கோபாலின் பதிவுகளை விரும்பிப் படிப்பவர் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் அனுப்பி இருக்கும் இன்னொரு பதிவு ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். ஓவர் டு கோபால்!

வாழ்க்கையில் எது கிடைத்தாலும், ஓசியில் வாங்கி சாப்பிடுவது, அல்லது ஒரு பொருளை இலவசமாக வாங்கி உபயோகிப்பது என்பதில் கிடைக்கும் ஆனந்தம் உழைத்து சம்பாதிப்பதில் கிடைப்பதில்லை. தமிழர்களுக்கே உரித்த யதார்த்தமாக வந்த பழக்கவழக்கங்களை அவ்வளவு விரைவாக மறப்பதற்கில்லை.

ரயிலில் போகும்போது, ‘சார் கொஞ்சம் செய்தித்தாள் கொடுக்கிறீர்களா’ என்று கேட்டுவாங்கி அவர் படிக்கும் முன்பே ஒரு வரி விடாமல் படித்துவிட்டு, அவர் அதை படிக்க ஏங்கும் வரை எரிச்சலாகி, வேறு ஒரு சஞ்சிகையை வாங்கி வந்தவுடன் அதை பிடுங்கிக் கொண்டு இதை அவரிடம் கொடுத்து, “போதும் சார், நீங்க படிங்க” என்று சிரிப்பை பல்லிலும் மகிழ்ச்சியை கண்ணிலும் காட்டுவதாகட்டும், திரைப்படம் பார்க்கும் போது, தம் நண்பர்களிடம், “இப்போ பாரு, விஜயகாந்த் வில்லனை ஒரு குத்து விடுவார்” என்று முன்கூட்டியே வரும் காட்சியைக் கூறி படம் பார்க்காத நமக்கு எரிச்சல் மூட்டுவதாகட்டும், பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு அந்தத் தாளில் கையை துடைத்து நடுச்சாலையில் எறிவதாகட்டும், எது இலவசமாக கிடைத்தாலும், முதலில் போய் கால் கடுக்க நின்று வாங்கி, போருக்குப் போன வீரன் வெற்றி வாகை சூடுவது போல அந்த இரண்டணா ‘டீ’ தூளை வாங்கி வருவதாகட்டும் நமக்கு நிகர் நாமே.

இது போன்ற தினப்படி பழக்கத்தை மறக்க முயற்சிப்பது தேசத் துரோகம், இனத் துரோகம். நாம் யாருடனும் விரோதம் பாராட்டுவோம், ஆனால் இது போன்ற ரத்தத்தினூடே ஊடுருவித் தூங்கும் பழக்கத்தை நாமே நினைத்தாலும் விடமுடியாது. பள்ளிக்கு போகும்போதே, இடைவேளையில் வாங்கித் திங்க ஒன்றும் இல்லாவிட்டால், “டேய், குமார், எனக்கு ஒரு காக்காக்கடி கொடுடா” என்று ஆரம்பிக்கிறது நமது ஓசி பயணம்.

சரி, அது என்ன ஓசி? அந்தக் காலத்தில், அதாவது ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் லண்டனுக்கு தபால் அனுப்புவது என்பது மிகவும் செலவான காரியம். இங்கு ஊழியம் செய்த துரைமார்கள் அங்குள்ளவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் புனைய வேண்டுமென்றாலோ, ஒரு ஆவணத்தை அனுப்ப வேண்டுமென்றாலோ மிகச் செலவாகும்.

ஆனால், அரசாங்க கடிதங்கள் மொத்தமாக ஒரு பெரிய உறையில் போட்டு மடிக்கப்பட்டு அரசாங்கச் செலவில் அனுப்பப்படும். அதன் மேல் “OG” அதாவது “ON GOVERNMENT SERVICE” என்று எழுதப்பட்டிருக்கும். இந்த வெள்ளையப்பன்கள் தங்களின் சொந்த கடிதங்களையும் சேர்த்து மெதுவாக சேர்த்துவிடுவார்கள். லண்டனில் இருக்கும் அடிவருடிகள் அதை பிரித்து உரிய இடத்தில் சேர்த்து விடுவார்கள். இந்த நமது கதாநாயகன் தான் “ஓஜி”. சுருக்கமாக கூறுவதற்காக “SERVICE” என்பதை முதலில் வெட்டிவிட்டு, “ஓஜி” என்று கூறத் தொடங்கினார்கள். பின் நாளடைவில், அதை உறையில் “ஓஜி” என்று எழுதினார்கள். நாம்தான் எதையும் நம்மகப்படுத்துவோமே, இந்த ஓஜிதான் மருவி, ஓசி ஆனது. பின்னாளில், எது இலவசமாக கிடைத்தாலும், “என்ன ஓசியா” என்று கேட்டு அதற்குரிய மரியாதையைக்கொடுத்தோம்.

