கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னா தான் இலங்கைக்கு போய் வந்த அனுபவம் பற்றி இட்லிவடை தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த இன்ஸ்டால்மெண்டில் இலங்கைத் தமிழர்கள் நிலை பற்றி எழுதி இருக்கிறார். இது பூரா பூரா anecdoctal பதிவு மட்டுமே. அது தெரியுமா இது தெரியுமா என்று ஆரம்பிக்காதீர்கள். ஆனால் கட்டாயமாக படியுங்கள்! ஓர் excerpt:

ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)

மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.

செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.

கறுப்பு வெள்ளை என அடித்துவிடும் விஷயம் இல்லை இது. எல்லாருமே குற்றவாளிகள்தான் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. புலிகளுக்கு வாழ்வா சாவா பிரச்சினை, கேடயமாக இருந்து கூட நாலு தமிழர்கள் செத்தாலும் இயக்கம் வாழ வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இலங்கை அரசுக்கும் “போருக்கு” முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய கட்டாயம், விரும்பி சேர்ந்த புலிகளுக்கும் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட புலிகளுக்கும் இடையே வித்தியாசம் பார்ப்பது கஷ்டம், அதனால் எல்லாரையும் அடிப்போம் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் நடுவில் புகுந்து இந்த பாஸ்ஃபரஸ் குண்டு சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன இந்தியாவுக்கு? புலிகளை ஒழிப்பது strategically important என்று யாரோ ஒரு ஃபாரின் ஆஃபீஸ் பாபு தீர்மானித்திருக்கிறார்!

ஹ. பிரசன்னாவின் நண்பர் மேலும் சொல்கிறார் –

பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

சிரிசபாரத்தினம் இறந்த நாளிலிருந்து பிரபாகரனுக்கு எதிர்ப்பு நிலை எடுப்பவன் நான். ஆனால் ஹ. பிரசன்னாவின் நண்பர் சொல்வது போலத்தான் நானும் பிரபாகரனின் மரணச் செய்தி கேட்டபோது வருத்தப்பட்டேன். ஈழத் தமிழர்களுக்கு இருந்த பெரும் பாதுகாப்பு அரண் தகர்ந்துவிட்டது என்று தோன்றியது. ஆனால் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று என்னால் நம்பமுடியவில்லை.

இனி மேலாவது விடிவு வந்தால் சரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
ஹரன் பிரசன்னாவின் பதிவு
பிரபாகரன் மறைவு?
பிரபாகரன் – ஒரு மதிப்பீடு

Advertisements