக்கு அவர் துரோகம் செய்வதாக ஆகாதா? எனக்கு எது வேண்டும், எது நல்லது என்று கடவுளுக்கு தெரியாதா? அப்படி தெரியாவிட்டால் அவர் கடவுள்தானா? அப்புறம் நான் பிரார்த்தனை செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வல்ல பூதத்தையும் வலாஷ்டிக பேய்களையும் நான் கேட்காமலே அவர் ஓட்ட வேண்டாமா?

அப்புறம் காலம் போகப் போக பிரார்த்தனை என்பது கடவுளுக்கு தேவை இல்லை, பக்தனுக்குத்தான் தேவை என்று புரிந்துகொண்டேன். பிரார்த்தனை செய்தாலும் ஹிந்துதான், செய்யாவிட்டாலும் ஹிந்துதான் என்ற நிலை எனக்கு பிடித்திருந்தது. உனக்கு எது சரியோ, அதை செய், அதுவே உனக்கு மதம், அதுவே உன் ஆன்மிகம் என்று ஹிந்து மதத்தில்தான் இருக்கிறது என்று தோன்றியது. தென்னாடுடைய சிவனை வணங்குபவனும் ஹிந்து; கற்பூரம் நாறுமோ என்று யோசிப்பவளும் ஹிந்து; ஆத்தாடி மாரியம்மா என்று பாடுபவனும் ஹிந்து; பலி கொடுப்பவனும் ஹிந்து; வாடின பயிரை கண்டபோது கூட வாடுபவனும் ஹிந்து; கல்லால் அடிக்கும் சாக்கிய நாயனாரும் ஹிந்து. பெருந்திருவே கறுப்பண்ணா என்று லா.ச.ரா. குடும்பத்தினர் ஒரு highbrow கடவுளையும் lowbrow கடவுளையும் ஒரே நேரத்தில் கூப்பிடுகிறார்கள். அது அவர்களுக்கு சரியாக இருக்கிறது. கடமையை செய், கடவுளைப் பற்றி கவலைப்படாதே என்று கிருஷ்ணனே கீதையில் சொல்கிறான்! கடவுளும் நாமும் ஒன்று என்ற அத்வைதம்; இல்லை இரண்டு என்று விசிஷ்டாத்வைதம்; இந்த ஒன்று, இரண்டு, மூன்று கவலை எல்லாம் வேண்டாம், ராம நாமம் போதும்; எந்த எழவும் வேண்டாம், வேலையை பாரும் ஓய், கடவுளாவது மண்ணாவது என்று சொல்லும் சார்வாகன் – உங்களுக்கு எது சரிப்படுகிறது? அந்த ஹிந்து மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நான் எடுத்துக் கொண்ட ஹிந்து மதம் எனக்கு பர்சனலான மதம். அது எனக்கு மட்டும்தான். என் குடும்பத்துக்கு கூட இல்லை.

கவனிக்கவும், ஹிந்து மதத்தில் நிராகரிக்க வேண்டிய கூறுகள் இல்லை என்று நான் வாதிடவில்லை. நான் யோசித்து இந்த இந்த கூறுகளை நிராகரிக்கிறேன், இந்த இந்த கூறுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் நான் ஹிந்து மதம் என்னை தள்ளி வைக்காது. அட கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொன்னவரே ஹிந்துவாக வாழ்ந்து மறைந்தபோது நமக்கென்ன? ஆனால் குரானின்/பைபிளின்/டோராவின்/கிரந்த் சாஹிபின் இந்த கூறுகளை நான் ஏற்கவில்லை என்று ஒரு முஸ்லிமோ, கிருஸ்துவனோ, யூதனோ, சீக்கியனோ சொன்னால் அது மத விரோதம் (என்று நினைக்கிறேன்.)

எங்கோ ஒரு கவிதை படித்தேன் – தமிழ்தான் என் உயிர்மூச்சு, ஆனால் அதை பிறர் மேல் விடமாட்டேன் என்று. அதைப் போல உங்கள் மத நம்பிக்கை உங்களோடு இருக்கவேண்டும். அது ஹிந்து மதத்தில்தான் சுலபம் என்று நினைக்கிறேன். இப்படி வேறு எதிலும் – குறிப்பாக யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் இப்படி பெர்சனல் மதம் என்பது முடியாது. புகழ் பெற்ற 10 commandments-ஐ பாருங்கள். முதல் ஐந்தோ ஆறோ என்னை கும்பிடு, வேறு யாரையாவது கும்பிட்டால் உதைப்பேன் என்ற ரேஞ்சில்தான் இருக்கும். எது சரி, எது தவறு என்று நிர்ணயிப்பது புனிதப் புத்தகங்களும், குருமார்களும்தான். மார்ட்டின் லூதர் போப் சரியில்லை என்று சொன்னால் அவருக்கு அபாயம்தான். அவர் தப்பிக்க ஒரே வழி அவரே இன்னொரு கிளை மதத்தின் குரு ஆவதுதான்.

