சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடமிருந்து இன்று காலை வந்த e-mail.  உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதால் இந்தப் பதிவு.வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றுவதன் மூலம்  எனக்கு Paris Hilton முதல் Oprah Winfrey வரை பல பிரபலங்களைச் சந்தித்து பேட்டி காண முடிந்திருக்கிறது  என்றாலும்,  மைலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் அருகே உள்ள கிரி ட்ரேடிங்கில் கலைவாணி என்ற ஒரு எளிய பெண்ணைச் சந்தித்து பேட்டி கண்ட அனுபவம் மிகவும் வித்தியாசமானது.

செப்டம்பர் மாதம், 2008 ….  நானும் என் மனைவி பத்மாவும் சிறிது காலம் மைலாப்பூரில் தங்க எண்ணி கோவிலுக்கு மிக அருகில் ஒரு அபார்ட்மென்ட் எடுத்துக்கொண்டோம்.ஒரு நாள், வேதம் சம்பந்தப்பட்ட சில புத்தகங்கள் மற்றும் கேசட்டுக்கள் வாங்கச் சென்ற போதுதான் கலைவாணியைச் சந்தித்தோம்.

வேதம் மற்றும் உபநிஷதம் பற்றிய எனது அறிவு ஒரு சராசரி ஹிந்துவைப் போன்றதே.  ‘தத்வ போதா‘  என்ற தலைப்பில் கோதா வெங்கடேச சாஸ்திரி என்பவர் பாரதீய வித்யா பவனில் ஆற்றிய ஒரு உரையைக் கேட்க நேர்ந்தது.   கோவில் தரிசனத்திற்குப் பிறகு கிரி ட்ரேடிங் கடைக்குள்  ‘தத்வ போதா‘ பற்றிய புத்தகத்தைத் தேடுவதற்காக நுழைந்தோம்.

கடைக்குள் பரபரப்பான இயக்கம்.  பல்வேறு வகையான புத்தகங்கள் முதல்,  பஜன் குறுந்தகடுகள் முதல் பாம்பே ஜெயஸ்ரீ குறுந்தகடுகள் வரை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.  சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளோம் என்று மனது சொல்ல…..

என் மனைவி பாரதியார் பாட்டுக்கள்,  எம்.எஸ். இசை என்று ஒரு பக்கம் மும்முரமாகத் தேட நான் ‘தத்வ போதா‘ புத்தகத்தைத் தேட ஆரம்பித்தேன்.

அங்குதான், காஷியர் பக்கத்தில் நின்று கொண்டு, எங்கள் தேடுதலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கலைவாணியைச் சந்தித்தேன்.  கரிய நிறம்.  கிராமத்துப் பெண் போன்ற தோற்றம்.  வயது 17 அல்லது 18 இருக்கலாம்.  வறுமையினால் இந்த வேலைக்கு வந்திருக்கலாம் என்று என் பத்திரிகையாளன் புத்தி ஏதேதோ குருட்டுக் கணக்குகளைப் போட ஆரம்பித்தது.  என்னையே குருகுருவெனப்  பார்த்துக்கொண்டிருந்த அந்த எளிய பெண்ணை உதாசீனப்படுத்தி விட்டு, என் புத்தகத் தேடுதலைத் தீவிரமாக்கினேன்.40 நிமிடங்கள் உருண்டோடின.  சந்தியா வந்தனம் முதல் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை வரை பல்வேறு புத்தகங்கள் கண்ணில் பட்டன,  நான் தேடிக் கொண்டிருந்த ‘தத்வ போதா‘  மட்டும் கண்ணில் தென்படவேயில்லை.

என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு கேள்வி…

“ஸார்,  உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா ?”

‘தத்வ போதா’   பற்றி இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்ற அலட்சியத்துடன்,  நான்,

“ஆமாம்.  நான் ‘தத்வ போதா‘  என்ற புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.”

“சம்ஸக்ருதத்திலா  அல்லது சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்திலா ?

கடவுளே,  இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது  !!!

“சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில்”

“எந்தப் பதிப்பகம் உங்கள் விருப்பம் ?  சின்மயா மிஷனா ?  அல்லது இந்து பதிப்பகமா அல்லது ராமகிருஷ்ண மிஷன் பதிப்பா ?”

