கோவை அய்யாமுத்துவைப் பற்றி நான் முதன்முதலாக கேள்விப்பட்டது “பெரியார்” திரைப்படத்தில்தான். நிழல்கள் ரவி அய்யாமுத்து கவுண்டராக நடித்திருந்தார். பெரியாருக்கு மட்டுமல்ல, ராஜாஜிக்கும் நெருக்கமானவராக இருந்திருக்கிறார். ரோஷக்காரர். பெரியார் சொன்ன ஒரு வார்த்தையால் குடியரசு பத்திரிகையை விட்டு விலகி இருக்கிறார். ஈ.வே.ரா.வை விடுங்கள், காந்தியே இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி வந்ததாம். 🙂 சினிமா எடுத்திருக்கிறார், புத்தகம் எழுதி இருக்கிறார், கதர் கதர் என்று கதறி இருக்கிறார், ஜெயிலுக்கு போயிருக்கிறார், வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார், சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் எல்லாவற்றிலும் பணி ஆற்றி இருக்கிறார். எம்.எல்.ஏ., எம்.பி. என்று எந்த பதவியும் வகித்த மாதிரி தெரியவில்லை. (1950-இலேயே தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டாராம்) 77 வயதில், 1975-இல் மறைந்திருக்கிறார்.

ராகவன் தம்பி என்பவர் இவரைப் பற்றி ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார். கட்டாயமாக படியுங்கள்!

இவர் போன்றவர்களே என்னை fascinate செய்பவர்கள். பதவி ஆசை இல்லை, தலைமை வகிக்க வேண்டும் என்ற ஆவல் இல்லை, சர்வசாதாரணமாக தியாக வாழ்க்கை நடத்திவிட்டு அது ஒரு பொருட்டே இல்லை என்பது போல போய்க்கொண்டே இருந்திருக்கிறார். அவருடைய மன உறுதியில் பாதி இருந்தால் கூட போதும்.

எனது நினைவுகள், ராஜாஜி: என் தந்தை, நான் கண்ட பெரியார் என்று மூன்று புத்தகங்கள் எழுதி இருக்கிறார். படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறது. யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள், இல்லை என்றால் இணையத்தில் சுட்டி கிட்டி ஏதாவது இருந்தாலும் கொடுங்கள்! இவரது ஃபோட்டோ ஏதாவது கிடைக்குமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டி: ராகவன் தம்பியின் பதிவு

Advertisements