இந்த ஹிந்துத்துவவாதிகள் என்ன சொல்கிறார்கள்? ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள், முஸ்லிம்கள் முகம்மதுவின் கார்ட்டூனைப் போட்டால் கொந்தளிக்கிறார்கள், சல்மான் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ய வைக்கிறார்கள், நீங்கள் ஏன் எம்.எஃப். ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால் சுரணை கெட்டுப் போய் பேசாமல் இருக்கிறீர்கள், நீங்களும் ஒரு மதத் தலைவர்/அமைப்பு பின்னால் ஒன்றுபடுங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள். முட்டாள்கள் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்கிறார்கள், அதை இந்த அரசும் ஓட்டு அரசியலுக்காக ஏற்கிறது, இது அயோக்கியத்தனம், இதை தடுக்க நீங்களும் முட்டாள்களாக மாறி ஹுசேனுக்கு எதிராக போராடுங்கள் என்பது ஒரு பேச்சா! இவர்களது தீர்வு என்பது நாம் ராமனை/கிருஷ்ணனை வழிபட்டுக் கொண்டே முஸ்லிம்கள் போல நம் மதம் “அங்கீகரிக்கப்பட்ட” வழியில் செல்ல வேண்டும் என்பதுதான். முல்லாவுக்கு பதிலாக சங்கராச்சாரியார்களை, மற்ற சாமியார்களை வைத்துக் கொள்வோம் என்கிறார்கள். இப்படி நான் முருகனை வழிபட்டுக் கொண்டே நம்ம குருநாதர் இந்த புத்தகத்தை ஏற்கிறாரா, இந்த ஓவியத்தை ஒத்துக் கொள்கிறாரா, கோவிலில் தேவாரம் பாடுவது அவருக்கு சரியாக படுகிறதா என்று என் சொந்த யோசனையை விட்டுவிட்டு ஒரு சாயிபாபாவோ, சங்கராச்சாரியாரோ, ஆர்.எஸ்.எஸ்.சோ காட்டும் வழியில்தான் போக வேண்டும் என்றால் அதற்கு பேசாமல் அல்லா பக்கமே போய்விடலாம். எதற்காக நான் முருகனை வணங்கும் முஸ்லிமாக, கிருஷ்ணனை வணங்கும் கிருஸ்துவனாக மாற வேண்டும்?

போலி மதசார்பின்மையை எதிர்த்து போராடுகிறேன் என்று ஆரம்பித்தார்கள். ஓட்டு வேண்டுமென்றால் ஹிந்துக்கள் கட்டுகோப்பான ஒரு அமைப்பாக இருந்தால்தான் முடியும் என்று தெரிகிறது. அதனால் உனக்கு நாங்கள் முல்லாவாக இருக்கிறோம் என்று முடித்திருக்கிறார்கள்.

என் கடவுள் துர்கையா, அல்லாவா, ஏசுவா, புத்தரா, அப்படி எதுவுமே இல்லையா என்று நான் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதமே – என் விஷயத்தில் மூக்கை நீட்டாத வரையில்.

பின்குறிப்பு: கல்லூரி காலத்தில் எனக்கு நாலைந்து நெருங்கிய முஸ்லிம் நண்பர்கள் உண்டு. அவர்கள் யாரும் அல்லா முல்லா என்று அலையவில்லை. முகமது ஃபர்ஹாத் ஜாமாவுக்கு எனக்குத் தெரிந்ததை விடவும் அதிகமாக ஹிந்து மதத்தைப் பற்றி அப்போது தெரியும். ஒரு நாளும் அவன் சல்மான் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டான். இந்த பதிவைப் பொறுத்த வரை ஹிந்துத்துவவாதிகளின் கூற்றான முஸ்லிம்களை மத அமைப்பு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை ஒரு வாதத்துக்காக (மட்டும்) முழு உண்மை என்று வைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

Advertisements