பள்ளிப் பருவத்தில் கோவிலும், ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்களிப்பது என்பது இயல்பாகவே உண்டு. அதற்கு முக்கியக் காரணம் – எந்த பண்டிகைகளோ, விழாவோ நடந்தாலும் ஓசியாக ஏதாவது சாப்பிடக்கிடைக்கும். ஒரு வெள்ளிக்கிழமையென்றால், நிறைய பேர் ‘வடல்’ என்று வட்டார வழக்கில் சொல்லப்படும் சிதறு தேங்காய் பிள்ளையாருக்கு உடைப்பார்கள். அதில் பல பசங்கள் சேர்ந்து கொண்டு, உடைத்தவுடன் அதிகம் பொறுக்கிக்கொண்டு தலைவனிடம் கொடுத்தால் ‘பொறுக்கும்’ குழுவில் சேர்த்துக்கொள்வான். ஒரு 8 மணிக்கு கோவில் மூடும்போது, அதை மொத்தமாக பனியனைக் கழட்டி அதில் கொட்டி பங்கு வைப்போம். அதில் அடிதடியெல்லாம் வந்ததுண்டு. எல்லாம் பாழாப்போன (மறுநாளைக்கு கிடைக்கும்) சட்னிக்குத்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், நாம் திறமையாக நிறைய பொறுக்கியிருந்தாலும், சம பங்கை கூறு போடும்போது, நம் பங்கு குறையும்போது, கோபம் வரும். அப்போது கட்டி புரண்டு சண்டைபோட்டுள்ளோம். அடுத்தது, இந்த ஆடி மாசம் அமாவாசை திங்கள்கிழமைகளில் வந்தால் ஒரே குஷிதான். குழந்தை பிறக்காத பணக்காரர்கள் அரச மரத்தை சுற்றி வந்து, பூஜைகள் செய்து, ஒரு 1008 சிறு மணியோ அல்லது வேறு ஏதோவொரு (பரிசுப் பொருள்) பொருளைக் கொடுப்பார்கள். ஏப்ரல் மாதம் பஞ்சாங்கம் வந்தவுடனேயே ஆடியில் திங்கள் அமாவாசை வருகிறதா என்று பார்த்துவிடுவேன். காலையிலேயே போய் எப்படியும் ஒரு 2ஆவது வெற்றிகரமாக வாங்கிவந்துவிடுவேன். நவராத்திரி வந்து விட்டால், பேப்பரை பொட்டலமாகக்கட்டிக்கொண்டு ஒவ்வொருவீட்டிலும் போய் சுண்டல் வாங்கித்தின்போம். பண்ணையார் வீடுகளில் தெண்ணந்தோப்பு இருந்தால், சில சமயம் அவர்கள் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்காக, அதை உடைத்து தண்ணீரை எல்லோருக்கும் இலவசமாக கொடுப்பார்கள். எல்லாவற்றையும் நானே குடித்துவிட வேண்டுமென்று கருதி, அதை வாளி வாளியாக, குரங்கு கள் குடிப்பது போல் குடித்துவிட்டு, வாளியில் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து மாலையில் புளித்துப்போய் (குளிர்பதன வசதி கிடையாது) கொட்டியுள்ளேன். திருவாதிரைக்கு களியும், பிள்ளையார் சதுர்த்திக்கு பலவகை கொழுக்கட்டையும், மார்கழி மாதத்தில் ‘திருப்பிட்சை’ என்றழைக்கப்படும் தயிர் சாத பிரசாதமும் ஓசியில் அனுபவித்துள்ளேன். சினிமாவிற்கும் ஓசியில் போயுள்ளேன். அந்தக் கூத்தை கேளுங்கள்.

