நேற்று ஒரு முஸ்லிம் நண்பர் வீட்டிலிருந்து பிரமாதமான சிக்கன் பிரியாணி வந்தது. ஒரு வெட்டு வெட்டினோம். அப்போது ஒவ்வொரு ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் ஸ்பெஷலான சாப்பாட்டு ஐட்டங்கள் ஏதாவது உண்டா என்று லிஸ்ட் போட ஆரம்பித்தேன். ஜாதியால் இன்றைக்கும் கிடைக்கும் நல்ல விஷயம் இதுதான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்கள்.

  1. அய்யர் வீட்டு ரசம் (பருப்பு+தக்காளி ரசம், எலுமிச்சம்பழ ரசம், மைசூர் ரசம் மூன்றும்) – ரசம் சர்வசாதாரணமான விஷயம்தான். ஆனால் அய்யர் வீடு ரசப் பக்குவமே தனிதான். பாருங்கள் அதிலும் நான் அய்யங்கார் வீட்டு ரசத்தை (சாத்தமுது?) சேர்த்துக்கொள்ளவில்லை!
  2. அய்யர் வீட்டு பொடி அடைத்த முழு கத்தரிக்காய் “கறி” (பொரியலை அய்யர்கள் கறி என்றுதான் சொல்வார்கள்)
  3. அய்யர் வீட்டு தாளகம் ஏறக்குறைய புளி போட்டு சமைத்த அவியல் மாதிரி இருக்கும், திருவாதிரை அன்று மட்டும்தான் கிடைக்கும், திருவாதிரைக் களியோடு சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும் என்பார்கள். எனக்கு என்னவோ அந்தக் களி பிடிப்பதில்லை.
  4. அய்யங்கார் வீட்டு புளியோதரை எல்லாரும் புளியோதரை அருமையாகத்தான் செய்கிறார்கள், ஆனால் ஐயங்கார் வீட்டு புளியோதரை என்றால் அது ஸ்பெஷல்தான். அதுவும் பெருமாள் கோவில் பிரசாதம் என்றால் கேட்கவே வேண்டாம்!
  5. செட்டியார் வீட்டு கோழிக்குருமா – செட்டியார்கள் சமையலின் ரகசியம் புளியும் மிளகும்தான் என்று நினைக்கிறேன். இந்த கோழிக் குருமாவைத்தான் இன்று ஹோட்டல்களில் செட்டிநாடு சிக்கன் என்று போடுகிறார்கள்.
  6. முஸ்லிம்கள் வீட்டு சிக்கன் பிரியாணி – நண்பரை ரெசிபி கேட்கவேண்டும். 🙂

மேலும் ஐட்டங்கள்:

  1. கன்னட மாத்வர் வீடு பிசிபேளாபாத்
  2. சேலம் மாவட்டத்தில் வன்னியர் டீக்கடைகளில் கிடைக்கும் தயிரில் போட்ட காரவடை (நான் சாப்பிட்டதில்லை)
  3. திருநெல்வேலிப் பிள்ளைமார் வீட்டு கூட்டாஞ்சோறு (நான் சாப்பிட்டதில்லை)
  4. அய்யர் வீட்டு ஈயச் சொம்பு ரசம், மாக்கல் சட்டி வத்தக் குழம்பு, வேப்பம்பூ ரசம் (இவை எல்லாம் நன்றாக இருக்கும்தான், ஆனால் வேப்பம்பூ ரசம் ஒன்றை மட்டுமே நான் ஸ்பெஷலாக சொல்வேன்.)

டக்கென்று இவ்வளவுதான் நினைவு வருகிறது. உங்களுக்கு நினைவு வரும் ஐட்டங்களையும் எழுதுங்கள்! நினைவிருக்கட்டும், ஒரு ஜாதிக்கு ஸ்பெஷலான ஐட்டங்களை லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறோம், திருநெல்வேலி அல்வா மாதிரி இடத்துக்கு ஸ்பெஷலான ஐட்டங்களை அனுப்பாதீர்கள். ((அதற்கென்று தனியாக ஒரு பதிவு போட்டா போச்சு!) இட்லி, தோசை மாதிரி எல்லாருமே சிறப்பாக செய்யும் ஐட்டங்களையும் அனுப்பாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
தொடர்புடைய பக்கங்கள்: இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ன உணவு வகை ஸ்பெஷல்?

Advertisements