சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகம் இது.  நண்பர் திருமலைராஜனுக்கு நன்றி.

ஜெயிக்க வேண்டும் —  இந்த உந்துதல் மனதில் எழாத மனிதர்கள் எவருமே இருக்க முடியாது.  ஆனால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வெற்றியைத் தேடித் தந்து விடாது.  அதற்கு முறையாக — திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும்.  அதிலும் உடனே வெற்றி கிட்டாமல் தோல்விகள் ஏற்படக் கூடும்.  அவற்றையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து உழைக்க வேண்டும்.

இதன் ஆசிரியர் ஔரங்கசீப் தனது முன்னுரையில் கூறுகிறார்…
ஒன்பது துறைகளைத் தேர்ந்தெடுத்து,  ஒவ்வொன்றிலும் முன்னணியிலுள்ள தமிழர்களின் பட்டியலைத் தயாரித்தோம்.   இரண்டாவது கருத்துக்கே இடமில்லாத அளவு வெகு நிச்சயமாகச் சாதித்தவர் என்று ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமாயிருந்தது.

ஒன்பதே வாரங்களில் இது முடிந்து விட்டபோது, ‘என் நிறுத்தி விட்டீர்கள் ?’  என்று தான் சண்டை போட்டார்கள்.  விளையாட்டுத் துறையிலிருந்து யாரும் பேசாதது பற்றியும்,  மொத்தத் தொகுப்பிலும் ஒரு பெண் கூட இல்லாதது பற்றியும் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

இவற்றுக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதுமில்லை.  இயல்பாக விடுபட்டுப் போயின;  அவ்வளவுதான்.

இந்தச் சாதனையாளர்களின் வாழ்கையைக் கூர்ந்து பார்த்தபோது எனக்குத் தோன்றியவை இவை…
  1. யாருமே தான் தேர்ந்தெடுத்த துறையைக் காதலிக்கத் தவறவில்லை.
  2. ஒரே சமயத்தில் யாருக்கும் இரு ஆர்வங்கள் இருக்கவில்லை.
  3. அத்தனை பேரும் கர்ம யோகிகளாயிருக்கிறார்கள்.
  4. கலையைக் கொச்சைப் படுத்தாத பேராண்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள்.
  5. வெற்றி எத்தனை தொலைவில் இருந்தாலும் எட்டிப் பறிக்கும் வெறியை இறுதி வரை விடாமல் வைத்திருக்கிறார்கள்.  சோதனைகளில் துவண்டு போவதில்லை.
  6. கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வற்றாமல் வைத்திருக்கிறார்கள்.
  7. சாதித்து விட்டோம் என்கிற நிறைவு இதுவரை இவர்களுக்கு ஏற்படவே இல்லை.

இந்த ஒரு வரி பதிப்பீடுகளை நீங்கள் இவர்களது வாழ்வனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் .  வெற்றியின் சூட்சுமம் புலப்படக் கூடும்.

ஜெயித்த கதை சொல்பவர்கள்….

பிரபஞ்சன் – எழுத்தாளர்
வை.கோ.  – அரசியல்வாதி
பத்மவாசன் – ஓவியர்  (இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில்….)
ஜெயேந்திரா – விளம்பரப்பட இயக்குனர்
பழனிபாரதி – பாடலாசிரியர்
பார்த்திபன் – திரைப்பட இயக்குனர்
சுகி சிவம் – சமயச் சொற்பொழிவாளர்
ரா.கி. ரங்கராஜன் – பத்திரிகையாளர்
விஜய்சிவா (கர்நாடக இசைக் கலைஞர்)

உங்களுக்கு ஒரு சுவையான தகவல்.  மதி நிலையம் வெளியீடாக 1999 –ம் ஆண்டு  ஔரங்கசீப் என்ற புனைபெயரில் எழுதியவர் வேறு யாரும் இல்லை.  எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.ராகவன் தான்.

Advertisements