ஒரு முறை மாமா வீட்டிற்கு மதுரையில் (விடுமுறையை அங்குதான் கழிப்போம்) இருக்கும்போது, மாமாவிடம் கெஞ்சி ஓசியில் பாஸ் வாங்கிக் கொடுக்கச் சொன்னோம். அவரும் 8 பாஸ் வாங்கி போய் அனுபவியுங்கள் என்று கொடுத்துவிட்டார். தேன் சுவைத்த வண்டு மயக்கத்தில் வட்டமிடுவது போல் மகிழ்ந்து, சிம்மக்கல்லில் இருந்த அந்தக் கொட்டகைக்கு போய், (படம்: “சிவப்புக்கல் மூக்குத்தி“) அங்குள்ள பணியாளரிடம் இலவச அனுமதிச் சீட்டுகளை கொடுத்தோம். அவரோ எங்களை அலுவலக பொறுப்பாளரிடம் கூட்டிப்போனார், அவர் எங்களை மேலேயும் கீழேயும் பார்த்து தையல்காரர் போல் கண்ணால் அளவெடுத்தார். ஒரு சலிப்புடன் “போங்க, போங்க” என்று தலையில் அடித்துக் கொண்டார். ஓஹோ, ஓசியில் வந்ததால் அவருக்கு கோபம் போல என்று எண்ணி உள்ளே போனோம். படம் ஆரம்பித்து முடியும் வரை நாங்கள் 8 பேர்தான் இருந்தோம், அவர் தலையில் அடித்துக்கொண்டது இப்போது புரிந்தது. அந்தப் படத்திற்கு கமல், ஸ்ரீதேவி நடிப்பதாக பெரிதாக விளம்பரம் செய்திருந்தார்கள். இரண்டு பேருமே ஒரு ஐந்து நிமிடம்தான் படத்தில் வருவார்கள் என்று நினைவு. ஓசிக்கு கிடைத்த அடுத்த அடி.

பின்னாளில் நகரத்திற்கு குடிபெயர்ந்தவுடன், இலவசமாக போய் வாங்குவது நம்மை கிராமத்தான் என்ற முத்திரை குத்திவிடும் என்று நினைத்து ஒரு வட்டத்தை எனக்குள்ளே போட்டுக்கொண்டேன். நகரத்தில் இருப்பவர்கள் மிகவும் யோக்கியர்கள் என்ற எண்ணம் வந்த புதிதில் இருந்தது. ஒரு முறை, ஒரு ராதா கல்யாணத்தில் ஓசியில் தேநீர் குடுத்தார்கள். அதை வாங்குவதற்க்கு ஒரு பெரிய கும்பல் அடித்துக்கொண்டிருந்தது. இதில் பணக்காரர் ஏழை என்றல்லாம் வித்தியாசம் கிடையாது. எனக்குத் தெரிந்து இந்த ஓசி அதிகமாக வாங்குவது பணக்காரர்களும், மேல்தட்டு மக்களும்தான். ஏழையாக இருப்பவனுக்கு பசிக்கும்போது மட்டும்தான் தேவைப்படும். வசதி உள்ளவனுக்கு எப்போதும் எதற்கும் பசிதான். நமக்கு இலவசம் என்றால் ஒரு போதை உண்டு. அந்த பாரம்பரியத்திலிருந்து விலகினால் நமக்கே அவநம்பிக்கை வந்துவிடும்.

அந்த தேநீர் நிகழ்ச்சி, ‘ஓஹோ நகரத்திலும் இதே நிலைதான் போலும்’ என்று எண்ண வைத்தது. இந்த ஓசி என்பது அண்ணன் என்றால், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ தம்பி மாதிரி. என்ன, இதே உத்தியை பல தொழில்களில், முக்கியமாக புடவை, பேனா, வீட்டு சாதனங்கள் எல்லாவற்றிலும் பயன்படுத்தினார்கள். ஒரு மின்விசிறி வாங்கினால் ஒரு 200 ரூ. தள்ளுபடி. இந்த மார்கட்டிங் நிறுவனங்கள் இருக்கிறதே அவற்றுக்கு நாம் எங்கே விழுவோம் என்று தெரியும். ஒரு விடுமுறைக்கு உங்களுக்கு கோவா, அல்லது கொடைக்கானல் போய் வர இலவசமாக பயணசீட்டும், தங்கும் வசதியும் கொடுக்கும் திட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால், எங்கள் அலுவலகத்தில் வந்து அதை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள். அங்கு போனால், ஒரு 1 மணிநேரம் நம் கழுத்தை அறுத்து பின் 6 மாதத்திற்குள் உபயோகிக்கும் இலவசமாக ஓசியில் தங்கும் பத்திரத்தை (அதுவும் நாம் போகாத இடமாக உ.பி-யில் ஒரு இடத்தில்) கொடுப்பார்கள்.

