என் பெரிய பெண் ஸ்ரேயா சமீபத்தில் செஸ் பற்றிய ஒரு ஐதீகத்தை படித்தாள். அதாவது செஸ் கண்டுபிடித்த அறிஞனுக்கு ராஜா பரிசு கொடுக்க விரும்பினாராம். அறிஞர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் விடவில்லையாம். அறிஞர் கடுப்பாகிவிட்டாராம். சரி இதில் 64 கட்டங்கள் இருக்கின்றன, முதல் கட்டத்துக்காக எனக்கு ஒரு நெல்மணி பரிசு கொடு, அடுத்த நாள் இரண்டாவது கட்டத்துக்கு அதை இரண்டாக்கி இரண்டு நெல்மணி பரிசு கொடு, அடுத்த நாள் அதை இரண்டாக்கி நாலு நெல்மணி பரிசு கொடு, இப்படி தினம் தினம் இரண்டு மடங்காக 8, 16, 32, 64… என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் பரிசு கொடு கேட்டாராம். ராஜா இவ்வளவு சீப்பாக முடிந்துவிடுகிறதே என்று சந்தோஷப்பட்டானாம். ஆனால் அப்படி கொடுக்க வேண்டிய அளவுக்கு (மொத்தம் – 2 power 64, குத்துமதிப்பாக நான்கு ட்ரில்லியன் ட்ரில்லியன், 4,000,000,000,000,000,000,000 நெல்மணிகள்) இன்னும் நெல் விளையவே இல்லையாம்!

ஸ்ரேயா இதைப் படித்துவிட்டு எங்களிடம் வந்து அம்மா நான் தினமும் உனக்கு பாத்திரம் கழுவித் தருகிறேன், முதல் நாள் நீ எனக்கு ஒரு பென்னி கொடுத்தால் போதும், அடுத்த நாள் இரண்டு பென்னி, அதற்கு அடுத்த நாள் நான்கு, இப்படி நீ ஒரு மாதம் கொடுத்தால் போதும் எனறாள். கிட்டத்தட்ட பத்து மில்லியன் டாலர்கள் வரும். நான் மூச்சு வாங்கிக்கொண்டு கணக்கு பார்த்து சொல்ல, அம்மாவும் பெண்ணும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு என்று பாடாத குறைதான். சின்னப் பெண் க்ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கள் எல்லாரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அக்காவுக்கு பத்து மில்லியன் டாலர் வரும் என்று மட்டும் புரிந்தது.

“You will share with me, right அக்கா?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டாள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

தொடர்புடைய சுட்டிகள்:

 • க்ரியா எழுதிய கதை – The Haunted House
 • க்ரியா: அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி?
 • க்ரியாவின் அலுப்பு
 • க்ரியா: நேற்று இன்று நாளை
 • க்ரியாவின் ஏமாற்றம்
 • க்ரியா: பெரிய நம்பர்கள்
 • க்ரியாவுக்கு சொன்ன கதை
 • அக்கா vs சாக்லேட்
 • ஸ்ரேயா: பரீட்சைக்கு நேரமாச்சு
 • ஸ்ரேயாவின் பசி
 • Advertisements