“எனக்குத் தெரியாது.  தத்வ போதம் பற்றி மேலே அறிந்து கொள்ள எனக்கு ஏதாவது புத்தகம் தேவை.”

“உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா ஸார் ?”

“நான் தமிழன் தான் (தமிழன் என்று காண்பித்துக் கொள்ள விரும்பாது நடித்த வாழ்வின் பல்வேறு சூழல்கள் மனதில் தேவையில்லாமல் தோன்றியது)

“அப்படியானால், இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” ,  அவள் கையில்  ‘தத்வ போதா‘ தமிழ்ப் புத்தகம்.

“இந்த எளிமையான அதே சமயம் அருமையான தமிழ்ப் பதிப்பை இந்து பதிப்பகத்துக்காக என். சிவராமன் என்பவர் எழுதியிருக்கிறார்.  உள்ளே சம்ஸ்கிருத சுலோகங்களும் உள்ளன.”

அடக் கடவுளே….  இந்த அறிவுஜீவிப் பெண்ணை எதனால் இவ்வளவு மட்டமாக எடை போட்டு விட்டேன்  ?  நான் ஒரு N.R.I என்ற ஆணவமா ?  அல்லது இந்த கருப்பான கிராமத்துப் பெண் போன்ற தோற்றம் கொண்ட இந்தப் பெண்ணுக்கு ‘தத்வ போதா‘  பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற என் அவசர முன் முடிவா ?

இந்த அருமையான பெண்ணுக்கு முன் அடி முட்டாளாக உணர்ந்தேன்.  மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தேன்.

“மேடம்,   உண்மையைச் சொல்லப் போனால் நேற்று வரை இந்த ‘தத்வ போதா‘   புத்தகத்தை எழுதியவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.  நேற்று நான் கேட்ட ஒரு உரை தான் இந்தப் புத்தகத்தைத் தேட என்னைத் தூண்டியது…..”

“நீங்கள் சென்றது பாரதீய வித்யா பவனில் கோதா வெங்கடேச சாஸ்திரி  ஆற்றிய உரைக்கா ?”

வியப்பின் எல்லைக்கே சென்ற நான்,  “உங்களுக்கு எப்படித் தெரியும் ?”

“இந்தத் தலைப்பில் வழக்கமாக உரையாற்றுபவர் அவர்.  மேலும் இது போன்ற தலைப்புகளில்  உரையாற்றுபவர்களில் மிகச் சிறந்தவர் அவர்.”

“உங்களுக்கு இது போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டா ? ”

“ஆமாம்.  நான் சுவாமி விவேகானந்தர் பற்றியும்,  ராமகிருஷ்ணர் பற்றியும் நிறையப் படித்துள்ளேன்.  உண்மையில், இந்த ‘தத்வ போதா‘  என் மனதிற்கு நெருக்கமான ஒன்று.”

“என்ன !  நீங்கள் இந்த ‘தத்வ போதா‘  ஏற்கனவே படித்திருக்கிறீர்களா ?”

“சிவராமன் எழுதிய இந்தப் புத்தகத்தை நான் முழுக்கப் படித்துள்ளேன்.  இதன் சிறப்பே,  நீங்கள் படிக்க ஆரம்பித்தால்,  முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டீர்கள்.”

“அப்படியென்ன சிறப்பு இந்தப் புத்தகத்தில் ?”

“ஸார்,  நீங்கள் என்னுடன் விளையாடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்..  உங்களுக்கு உண்மையிலேயே இந்த ‘தத்வ போதா‘  பற்றி ஒன்றும் தெரியாதா ?”

அந்தப் பெண்ணிடம் என் அறியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

இதற்கு நடுவில், ஷாப்பிங்கில் மும்முரமாக இருந்த என் மனைவி,  இப்பொழுது எங்கள் சம்பாஷணையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“ஸார்,  என்னைப் பொருத்த வரையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்களுக்குக் கிடைப்பது முழுமையான வேதாந்த சாரம்.  அஹங்காரம் உங்களிடமிருந்து முற்றிலும் மறைந்து, நீங்கள் மேலும் பணிவாக நடக்க ஆரம்பிப்பீர்கள்.”