துபாயில் ஏர்ஷோ எனப்படும் விமான கண்காட்சிக்கு போயிருந்தேன், அங்கு எல்லோருக்கும் ஒரு நிறுவனத்தின் சார்பில் தொப்பி இலவசமாக கொடுதுக்கொண்டிருந்தார்கள். சிறிதுநே ரத்தில் எனக்கு, எனக்கு என்று கூவி ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விட்டது. நடந்த கூத்தில் தொப்பிபட்டுவாடா பண்ணுபவர் இருப்பதை போட்டுவிட்டு ஓடிவிட்டார். பார்க்க நன்றாக பொழுது போயிற்று.

பொதுவாக நகரத்தில் இருப்பவர்களும் இப்படித்தான் போலும், ஆஹா வெளிநாட்டினரை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணத்தை சற்று மாற்றினேன். சமீபத்தில் இந்த எண்ணமும் தவிடு பொடியானது. நாம்தான் பட்டிக்காடு, மற்றவர்கள் யோக்கியர்கள் என்பதற்கு ஆப்பு வைத்தது சமீபத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி.

எங்கள் நிறுவனம் பிரபல வர்த்தக மடிக்கணிணி விற்கும் பிரத்யேக உரிமை பெற்ற விற்பனையாளர்கள். புதுப்புது வடிவம் சந்தைக்கு வரும்போது, பழைய படிவங்களை ஓரளவு குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். முதலில் உள்கட்டு விளம்பரம் மூலம் இன்னென்ன தேதியில் விற்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள், 8.00 மணி முதல் 2.00 மணி வரை என்று. நான் அந்தரங்கமாக விசாரித்ததில் சுமார் 150 – 200 கணிணிவரை விற்கப்போகிறார்கள் என்றும் கடை திறந்த ஒருமணிநேரத்திற்குள் போனால் ஏதாவது தேறும் என்றும், இதற்கு எந்தவிதமான உத்திரவாதமோ, மின்கலமோ, எம்.ஸ்.ஆஃபீஸ் போன்ற மென்பொருளோ கிடையாது என்றும், வீட்டிற்கு கொண்டுபோய் வேலைபார்க்காவிட்டால் அவ்வளவுதான்! அது நம் தலைவிதி என்று விடவேண்டியதுதான் என்றும் அறிந்தேன். பல முறை இது போல ஆப்பசைத்த குரங்காக அடிபட்டுவிட்டதால், இது போன்ற அலங்கார வார்த்தைகளில் மயங்கி வாங்குவதில்லை என்ற முடிவை எடுத்து கொள்கையாக கடைபிடித்து வருகிறேன். வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாலும், அங்கு நடக்கும் கூத்தை பார்க்க ஆவலாக இருந்தது. இது போன்று ஒரு முறை கைக்கடிகார விற்பனையில் சூடு பறந்து, ‘நவாப் ராஜமாணிக்கம்’ நாடகத்தை பார்க்கமுடியாத குறைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறேன்.

