மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். நம்பிக்கையை லாஜிக் மூலம் நிறுவுவது வீண் வேலை, வெட்டியாகத்தான் பேச வேண்டி இருக்கும், நிறுத்திக் கொள்வோமே என்று சொல்லிப் பார்த்தேன், இன்னும் ஜெஹோவா vs சுடலைமாடன் பதிவில் வைஷ்ணவம் vs ஹிந்து மதத்தின் பிற கூறுகள், கிருஸ்துவம் vs பிற மதங்கள் ஆகியவற்றைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிற்கவில்லை. சரி நானும் என் பங்குக்கு குட்டையை குழப்புகிறேன்.

ஹிந்து மதத்தில் எனக்குப் பிடித்த கூறு அதன் பன்முகத்தன்மைதான். (ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை, அது பல “மதங்களின்” இணைப்பு என்று யாராவது ஆரம்பிக்காதீர்கள். பல நூறு வருஷங்களாக ஹிந்து மதம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்கு முன்பும் பல நூறு வருஷங்கள் பல வைணவம், சமணம், சைவம், கௌமாரம், காணாபத்யம், சாக்தம், கபாலிகம், மூத்தார் வழிபாடு, இயற்கை வழிபாடு என்று பல “மதங்கள்” – ஆனால் ஒன்றுகொன்று தொடர்புள்ளவை – இருந்தன.) மதம் என்பது ஒரு பர்சனல் விஷயம், உனக்கு எது சரிப்படுகிறதோ அதை நீ கடைப்பிடிக்கலாம், உருவ வழிபாடா, சடங்குகளா, கர்ம யோகமா, நாத்திகமா, சங்கீத பஜனையா, நாமாவளியா, கணவனை வழிபடுவதா, அம்மா/அப்பா வழிபாடா, எது உனக்கு ஒத்து வருகிறதோ அதை செய் என்ற ஒரு அடிப்படை இந்த மதத்தில் எப்போதும் இருந்து வருகிறது. இன்றும் கூட ஹிந்து மதக் “கோட்பாடுகள்” அனைத்தும் optional guidelines மட்டுமே. கீதையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஹிந்துவாக இருக்கலாம். கோவிலுக்கு போகாவிட்டாலும் ஹிந்துவாக இருக்கலாம். வேதங்களை நிராகரித்தாலும் ஹிந்துவாக இருக்கலாம். தேவாரத்தை, திவ்யப் பிரபந்தத்தை, விபூதியை, நாமத்தை, குங்குமத்தை, அய்யா வைகுண்டரை, சங்கராச்சாரியாரை, குன்றக்குடி அடிகளாரை, மேல்மருவத்தூர் சாமியாரை யாரை வேண்டுமானாலும் ஏற்கலாம்/நிராகரிக்கலாம், உங்கள் ஹிந்து அடையாளத்துக்கு எந்த பாதிப்பும் வராது.

ஆபிரகாமிய மதங்களில் எனக்கு பிடிக்காத கூறும் அதன் “My way or the highway” அடிப்படைதான். என்னை வழ்படுபவர்களுக்கு சொர்க்கம், வழிபடாதவர்களுக்கு நரகம் என்று ஒரு கடவுள் சொல்வது என்னுடைய கடவுள் கருத்தாக்கத்தில் ஒரு இழிவான செயல். ஒரு ஜட்ஜ் என்னை your honor என்று சொல்பவர்களுக்கு விடுதலை, சொல்லாதவர்களுக்கு தண்டனை என்று சொன்னால் அவரது நீதி பரிபாலனத்தைப் பற்றி என்ன நினைப்போம்? என்னுடைய கடவுள் நீதியை, மனிதனின் ஒழுக்கத்தை, நல்ல செயல்களை ஊக்குவிப்பவர். கருணையே நிறைந்த ஒரு தாயைப் போன்றவர். அவர் சில குற்றவாளிகளை மன்னித்து தண்டனை தராமல் இருக்கலாம். ஆனால் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தால், மனித குலத்துக்கு தரும் டென் கமான்ட்மென்ட்சில் பாதி என்னை வழிபடு, அடுத்தவனை வழிபடாதே என்றே இருந்தால், அது என் கண்ணில் ஒரு மாற்று குறைவாகத்தான் தெரிகிறது.

இது என் கருத்து; கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், கந்தர்வன் போன்ற தீவிர வைஷ்ணவர்கள் வேறு மாதிரி நினைக்கலாம். அது அவர்கள் உரிமை. அவர்கள் எனக்கு வேறு கருத்து இருக்கும் உரிமையை அங்கீகரித்தால் அது போதும்.

மதமாற்றம் பற்றி ஒரு சில எண்ணங்கள் – மதமாற்ற பிரசாரம் சட்டப்படி சரிதான். அடுத்தவர் வழிபடும் கடவுள்களை தூற்றவும், தாழ்த்தி பேசவும் எல்லாருக்கும் – மிஷனரிகளுக்கு, முல்லாக்களுக்கு, கந்தர்வன் போன்ற வைஷ்ணவர்களுக்கு – சட்டப்படி உரிமை இருக்கத்தான் செய்கிறது. கருத்துரிமை என்ற உயர்ந்த லட்சியத்துக்காக நாம் கொடுக்க வேண்டிய விலை இது. ஆனால் அது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒரு தனிப்பட்ட மனிதன் நான் கிறிஸ்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று ஒரு மதப் பிரசாரகரிடம் கேட்டால் பைபிளைப் பற்றி எடுத்து சொல்லலாம், குரானைப் பற்றி பேசலாம், கீதையைப் பற்றி விளக்கலாம், தயானந்த சரஸ்வதியின் கோட்பாடுகளைப் பற்றி பேசலாம். எனக்கு பைபிள் படிக்கத் தோன்றியபோது கிருஸ்துவ நண்பர்கள் கொடுத்தார்கள். நான் அப்படி இப்படி என்று என் “குதர்க்க” கேள்விகளைக் கேட்டால் சில சமயம் பொறுமையாக பதில் சொன்னார்கள், சில சமயம் எரிந்து விழுந்தார்கள், சில சமயம் “டேய் இதைப் பத்தி இப்படி பேசினால் சண்டைதான் வரும்” என்று எச்சரித்தார்கள். ஆனால் யாரும் கிருஸ்துவ மதம் உயர்ந்தது, கிருஷ்ணன் மதம் தாழ்ந்தது என்று பேசவில்லை. நானாகப் போய் மதம் மாற வேண்டும் என்று கேட்டிருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார்கள். ஆனால் அவர்களாக என்னை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுவே சரியான அணுகுமுறை.

“உலகமெல்லாம் சென்று சீஷர்களை உருவாக்குங்கள்” என்ற வரியைப் பிடித்துக் கொண்டு அதை மத மாற்றப் பிரசாரத்துக்கு லைசன்சாக எடுத்துக் கொண்டால் அடுத்தவர்கள் மனம் புண்படத்தான் புண்படும். அதைப் பற்றி கவலை இல்லை, சட்டப்படி எனக்கு இருக்கும் உரிமையை நான் அனுபவிக்க விரும்புகிறேன் என்று சொன்னால் தடுக்க முடியாது. ஆனால் அப்படி பிரச்சாரம் செய்யும் மனிதர்களைப் பற்றி அநேகமான அடுத்த மதத்தினருக்கு நல்ல எண்ணமும் உருவாகப் போவதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

தொடர்புடைய பதிவுகள்: ஜெஹோவாவும் சுடலைமாடனும்

Advertisements