“எளிமையான இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் இவ்வளவு பலன்களைப் பெற முடியுமா ?”  என்று சிறிது அவநம்பிக்கையுடன் கேட்டேன்.

“நிச்சயமாக.   ஆனால் நீங்கள் சிரத்தையுடனும், முழு நம்பிக்கையுடனும் இதைப் படித்தால் முழுப் பலன் கிடைக்கும்.”

ஆர்வம் தாள முடியாமல்,  என் மனைவியும் இப்போது எங்களுடன் இணைந்து கொண்டாள்.  இந்தப் பெண் ஒரு அதீத புத்திசாலியாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து விட்ட என் மனைவி என்னிடம்,  “நீங்கள் ஏன்  இந்தப் பெண்ணை உங்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்காக பேட்டி எடுக்கக் கூடாது ?  Paris Hilton -னை விட்டு கொஞ்சம் வெளியே தான் வாருங்களேன்”  என்றாள்.

நானும் கலைவாணியிடம்,  இந்தப் பேட்டிக்காக சிறிது நேரம் ஒதுக்க முடியுமா ?  என்று கேட்டேன்.

பணிவுடன் மறுத்த அந்தப் பெண் பேட்டிக்குத்  தன் முதலாளியின் அனுமதி தேவை என்று கூறியதுடன்,  ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் அவளது சேவைக்காகக் காத்திருப்பதையும் சுட்டிக் காட்டினாள்.  அந்தப் பெண்ணின் பெயர் கலைவாணி என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்.

வேலைக்குத் தரும் முக்கியத்துவம் மூலம், அந்தப் பெண் எங்கள் மதிப்பில் மீண்டும் மிக மிக உயர்ந்து விட்டாள்.

நேரே முதலாளியிடம் சென்ற என் மனைவி,   “ஸார்,  இந்தப் பெண் கலைவாணி….”

“ஆமாம்.  மிக நல்ல உழைப்பாளி….”

“இவர் என் கணவர், விஸ்வநாத்…”

“உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி…”

“என் கணவர்,  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார்….”

வாஷிங்டன் போஸ்ட் என்ற பெயரைக் கேட்டதும்,  முதலாளி எழுந்தே நின்று விட்டார்.

“நான் இந்தப் பெண்ணை பேட்டி காண விரும்புகிறேன்.  தன் வேலையின் மீது இந்தப் பெண்ணுக்குள்ள ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.”

முதலாளி உடனே அந்தப் பெண்ணை அழைத்தார்.  மணி மாலை 5 : 45 .”கலைவாணி,   இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள்.  உன்னுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறார்கள்.”

“ஸார்,  ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நாளை வர முடியுமா ?”

“ஒன்றும் பிரச்னையில்லை.  நாங்கள் நாளை வருகிறோம்..”

மறு நாள் அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காக என்னுடைய டைம்ஸ் ஆஃப்  இந்தியா அப்பாயின்ட்மெண்டை மாற்றி அமைத்தேன்.  கடையில் இப்போது அவ்வளவு கூட்டம் இல்லை.

அந்தப் பெண்ணுடன் பேசி நானும் என் மனைவியும் தெரிந்து கொண்டவை….

கலைவாணி ஆற்காடு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள்.  இந்தப் பெண்ணுக்கு மொத்தம் ஐந்து சகோதரிகள்.  இந்தப் பெண் தான் மூத்தவள்.  பொறுப்பில்லாத குடிகார அப்பா சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.  கட்டிடத் தொழிலாளியாக இருந்த அம்மாவும் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.  ஐந்து இளைய சகோதரிகளைக் காக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இந்தப் பெண்ணின் தலையில்.