சரி என்று விற்பனை தினம் சுமார் 8 மணிக்கு போனால், திருப்பதி தோற்றது அவ்வளவு கூட்டம். சுமார் 2000 பேர்கள் இருக்கும் தேரோட்டம் போல் ஜே ஜே என்று இருந்தது. ஒரே அடிதடி, “நாடோடி மன்னன்” படத்திற்கு போய் பார்த்த அடிதடி, தள்ளுமுள்ளுக்கப்புறம் இன்றுதான் பார்க்கிறேன். அங்குள்ள காவலாளி சமாளிக்க முடியாமல் ஓடிவிட்டான். முக்கால்வாசி மக்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், பகுதி இந்தியர்கள், மீதி இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள், அங்கு ஒருவர் ‘சார், இவர்கள் காலையில் 4 மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள்” என்றான். இவ்வளவு கூட்டத்தை பார்த்து அங்கு என்னவென்று பார்க்கவந்த அரசு காவலரோ தவறான வாகன நிறுத்திகளை பெண்டு எடுத்து சீட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார். பல இந்தியர்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்களிடம் தோற்று சமாளிக்க முடியாமல் புறமுதுகுகாட்டி ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் எல்லோர் மேலேயும் ஏறி ஓடிக்கொண்டிருந்தான். வெப்ப நிலை வேறு அதிகமாக இருந்ததால், சூரியன் ஒரு மணி சூட்டை காலையிலேயே ஆப்பு வைத்துக் கொண்டிருந்தான். ஒருவன் பனியன் கிழிந்து, “oh it is too much” என்று நொந்துகொண்டு புலம்பிக்கொண்டிருந்தான். 8 மணிக்கு சுமார் 5 நிமிடம் சிறிதாக கதவைத் திறந்து மூடிவிட்டார்கள். ஒரு காவலாளி வந்து, “எல்லோரும் வரிசையில் வாருங்கள்” என்று கூற, அவரை துச்சமாக மதித்து, கொத்தாக தூக்கி ஓரம் கட்டிவிட்டு கும்பல் முன்னேறியது. ஒருவன் கொண்டுவந்திருந்த குடிதண்ணீரை குடித்துக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்தவன் ஓசியில் பிடுங்கி குடித்துக்கொண்டிருந்தான். இருவருக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததுகொண்டிருந்தது. சிலபேர் அவர்கள் உற்றார் நண்பர்களை அலைபேசியில் கூப்பிட்டு சீக்கிரம் வரவும், வரவேண்டாம் என்று நேர் வர்ணனை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்த கூத்து போதாதென்று, கணிசமான பெண்கள் வேறு வந்து எங்களுக்கு தனிவரிசை வேண்டும் என்று பெண்ணுரிமையை நிலைநாட்ட முற்பட்டு 33% ஒதுக்கீட்டிற்கு நேர்ந்த கதிபோல் தோற்று ஓடிக்கொண்டிருந்தார்கள். யாரும் யாரையும் மதிக்கும் மனநிலையில் இல்லை, எல்லோருக்கும் ஒரே மனநிலைதான் “எப்படியும் ஒன்றாவது வாங்கிவிடவேண்டும்” என்ற வெறி. ரொம்ப நாளைக்கப்புறம் சிறந்த நகைச்சுவை காட்சியை நேரில் கண்டு களித்தேன்.

என் அலுவலகத்தில் சக பணியாளரிடம் கேட்டபோது “இந்த வீர விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை” என்றார்கள். யாருமே கணினி வாங்கியதாகத் தெரியவில்லை. பின் யார்தான் வாங்கினார்கள்? கடைசி முடியும் பதிலே கிடைக்கவில்லை. நான் அறியப்பட்டவரை. இந்தக் கூத்து முடியும்போது ஒன்று மட்டும் நிச்சயமாக புலப்பட்டது – இந்த ஓசி, இலவசம், தள்ளுபடி என்பவற்றிற்கு கிராமம், நகரம், உலகம் என்றெல்லாம் கிடையாது. எல்லோருக்குமே ஆழ்மனதில் ஒரு பொருளை எப்படியாவது குறைந்த விலைக்கோ, ஓசியிலோ, இலவவசமாகவோ வாங்கிவிட வேண்டுமென்ற உள்ள வேட்கை உள்ளது. ஏதோ நமக்கு பொழுது போனால் சரி என்று நினைவலைகளை அசை போட்டுக்கொண்டே செய்தித்தாளை பிரித்தேன், “ஒரு அலைபேசி வாங்கினால் ஒரு அலைபேசி இலவசம்” என்ற விளம்பரம் வந்திருந்தது. பாவம், எத்தனை எலிகள் இந்த மசால் வடைப்பொறியில் சிக்கப்போகின்றனவோ என்று பெருமூச்சு விட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கோபால் பக்கங்கள்

கோபாலின் முந்தைய பதிவுகள்:
(பருப்புருண்டை) மோர்க்குழம்பு
நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்

தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
பள்ளிக்கூடம், பரீட்சை, மாலைமுரசு
மருது பாண்டியர் பற்றி உ.வே. சாமிநாதய்யர்
பழமொழி விளக்கம் – அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்
டைம் பாஸ் கவிதைகள்
ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்
கோபாலின் நெல்லிக்காய் நினைவுகள்

Advertisements