சிறு வயதில் என் அம்மா அவ்வப்போது கேட்பாள் – ஏண்டா இப்படி மூணாம் பேஸ்து அடிச்சவன் மாதிரி உட்கார்ந்திருக்கே என்று. என் முகமே அப்படித்தான் என்று புரிந்ததும் அப்படி கேட்பதை நிறுத்திவிட்டாள்.

அது என்ன மூணாம் பேஸ்து என்று புரிந்ததே இல்லை. உண்மையில் என் அம்மாவுக்கும் அது என்ன என்று தெரியவே இல்லை. அதன் ஒரிஜினல் அர்த்தம் என்னவோ, அது மறந்தே போய் கவலையில் மூழ்கி இருப்பவன் என்று ஒரு புது அர்த்தம் உண்டாகிவிட்டது. போதாக்குறைக்கு இந்த சொல்வடை (idiom) என் கண் முன்னாலேயே வழக்கொழிந்து போயிற்று. இதை எல்லாம் யாராவது பேச்சில் பயன்படுத்தி கேட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன.

வாசகர்கள் யாராவது இந்த சொல்வடையை கேட்டிருக்கிறீர்களா? கேட்டிருந்தால் கட்டாயமாக மறுமொழி எழுதுங்கள்.

சமீபத்தில் ரா.கி. ரங்கராஜனின் ஒரு புத்தகத்தில் இந்த சொல்வடையை மீண்டும் பார்த்தேன். பற்றாக்குறைக்கு அப்படி என்றால் என்ன என்று ஒரு கேள்வியை வேறு பாத்திரத்தின் வாய்மொழியாக கேட்டிருந்தார், பதில் இல்லாத கேள்வி. அவருக்கே தெரியவில்லை போலும்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், அடுத்த இரண்டு நாளில் சில்வர் டங் ஸ்ரீனிவாச சாஸ்திரி என்ற ஓரளவு பிரபலமான தலைவரின் ஒரு புத்தகம் அகப்பட்டது. முப்பதுகளில் எழுதப்பட்ட புஸ்தகம் மாதிரி தெரிகிறது. அதில் அவர் இதை விளக்கி இருந்தார். தஞ்சாவூர் வட்டாரத்தில் ஓரளவு பிரபலமான சொல்வடையாம். ரம்மி ஆடும்போது ஒன்றுமே சேராவிட்டால் (ஃபுல் என்று சொல்வோம்) அதை பேஸ்து என்பார்களாம். மூன்று முறை தொடர்ந்து அந்த மாதிரி ஆனால் அதுதான் மூணாம் பேஸ்து!

பிற்சேர்க்கை: வழக்கொழிந்து போன சொல்வடைகள் ஏதாவது நினைவு வந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

Advertisements