ஒன்பதாவது வகுப்பு வரை மட்டுமே படித்த இந்தப் பெண்ணுக்கு ஆதரவும் அடைக்கலமும் தந்து காப்பாற்றியது இந்த கிரி ட்ரேடிங் கடை தான்.  தனக்குக் கிடைக்கும் சிறிய வருமானத்தில் இந்தப் பெண் தன் ஐந்து சகோதரிகளையும் அருகில் உள்ள நகராட்சிப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

“கலைவாணி,  உனக்கு எப்படி இந்த ‘தத்வ போதம்‘  பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது ?””ஸார்,  இங்கு வேலைக்குச் சேர்ந்த பிறகு,  இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நல்ல முறையில் உதவ இங்கு உள்ள புத்தகங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன்.  முதலில் சுவாமி விவேகானந்தர் பற்றிய சிறிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.  அது எனக்கு மிகவும் பிடித்துப் போக மேலும் பகவத் கீதை,  விவேக சூடாமணி என்று படிக்க ஆரம்பித்தேன்.”

“உன்னுடைய சம்பளம் எவ்வளவு ?”

“Rs . 2500 …  ஸார்”

“இந்த வருமானம் உனக்கும் உன் சகோதரிகளுக்கும் போதுமானதாக உள்ளதா ? ”

“போதவில்லை தான்.  ஆனால் என் முதலாளி எனக்கு நிறைய உதவி செய்கிறார்…”

“வாழ்க்கையில் உன் குறிக்கோள் என்ன ?”

“என் சகோதரிகள் அனைவரையும் நன்கு படிக்க வைக்க விரும்புகிறேன்.  அது அவர்கள் சொந்தக் கால்களில் நிற்க உதவும் என்று நம்புகிறேன்.

ஒன்பதாவது வகுப்பு வரை மட்டுமே படித்த அந்தப் பெண்ணின் தொலை நோக்குப் பார்வை எங்களை மீண்டும் பிரமிக்க வைத்தது.

“உன் செலவுக்களுக்காக நான் மாதா மாதம் Rs . 10000 கொடுத்தால் அது உனக்குப் போதுமானதாக இருக்குமா ?”

“அது எனது தேவைக்கு அதிகமான பணம்.  என்றாலும் அதை நான் என் முதலாளி மூலம் மட்டும் பெற்றுக் கொள்ள விரும்பிகிறேன்.”

நான் அவள் முதலாளியிடம்,  “இந்தப் பெண்ணின் சகோதரிகள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை,  நான் மாதா மாதம் Rs . 10000 கொடுக்கத் தீர்மானித்துள்ளேன்”  என்று கூறினேன்.

“இந்தப் பெண் அதற்கு முற்றிலும் தகுதியானவள் தான்.  நீங்கள் விருப்பப் பட்டால், மாதா மாதம் உங்கள் பணத்தை இந்தப் பெண்ணிடம் கொடுக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன்,  அல்லது நீங்களே இந்தப் பெண்ணின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பித்து இந்தப் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்”  என்றார் முதலாளி.

இது அனைத்தையும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த என் நண்பரும்,  டைம்ஸ் ஆஃப்  இந்தியா ரீஜனல் மேனேஜருமான திரு. ஜான் பால்,  “நீங்கள் ஒரு மிகச் சிறந்த காரியத்தைப் பண்ணியிருக்கிறீர்கள்”  என்று கூறினார்.

“இந்தப் பெண் கூடிய விரைவில் ஒரு vedantha expert ஆகி தன்னுடைய திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கற்பகாம்பாளைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறிய என் மனைவி,  “இந்தப் பெண்ணை நாங்கள் அமெரிக்காவில் ஸ்பான்சர் செய்யவும் தயார்”  என்றாள்.

இதைப் போல் நாட்டில் எத்தனை எத்தனை கண்ணுக்குத் தெரியாத ரத்தினங்களோ ?

என்னுடைய குறிப்பு…
ஆங்கிலத்தில் எனக்கு வந்த இந்த e-mail இன் ஜீவன் கெடாமல்,  என்னால் இயன்ற வரை மொழி பெயர்க்க முயற்சி செய்துள்ளேன்.
நீங்கள் யாவரும் குறிப்பிட்டுள்ளதைப் போல்,  நாம் யாரையும் புறத் தோற்றத்தைக் கொண்டு எடை போடக் கூடாது என்பதும்,  அவசரமான முன் முடிவுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் இந்த நிகழ்ச்சியின் பாடங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

Advertisements