கே. ஆர். ஜமதக்னி என்ற பேரை நான் முதன் முதலாக கேள்விப்பட்டது 2009-இல் தமிழக அரசு அவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கியபோதுதான். அவர் தாஸ் காபிடலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மறைந்த சேதுராமன் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை தேடிக் கொடுத்தார். அவருடைய பேத்தியான சந்தனமுல்லை ஒரு பிரபல பதிவர். அவர் அந்த பதிவின் மூலம்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.

சில வாரங்களுக்கு முன் அவர் தன் கொள்ளுப்பாட்டியான அஞ்சலையைப் பற்றி ஒரு அருமையான பதிவை தன் தளத்தில் ஏற்றி இருக்கிறார். கட்டாயமாக படித்து பாருங்கள்!

அவரது போராட்ட வாழ்வை சுருக்கமாக சந்தனமுல்லை விவரிக்கிறார்.

1921 – சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 – நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை – சென்னையில்
1931 – உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை – கடலூரில்
1933 – மறியல் போரில் மூன்று மாத சிறை – கடலூரில்
1940 – தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 – 18 மாதங்கள் – வேலூர்
1943 – 8 மாதம் 2 வாரம் – பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் :

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார்.

அவருக்கு ஒரு பெண் – லீலாவதி, இவர்தான் ஜமதக்னியை மணந்தவர். மற்ற இரண்டு பையன்கள் பேர் என்ன தெரியுமா? காந்தி, ஜெயில் வீரன்! (ஜெயில் வீரன் இவரது தண்டனைக் காலத்தில் பிறந்தவர்.) லீலாவதியும் ஜமதகனியும் கூட ஜெயில் சென்ற தியாகிகள்தான். சுலபமாக யூகிக்கக் கூடிய விஷயம் – கணவர் முருகப் படையாச்சியும் சுதந்திரப் போராட்ட தியாகிதான்.

அஞ்சலை சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். தென் ஆர்க்காடு மாவட்டக்காரர் போலிருக்கிறது. அவர் போராட்டத்தில் ஈடுபட்டது1921-இல். படையாச்சி என்று சொல்லப்படுவதால் வன்னியர் என்று நினைக்கிறேன். ஒரு பெண், அதுவும் திருமணமான, பெரிய பணம், படிப்பு, அந்தஸ்து அல்லது “உயர்ந்த” ஜாதி போன்ற பின்புலம் இல்லாத குடும்பத்து இளம் பெண்னுக்கு இந்த உறுதியும் லட்சியமும், வேகமும் எப்படி வந்தது? இந்த மாதிரி எந்த “disadvantage”-உம் இல்லை என்றால் கூட இப்படி போராடுவது பெரிய விஷயம். அவரது பின்புலம் இல்லாத நிலை அவரது போராட்டத்தை என் கண்களில் இன்னும் மகத்தானதாக ஆக்குகிறது.

நாம் உயர்ந்த லட்சியவாதிகளை வெகு சீக்கிரம் மறந்துவிடுகிறோம். இங்கேயே சந்தனமுல்லை குறிப்பிட்டிருக்கும் மதுரை பத்மாசனி அம்மாள் யாரோ எவரோ தெரியாது. அப்புறம் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்ல ரோல் மாடல்கள் எங்கிருந்து வரும்?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சந்தனமுல்லையின் பதிவு
சந்தனமுல்லையின் தளம்
கே.ஆர். ஜமதக்னி பற்றிய பதிவு
படம் – காமத் தளத்திலிருந்து

Advertisements